இளமையில் ஒரு புதுமை ! ஆண்டுக்கு 84 லட்சம் வருவாய் ஈட்டும் உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வியாபாரம்
30-Oct-2024
By பிரனிதா ஜோனலாகெட்டா
ஹைதராபாத்
சிந்தூரா போரா, தம்முடைய க்ளென்ஸ் ஹை (Cleanse High) எனும் நஞ்சு நீக்கும் பழச்சாறு பிராண்ட் வகையை தம் சொந்த நகரான ஹைதராபாத்தில் 7 லட்சம் ரூபாய் முதலீட்டில் 6 ஊழியர்களுடன் தொடங்கினார்.
பழச்சாறு டயட் பற்றி தெரியாதவர்களிடம், நச்சுநீக்கும் பழச்சாறை விற்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால், அவர் தமது குறிக்கோளில் உறுதியாக இருந்தார். சந்தை எந்த ஒரு நேரத்திலும் முதிர்ச்சியடையும் என்று நினைத்தார். தொழில் மெல்ல, மெல்ல சூடுபிடித்தது. இப்போது, 2017-18ம் ஆண்டில் அவரது ஆண்டு வருவாய் 84 லட்சம் ரூபாயைத் தொட்டிருக்கிறது.
|
சிந்தூரா போரா, சாந்தா கிளாரா பல்கலைக்கழகத்தில், கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். உலகம் முழுவதும் தேவை அதிகரித்து வரும் நச்சு நீக்கும் பழச்சாறு தயாரிக்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளார். (புகைப்படங்கள்: டேனியல் சிந்தா)
|
2013-ம் ஆண்டு இந்தத் தொழிலைத் தொடங்கியது முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை, 27,000 நச்சு நீக்கும் பழச்சாறு பெட்டிகளை டெலிவரி செய்திருக்கின்றனர். இந்த நிலைக்கு வருவதற்கு சூழல் ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாக இல்லை. முதல் இரண்டாண்டுகள், வலி மிகுந்த மிகவும் மெதுவான நாட்கள். வாடிக்கையாளர்களே கிடைக்கவில்லை.
“க்ளென்ஸ் ஹை, இந்திய சந்தைக்கு மிகப்புதுமையான ஒன்று என்பது நிருபிக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் சிந்தூரா. இவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர். இது போன்ற பழச்சாறு வகை ஹைதராபாத் நகருக்கு புதிது என்பதை அவர் தெரிந்து கொண்டார்.
32 வயதாகும் தொழில் முனைவோரான இவர், சுகாதாரம் மற்றும் உடல் நலன் தொடர்பான பிரிவில் எந்தப் படிப்பும் படித்தவர் அல்ல என்பது ஆச்சர்யமான ஒன்று. எப்போதுமே அவர் நல்ல மாணவியாக இருந்திருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா பாரதி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் படித்தார். பின்னர் அமெரிக்கா சென்று சாந்தா கிளாரா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கில் பட்டமேற்படிப்பு முடித்தார்.
“நான் என் பட்டமேற்படிப்பை முடித்த உடன், சுகாதாரம் மற்றும் உடல் நலன் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால், எப்போதுமே அந்த துறையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். நம்முடைய வாழ்க்கையின் சூழலுக்கு ஏற்ற ஒரு பொருளை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்,” என்று விவரிக்கிறார் சிந்தூரா.
“உலகம் முழுவதும் பரவலாக கிடைக்கக் கூடிய நச்சு நீக்கும் பழச்சாறு வகையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இது இந்திய சந்தைக்குப் புதிதாக இருந்தது.”
“நாங்கள் செய்வதை ஆரம்பத்தில் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும், ஒரு தருணத்தில் நச்சுநீக்கும் பழச்சாறின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. முதல் இரண்டு ஆண்டுகள் எந்த ஒரு வாடிக்கையாளர்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்கிறார் சிந்தூரா. அவர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனராக இருக்கிறார். இப்போது அவரது நிறுவனத்தில் 24 பேர் பணியாற்றுகின்றனர்.
“முதல் இரண்டு ஆண்டுகள் உண்மையிலேயே மிகவும் சவாலான நாட்களாக இருந்தன. இது ஒரு புதிய யோசனையாக இருந்தது. தவிர, மக்களிடம் திட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து இது போன்ற நீர் சத்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொன்னோம். ஆனால், இது எளிதாக இல்லை,” என்று சிரிக்கிறார் சிந்தூரா.
|
நச்சு நீக்கும் பழச்சாறு அருந்தியவர்களின் வாய்வழி விளம்பரத்தின் காரணமாக சிந்தூராவின் தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது.
|
அவரது முதல் வாடிக்கையாளர், முகநூலில் விளம்பரத்தைப் பார்த்துத்தொடர்பு கொண்டார். அதில் இருந்து விஷயங்கள் தொடங்கின. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. சந்தைப்படுத்தவோ அல்லது வியாபாரத்தை முன்னெடுக்கவோ முதலீடு செய்வதற்கு பணம் இல்லை. அவரது பழச்சாறை பயன்படுத்தியவர்களின் வாய்வழி விளம்பரங்கள், தரம், நல்ல விமர்சனங்கள் ஆகியவற்றின் காரணமாக சிந்தூராவின் முயற்சி வளர்ச்சியை நோக்கிச் சென்றது.
“அங்கீகாரம் பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் அமர்ந்து பேசினோம். அதன்படி இந்திய சுவைக்கு எது ஏற்றதாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு எங்கள் பழச்சாறுகளை தயாரிக்கிறோம்,” என்கிறார் அவர். “ஆன்லைனில் பல்வேறு வகையான ரெசிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விட தனித்தன்மை வாய்ந்ததாக, நமது நாட்டின் பாரம்பர்ய அறிவு மற்றும் நவீன அறிவியல் இரண்டும் இணைந்ததாகக் கொண்டு வரவிரும்பினோம்.”
சிந்தூராவும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் வாரந்தோறும் அல்லது மாதம் தோறும் உடலில் நஞ்சை நீக்கக்கூடிய வழிமுறைகள் குறித்த வகுப்புகளை எடுக்கின்றனர். ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப பின்பற்றும் வகையில் அந்த வகுப்புகள் இருக்கின்றன.
மூன்று வகையான நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை முறையே ரூ.1300, ரூ.3900, ரூ 6700 என்ற கட்டணத்தில் தருகின்றனர். உயர் எலுமிச்சை (எலுமிச்சை, கொத்தமல்லி, நறுமணப் பொருட்கள் மற்றும் தேன்), உயர் பழங்கள் (தர்பூசணி, பீட் ரூட், மூலிகைகள், நறுமணப்பொருட்கள், தூய குடிநீர்) மற்றும் உயர் ஆயுர் (நெல்லிக்கனி, நறுமணப்பொருட்கள், இஞ்சி, நல்ல மூலிகைகள்) உள்ளிட்ட பழச்சாறு வகைகளை வழங்குகின்றனர்.
வாடிக்கையாளர்களின் வாய்வழி விளம்பரத்தால் கிடைக்கும் ஆர்டர்கள் தவிர, பல்வேறு வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட பானங்கள் தரும்படி கேட்டதை அடுத்து, அவர்களின் பொருட்களை ஸ்விக்கி ஆப்(Swiggy) வழியாகவும் விற்பனை செய்கின்றனர். “நாங்கள் பொருட்களை ஏற்கனவே தயாரித்து அடுக்கி வைத்திருக்கவில்லை. ஆர்டரின் பேரில்தான் அனைத்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை நறுமணப்பொருட்கள் சேர்ப்பதில்லை. எனவே, பொருட்களின் ஆயுட்காலம் குறைவு,” என்று விவரிக்கிறார் சிந்தூரா.
உடல்நலனுக்கு ஏற்ற உணவு டயட் மற்றும் பழக்க வழக்கங்கள் மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதால், சாதகமான சூழல் நிலவுகிறது. இப்போது தொடர்ச்சியாக ஆர்டர்கள் கேட்டு விசாரணைகள் வருகின்றன. வெளி நகரங்களிலும் இருந்தும் கூட வருகின்றனவாம்.
|
க்ளென்ஸ் ஹை பொருட்கள், செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டதல்ல. எனவே, அவற்றின் வாழ்நாள் குறைவு.
|
“பட்டமேற்படிப்பை முடித்ததில் இருந்து, ஏதாவது சொந்தமாகச் செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் கொஞ்சகாலம் பணியாற்றினேன். அப்போது எனக்கு சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது நஞ்சு நீக்கும் பழச்சாறு வகையில் எனக்கு முதல் முதலாக அனுபவம் ஏற்பட்டது, “ என்கிறார் சிந்தூரா. “ நான் அமெரிக்காவில் வாழ விரும்பினாலும், என்னுடைய ஆழ்மனதில், நான் இந்தியா திரும்ப வேண்டும் என்ற நினைப்பு எப்போதும் இருந்து கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியும்.”
அவர் தமது தீர்க்கமான முடிவுகளில் மகிழ்ச்சியாக இருக்கிறார். “ஆரம்ப நாட்களைப் போல, ஆர்டர்களின் எண்ணிக்கையைக் கணக்கு வைத்துக் கொள்வதை நிறுத்தி விட்டேன்,” என்றபடி சிரிக்கிறார். “எங்கள் பழச்சாறு வகைகளைப் பயன்படுத்தி அவை பயனுள்ளவை என்று அறிந்த வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் காரணமாக, இன்றைக்கு 65 சதவிகித ஆர்டர்கள் வருகின்றன.”
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சிந்தூரா திருமணம் செய்து கொண்டார். ஆனால், க்ளென்ஸ் ஹை நிறுவனம், அவரது சொந்த உருவாக்கம். அவரது கணவர் ஸ்ராவன் மற்றும் அவரது குடும்பத்தினர், நேரடியாக சிந்தூராவின் தொழிலில் ஈடுபடவில்லை. வெளியில் இருந்து ஆதரவு தருகின்றனர்.
“அவர் யோசனைகள் சொல்லமாட்டார் என்றில்லை... நான் தான் கேட்பதில்லை,” என்று சிரிக்கிறார் சிந்தூரா. “நான் யாரிடமும் கேட்கமாட்டேன். நான் இந்தத் தொழிலைத் தொடங்கப்போகிறேன் என்று என் கணவரைத் தவிர வேறு யாரிடமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.”
|
வீட்டில், தன் செல்ல நாயுடன் சிந்தூரா விளையாடுகிறார்
|
அவசர கதியில் தமது தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. ரிஸ்க் எடுப்பதில் கவனமாக இருக்கிறார். “ஹைதராபாத் நகரில் மட்டும் இதைத் தொடங்கியதற்கு காரணம், இது சோதனை செய்வதற்கான நல்ல சந்தையாக இருக்கும் என்று கருதினேன்,” என்று விவரிக்கிறார் சிந்தூரா.
“இந்த நாட்டின் ஆரோக்கிய பயணத்தில், எங்களாலும் ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். நமது நாட்டில் உள்ள அவ்வப்போது விரதம் இருப்பது என்ற பாரம்பர்யத்தை க்ளென்ஸ் ஹை மூலம், நாங்கள் மறுபடியும் அறிமுகம் செய்திருக்கிறோம். இது செரிமான மண்டலத்துக்கு ஓய்வு அளிப்பது. இது ஒரு மேஜிக் அல்ல. ஒரு மெஷின் வேலை செய்வதைப் போலத்தான் நமது உடலும் இருக்கிறது,” எனக்கூறி முடிக்கிறார் சிந்தூரா.
அதிகம் படித்தவை
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
-
ஏற்றம் தந்த பசுமை
ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
ஷாம்பூ மனிதர்!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
வெற்றிதந்த காபி!
இவர் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டவர். வெற்றிகரமாக நடந்த முதல்தொழில் தோற்றாலும் கலங்கவில்லை. ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் விற்பனை செய்யும் காபி தொழிலதிபராக இன்று மாறி இருக்கும் இவர் தன் வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார். கட்டுரை: உஷா பிரசாத்
-
வளர்ச்சியின் சக்கரங்கள்!
ஒரே ஒரு அம்பாசடர் டாக்ஸியோடு தொடங்கப்பட்டதுதான் பர்வீன் ட்ராவல்ஸ். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உழைத்தார் அதன் உரிமையாளர் அப்சல். இன்று 400 கோடிக்கும் மேல் மதிப்புள்ளதாக வளர்ந்திருக்கும் அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்
-
தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!
புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை