வெறுங்கையால் முழம்போட்டு வெற்றிபெற்றவர்; கிராபிக் டிசைனில் சாதித்திருக்கும் பங்கஜ்!
30-Oct-2024
By ஜி சிங்
கொல்கத்தா
கொல்கத்தாவை சேர்ந்த இளம் தொழில் அதிபர் பங்கஜ் மாலூ, பெரிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று மனதுக்குள் கொழுந்து விட்டு எரிந்த ஆசைத் தீ தான் தன் வெற்றிக்குக் காரணம் எனக் கூறுகிறார்.
டிசைனிங் நிறுவனமான கிரியேட்டிவ் ஃபிங்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Kreative Fingers Pvt. Ltd), டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமான கிரியேட்டிவ் மெஷின்ஸ் (Kreative Machinez) ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் கிரியேட்டிவ் குழுமத்தின் உரிமையாளர் பங்கஜ் மாலூ. 39 வயதாகும் இவர் கிராபிக் டிசைனிங், ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் தமக்குத் தாமே ஓர் இடத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்
|
பங்கஜ் மாலூ, தம்முடைய தொழிலை 2005-ம் ஆண்டு சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன், ஒரே ஒரு நிறுவன உறுப்பினரை மட்டும் கொண்டு தொடங்கினார்.(புகைப்படங்கள்: மோனிரூல் இஸ்லாம் முலிக்)
|
2005-ம் ஆண்டு ஒரே ஒரு நிறுவன உறுப்பினருடன் தொடங்கி, 10 அமெரிக்க டாலருக்கான (தோராயமாக 650 இந்திய ரூபாய்) ஆர்டருடன் தொடங்கியவர், கடின உழைப்பு, பொறுமை, மன உறுதி ஆகியவற்றின் விளைவாக, அவரது நிறுவனத்தை, 2016-17ம் ஆண்டில் 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தினார். அவரது நிறுவனத்தில் 100 பேர் பணியாற்றுகின்றனர்.
பங்கஜின் சர்வதேச அளவிலான விசுவாசமுள்ள வாடிக்கையாளர் பட்டியலில் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த வாடிக்கையாளர்களைக் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு, ஆண்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துள்ளார்.
எனினும், பங்கஜுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடவில்லை. கொல்கத்தாவில் மூன்று குழந்தைகள் உள்ள குடும்பத்தில் மூத்தவராக 1978ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிறந்தார். அவருக்கு அடுத்து ஒரு சகோதரர், ஒரு சகோதரியும் உள்ளனர்.
“என் தந்தை பி.எம்.மாலூ, கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்,”என்கிறார் பங்கஜ்.
சராசரி இந்திய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பங்கஜின் கனவு பெரிதாக இருந்தது. அவரது தன்னம்பிக்கை, அவரது கனவு ஆகியவைதான் இன்றைக்கு அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
|
பங்கஜ் தமது சகோதரர் பிரமோத் மாலூ(இடதுபக்கம் இருப்பவர்) உட்பட 100 நபர்கள் கொண்ட ஒரு டீம் உடன் பணியாற்றுகிறார். அவரது சகோதரருடன் இணைந்துதான் கிரியேட்டிவ் மெஷின்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
|
தெற்கு கொல்கத்தாவில் பவானிப்பூரில் உள்ள கிரியேட்டிவ் ஃபிங்கர்ஸ் நிறுவனத்தின் விஸ்தாரமான தலைமை அலுவகத்தில் நாங்கள் உட்கார்ந்திருக்கிறோம். எப்படி இதெல்லாம் தொடங்கப்பட்டது என்று பேசிக் கொண்டிருந்தோம்.
1996-ல் ஸ்ரீ ஜெயின் வித்யாலயாவில் பங்கஜ் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் பவானிப்பூரில் உள்ள எஜுகேஷன் சொசைட்டி கல்லூரியில் 1999-ல் வணிகத்தில் பட்டம் பெற்றார்.
“1995-ம் ஆண்டில் எனது பள்ளி நாட்களில், கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் சிஏ நிறுவனத்தில் ஒரு பயிற்சியாளராகப் பணியாற்றத் தொடங்கினேன்,” என்று நினைவு கூறுகிறார் பங்கஜ். ”மாதம் தோறும் 300 ரூபாய் உதவித் தொகை பெற்றேன். எனது சொந்தச் செலவுகளுக்கு இது போதுமானதாக இருந்தது. இளம் வயதில் இருந்தே, எந்த ஒரு கூடுதல் செலவுகளுக்காகவும், பெற்றோரைச் சார்ந்திருந்திராமல் நானே எனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றுதான் என் மனதுக்குள் தீர்மானித்திருந்தேன்.
வேலைக்கும், பள்ளிக்கும் இடையே சமாளித்து போய்வந்தார். அவருடையது காலைப் பள்ளி என்பதால் 11 மணிக்கு முடிந்துவிடும்.
பின்னர், அவர் பட்டப்படிப்பு படிக்கும்போது, இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் 1997-ல் சிஏ படிப்பிலும் சேர்ந்தார். 2002ல் சிஏ முடித்தார்.
அந்த ஆண்டில் ஷாஸி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர் வீட்டை கவனித்துக் கொள்கிறார். “என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக என் மனைவி இருக்கிறார்,” என்கிறார் பங்கஜ். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
2003-ல் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 12000 ரூபாய் சம்பளத்துக்கு சிஏ பணியில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் 6 மாதம் மட்டும்தான் பணியாற்றினார்.
எப்போதுமே ஒரு தொழில் அதிபராக ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர், 2004-ம் ஆண்டில் சொந்தமாக டிபிஎஸ்வி & அசோசியேட்ஸ் என்ற சிஏ நிறுவனத்தை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார்.
“ஒரு ஆண்டு நாங்கள் இணைந்து பணியாற்றினோம். ஆனால், இந்த சிஏ தொழில் எனது லட்சியம் அல்ல என்பதை உணர்ந்தேன். எனவே பிரிந்து செல்வது என்று தீர்மானித்தேன்,” என்கிறார் பங்கஜ். “ஐடி துறையில் தொழில் முன்னேற்றங்கள் இருந்ததை கவனித்தேன். எனவே அங்கிருந்து என் அதிர்ஷ்டத்தை பரிசோதிப்பது என்று முடிவு செய்தேன்.”
என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து சிலமாதங்கள் ஆழ்ந்து சிந்தனை செய்து, கிராபிக் டிசைன் நிறுவனம் தொடங்குவது என்று அவர் தீர்மானித்தார். எப்போதுமே அவரிடம் நல்ல டிசைனுக்கான திறமை இருந்தது. அதை அவர் நம்பி களத்தில் இறங்கினார். சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணி செய்வது என்று தீர்மானித்தார்.
|
பங்கஜின் வெற்றிக்கான மந்திரம்; கடின உழைப்பு, ஸ்மார்ட் ஆன வேலை. வெற்றிக்கு குறுக்கு வழிகள் ஏதும் இல்லை.
|
“அந்த சமயத்தில் அவுட்சோர்சிங் பணிகள் உண்மையிலேயே வளர்ச்சி பெற்றன,” என்று விவரிக்கிறார் பங்கஜ். “ரென்ட் ஏ கோடர் என்று அழைக்கப்படும் ஆன்லைன் ஏல முறையிலான தளத்தில் வலம் வந்தேன். சர்வதேச சந்தைகளில், வாய்ப்புகளை கண்டுபிடிப்பது எனக்கு உற்சாகம் அளிப்பதை உணர்ந்தேன்.”
2005-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கிரியேட்டிவ் ஃபிங்கர்ஸ் நிறுவனத்தை நிதிஷ் தோபா என்ற ஒரே ஒரு நிறுவன உறுப்பினரான நண்பருடன் இணைந்து தொடங்கினார்.
“எங்களிடம் சுத்தமாகப் பணமே இல்லை,” என்று சிரிக்கும் பங்கஜ். முந்தைய நாட்களை நினைவு கூறுகிறார். “ஒரு கம்ப்யூட்டர் வாங்குவதற்குக் கூட எங்களிடம் பணம் இல்லை. அது தான் இந்தத்தொழிலுக்கு முக்கியத் தேவையாக இருந்தது. என்னுடைய தந்தையிடம் இருந்து எந்த ஒரு பண உதவியும் பெறக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.”
அதற்கு பதில், ஒரு கம்ப்யூட்டர் விற்பனையாளரிடம் சென்ற அவர், கடனில் கம்ப்யூட்டர் தரும்படி கேட்டார். “அவர் என்மீது நம்பிக்கை வைத்து, நான் கேட்டதற்கு சம்மதம் தெரிவித்தார்,” என்கிறார் பங்கஜ். “இப்படித்தான் நாங்கள் எங்களுடைய முதல் கம்ப்யூட்டரை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினோம்.”
அடுத்ததாக, வேலை பார்க்க ஒரு இடம் தேவைப்பட்டது. “விகாஸ் சவ்பி என்ற என்னுடைய நண்பர், எனக்கு உதவ முன்வந்தார். பவானிப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் 8க்கு 6 அடி கொண்ட ஒரு சிறிய அறையை எங்களுக்குத் தந்தார்,” என்று நினைவு கூறுகிறார் பங்கஜ். “அதற்காக அவர் எந்த ஒரு வாடகையும் பெற்றுக் கொள்ளவில்லை. இப்படித்தான் ஒரு சிறிய அறையில் இருந்து என் நிறுவனம் தொடங்கப்பட்டது.”
அவரது கனவு நனவானது. ஆனால், ஆர்டர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது. முதல் வாரத்தில்தான் அவருக்கு முதல் ஆர்டர் கிடைத்தது. ஆனால், அதன் மதிப்பு வெறும் பத்து அமெரிக்க டாலர்கள்தான்.
“நாங்கள் பெரிய அளவுக்கு ஆன்லைனில் புரமோஷனில் ஈடுபட்டோம்,” என்கிறார் பங்கஜ். “தூக்கமில்லாத இரவுகளுடன் கழித்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. எப்போதும் என் லேப் டாப் ஆனிலேயே இருக்கும். இரவு நேரங்களில் கூட வாடிக்கையாளர்கள் என்னைத் தொடர்பு கொள்வார்கள் என்பதால், உடனடியாக அவர்களுக்கு நான் பதில் அளிப்பேன். பேனர் டிசைன் செய்து தரச் சொல்லி 10 டாலருக்கு எங்களுக்கான முதல் ஆர்டர் கிடைத்தது.”
ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணிபுரிவது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்த இலக்கை அடையும் வகையில், அப் ஒர்க், டிசைன் க்ரவ்ட் மற்றும் 99 டிசைன்ஸ் ஆகிய தளங்களில் ஆன்லைன் ஏல முறையில் பங்கேற்றனர். கூகுள், பிங் போன்ற தேடு பொறிகளில் விரிவான சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டனர். இப்போதும் கூட கிரியேட்டிவ் ஃபிங்கர்ஸ் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக பணிபுரிகிறது.
“நியாயமான கட்டணம், தரமான பணி ஆகியவையே மேலும், மேலும் ஆர்டர்கள் கிடைக்க காரணமாகின்றன,” என்கிறார் பங்கஜ்.”விரைவிலேயே நாங்கள் வளரத் தொடங்கினோம்.”
கிரியேட்டிவ் ஃபிங்கர்ஸ் நிறுவனம் முதல் ஆண்டில் 2005-06ல் 4 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது. அப்போது அவர்களுக்கு 100 வாடிக்கையாளர்கள் கட்டமைப்பு இருந்தது.
|
பங்கஜின் சகோதரர் பிரமோத் மாலூ(இடது) ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. 2009-ம் ஆண்டு தொழிலில் அவருடன் இணைந்தார்.
|
அதன்பின்னர், ஏக்பால்பூரில் 600 ச.அடி கொண்ட இடத்தில் பங்கஜ், முறையான அலுவலகத்தை அமைத்தார். அதற்கான மாத வாடகை 4000 ரூபாயாக இருந்தது.
பின்னர், 2006-ல் பங்கஜுக்கு பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள கைன்ஸ் நகரில் இருந்து ஒரு வாடிக்கையாளரைப் பெற்றார். அந்த வாடிக்கையாளர் ஆஸ்திரேலியாவின் இதரப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக அவுட்சோர்சிங் பணிகளை கிரியேட்டிவ் ஃபிங்கர்ஸுக்குத் தரத் தொடங்கினார்.
விரைவிலேயே இவர்கள் இருவரும் பங்குதாரர்கள் ஆனார்கள். தினமும் 8-10 ஆர்டர்கள் பெற்றனர். மாதம் தோறும் 10,000-12,000 அமெரிக்க டாலர்களுக்கு (தோராயமாக இந்திய ரூபாயில் 6.5 லட்சம்) ஆர்டர்கள் குவிந்தன.
“பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் இருவரும் இணைந்து லோகோ டிசைன் செய்து கொடுத்தோம்,” என்று விவரிக்கிறார் பங்கஜ். “அவருடைய வாடிக்கையாளர்களுக்காக இதுவரை நாங்கள் 5000-த்துக்கும் அதிகமான லோகோக்களை டிசைன் செய்துள்ளோம்.
2007-ம் ஆண்டு, பங்கஜ் தமது அலுவலகத்தை டோலிகஞ்ச் பகுதிக்கு 1600 ச.அடி இடத்திற்கு மாற்றினார். அப்போது மாதம்தோறும் 15,000 ரூபாய் வாடகை செலுத்தினார்.
அப்போது, அவரது தொழில் விரிவாக்கம் அடைந்தது. 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் அவருடைய எம்.பி.ஏ படித்த சகோதரர் பிரமோத் மாலூ நிறுவனத்தில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கிரியேட்டிவ் மெஷின்ஸ் என்ற புதிய பிரிவை உருவாக்கினர். சமூக வலைதளங்களில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டது.
கிரியேட்டிவ் மெஷின்ஸ் ஒரு லிமிட்டெட் லையபிலிட்டி பங்குதாரர் நிறுவனமாக இருந்தது. கிரியேட்டிவ் ஃபிங்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. அவர்களின் ஆண்டு வருவாய் 4 கோடியாக இருந்தது. பவானிப்பூரில் 2,500 ச.அடி இடத்தை சொந்தமாக அலுவலகத்துக்கு வாங்கினர்.
இந்த உயரத்துக்கு வந்தபின்னர், திடீரென ஒரு பின்னடைவு ஏற்பட்டது. 2009-10ம் ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதாதர வீழ்ச்சி ஏற்பட்டது.
“2010-ம் ஆண்டு நாங்கள் சிக்கலான தருணங்களைச் சந்தித்தோம். இது மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது,” என்கிறார் பங்கஜ். “சர்வதேச சந்தையில் வீழ்ச்சி இருந்ததன் காரணமாக, எங்களின் ஆண்டு வருவாய் குறையத் தொடங்கியது. எனினும் எங்கள் ஊழியர்களுக்கான செலவு, நிர்வாகச் செலவு குறையாமல் அதே அளவுதான் இருந்தது. இதனால், நிறுவனத்தை நடத்துவதில் சிறிய சிரமம் ஏற்பட்டது. “
2012-ல் தொழில் மீண்டும் முன்னேற்றம் கண்டது. 2014-15ல் 25 சதவிகிதம் அளவுக்கு வளர்ச்சியைப் பெற்றனர். 2020-ம் ஆண்டில் 20 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக அந்த இளம் தொழிலதிபர் சொல்கிறார்.
|
பங்கஜ் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறார். அவருடைய அலுவலகத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை ரத்ததான முகாம் நடத்துகிறார்.
|
பங்கஜின் இந்தச் சாதனையைப் பாராட்டி, ஆல் இந்தியா அச்சீவர்ஸ் பவுண்டேஷன் அமைப்பு 2015-ம் ஆண்டில், தொழிலக வளர்ச்சிக்கான லீடர்ஷிப் இந்தியர் விருது பங்கஜுக்கு வழங்கப்பட்டது.
பங்கஜ் அரிதான ரத்த வகையை சேர்ந்தவர். ஓ நெகட்டிவ் வகை ரத்தத்தை கொண்டிருக்கும் அவர், தொடர்ச்சியாக ரத்த தானம் கொடுத்து வருகிறார். 40 முறைகளுக்கும் அதிகமாக அவர் ரத்த தானம் கொடுத்துள்ளார். ஆண்டு தோறும் இரண்டு முறை தமது அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடத்துகிறார். அப்போது அவரது நிறுவனத்தின் ஊழியர்கள் ரத்த தானம் அளிக்கின்றனர்.
இப்போது பங்கஜ், வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்கு ஆலோசனை சொல்வதில் நேரம் செலவழிக்கிறார். அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுகிறார். மேலும் ஒரு கிராபிக் டிசைன் பள்ளியைத் தொடங்கவும் விரும்புகிறார். வளர்ந்து வரும் கிராபிக் டிசைனர்கள், தரமான அறிவை பெற வேண்டும் என்றும் விரும்புகிறார்.
இளம் தலைமுறையினருக்கு அவரின் வெற்றி மந்திரம்; “கடின உழைப்பு, ஸ்மார்ட் ஒர்க் இதைத்தவிர வெற்றியடைவதற்கு குறுக்கு வழி ஏதும் இல்லை.”
நன்றாகச் சொன்னார்!
அதிகம் படித்தவை
-
புதுமையின் காதலன்!
அபிஷேக் நாத்தை பல்மருத்துவப் படிப்பதற்காக குடும்பத்தினர் பெங்களூரு அனுப்பினர். அவரோ ஏழு மாதங்களுக்குள் படிப்பில் இருந்து விலகிவிட்டார். ஹோட்டல் மேனேஜ் மெண்ட் முடித்து கேட்டரிங் நடத்தி தோல்வியடைந்தார். இப்போது லூ கஃபே எனும் சங்கிலித்தொடர் கஃபேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
ஆயிரம் கோடி கனவு!
கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
மீண்டும் மீண்டும் வெற்றி!
பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
சுவையான வெற்றி
மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை
-
பீனிக்ஸ் பறவை!
போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
கைவினைக்கலை அரசி
பீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.