வெறுங் கையுடன், கனவுகளை மட்டும் சுமந்து மும்பை வந்தவர் இன்று ஏழு கோடி புரளும் நிறுவன அதிபர்!
21-Nov-2024
By நிதி ராய்
மும்பை
வறுமை நிலையில் இருந்து வயல்வேலைகள் செய்து வந்த பெற்றோரின் 23 வயது சந்திரகாந்த் போடே கண்களில் நிறைய கனவுகளுடன், சொந்த ஊரான அகமத் நகரை விட்டு, மும்பைக்கு வேலைவாய்ப்பைத் தேடி வந்தார். 27 ஆண்டுகள் கழித்து அவரது கனவு நிறைவேறியது. இன்றைக்கு அவர், வெற்றிகரமான ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். அவரது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் 7 கோடி ரூபாய்.
“எந்த ஒரு வாடிக்கையாளரிடமும் முடியாது என்று நான் சொன்னதில்லை,” என்கிறார் இந்த தொழிலதிபர். “1992-ம் ஆண்டு நான் மும்பைக்கு வந்து இறங்கியபோது, கேஸ் ஸ்டவ் ரிப்பேர், பாதுகாவலர் பணி, உணவு விநியோகம் போன்ற சாதாரண வேலைகளைத் தவிர வேறெதுவும் செய்வேன் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை!” என்கிறார் கடந்த காலங்களை நினைவு கூர்ந்தபடி.
|
சி பி லாஜிஸ்டிக் நிறுவனர் சந்திரகாந்த் போடே வெற்றிகரமான தொழிலதிபர் ஆவதற்கு முன்பு, கேஸ் ஸ்டவ்களைப் பொருத்துவது, பேப்பர் போடுவது, உணவகங்களில் டேபிள் துடைப்பது என பணிபுரிந்தார்.
|
பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய இவர், இன்றைக்கு சிபி லாஜிஸ்டிக்ஸ்(CB Logistics) நிறுவனத்தின் உரிமையாளர். ரிலையன்ஸ் ஃபிரஷ், ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் ஸ்மார்ட், ஸ்கூட்ஸி, ஜியோ, எபிகாமியா மற்றும் ஒயிட் ஓவ்ல் ப்ரூவ்ரி ஆகிய நிறுவனங்கள் அவரது நிறுவனத்தின் தொடர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. இவர் மும்பையில் ஸ்பிரே& டியோடரெண்ட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். இரவில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக் ஆக வேலை பார்த்தார்.
எப்போதுமே கடின உழைப்பை விரும்புபவர். எந்த ஒரு வேலையையும் எடுத்துச் செய்வார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பார். டெம்போ கால் டிரைவராக பணியாற்றியபோது கூட இரவு நேரங்களில் வீடுகளுக்கு பால் விநியோகிப்பார். காலை வேலைகளில் வீடுகளுக்குப் பேப்பர் போடுவார்.
பள்ளியில் இருந்து இடைநின்ற பின்னர், போடே தன் சொந்த நகரில் சிறிய ரெஸ்டாரெண்ட்களில் வெயிட்டராக, பாத்திரம் கழுவுபவராகப் பணியாற்றினார். பின்னர், மகராஷ்டிராவில் உள்ள ஒரு நகருக்கு தமது உறவினர் ஒருவருடன், சிறிய உணவங்களில் பணியாற்றுவதற்காகச் சென்றார்.
“ஆனால், இந்த முயற்சிகள் ஏதும், என் குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பணத்தைத் தரவில்லை,” என்கிறார். இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் ஐவர். இவர்தான் மூத்தவர். பின்னர், மனைவி, மூன்று வயது மகள் ஸ்வாதி, ஒரு வயதான மகன் மனோஜ் ஆகியோருடன் மும்பை வந்தார். அவரது மூத்த மகன் சந்தீப்புக்கு அப்போது ஐந்து வயது என்பதால், அவரது தாத்தா பாட்டியுடன் இருந்தான். பின்னர் ஒரு ஆண்டு கழித்து குடும்பத்துடன் இணைந்தான்.
“ஆரம்பத்தில் நாங்கள் சான்பாதாவில் ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். பின்னர் ஒர்லியில் உள்ள பிடிடி சாவ்லில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்தேன்,” என்கிறார் போடே. இன்றைக்கு போடே குடும்பத்துக்குச் சொந்தமாக ஒர்லியில் ஒரு வீடு இருக்கிறது. ஆனால், தொடர்ந்து அந்த அபார்ட்மெண்ட்டை சிபி லாஜிஸ்டிக்கில் இருக்கும் டிரைவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
“லாஜிஸ்டிக் துறையில் ஆட்களைத் தக்கவைத்துக் கொள்வது சவாலான ஒன்று. வேறு ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளம் கிடைத்தால், டிரைவர்கள் சத்தமில்லாமல் வேலையை விட்டு விலகிவிடுவார்கள். ஆனால், டிரைவர்கள் உட்பட ஊழியர்களிடம் நாங்கள் நல்லுறவைப் பேணி வருகின்றோம். எனவே, ஊழியர்கள் இன்னொரு நிறுவனத்துக்குப் போவது குறைந்திருக்கிறது,” என்று தமது தொழிலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள இன்னொரு ரகசியத்தைச் சொல்கிறார்.
தங்களது சேவையில் பொறுப்புடைமையை அதிகரிக்க, வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கிங் வசதியை நிறுவியுள்ளனர். தொழில்நுட்பமும், புதுமையும் அடுத்த தலைமுறைக்கு கைமாறுகிறது. அவரது மூத்த மகன் சந்தீப் போடே இந்த நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு சேர்ந்தார். இளையவரான மனோஜ் போடே 2016-ம் ஆண்டு சேர்ந்தார். தங்களது வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளுக்குமான தனிப்பட்ட மற்றும் விருப்பமான தீர்வுகளுடன் ஆர்வத்துடன் அவர்கள் வந்துள்ளனர்.
|
போடேயுடன், சி பி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் முக்கிய நபர்களான சில டிரைவர்கள்.
|
“பிற லாஜிஸ்டிக் நிறுவனங்கள், நகரங்களுக்கு இடையேயான சேவைகளில் கவனம் செலுத்தி வந்தன. நாங்கள் நகருக்குள்ளான சேவையில் கவனம் செலுத்துகின்றோம். உள்ளூரில் சரக்குகளை எடுத்துச் செல்லுதல் என்று வந்தால், எங்கள் நிறுவனம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுதான் எங்களைத் தனித்தன்மை வாய்ந்தவர்களாக ஆக்கியது,’’ என்கிறார் சந்தீப் போடே. பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும், வெற்றியில் விருப்பம் கொண்டவராகவும் தமது தந்தைக்கு இணையாக வளர்ந்திருக்கிறார்.
சந்திரகாந்த் போடே ஒரு கட்டத்தில் சிறிய நிறுவனம் ஒன்றில் டிரைவராகப் பணியாற்றினார். அப்போது கிடைத்த மாத சம்பளம் போதவில்லை. என்ன செய்வது என்று யோசித்தபோது 2003-ம் ஆண்டு ஒரு பழைய டெம்போவை விலைக்கு வர, அதை வாங்கினார்,
இரண்டு ஆண்டுகள் தமது டெம்போவை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஒர்லி நாகா டெப்போவில் இருந்து 2005-ம் ஆண்டு மொபைல் விநியோக சேவையைத் தொடங்குவதற்காக அவரை அணுகியது. அதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
2007-ம் ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க முழு நேர வெண்டர் ஆக பணியாற்ற முடியுமா என்று அவரைக்கேட்கப்பட்டது. ஆனால், அந்த சேவையை செய்வதற்கு ஆறு வாகனங்கள் தேவை என்பதால், ஏறக்குறைய அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
அப்போது அவருடன் பணியாற்றியவர்கள், வாழ்க்கையில் முதன்முதலாக வந்த இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று கூறினர். எனவே, தமது மனைவியின் நகைகளை விற்றும், சில நண்பர்களிடம் கடன் பெற்றும் மேலும் இரண்டு வாகனங்களை அவர் வாங்கினார்.
இப்படித்தான் சிபி எண்டர்பிரைஸஸ் உருவானது. ரிலையன்ஸ் பிரஷ், சஹகாரி பந்தர் என்ற மும்பையில் உள்ள மளிகை பொருட்கள் விற்கும் சங்கிலித் தொடர் நிறுவனம் ஆகியவை அவரது முதலாவது வாடிக்கையாளர்கள் ஆக இருந்தனர். “தொடக்கத்தில் இருந்தே ரிலையன்ஸ் எங்களின் வாடிக்கையாளராக இருந்தது. என்னுடைய முதல் வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல், இந்த சாதனையை நான் அடைந்திருக்க முடியாது,” என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார் போடே.
|
மகன்கள் சந்தீப்( வலது புறம்), மனோஜ்( இடது புறம்) உள்ளிட்ட முக்கியமான தமது குழு நபர்களுடன் போடே (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது நபர்)
|
பின்னர், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிபி எண்டர்பிரைசஸ் நிறுவனமானது ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் டிரன்ட்ஸ், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட இதர ரிலையன்ஸ் வணிகங்களுக்கும் சேவையை விரிவு படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக மட்டும் 110 வாகனங்களை இந்த நிறுவனம் இயக்குகிறது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தமது வாகனங்களை போடே தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்வார். தமது பணியில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவரது வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற 10-15 கிலோ எடை கொண்ட இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்வதில் தொடங்கி, தட்பவெட்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் காய்கறிகள், இறைச்சி வகைகளை எடுத்துச் செல்வதற்கான 20 அடி நீள கண்டெய்னர்கள் வரை அனுப்புகிறார்.
“பன்னாட்டு நிறுவனங்களுடன் பணியாற்றுவது எனக்கு ஒரு புதியஅனுபவத்தைக் கொடுக்கிறது. குடும்பத்தொழிலில் இறங்குவதற்கு முன்பு, அனைத்து அடிப்படைகளையும் நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார்,” என்கிறார் சந்தீப் போடே. இவர்தான், நிறுவனத்தின் பெயரை சிபி எண்டர்பிரைசஸ் என்பதில் இருந்து சிபி லாஜிஸ்டிக் என்று மாற்றினார். மேலும் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகவும் பதிவு செய்தார்.
“எனக்கும், என் சகோதரருக்கும் என் தந்தை உந்து சக்தியாக இருந்தார். அனைத்து வருடங்களும், சொந்தமாக அவர் உழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நாங்கள் வளர்ந்தோம். இப்போது இந்த நிறுவனத்தை ஒரு குடும்பத்தைப் போல நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொள்கிறோம்,” என்கிறார் அவர்.
|
போடேவின் கூற்றுப்படி, கடின உழைப்பும், நேர்மையும் மட்டுமே வெற்றியைத் தரும்.
|
உரிய நேரத்தில், பாதுகாப்பான விநியோக சேவைகளை வழங்கியதற்காக பல விருதுகளை சிபி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்போது, சரக்கு விநியோக நல் சேவையாளர் என்பதற்கான இரண்டாவது ஆண்டு, வேர்ஹவுஸ் சமிட் & அவார்ட்ஸ் 2019(2nd Annual Future Warehouse Summit & Awards 2019) விருதும் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.
“நாட்டின் கடைசி மூலையில் உள்ள பகுதிக்கும் நல்ல சேவை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார் சந்தீப் போடே. பெங்களூருவில் தொடங்கி நாட்டின் இதர பகுதிகளுக்கும் சரக்கு விநியோக சேவையை விரிவாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இளம் தொழில் முனைவோர்களுக்கு சந்திரகாந்த் போடேவின் அறிவுரை என்ன? “கடின உழைப்பு, நேர்மை ஆகியவை மட்டுமே வெற்றியை ஈட்டித் தரும். நீங்கள் சிறியதாக ஒன்றைத் தொடங்கினாலும் கூட அதற்காக நம்பிக்கையை இழந்து விட வேண்டாம். உங்கள் உறுதியே உங்களை முன்னுக்குக் கொண்டு வந்துவிடும்.”
அதிகம் படித்தவை
-
மளிகையில் மலர்ச்சி!
தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
சணலில் ஒரு சாதனை
பிறரிடம் சம்பளம் வாங்கும் வேலையை விட சொந்த தொழில் சிறந்தது என்ற எண்ணம் தோன்றியதால், வேலையை விட்டு விலகியவர் சவுரவ் மோடி எனும் இளைஞர். இன்றைக்கு சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
ஒடிஷாவின் சுவை!
ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்
-
தொழிலதிபரான பேராசிரியர்
நாமக்கல் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த பழனி ஜி பெரியசாமி, அமெரிக்கா சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தன் பொருளாதார அறிவைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியிருக்கும் குழுமம் ஆயிரம் கோடிகளைத் தாண்டி வர்த்தகம் செய்கிறது. பிசி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
கரும்பாய் இனிக்கும் இரும்பு!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
கனிந்த தொழில் கனவு!
கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை