Milky Mist

Wednesday, 4 December 2024

எல்.இ.டி தொழில் தந்த பிரகாசமான வெற்றி

04-Dec-2024 By மாசுமா பார்மால் ஜாரிவாலா
ராஜ்கோட்

Posted 25 Jan 2018

 முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்தபோது அவரிடம் வங்கியில் இருந்த இருப்புத் தொகை 39 ரூபாய் மட்டும்தான். அப்படி ஒரு நிலையில் இருந்து, இன்றைக்கு, ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாயுடன் சீனாவில் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபடும் அளவுக்கு ஜிதேந்திர ஜோஷி வளர்ந்திருக்கிறார். அவர் கடந்து வந்த பாதை நீண்ட நெடியது.

சீனாவில் உள்ள ஜோஷியின் தொழிற்சாலையில், உள் அரங்கு, வெளி அரங்குகளுக்கான எல்.இ.டி., டிஸ்பிளே-கள், எல்.இ.டி ஜன்னல் திரைகள், எல்.இ.டி. சுவர்கள், எல்.இ.டி டிஸ்பிளே கியோஸ்க்-கள், எல்.இ.டி திரை கொண்ட வேன்கள்உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறார். இந்தப் பொருட்கள் எல்லாம், வளைகுடா நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

https://www.theweekendleader.com/admin/upload/22-06-17-01Joshi1.JPG

குளோபல் கம்யூனிகேஷன்.காம் நிறுவனர் ஜிதேந்திர ஜோஷி, 2014-ம் ஆண்டு சீனாவில் உள்ள சென்ஷானில், எல்.இ.டி உற்பத்தி செய்யும் பிரிவைத் தொடங்கினார். (புகைப்படங்கள்: அப்பாஸ் அலி)


சீனாவில் 400 நகரங்களில் ஜோஷிக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். “சீனாவில் நாங்கள் 8000 ச.மீட்டர்கள் அளவுக்கு ஆண்டு தோறும் எல்.இ.டி தயாரிக்கிறோம்,” எனும் ஜோஷி, உலக அளவில் பெரும் சாதனையைச் செய்துள்ளார்.

ராஜ்காட்டின் ஜாதுகர்(மேஜிக் மேன் ) என்று அன்புடன் அழைக்கப்படும்  39 வயதான இந்த தொழில் அதிபர், ராஜ்காட்டில் 1997-ல் இருந்து வசிக்கிறார். அங்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ரப்பர் ஸ்டாம்ப் விற்பனை செய்பவராக இருந்தவர் இவர் என்றால் நம்பமுடிகிறதா?

1978-ம் ஆண்டு மும்பையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ஜோஷி பிறந்தார். குஜராத் மாநிலம் மூர்வியில் பள்ளிப்படிப்பு படித்தார். மூன்று குழந்தைகளில் ஒரே ஒரு ஆண்மகனாகப் பிறந்தவர் ஜோஷி, தமது தந்தையுடன் அவர் ஒரு போதும் இணக்கமாக இருக்கவில்லை.

பள்ளியில் படிக்கும்போது சந்திரிகா என்பவரை ஜோஷி காதலிக்க ஆரம்பித்தார். உடன் படித்தவர்தான் சந்திரிகா. எனவே, அப்போது பிரச்னை மோசமானது. சந்திரிகா 12-ம் வகுப்பு முடித்த உடன், மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வில் ஜோஷி தோற்று விட்டார். எனவே, 1984-ல் மும்பைக்குச்சென்றார். அங்கு பாரதி வித்யாபீடத்தில்  கம்ப்யூட்டரில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ சேர்ந்தார்.

ஆனால், ஒருபோதும் அவர் வகுப்புகளுக்கு முறையாகச் செல்லவில்லை. பெர்மா ரப்பர் ஸ்டாம்ப் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். “மை உடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் பணி என்னிடம் கொடுக்கப்பட்டது. மாதம் 1000 ரூபாய் சம்பளம் கொடுத்தனர். பெர்மாவில் மூன்று மாதங்கள் பணியாற்றினேன்.”

https://www.theweekendleader.com/admin/upload/22-06-17-01Joshi2.JPG

ராஜ்கோட்  அருகில் இந்தியாவின் முதல் எல்.இ.டி தொழிற்சாலையை ஜோஷி உருவாக்கினார்.  10ஆயிரம் ச.அடியில் அந்தத் தொழிற்சாலை பரந்து விரிந்து இருக்கிறது.


அதே ஆண்டில், பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக, ஆர்ய சமாஜ் மரபின்படி சந்திரிகாவை, ஜோஷி திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்தின்போது அவரிடம் 1100 ரூ இருந்தது. 600 ரூபாய்க்கு சேலை, 350 ரூபாய்க்கு திருமணச் செலவு. கடைசியில் அவரிடம் 69  ரூபாய் மிஞ்சியது.

“சந்திரிகா அப்போது பயிற்சி மருத்துவராக இருந்தார். ஒன்றரை ஆண்டுகள் வரை அவருக்கு உதவித் தொகை கிடைக்கும். அதற்குள்  நான் போதுமான அளவுக்கு சம்பாதிக்க ஆரம்பித்து விடுவேன் என்று நினைத்தேன்.

“திருமணத்துக்குப் பின்னர், தொடர்ந்து படிப்பதற்காக சந்திரிகா அவரது வீட்டுக்குச் சென்று விட்டார். நான் என்னுடைய டிப்ளமோ படிப்பை முடித்தேன். அதன் பின்னர், கம்ப்யூட்டர் அறிவியலில் பட்டம் படிப்பதற்காக சேர்ந்தேன்,” என்கிறார் ஜோஷி.

கல்லூரிக்கு முறையாகச் செல்லவில்லை., ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனத்தில், ஒரு சர்வீஸ் இன்ஜினியராக, மாதம் 1500 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கம்ப்யூட்டருடன் பணியாற்றியதால், அவருக்கு அதில் அனுபவம் கிடைத்தது.

எச்.சி.எல் நிறுவனத்தில் ஒன்றரை வருடம் வேலைபார்த்த பின்னர், 1997-ல் அவரும், அவரது மனைவியும், (அப்போது அவரது மனைவி மருத்துவப் படிப்பை முடித்திருந்தார்) புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ராஜ்கோட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.

https://www.theweekendleader.com/admin/upload/22-06-17-01Joshi3.JPG

தொழிலின் ஆரம்பகாலகட்டங்களில், பாபா ராம்தேவ் நடத்தும் யோகா நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்புக்கு எல்.இ.டி திரையை ஜோஷி வாடகைக்கு விட்டார்


“கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த உடன், நான், சிறிய ரெடிமேட் ஆடையகத்தைத் தொடங்கினேன். ஆனால், ஆறுமாதத்துக்குள் அதை மூடிவிட்டேன். எனக்குத் தெரிந்தவர்கள் அதிக அளவுக்கு உடைகள் வாங்கினர். தொழிலில், உறவினர்கள் மேலாதிக்கம் செலுத்தினால், பணம் வராது என்பதை உணர்ந்தேன். ரெடிமேட் ஷோரும் வைப்பது என்பது ஒரு மோசமான யோசனை என்பது தெரிந்தது,” என்று ஆரம்பகால கட்டங்களில் சொந்தத் தொழில் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் பற்றி ஜோஷி விவரித்தார்.

எனினும், தம்முடைய தொழில் முனைவு திறனை விட்டுக் கொடுக்கும் எண்ணம் ஜோஷிக்கு இல்லை. “1998-ம் ஆண்டில், நான் கம்ப்யூட்டர் விற்பனை தொழிலில் இறங்கினேன். இதற்காக 1,500 ரூபாய் வாடகையில் கடை ஒன்றை வாடகைக்குப் பிடித்தேன். அந்த நாட்களில் அசெம்பிள் செய்த கம்ப்யூட்டர்களுக்கு அதிகத் தேவை இருந்தது,” என்று நினைவு கூறுகிறார் ஜோஷி.

மும்பையில் இருந்து உதிரி பாகங்களை வாங்கி வந்து, கடையில் வைத்து கம்ப்யூட்டர்களை அசெம்பிள் செய்தார். ஒவ்வொரு கம்ப்யூட்டரையும் 10,000 ரூபாய் முதல் 15,000  ரூபாய் வரை லாபம் வைத்து விற்று, சம்பாதித்தார். அந்த சமயத்தில் அசெம்பிள் கம்ப்யூட்டர்கள் விற்கும் கடைகளில் சுங்கவரித்துறையின் சோதனைகள் நடைபெற்றன. இதனால், அவரது தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது. பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார்.

அப்போது வங்கியில், ஜோஷி மூன்று லட்சம் ரூபாய் கடன்வாங்கினார். கம்ப்யூட்டர் மீடியா சர்வீஸ் என்ற பெயரில், இன்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனத்தை ராஜ்கோட்டில் தொடங்கினார்.

https://www.theweekendleader.com/admin/upload/22-06-17-01joshi4.jpg

ஒரு நிகழ்வில் முழுமையான எல்.இ.டி செட்அப்.(புகைப்படம்: சிறப்பு ஏற்பாடு)


எனினும், குளோபல் கம்யூனிகேஷன்ஸ்.காம் நிறுவனத்தை 2003-ம் ஆண்டு தொடங்கும் வரை, போதுமான பணம் இல்லாமல்தான் இருந்தார். இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோதுதான், யோகா குரு ராம்தேவ் உடன் தொடர்பு ஏற்பட்டது. ராம்தேவ் அப்போது, ராஜ்கோட்டில் ஒரு யோகா நிகழ்வுக்கு வந்திருந்தார்.

யோகா நிகழ்வுகளை பிரபலப்படுத்துவதற்காக, ஜோஷியின் நிறுவனத்தில் புரஜெக்டர்களை வாடகைக்கு எடுத்தனர். பின்னர், யோகா முகாம் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புச் செய்யும் வகையில், தொடர்ந்து தம்முடன் இருக்கும்படி ஜோஷியை ராம்தேவ் கேட்டுக்கொண்டார்.

“நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் யோகா முகாம்களுக்குச் சென்றோம். ராஜ்கோட்டில் 4 புரஜெக்டர்கள் வைத்திருந்த நிலைமாறி, 80 புரஜெக்டர்களை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்தோம். கருவிகளை வாடகைக்கு விட்டது, நேரடி வீடியோ ஒளிபரப்பு ஆகியவற்றுக்காக நான் பணம் வசூலித்தேன். முதல் ஆண்டில், 60 லட்சம் ரூபாய்க்கு வணிகம் செய்தேன்,”என்று நினைவுகூறுகிறார் ஜோஷி.

ஒலி அமைப்புகள் முதல், ஆஸ்தா, சன்ஸ்கர் சேனல்களின் நேரடி ஒளிபரப்புக்கான ஒளி அமைப்புகள் வரை ராம்தேவின் யோகா முகம்களில் ஒவ்வொன்றையும் நிர்வகிக்கத் தொடங்கினார். புரஜெக்டர்களில் இருந்து, ஆப்டிகல் ஸ்கிரீனுக்கு மாறி, அதன் பின்னர் எல்.இ.டி ஸ்கிரீனுக்கு மாறினார். 

“2008-ம் ஆண்டு 25 லட்சம் ரூபாய் செலவில், சீனாவில் இருந்து முதல் எல்.இ.டி ஸ்கிரீனை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தேன். இதற்காக, நான்  ராம்தேவிடம் இருந்து பணம் கடனாகப் பெற்றேன். பின்னர் இதனை திருப்பிச் செலுத்தி விட்டேன்,”என்று புன்னகைக்கிறார் ஜோஷி.  

https://www.theweekendleader.com/admin/upload/22-06-17-01joshi5.JPG

ஜோஷி புன்னகைப்பதற்கு காரணம் இருக்கிறது. அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. 


குஜராத் மாநில அரசுக்காகவும், ஜோஷி பணியாற்றினார். “நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, வைப்ரன்ட் நவராத்ரி முதல் குச் மகோத்ஸ்வ் வரையும், கிரிஸி மேளாக்கள், சுதந்திர தின கொண்டாட்டங்கள், ஜென்மாஷ்டமி, நவராத்ரி கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிலும் நாங்கள் பணிபுரிந்தோம்,” என்று நினைவு கூறுகிறார் ஜோஷி. இப்போது அவரது நிறுவனம் ஐ.பி.எல் மேட்ச்கள் மற்றும் பாலிவுட் சினிமா நிகழ்வுகளிலும் பணி செய்கிறது.

இந்தியாவில், எல்.இ.டி-க்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்பதை ஜோஷி உணர்ந்தார். எனவேதான், எல்.இ.டி ஸ்கிரீன் தயாரிக்க வேண்டும் என்ற பெரிய முடிவை எடுத்தார்.

“உலகின் எல்.இ.டி சந்தையானது சராசரியாக 300 கோடி அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அதில் முதல் 5 வாடிக்கையாளர்களில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.”

“மொத்தத் தேவையில், 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா உற்பத்தி செய்கிறது. கடந்த ஆண்டு, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு எல்.இ.டி ஸ்கிரீன் ஏற்றுமதியில் மட்டும் 2 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வணிகம் நடைபெற்றுள்ளது,” என்று தாம், எல்.இ.டி உற்பத்தியில் இறங்கியதற்கான காரணங்களை புள்ளிவிரங்களைக்  கொண்டு விவரிக்கிறார்.

2014-ம் ஆண்டு சீனாவின் சென்ஷான் பகுதியில் ஒரு எல்.இ.டி உற்பத்திப் பிரிவை ஜோஷி தொடங்கினார். இங்கிருந்து முதல் ஆண்டில் மட்டும் 500 சதுர மீட்டர் எல்.இ.டி உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தி, முக்கியமாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 

https://www.theweekendleader.com/admin/upload/22-06-17-01joshi6.jpg

சீனாவில் உள்ள ஜோஷியின் தொழிற்சாலையில் ஆண்டு ஒன்றுக்கு 8,000 ச.மீ எல்.இ.டி ஸ்கிரீன் உற்பத்தி செய்யப்படுகிறது. (புகைப்படம்: சிறப்பு ஏற்பாடு)


“இது எளிதான ஒன்றல்ல.” எனும் ஜோஷி, “உற்பத்தி இலக்கு திட்டமிடப்பட்டது. ஆனால், எங்களிடம் 40 சீன ஊழியர்கள் பணியாற்றியதால், மொழி ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்தது. எனினும், திட்டமிடல் மற்றும் நேர நிர்வாகம் காரணமாக, இந்த சவாலை வெற்றிக் கொண்டோம்.”

கடந்த ஆண்டு, ராஜ்கோட்டில், 10,000 ச.அடியில் இந்தியாவின் முதல் எல்.இ.டி தொழிற்சாலையைத் தொடங்கினார். “தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்கி விட்டோம். ஊழியர்களுக்கு சீனாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 15 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறோம். விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.”

“இந்தியாவில் எல்.இ.டி ஸ்கிரீன் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற என் கனவு நிறைவேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது எனக்குத் தெரியும்,” என்கிற ஜோஷியிடம் இதற்கு முன்பு யாரும் போகாத இடத்துக்குத் துணிச்சலுடன் சென்றதுடன் வெற்றியும் பெற்ற திருப்தி தெரிகிறது.   


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Bareilly’s  king of oil

    மலையளவாகப் பெருகிய கடுகு!

    உபியில் பரேலி என்ற சிறுநகரில் கன்ஷ்யாம் குடும்பம் பரம்பரையாக கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வந்தது.  அதை தற்காலத்துக்கு ஏற்றவாறு  மாற்றி உபியின் எண்ணெய் அரசராக உயர்ந்திருக்கிறார் கன்ஷ்யாம் கண்டேல்வால். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • School teacher becomes successful street food vendor

    தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!

    புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Success of a NIFT student

    அசத்துகிறார் ஆன்சல்!

    மார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • Fabric of success

    சேலையில் வீடு கட்டுபவர்!

    ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில்  வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • rags to riches builder

    தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • the life story of journalist nakkheeran gopal

    துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்

    புலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...