ஒரு மெத்தை விற்பனையாளரின் அதிரடி வெற்றி! 30 மெத்தைகளுடன், தொடங்கினார். ஒரே ஆண்டில் 2.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்
23-Nov-2024
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்வர்த்தக அலையில் எதிர்நீச்சல் போட்டு 4 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், கபீர் சித்திக் எனும் 30 வயது இளைஞர், வெற்றிகரமான தொழிலை முன்னெடுத்துள்ளார். எளிதாக ஒரு பெட்டியில் எடுத்துச் செல்லும் வகையிலான மெத்தையை உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கிறார்.
முழுவதுமாக அமேசானில் மட்டும் விற்கும் மெத்தை இது. ஸ்லீப்பிகேட் (SleepyCat) என்ற பிராண்ட் பெயரில் வரும் இதனை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பெட்டியில் இருந்து படுக்கையை எடுத்துப் பிரித்ததும், அதன் முழுவடிவத்துக்குத் திரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
|
கபீர் சித்திக், ஸ்லீப்பிகேட்- நிறுவனத்தை 4 லட்சம் ரூபாய் முதலீட்டில், அவுட்சோர்சிங் உற்பத்தி முறையில் தொடங்கினார்
|
“லிஃப்ட் இல்லாதபோது, பெரிய படுக்கைகளைக் கட்டடங்களுக்குள் எடுத்துச் செல்வது பெரிய பிரச்னை. ஆனால், எங்களுடைய மெத்தைகளை எளிதாகக் கையாள முடியும். ஒரு பெட்டிக்குள் வைத்து, ஒரே ஒரு நபர் கூட எடுத்துச் செல்ல முடியும்,” என்கிறார் கபீர். ஒரு முன்னணி மெத்தை பிராண்ட்டின் கொல்கத்தா நகரின் விநியோகஸ்தராக இருந்தபோது, பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இதை அவர் உருவாக்கி உள்ளார்.
2017-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஸ்லீப் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது மாதம் 1,000 மெத்தைகளை அவர் விற்பனை செய்கிறார். இந்த ஆண்டில் இதன் ஆண்டு வருவாய் 12 கோடி ரூபாய்.
ஸ்லீப்பிகேட் மெத்தைகள் விலை ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை உள்ளது. மும்பையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, அந்தமான் நிகோபார் உட்பட நாட்டின் எந்த மூலையில் இருக்கும் வாடிக்கையாளருக்கு நேரடியாக டெலிவரி செய்யப்படுகின்றன.
தரமான படுக்கைகளைக் குறைவான விலையில் தர முடிகிறது என்கிறார் கபீர். அவரது போட்டியாளர்களின், விநியோகஸ்தர்கள் முறையிலான வழக்கமான முறையைத் தவிர்த்து விட்டு, விநியோகஸ்தர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் தரும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்.
“தொழிற்சாலையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மெத்தைகளை வழங்குகிறோம்,” என்கிறார் கபீர்.
எனினும், கபீருக்கு வெற்றி சுலபமாக கிட்டவில்லை. ஸ்லீப்பிகேட் மெத்தைகள் பிராண்ட் தொடங்குவதற்கு முன்பு வேறு ஒரு மெத்தை பிராண்ட்டுக்கு விநியோகஸ்தராக இருந்தபோது, அவருக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த கபீர், அமெரிக்காவில் உள்ள இன்டியானா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தொலைத் தொடர்பில் பட்டம் பெற்றார். 2010-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்த அவர், தமது தந்தையுடன் சில காலம் பணியாற்றினார். அவரது தந்தை உமர் சித்திக் பர்னிச்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் தொழில் செய்து வந்தார்.
|
ஸ்லீப்பிகேட் மெத்தைகள், எளிதாக எடுத்துச்செல்லும் பெட்டிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. பெட்டியில் அமுக்கி வைக்கப்பட்ட மெத்தை அதில் இருந்து எடுக்கப்பட்டதும் பழைய நிலைக்குத் திரும்பி விடும்.
|
பின்னர், மும்பையில் உள்ள டோய்ஷ் வங்கியில் (Deutsche Bank) பணியில் சேர்ந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த வங்கியில் முதலீட்டு வங்கியாளராகப் பணியாற்றினார். இந்த பணியில் இருக்கும் போது, பெரும் அளவில் பணத்தை சம்பாதித்து சேமித்தும் வைத்தார். பின்னர் கொல்கத்தா திரும்பி வந்த அவர், ஒரு மெத்தை நிறுவனத்தின் விநியோகஸ்தராவதற்கு 35 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
“நான் வைத்திருந்த பணம் மற்றும் என் தந்தையிடம் இருந்து கடனாக வாங்கிய பணம் ஆகியவற்றை முதலீடு செய்தேன்,” என்கிறார் கபீர். “2.5 லட்சம் ரூபாய்க்கு மெத்தைகள் விற்பனை செய்தபோதும்,தொழில் நஷ்டம் காரணமாக பாதிக்கப்பட்டேன். ஒரு ஆண்டிலேயே விநியோக உரிமையை திரும்பக் கொடுத்து விட்டேன். ஆனால், இந்தத் தொழிலில் 15 லட்சத்தை இழந்து விட்டேன்.”
எதனால் இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து யோசனை செய்தார். ஒட்டுமொத்த மெத்தைகள் தொழிலின் வர்த்தக முறையே குறைபாடுகளைக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.
“மெத்தைகளை வைப்பதற்கு பெரிய கிடங்கு எங்களுக்குத் தேவைப்பட்டது. மெத்தைகளை எடுத்துச்செல்வதற்கும் டெலிவரி ஆட்களுக்கான செலவும் அதிக அளவு இருந்தது,” என்கிறார் கபீர். “சில நேரங்களில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குள் மெத்தைகளை எடுத்துச் செல்ல இயலவில்லை. மாடிப்படிகள் மிகவும் குறுகியதாக இருந்ததால் எடுத்துச்செல்ல முடியவில்லை.”
இந்தத் தொழிலில் உள்ள முக்கியமான இடையூறுகளைப் பட்டியலிட்டார். இந்த இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கினார். “பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் செய்தேன். நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிந்தேன். புதுமையான தொழில் முறையைக் கண்டுபிடித்தேன்,” என்கிறார் அவர்.
இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மெத்தைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்றார். தவிர மலேசியா, சீனா நாடுகளில் உள்ள மெத்தைகள் தொழிற்சாலைகளுக்கும் சென்றார். அந்த ஆய்வில் இருந்து, பெட்டியில் வைத்து மடித்து எடுத்துச் செல்லும் மெத்தைகள் என்ற முறையைக் கண்டறிந்தார். செலவுகளைக் குறைக்கும் வகையில், மெத்தைகள் தயாரிப்பை அவுட்சோர்சிங் முறையில் செய்து வாங்குவது என்று தீர்மானித்தார்.
கபீர் வலியுறுத்தியதன் விளைவாக, ஜெல் அடிப்படையிலான மெத்தைத் தொழில்நுட்பத்தில் மெத்தைகள் தயாரித்து தருவதற்கு மும்பையைச் சேர்ந்த ஓர் உற்பத்தியாளர் முன்வந்தார்.
“துவைக்கக் கூடிய ஜிப் வைக்கப்பட்ட கவரில் எங்கள் மெத்தைகளைக் கொடுத்தோம். அவைகள் 100 டன்கள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டவையாக இருந்தன. அவற்றைப் பெட்டிக்குள் வைத்து அனுப்ப இது உதவுகிறது,” என்கிறார் கபீர். அவர் பி2சி (B2C) முறையில் கவனம் செலுத்தினார். மெத்தைகள் தொழிலில் பி2பி (B2B) முறை என்பது ஏற்கனவே, ஒரு முழுமையான புள்ளியை அடைந்து விட்டதாக கருதினார்.
30 மெத்தைகளுடன், தொடங்கினார். அமேசானில் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் விற்பனையைத் தொடங்கினார். 2018-ம் ஆண்டு மார்ச் நிதி ஆண்டு இறுதிக்குள் 2.2 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் எட்டியது.
|
மும்பையில் ஆறு பேர் கொண்ட குழுவுடன் கபீர் பணிபுரிகிறார்.
|
“ஆரம்பத்தில் சில மாதங்கள், ஒன் மேன் ஆர்மியாக நான் ஒருவனே பணியாற்றினேன். மூச்சுவிடுவதற்கு கூட நேரம் இல்லாத சூழல் இருந்தது,” என்கிறார் கபீர். “நிறுவனத்தின் செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை, விற்பனை ஆகியவற்றைக் கையாண்டேன். ஒரே நேரத்தில் வித்தியாசமான பெயர்களைக் கொடுத்துப் பணிபுரிந்தேன். அப்போதுதான் ஒரு குழு பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தது,” என்று சிரிக்கிறார் கபீர்.
தொழில் முன்னேற்றம் அடைந்தபோது, மேலும் சிலரைப் பணிக்குச் சேர்த்தார். இப்போது, அவரது மும்பை அலுவலகத்தில் ஆறு பேர் பணியாற்றுகின்றனர். கொல்கத்தாவில் 6,000 ச.அடி கொண்ட அந்த கிடங்கு, அந்தப் பகுதியில் விரைவாக மெத்தைகளை விநியோகிக்க வசதியாக இருக்கிறது. மும்பை, பெங்களூரு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மெத்தைகளை பதிவு செய்த, அடுத்த நாளில் டெலிவரி பெறும் முறையை அறிமுகம் செய்திருக்கின்றனர்.
இந்த சமூகத்துக்குத் திருப்பிக் கொடுப்பது என்ற வழியையும் கபீர் மேற்கொண்டிருக்கிறார். “ஒவ்வொரு பத்து மெத்தைகளை நாங்கள் விற்பனை செய்யும்போதும், ஒரு மெத்தையை, தேவைப்படுபவர்களுக்கு தானமாகக் கொடுப்போம். சில தன்னார்வ நிறுவனங்களுக்கு, ஏற்கனவே நாங்கள் சில நூறு மெத்தைகளைக் தானமாகக் கொடுத்திருக்கிறோம்,” என்கிறார் இந்த இளம் தொழில் அதிபர். விடுமுறை தினங்களில் அவர், நெட்பிளிக்ஸ் வீடியோ தளத்தில் படங்கள், ஷோக்கள் பார்ப்பதில் பொழுதை கழிக்கிறார். அதே போல கோஃல்ப், நீச்சல், கால்பந்து விளையாட்டுகளையும் விரும்புகிறார். ஜிம்முக்கும் அடிக்கடி செல்வார்.
தம்முடைய தந்தையிடம் இருந்து அவர் தொழில் அறிவைப் பெற்றார். தமது தாய் சாந்தினி சித்திக்கிடம் இருந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது குறித்துத் தெரிந்து கொண்டார். அவரது தாய், கொல்கத்தாவில் சொந்தமாக ஒரு ஜிம் ஸ்டுடியோ நடத்துகிறார்.
ஸ்லீப்பிகேட் என்ற பிராண்ட் பெயர் குறித்து அவரிடம் கேட்டபோது, “வேடிக்கையான பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். பூனைகள் அமைதியான உறக்கத்துக்காகக் குறிப்பிடப்படுபவை. மேலும் எனக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும். கார்பீல்டு (Garfield )என்ற காமிக்ஸில் வரும் பூனை பாத்திரத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து பேசி வருகிறோம். அதில் வரும் பூனை சாப்பிடுவது, தூங்குவதை விரும்பும். அதையே எங்கள் சின்னமாக வைக்கப்போகிறோம்,” என்று நகைச்சுவையாக குறிப்பிடுகிறார்.
அதிகம் படித்தவை
-
விளம்பரங்கள் தந்த வெற்றி
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
மணக்கும் வெற்றி!
ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் இளைஞர்களான சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும் ஆவாதி பிரியாணியை தங்கள் குடும்ப உணவகத்தில் அறிமுகம் செய்தனர். அந்த உணவகம் பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக தேடி வரும் இடமாக மாறி ஆண்டு வருவாய் 15 கோடியைத் தொட்டுள்ளது. பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை
-
பழசு வாங்கலையோ! பழசு!
பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
போராடி வெற்றி!
டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த கரன் சோப்ரா, திடீரென அந்த வேலையை விட்டுவிட்டு எல்இடி விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு அதில் தோல்வியை கண்டார். எனினும் விடா முயற்சியுடன் போராடி, இப்போது ஆண்டுக்கு 14 கோடி வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
பள்ளிக் கனவுகள்
பள்ளி தொடங்க வேண்டும் என்பது பாலி பட்நாயக்கின் நீண்ட நாள் கனவு. வெறும் முப்பதாயிரம் ரூபாயில் பள்ளி தொடங்கிய இந்த ஆசிரியை, இன்று தன் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தொகையாகவே ஒரு கோடி ரூபாய் தரும் அளவுக்கு தன் கனவை நனவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
நினைத்ததை முடிப்பவர்
ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்