மண் இல்லை; நிலம் இல்லை! மாடிகள் தோட்டங்களாக மாறும் அதிசயம்- நிகழ்த்திக்காட்டும் தொழிலதிபர்!
03-Dec-2024
By பி சி வினோஜ்குமார்
சென்னை
சென்னையில் இருக்கும் அந்த இரு அடுக்குக் கட்டடத்தின் மாடியில் நுழையும்போது பசுமையான செடிகள் வரவேற்கின்றன. அவை மண் அல்லாமல் வெறும் நீர் மட்டுமே நிரப்பப்பட்ட குழாய்களில் இருந்து வளர்ந்திருக்கின்றன.
பாதுகாக்கப்பட்ட சூழலில் வளரும் இவற்றின் இலைகள் பசுமையாக, மாசு அற்று, ஆரோக்கியமாக இருக்கின்றன. இத்தாலி மற்றும் தாய்லாந்து துளசி, அஜ்வைன், புதினா, போக் சோய் போன்ற செடிகள் உள்ளன
|
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் ஸ்ரீராம் கோபால் மேற்கொண்டுள்ள முயற்சியில் பலன் தெரிகிறது (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்)
|
மண்ணில்லாமல் விவசாயம். இதுதான் எதிர்காலம். நகர்ப்புறத்திலேயே விவசாயியாக இருக்கமுடியும். வீட்டுத்தேவைக்காகவும் விற்பனைக்காகவும் காய்கறிகள் வளர்க்கமுடியும். ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தண்ணீரைப் பயன்படுத்தி இதை சாத்தியப்படுத்தலாம்..
இந்த புதிய தொழில்நுட்பம் ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற புதிய நிறுவனம் இதில் கால்பதித்துள்ளது.
அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீராம் கோபால், 34, நமக்கு அந்த மாடிப் பண்ணையைச் சுற்றிக்காண்பிக்கிறார். ப்யூச்சர் பார்ம்ஸ் நிறுவனம் 2016-17ல் 2 கோடி ரூபாய் வரை வருவாய் பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் தங்கள் வருவாய் மூன்று மடங்காகும் என எதிர்பார்க்கிறார்கள்.
“ஆண்டுக்கு 300 சதவீதம் நாங்கள் வளர்கிறோம். 2015-16-ல் எங்கள் வருவாய் 38 லட்சம். கடந்த ஆண்டு 2 கோடி. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே 2 கோடியை அடைந்துவிட்டோம். ஆறு கோடியை இந்த ஆண்டில் எட்டுவோம் என நினைக்கிறேன்,” என்கிறார் ஸ்ரீராம்.
உலகம் முழுக்க தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கிறது. இந்நிலையில் 90 சதவீதம் குறைவான நீரைப் பயன்படுத்தும் ஹைட்ரோபோனிக்ஸ் முறைக்கு வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது. அத்துடன் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு இல்லை. விளைச்சலும் நன்றாக உள்ளது.
|
அலங்காரத்துக்காகவும் ஹைட்ரோபோனிக்ஸ் செடிவளர்ப்பு பயன்படுகிறது. சென்னை ப்யூச்சர் பார்ம்ஸ் அலுவலகத்தின் வெளியே ஒரு காட்சி.
|
2007-ல் தான் தொடங்கிய ஐடி நிறுவனத்தை வெற்றிகரமான நடத்திக் கொண்டிருந்த ஸ்ரீராமுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் நல் வாய்ப்பாகத் தோன்றி இருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவர் மண் இல்லாமல் பயிர் செய்யும் சோதனை முயற்சிகளை ஆரம்பித்தார். பெருங்குடியில் சும்மா கிடந்த அவர்களின் குடும்ப தொழிற்சாலை இதற்கு உதவியாக இருந்தது.
அங்கே அவரது அப்பா கோபாலகிருஷ்ணன் 2007 வரை போட்டோ ப்ராசசிங், ப்ரிண்டிங் எந்திரங்கள் செய்யும் தொழிற்சாலை நடத்தி மூடிவிட்டார்.
” கோடாக், ப்யூஜி போல இந்த எந்திரங்கள் தயாரிக்கும் ஒரே இந்திய நிறுவனம் எங்களுடையதுதான். வெளிநாட்டில் இருந்து பயன்படுத்திப் பழசான எந்திரங்களை 20-22 லட்ச ரூபாய்க்கு இறக்குமதி செய்துகொண்டிருந்தார்கள். என் அப்பா தயாரித்த எந்திரங்களோ 7 லட்ச ரூபாய்தான். நிறைய பேர் எங்கள் எந்திரங்களை வாங்கினர்,” என்கிறார் ஸ்ரீராம்.
அவரது அப்பாவுக்கு நிறைய கலர் போட்டோ லேப்கள் இருந்தன. எனவே கல்லூரிக் காலத்தில் இருந்தே காமிராக்களை சரி செய்வதில் அவருக்கு அலாதி ஆர்வம். பொறியியல் படித்த பின் காமிரா ரிப்பேர் கடை வைக்கவும் அவர் முடிவு செய்தார்.
|
சென்னையில் தன் குழுவுடன் ஸ்ரீராம்
|
கோபாலகிருஷ்ணனின் தொழில் வளர்ந்தது. 300 பேருக்கு மேல் ஒரு கட்டத்தில் அவரது தொழிற்சாலையில் வேலை பார்த்தனர்.
“ஆனால் அவர் சந்தைப்படுத்துவதில் சிறந்தவர் இல்லை. எனவே எனக்கு அதில் ஆர்வம் பிறந்தது,” என்கிறார் ஸ்ரீராம். இவர் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலையில் எலெக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸில் பொறியியல் படிப்பு படித்தார். இங்கிலாந்தில் காலிடோனியன் பிஸினஸ் ஸ்கூலில் சந்தைப்படுத்தலில் முதுகலைப் படிப்பை பெற்றார்.
அவர் தந்தையிடம் படித்த பாடம், தரத்தில் எப்போதும் முன்னிலையில் தனக்கென தனி அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்பதாகும்.
“தரத்தில் சமரசம் இன்றி நல்ல பொருளை குறைந்த விலையில் அவர் கொடுத்தார். இன்றைக்கு சிறப்பாக இருக்கும் தொழிலைவிட எதிர்காலத்துக்கு சிறப்பாக இருக்கும் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதையும் நான் அறிந்துகொண்டேன். இன்று நீங்கள் செய்யும் தொழில் சிறப்பாக இருந்தால் பெரிய நிறுவனங்கள் அதில் நுழைந்துவிடும். சிறப்பாக இல்லையென்றால் தேங்கிவிடுவோம்,” என தன் தொழில் தத்துவத்தைப் பகிர்கிறார் ஸ்ரீராம்.
2007ல் தன் படிப்பை முடித்தபின் அவர் தொடங்கிய ஐடி நிறுவனம் வெற்றிகரமாக இருந்தாலும் புதிய வாய்ப்புகளை அவர் தேட இதுவே காரணம்.
|
தான் தொடங்கிய ஐடி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரை அதற்கு சிஇஓ ஆக்கிவிட்டு ப்யூச்சர் பார்ம் நிறுவனத்தில் கவனம் செலுத்துகிறார்
|
“மூன்று பேருடன் ஐடி நிறுவனத்தை ஆரம்பித்தேன். நாங்கள் ஆளுக்கு 5 லட்சம் முதலீடு செய்தோம். இன்று சியனாமென் திங்க்லேப்ஸ் என்கிற அந்நிறுவனம் 2 கோடி வரை வருவாய் ஈட்டுகிறது,” என்கிறார் ஸ்ரீராம்
தொடர்ந்து புதிய வாய்ப்புகளைத் தேடியபோதுதான் ஹைட்ரோபோனிக்ஸைக் கண்டறிந்தார் ஸ்ரீராம். “ஐடி நிறுவனத்தில் உள்ள பிற இயக்குநர்களில் ஒருவரை சிஇஓ ஆக்கிவிட்டு நான் ஹைட்ரோபோனிக்ஸில் குதித்துவிட்டேன்,” என்கிறார் ஸ்ரீராம்..
பொழுதுபோக்கு போலவே அதைத் தொடங்கினார். வெளிநாட்டிலிருந்து ஹைட்ரோபோனிக்ஸுக்காக எந்திரங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பிரித்து என்னென்ன இருக்கிறது என்று பார்த்தார்.
|
ப்யூச்சர் பார்ம்ஸில் நல்ல, தகுதி உடைய, குழுவினர் இருக்கிறார்கள்.
|
விரைவில் அவரே வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஹைட்ரோபோனிக்ஸ் கருவிகளை வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்தார். “எனக்கு நல்ல விற்பனை கிடைக்கவில்லை. ஏனெனில் அந்த கருவிகள் விலை அதிகம்,” என்கிறார் அவர்.
இதற்கான சந்தைப்படுத்தலின் போது அவர் தன் வயதொத்த ஒரே எண்ணம் கொண்ட பலரைச் சந்தித்தார். அவர்களுக்கும் புதிதாக எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அவர்களில் ஒருவர் பயோடெக்னாலஜிஸ்ட். ஐக்கிய அரபு நாட்டில் பெரிய ஹைட்ரோபோனிக்ஸ் நிறுவனம் ஒன்றில் தன் வேலையை விட்டவர். இன்னொருவர் தாய்லாந்து ஹைட்ரோபோனிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து இந்தியாவில் ஏதாவது செய்யவேண்டும் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தவர். அவரும் ஸ்ரீராமின் குழுவில் இணைந்தார்.
|
கோத்தகிரியில் உள்ள ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கீரைப் பண்ணை (படம்: சிறப்பு ஏற்பாடு)
|
தன்னுடைய நிறுவனத்தில் சிறந்த மூளைகளைப் பணிபுரிய ஸ்ரீராம் பெற்றது ஒன்றும் பிரமாதமில்லை! அவர்களை முதலீடு செய்யவைத்ததுதான் மிக முக்கியமான விஷயம்!
“நாங்கள் இதுவரை சுமார் 2.5 கோடி முதலீடு செய்துள்ளோம். என் குழுவில் சேர்ந்த 11 பேரும் ஆளுக்கு 10 முதல் 15 லட்சம் முதலீடு செய்துள்ளனர். விரைவில் பிரைவேட் லிமிடட் ஆக மாறப்போகும் இந்நிறுவனத்தில் அவர்களுக்குப் பங்குகள் அளிக்கப்படும்,” என்கிறார் அவர்.
யாருக்கும் குறிப்பிட்ட மாத சம்பளம் இல்லை. ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படும். நிறுவனரையும் சேர்த்து 12 பேருக்குத்தான் இந்த விதி. மீதி இருக்கும் 40 பேர் கொண்ட பணியாளர்களுக்கு இல்லை!
இந்நிறுவனம் ரூ 999லிருந்து ரூ 69,999 வரை விலையுள்ள ஹைட்ரோபோனிக் கருவிகளை விற்கிறது. அவர்கள் இந்த யூனிட்களை நிறுவியும் தருகிறார்கள்.
200 சதுர அடி ஹைட்ரோபோனிக் பண்ணை அமைக்க 1 லட்ச ரூபாய் ஆகும். 200- 5000 சதுர அடிவரை 1-10 லட்ச ரூபாய் ஆகும். 24-20 மாதங்களுக்குப் பின் வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும் என்கிறார் ஸ்ரீராம்.
|
நாட்டின் விவசாய நெருக்கடிக்கு ஹைட்ரோபோனிக்ஸ் தான் ஒரே தீர்வு என்கிறார் ஸ்ரீராம்
|
பொருட்களுக்கு சந்தையைக் கண்டுபிடிப்பதில் சவால் இருப்பதாக அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மருத்துவ குணம் உள்ள தாவரங்களை விற்பனைக்காக வளர்க்கும் வாடிக்கையாளர்களை அவர் இப்போது அடையாளம் கண்டுள்ளார்.
இவர்கள் புஜ் பகுதியில் அதானிக்காக கால் ஏக்கரில் ஒரு பண்ணையும் கோத்தகிரியில் மெக்டொனால்ட்ஸுக்காக கீரை வளர்க்கும் விவசாயி ஒருவருக்காகவும் பண்ணைகள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
நகர்புற விவசாயப்புரட்சியின் மீது ஸ்ரீராம் நம்பிக்கை வைத்துள்ளார். இந்த புரட்சியை உருவாக்கும் நவீன விவசாயிகள் கணிப்பொறி, சென்ஸார்கள் போன்ற ஹைட்ரோபோனிக்ஸுக்கு அவசியமான விஷயங்களைக் கையாளத்தெரிந்தவர்களாக இருப்பார்கள். நகரங்களில் வீடுகளின் மாடிகள் அறுவடைக் களங்களாக மாறும்.
2011-ல் ஸ்ரீராமுக்கு திருமணம் ஆனது. அவரது மனைவி ப்ரீத்தா சுரேஷ் அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் படித்தவர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் உண்டு.
அதிகம் படித்தவை
-
சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!
தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
உணவு கொடுத்த கோடிகள்
நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து மருந்துக் கம்பெனி ஒன்றில் மாதம் 350 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர், இன்றைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஆரோக்கிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தாத்தா சொல்லை தட்டாதே
ஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
கார் காதலன்
புதுடெல்லியைச் சேர்ந்த ஜதின் அகுஜா, கார்களின் காதலனாக இருக்கிறார். பழைய கார்களை வாங்கி புதுப்பித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார். புதிய காரைப்போலவே தரசோதனைகளைச் செய்து விற்கும் அவர் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டுகிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை
-
வறுமையில் இருந்து செழிப்புக்கு
இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்
-
மீண்டும் மீண்டும் வெற்றி!
பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை