சென்னை இளம் தம்பதியின் ’எந்திரன்’ புரட்சி! ஆண்டுக்கு ஏழு கோடி வருவாய்!
16-Sep-2024
By சபரினா ராஜன்
சென்னை
சினேக பிரியா, எஸ்.பிரணவன் இருவரையும் நீடித்த காதலர்களாக இணைத்தது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த விருப்பம்! அது மட்டுமின்றி, தொழில் பங்குதாரர்களாக எஸ்.பி. ரோபாட்டிக் ஒர்க்ஸ் (S P Robotic works) என்ற பிராண்டை அவர்கள் தொடங்கி, அது இன்றைக்கு ஏழு கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்டும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
“நாங்கள் இந்தியாவில் 50,000 பேரின் வாழ்க்கையைத் தொட்டிருக்கின்றோம். நமது குழந்தைகள் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதுடன் புதுமை படைப்பவர்களாகவும் ஆக வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம்,” என்று பிரகடனம் செய்கிறார் 30 வயதான பிரணவன். நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் பரந்து விரிந்திருக்கும் 75 மையங்கள் குறித்தும், 6 முதல் 17 வயது வரை உள்ள 12,000 மாணவர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருவது பற்றியும் சொல்கிறார்.
|
சென்னையில் பொறியியல் படித்துக் கொண்டு இருந்தபோது சினேக பிரியா, பிரணவன் இருவரும் எஸ்.பி.ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினர். (படங்கள்: ரவிக்குமார்)
|
பிரணவன் தம்முடைய வாழ்க்கைத் துணையாக ஆன பிரியாவை, கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது சந்தித்தார். அப்போது இருவருமே கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பில் இரண்டாவது செமஸ்டர் படித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், ஏற்கனவே பிரணவன் கல்லூரிகளுக்கு இடையேயான ரோபாட்டிக் போட்டிகளில் கையால் இயக்கக்கூடிய ரோபாட்டுகளுடன் பங்கேற்று வந்தார். பிரியா அப்போது சுயமாக இயங்கும் ரோபோக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். எனவே அவர்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து போட்டிகளில் பங்கேற்றனர். அதில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் விஷயங்களை பிரணவன் கவனித்துக் கொண்டார்.பிரியா மென்பொருள் அம்சங்களைப் பார்த்துகொண்டார்.
முதல் ஆண்டில் அவர்கள் எந்த ஒரு போட்டியிலும் வெற்றிபெறவில்லை. இரண்டாம் ஆண்டிலிருந்து அவர்கள் ரோபாட்டிக்கில் தங்கள் திறமைகளை மேலும் அதிகமாக மெருகேற்றிக் கொண்டனர். அதில் இருந்த தொழில்வாய்ப்பையும் கண்டறிந்தனர். 2012-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். எஸ்.பி.ரோபாட்டிக் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினர்(அவர்கள் பெயரின் முதல் எழுத்துக்களைத்தான் எஸ்.பி என்பது குறிக்கிறது).
கல்லூரியில் படிக்கும்போது சந்தையில் ரோபாட்டிக்ஸ் உதிரிபாகங்கள் குறைவாகவும், நம்பகமற்றதாகவும் கிடைப்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். சென்னை ரிச்சி தெருவில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் மொத்த சந்தைக்குச் சென்று உதிரிபாகங்கள் வாங்குவார்கள். அதை வைத்து தாங்களே சொந்தமாக உதிரிபாகங்களையும், சர்க்யூட் போர்டுகளையும் உருவாக்குவார்கள்.
ஒரு ரோபாட்டை உருவாக்குவதற்கு ரூ.10,000 செலவானது. “பல்வேறு வித்தியாசமான போட்டிகளுக்கு, வெவ்வெறு விதமான ரோபோக்களை உருவாக்கினோம். சில ரோபோக்கள், மற்ற ரோபோக்களுடன் சண்டைபோடுவது போல இருக்கும்,” என்று நினைவு கூர்கிறார் பிரியா(29). கல்லூரியில் இரண்டாவது ஆண்டில் இருந்து அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
பிரணவன் வடிவமைப்பு, கற்பனை திறன் கொண்டவர். அதைக் கொண்டு தங்களுக்கான சர்க்யூட் போர்டுகளை உருவாக்கினர். ஏற்கனவே உருவாக்கிய ரோபோக்களின் பாகங்களை மறுசுழற்சி செய்தனர். இதனால், செலவு குறைந்தது.
இந்த தம்பதி, உதிரிபாகங்கள், டிரைவர்ஸ், சர்க்யூட்போர்டுகள் விற்பனை செய்வதற்காக எஸ்.பி.ரோபாட்டிக்ஸ் என்ற ஒரு இணையதளத்தை தொடங்கினர். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, போட்டிகள் மூலமாகவும், ரோபாட்டிக் உதிரிபாகங்கள் மூலமாகவும் மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்தனர்.
|
எஸ்.பி.ரோபாட்டிக்ஸ் மூலமாக 12000 மாணவர்கள் ரோபாட்டிக் தொழில்நுட்பத்தை கற்று வருகின்றனர்
|
கல்லூரிகளைப் பொறுத்தும், போட்டிகளைப் பொறுத்தும் ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் பரிசுப் பணத்தை அவர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். விரைவிலேயே அவர்களது படைப்புகள் நகரில் மாணவர்கள் மத்தியில் பேசுபொருள் ஆனது. பின்னர், மாணவர்கள் அவர்கள் தயாரித்த உபகணரங்கள் குறித்தும் விசாரித்தனர்.
“என்னுள் இருந்த தொழில் முனைவு திறன் தூண்டப்பட்டதன் விளைவாக, பொறியியல் பட்டப்படிப்பை முடிப்பதில் ஆர்வம் குறையத் தொடங்கியது,” என்கிறார் பிரணவன். கல்லூரி வகுப்புகளுக்குப் போவதை விடவும், இதர மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், போட்டிகளில் பங்கேற்பது, கருத்தரங்குகளில் பங்கேற்பது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
“நான்காம் ஆண்டில், தொழில்துறை பணிகளில் நாங்கள் ஈடுபட்டோம். தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தின் (ரோபாட்டிக்ஸ்) மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம். ரோபாட்டிக் கிட் என்பது ரூ.2500 முதல் ரூ.3000 வரை மட்டுமே. நாங்கள் கிட்டுக்காக பணம் மட்டுமே வசூலிப்போம். மாணவர்களுக்கு அதன் அம்சங்கள் குறித்தும், அதனை எப்படி தயாரித்து, செயல்புரிய வைப்பது என்றும் கற்பித்தோம்,” என்று நினைவுகூர்கிறார்.
எனினும், இறுதி ஆண்டில் மாணவர்கள் ரோபாட்டிக்ஸ் திறனை மறந்து விட்டு, எங்கு வேலை தேடுவது என்பது உள்ளிட்ட வேலைவாய்பு திட்டங்களில் கவனம் செலுத்துவார்கள் என்பதை உணர்ந்தனர். “ரோபாட்டிக் தொழில்நுட்பம் என்பது எதிர்கால அறிவியல் மற்றும் வாழ்வாதாரத்துக்கான தேவை என்று ஏற்றுக்கொள்ளும் இளம் தலைமுறை குழுவுடன் பணியாற்றுவது என்று நாங்கள் திட்டமிட்டோம்,” என்கிறார் பிரியா.
இதன் தொடர்ச்சியாக 2012-ம் ஆண்டு ஏழு ஊழியர்களுடன் 1500 ச.அடி இடத்தில் சென்னை கே.கே.நகரில் எஸ்.பி.ரோபாட்டிக்ஸ் ஒர்க்ஸ் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக பிறந்தது. அந்த பகுதியில்தான் பிரணவன், பிரியா இருவரும் வளர்ந்தனர். ஆனால், கல்லூரிக்கு பேருந்தில் செல்லும்போது முதன்முறையாக அவர்கள் பார்த்துக் கொள்ளும் வரை அதற்கு முன்பு ஒருமுறைகூட சந்தித்துக் கொண்டதில்லை. இப்போதைய 50 பேர் அமர்ந்து பணியாற்றும் அவர்களது தலைமை அலுவலகத்துக்கு அருகில் ஒரு பிளாக் தள்ளி அவர்களின் முதல் அலுவலகம் இருந்தது.
|
எஸ்.பி ரோபாட்டிக்ஸில் 75 பேர் கொண்ட குழு பணியாற்றுகின்றது
|
2015-ம் ஆண்டு இந்த நிறுவனம் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்டது. இதில் 50 சதவிகித வருவாய் கல்வி சார்ந்த பிரிவில் இருந்து வந்ததை அவர்கள் உணர்ந்தனர். மேலும் இரண்டு மையங்களைத் தொடங்கினார்கள். ஆனால், விரைவிலேயே அதனை மூடிவிட்டனர்.
பிரியாவின் தாய் வேதியியல் ஆசிரியை. அவரது தந்தை அரசு ஊழியர். அவரது சகோதரி ஒரு மருத்துவர். தொழில்சாரா குடும்பத்தில் இருந்து வந்த அவர்கள், அதிகமாக செய்ய முயற்சித்தனர். தொழில்முனைவின் முயற்சியில் அடிப்படைத் தவறு நேர்ந்து விட்டது என்பதை பிரியா ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டனர்.
வீடுகளில் பொருத்தப்படும் தானியங்கி அம்சங்களுக்கான ஐஓடி(இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்) முதல் தொழிலக ரோபோக்கள், மாணவர்களுக்கான கிட்ஸ் வரை என எல்லாவற்றிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர் பிரணவன். ”தொழில்திட்டம் என்றால் என்ன என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை,” என்கிறார். இவரது பெற்றோர் கிளாசிக்கல் வயலின் இசை கலைஞர்கள். அவரது சகோதரி ஒரு மருத்துவராக இருக்கிறார்.
அவர்கள் திறந்த மையங்கள் வெற்றிகரமாகச் செயல்படவில்லை. போதுமான திறன் பெற்ற ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. “நாங்கள் இளம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். அவர்கள் நிறைய ஆர்வமான கேள்விகளுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்குப் போதுமான பதில்களை அளிக்கக் கூடிய ஆசிரியர்கள் இல்லை. எனவே மாணவர்கள் ஆர்வம் குறைந்தது. சாதாரண ஆசிரியர்களை எங்கள் மாணவர்களுக்குக் கொடுத்திருக்கக்கூடாது,” என்று மையங்களை மூடியதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் பற்றி விவரிக்கிறார் பிரியா.
இதற்குப் பதிலாக ஒரு டிஜிட்டல் ஆசிரியர் என்பதை முன்னெடுக்க முதலீட்டு குழுக்கள் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் 2016ம் ஆண்டு ரூ2 கோடி ரூபாய் வரை பணம் திரட்டினர். “ஆட்களைக் கொண்டு மேற்கொண்டு பயிற்சி அளிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருந்தோம். ஸ்மார்ட் கிளாஸ் மாடலில் பயிற்சி அளிக்கும் வழியைத் தேர்வு செய்தோம்,” என்கிறார். இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டே தயாரானது.
|
எஸ்.பி.ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற குழந்தைகள், தாங்களே ஏரியல் வாகனங்களை உருவாக்கக் கற்றுக் கொள்கின்றனர்
|
ஸ்மார்ட் வகுப்பறை மாதிரியைப் பரிசோதிக்க இரண்டு பயிற்சி மையங்களைத் தொடங்கினர். ஆறுமாதத்துக்குள் இந்த இரண்டு மையங்கள் நல்ல வளர்ச்சி பெற்றன. மக்கள் இப்போது கிட்-களை ஆன்லைனில் வாங்குகின்றனர், டிஜிட்டல் ஆசிரியரிடம் பயிற்சி பெறுகின்றனர்.
பாட்கள், ட்ரோன்கள், ஐஓடி மற்றும் வி.ஆர் என சந்தையில் நான்கு ரோபாட்டிக் கிட்களுடன், மாணவர்களுக்கு இரண்டு கற்றுக்கொள்ளும் முறைகள் உள்ளன. அவர்கள் கிட்-ஐ ஆன்லைனில் வாங்கலாம் அல்லது மேக்கர் லேப் என்று அழைக்கப்படும், குறைவான தொகையில் பயிற்சி அளிக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறலாம். கிட்களின் விலை ரூ.7000 முதல் இருக்கின்றது. வி.ஆர் மாதிரிகள் ரூ.50 ஆயிரம் வரை மிகவும் அதிகமான விலையிலும் இருக்கின்றன.
விரைவிலேயே அவர்களின் ஆண்டு வருவாய் ரூ.1.5 கோடி ரூபாயைத் தொட்டது. 2018-ம் ஆண்டு அவர்கள் தங்களின் பயிற்சி மையங்களுக்கு பிரான்சைஸ் அளிக்கும் முறையைத் தொடங்கினர். இப்போது அவர்களிடம் 75 மையங்கள் இருக்கின்றன. எஸ்.பி.ரோபாட்டிக்ஸின் ஆண்டு வருவாய் ரூ.4 கோடியாக இருக்கிறது. இந்த பிராண்ட் மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய் ரூ.7 கோடி முதல் 8 கோடி ரூபாய் வரை உள்ளது.
தங்களின் மேக்கர் லேப்பில் ரூ.5000 விலையில் உலகத்தரம் வாய்ந்த ட்ரோனை பறக்கச்செய்ய முடியும் என்கிறார் பிரணவன். அதே போல தாங்களே சொந்தமாக ஏரியல் வாகனத்தை உருவாக்குவதற்கும் கற்கமுடியும் என்கிறார். “குழந்தைகள், இந்த தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்டால், வீட்டிலேயே அவர்கள் தங்களது சொந்த கருவியை உருவாக்கமுடியும். அவர்களுக்குத் தேவையெல்லாம் சில சக்கரங்கள், சென்சார்கள் மற்றும் இதர உபகரணங்கள்தான். இவையெல்லாம் ரூ.1200-க்குள் வந்து விடும்!”
வயர்லெஸ் சிப்கள் போன்ற பொருட்களை கையாளும் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான குவல்காம்(Qualcomm) என்ற நிறுவனம் உள்ளிட்டவைகளுக்கு தொழிலக திட்டங்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். குவால்காம் நிறுவனத்துக்காக தானியங்கி வழிகாட்டும் வாகனத்தை உருவாக்கி உள்ளனர். மேக்கர்ஸ் லேப்பில் உள்ள 11 முதல் 13 வயதுள்ள மாணவர்களைக் கொண்ட குழு ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை மேற்கொண்டது. இவர்கள் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை சம்பாதித்தனர்.
|
பிரியா, பிரணவன் இருவரும், இந்திய குழந்தைகளிடம் ரோபாட்டிக் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்துவது என்ற நோக்கத்துடன் களம் இறங்கி இறங்கி உள்ளனர்
|
தங்களது நிறுவனத்தின் மூலம் இவர்கள் இருவரும் இந்தியாவின் தொழில்நுட்ப உலகில் ஒருபுரட்சியையே ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மாணவர்களாக இருந்தபோது ஈரானில் நடந்த சர்வதேச ரோபாட்டிக் போட்டியில் பங்கேற்று திரும்பியபோது, அவர்கள் எடுத்த உண்மையான சபதம்தான் இது.
அங்கே 12-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட பெரிய குழுக்களுக்கு எதிராக இரண்டாவதாக வந்தபோதிலும், இந்த ரோபாட்டிக் தொழில்நுட்பமானது, இந்திய தொழில்நுட்பத்தில் ஒரு முறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், அதனை மாற்ற வேண்டும் என்றும் இருவரும் நினைத்திருந்தனர். இப்போது அதைச் செய்துகாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!
அதிகம் படித்தவை
-
தோல்விகளுக்குப் பின் வெற்றி
கோவையை சேர்ந்த பிரிதேஷ் ஆஷர், மேகா ஆஷர் தம்பதி வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர். இப்போது அதை ரூ.25 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி உள்ளனர். இதற்கு முன்பு சில தொழில்களை செய்து நஷ்டத்தைச் சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கலக்குங்க கரோலின்!
பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
உழைப்பின் உயரம்
தளராத மன உறுதியும், உழைப்பும், போராட்ட குணமும் சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சௌந்தரராஜனை மாபெரும் உயரங்களை எட்டவைத்துள்ளன. கோழித்தொழிலில் சுமார் 5500 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அவரைச் சந்திக்கிறார் பி சி வினோஜ் குமார்
-
சம்பளத்தைவிட சாதனை பெரிது!
ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
காற்றிலிருந்து குடிநீர்!
தலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா? இது உண்மைதான்! ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
கனவின் வெற்றி
மும்பை என்ற கனவு நகரத்தின் மீதான ஈர்ப்பால், 30 ரூபாயுடன் வந்த நாராயண் முதலில் கேன்டீன் வெயிட்டராக வாழ்க்கைத் தொடங்கினார். இன்று மும்பையில் 16 கிளைகளைக் கொண்ட ஷிவ் சாகர் எனும் ரெஸ்டாரெண்ட் உரிமையாளராக 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை