பழச்சாறு விற்பனையில் பட்டையைக் கிளப்பும் மும்பை தொழிலதிபர் தம்பதி!
15-Mar-2025
By பி சி வினோஜ்குமார்
மும்பை
தங்கள் முதல் சந்திப்பின்போது மானவ் ஷீதல் ஒன்பதாம் வகுப்பும் நிதி அகர்வால் ஏழாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தனர். அப்போது தொடங்கிய நட்பு காதலாக மாறி பின்னர் கல்யாணத்தில் முடிந்தது. இருவரும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இது சாதாரண காதல் கதை அல்ல. இது இரு காதலர்கள் இணைந்து வாழ்வதற்காக மன உறுதியுடன் போராடிய கதை.
|
மானவ் ஷீதல், நிதி அகர்வால். ஜுஸ் லௌஞ்ச் என்கிற பழச்சாறு விற்கும் பன்னாட்டுக் கடைகளின் நிறுவனர்கள். இவர்களின் விற்பனை 2.5 கோடியை எட்டியுள்ளது. (படங்கள்: ஹெச் கே ராஜசேகர்)
|
“நான் காதலிப்பது தெரிந்ததும் என் தந்தை, பையன் வாடகை வீட்டில் வசிப்பவனாக இருந்தால் சம்மதம் தெரிவிக்கமாட்டேன் என்றார்,” சொல்கிறார் நிதி, மும்பை அந்தேரியில் உள்ள ஜூஸ் லௌஞ்ச் என்கிற பழச்சாறு விற்கும் கடைகளின் இணை நிறுவனர்.
கல்லூரி தினங்களில் இருந்தே இருவரும் பகுதிநேர வேலை செய்து சம்பாதித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நிதியின் அப்பா சொன்னது ஓர் ஊக்கமூட்டும் சவாலாக இருந்தது.
மானவ் மிதிபாய் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் படித்தபோது, நிதி ஜேடி பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் பேஷன் டிசைனிங் படித்தார்.
“சந்தை ஆய்வுகள், ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு டியூஷன் போன்ற பலவேலைகள் செய்தோம்,” என்கிறார் இப்போது 40 வயதாகும் மானவ்.
இரவுகளில் டிஜே ஆகவும் வேலை பார்த்தார். நிதி வீட்டிலிருந்தே ஆடைகள் வடிவமைத்தார். மாடலிங் கூட செய்தார்.
ஆனால் இந்த வேலைகளுக்கு நடுவே ஒருவரோடு ஒருவர் உடனிருந்து நேரம் செலவழிக்கவும் தவறவில்லை. “சினிமாவுக்குப் போவோம். வெளியே சாப்பிடச் செல்வோம். சம்பாதிப்பதை சேமிக்கவும் செய்தோம்,” நினைவுகூர்கிறார் நிதி.
|
மானவ், நிதி இணையரிடம் 40 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்
|
இருபது ஆண்டுகள் கழித்து இந்த இணையர் 50 பழச்சாறுகடைகள் கொண்ட சங்கிலித்தொடரை ஜூஸ் லௌஞ்ச் என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். ரோலாகோஸ்டா என்ற சாண்ட்விச், ஷாவார்மா, பாஸ்தா விற்கும் உணவுக்கடைகள், சாட் ஓகே ப்ளீஸ் என்கிற சாட் கடைகளையும் உருவாக்கி உள்ளனர்.
அவர்கள் ப்ரான்சைஸி மாதிரியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சில கடைகள் மலேசியா, கத்தார், பஹ்ரைன், மாலத்தீவுகள் போன்ற நாடுகளிலும் உள்ளன.
ஜூஸ் லௌன்ச் கடைகளில் பழச்சாறு, சக்திபானங்கள் விற்கிறோம். இயற்கையான பழங்களின் சாறுகளைக் கொண்டு ஆண்டுக்கு பத்துலட்சம் குவளைகள் வரை விற்கிறோம்,” என்கிறார் நிதி.
சாட் ஓகே ப்ளீஸ் கடைகளில் இந்திய தெரு உணவுகள் தூய்மையான முறையில் கிடைக்கின்றன.
இந்த மூன்று பிராண்டுகளும் ப்ளாக் ஆர்கிட் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்நிறுவனத்தில் மானவ், நிதி இருவரும் இயக்குநர்கள் மற்றும் சம பங்குதாரர்கள்.
நிறுவனமே நேரடியாக நடத்துவது நான்கு கடைகள்தான். மீதி கடைகள் பிரான்சைசி முறையில் நடத்தப்படுகின்றன. நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு விற்பனை 2.5 கோடி ரூ.
|
தங்கள் ரோலாகோஸ்டா கடை ஒன்றில் மானவ்-நிதி
|
“ப்ரான்சைஸ் வழங்க 3-5 லட்சம் வரை கட்டணம். விற்பனையில் 4-6 சதவீதம் ராயல்டி. மொத்தமாக எங்கள் அனைத்து கடைகளையும் சேர்த்தால் 20 கோடி விற்பனை இருக்கும்,” என்கிறார் மானவ்.
இவர்கள் தங்கள் உணவகத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறார்கள். ஆனால் இந்த ஜோடி முதல் முதலில் ஆரம்பித்த தொழில் இது அல்ல. அது ஒரு கூரியர் சர்வீஸ். 1998-ல் தங்கள் சேமிப்பான 25,000 ரூபாயைப் போட்டு கூரியர் சர்வீஸ் ஒன்றின் பிரான்சைஸை ஜுஹுவில் ஆரம்பித்தனர்.
“முதல் ஐந்து மாதங்கள் நண்பரின் கேரேஜில் நடத்தினோம். அப்புறம் வாடகை இடத்துக்குப் போனோம். அதற்கு அப்பாவிடம் கடன்வாங்கி அட்வான்ஸ் கொடுத்தோம். ஒரே மாதத்தில் அப்பணத்தைத் திருப்பி அளித்துவிட்டோம்,” என்கிறார் நிதி.
|
துரித சேவை உணவகங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக மானவ் கருதுகிறார்
|
வருமானம் உயர்ந்ததும் அவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர். “அப்போது சில லட்சங்களில் சொத்துக்கள் வாங்கமுடியும்” என்கிறார் நிதி.
9.5 லட்ச ரூபாயில் மாலாடில் வாங்கியது அவர்களின் முதல் சொத்து.
“கூரியர் சேவை லாபகரமாக இருந்தது. ஆனால் மின்னஞ்சலை பெரும்பாலானோர் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் எங்கள் லாபங்கள் குறைய ஆரம்பித்தன,” என்கிறார் மானவ்.
சைபர் கபேக்கள் அதிகரித்த சமயத்தில் அவர்கள் இரண்டு கணிப்பொறிகளை வாங்கி கூரியர் கடையிலேயே ப்ரௌசிங் செண்டரும் ஆரம்பித்தனர்.
மானவ் டிஜே வேலையை தொடர்ந்து செய்தார். கூடுதல் வருமானத்துக்கு கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுப்பதையும் செய்தார்.
|
பணிதொடர்பாக மானவ், நிதி இருவரும் இணைந்து நேரம் செலவழிக்கிறார்கள். அதை ரசிக்கிறார்கள்.
|
“2005-ல் ஜூஸ் கடை ஒன்றை ஆரம்பிக்க முடிவுசெய்தோம். பல க்ளப்கள், லௌஞ்ச் களுடன் பணிபுரிந்ததால் எங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருந்தது,” என்கிறார் மானவ்.
அதே ஆண்டில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். இரு குடும்பத்தாரின் ஆசியும் இருந்தது. இவர்களிடம் சொந்த வீடும் இருந்தது.
“அந்தேரியில் 250 ச.அடியில் கடை திறந்தோம். வேலைக்கு 2 ஆட்கள். அங்கே நிறைய ஆரம்பகட்ட பழச்சாறு பரிசோதனைகள் செய்யவாய்ப்பு இருந்தது,” என்கிறார் நிதி.
இக்கடையில் 4 லட்சரூபாய் முதலீடு செய்தார்கள். விற்பனை சிறப்பாக இருந்தது. முதல் ஆண்டு முடிவில் இரண்டாவது கடையைத் திறந்தனர். 30 லட்சரூபாயாக ஆண்டு விற்பனையும் உயர்ந்தது.
மானவ் எதிர்காலம் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார்.
"துரித சேவை உணவகங்கள் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். இரண்டாம், மூன்றாம் அடுக்கு இந்திய நகர்களில் நுழைய விரும்புகிறோம். அங்கே நல்ல வாய்ப்பு உள்ளது,” அவர் கூறுகிறார்.
|
மானவ், நிதி இருவரும் நாடு முழுக்கவும் சர்வதேச அளவிலும் விரிவடைய திட்டமிடுகின்றனர்
|
இணைந்து செயல்படுவது இந்த தம்பதிக்கு எப்படி உள்ளது?
“கணவன் மனைவி இடையே தகவல் தொடர்பு இல்லாததே பலருக்கு பெரும் பிரச்னை. ஆனால் நாங்கள் நிறையப் பேசுகிறோம். நிறைய பேச வேண்டிய அவசியம் இருக்கிறது,” புன்னகையுடன் பதிலளிக்கிறார்கள்.
நமது புகைப்படக்காரருக்கு போஸ் கொடுக்கையில் அவர்களின் உடல்மொழியில் அந்நியோன்னியம் தெரிகிறது.
இவர்களுக்கு ஒரு மகள். தியா ஷீதல், வயது 4.
அதிகம் படித்தவை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
பயணங்கள் முடிவதில்லை!
அவர் ரஜினிகாந்த் போல ஒரு சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ஆனால் பசித்த இரவுகளும் பிளாட்பார தூக்கமும்தான் காத்திருந்தன. பி சி வினோஜ் குமார், இன்று 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவன உரிமையாளரைச் சந்திக்கிறார்.
-
அசத்தும் ஐஏஎஸ்!
மருத்துவரான அல்பி ஜான், குடிமைப்பணித் தேர்வு எழுதி முதன்முயற்சியிலேயே ஐ ஏ எஸ் ஆனவர். துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கிய அவர், திடக்கழிவு மேலாண்மை நிர்வகிப்பில் சிறந்து விளங்குகிறார். சென்னை மாநகரை மேம்படுத்தும் மியாவாகி காடுகளை உருவாக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
கூச்சத்தை வென்றவர்
டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
நனவான தொழில் கனவு
பள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
சமையல் ராணி
நித்தா மேத்தாவின் கணவர் மருந்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. அந்த சமயத்தில், சமையல் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டிய நித்தா மேத்தா, இன்றைக்கு பல கோடிகள் குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளர் ஆகியிருக்கிறார். சோபியா டேனிஸ்கான் எழுதும் கட்டுரை