வெறும் காகிதப்பூக்கள்தான்.... அள்ளிக் கொடுப்பதோ 64 கோடி ரூபாய் !
04-Dec-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
பள்ளியில் படிக்கும்போது கலர், கலரான காகிதங்களைக் கொண்டு, காகிதப்பூக்களை உருவாக்கியபோது உங்களிடம் இருந்த சந்தோஷத்தை உங்களால் இப்போது நினைவில் கொள்ள முடிகிறதா?
இந்த குழந்தைத்தனமான எளிய செயலை 64 கோடி ரூபாய் தொழிலாக மாற்றி இருக்கின்றனர் பெங்களூருவைச் சேர்ந்த ஹரிஷ்(53), ராஷ்மி குளோஸ்பெட்(52) தம்பதி. மேலும் இந்த தொழில் மூலம் 2000 பெண் தொழில்முனைவோருக்கு வேலை வாய்ப்புகள் அளித்து அவர்களின் வாழ்வில் இனிய வாசனையை பரவச் செய்திருக்கிறார்கள். தவிர உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை வேடிக்கை விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.
|
ஹரிஷ், ராஷ்மி குளோஸ்பெட் இருவரும், பெங்களூருவில் 2004-ம் ஆண்டு காகிதப் பூக்கள் தயாரிக்கும் தொழிலகத்தைத் தொடங்கினர். இது தற்போது 64 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் அளிக்கும் தொழிலாக வளர்ச்சி பெற்றுள்ளது. (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
இந்த தம்பதி, ஏஇசி ஆஃப்ஷோர் பிரைவேட் லிமிடெட்(AEC Offshore Pvt. Ltd), இட்சி பிட்சி பிரைவேட் லிமிடெட்(Itsy Bitsy Pvt. Ltd) என்ற இரண்டு நிறுவனங்கள் மூலம் கலை மற்றும் கைவினைப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் ஏற்றுமதியிலும் ஈடுபடுகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் கிராமங்களைச் சேர்ந்த பெண்களைத்தான் பெரும்பாலும் அவர்கள் வேலைக்குச் சேர்த்துள்ளனர். இது தவிர உ.பி., ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களின் கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் இங்கு பணியாற்றுகின்றனர்.
பணியாற்றுவோர்களில் பாதிப்பேர் நேரடி வேலைவாய்ப்பின் மூலம் 10,000 முதல் 12,000 ரூபாய் வரை மாதம் தோறும் சம்பளம் பெறுகின்றனர். இதுதவிர மறைமுக வேலைவாய்ப்பின் மூலம், தயாரிப்புப் பொருளுக்கு ஏற்றவாறும், பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறும் பணம் பெறுகின்றனர். இங்கு பணியாற்றுவோரில் ஐந்து சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள்.
முக்கியமாக ஏற்றுமதி சந்தையைக் குறி வைத்து ஏஇசி பேப்பர் கைவினை பொருட்கள் உற்பத்தி நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வாழ்த்து அட்டைகள் உருவாக்குதல், பள்ளிக்குழந்தைகளின் ஸ்க்ராப் புத்தகங்கள் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் கையால் செய்யப்படும் காகித பூக்கள், ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டன.
2007-ம் ஆண்டு பெங்களூரில் முதலாவது இட்ஸி பிட்ஸி ஸ்டோரைத் தொடங்கி உள்ளூர் சந்தையில் முதலில் கால்பதித்தனர். இப்போது நாடு முழுவதும் ஏழு நகரங்களில் 21 இட்ஸி பிட்ஸி ஸ்டோர்கள் இருக்கின்றன. பெங்களூருவில் மட்டும் 11 கடைகள் இருக்கின்றன. இதர ஸ்டோர்கள் சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் டெல்லியில் இருக்கின்றன.
ராஷ்மி, அடிப்படையில் ஒரு ஹோமியோபதி மருத்துவர், இப்போது இட்ஸி பிட்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். சில்லறை வர்த்தகத்தைக் கவனித்து வருகிறார். ஹரிஷ், ஒரு சிவில் என்ஜினியர். இப்போது ஏஇசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கவனித்துக் கொள்கிறார். இன்றைக்கு ஏஇசி, இட்ஸி பிட்ஸி இரண்டு நிறுவனங்களும் சமமான அளவில் ஆண்டு வருவாயைக் கொண்டிருக்கின்றன.
எந்தநேரம் பார்த்தாலும் கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருப்பதும், ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருப்பதுமாக இருக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மாற்று ஒன்றைப் பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்த்திருந்தனர். இந்தியாவில் ஸ்க்ராப் புக் மற்றும் கார்டு உருவாக்குதல் போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளில் அதிகம் பேர் ஈடுபடுவதால் இட்ஸி பிட்ஸி நிறுவனம் வேகமாக விரிவடைந்து வருகிறது.
|
பெங்களூரில் உருவாக்கப்படும் காகிதப்பூக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
|
இந்தப் பொழுதுபோக்கு, மேற்குலகில் தோன்றியது. “அமெரிக்காவில் உள்ள உடா என்றழைக்கப்படும் பகுதியில் இருந்து ஸ்க்ராப் புக் உருவானது. 1960-களில் பெரும் புகழ்பெற்று விளங்கியது,” என்று தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஹரிஷ். “அதே காலகட்டத்தில்தான் கார்டுகள் உருவாக்குவது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கியது. கலவை ஊடகம் (பெயிண்ட், இங்க், வாட்டர் கலர் ஆகிய பல்வேறு வித்தியாசமான ஊடகங்களைக் கலந்து உருவாக்கும் கலை) பல நூற்றாண்டுகளாகச் சுற்றி வருகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பெரும் புகழ்பெற்று அவை மறுமலர்ச்சியைக் கொண்டிருக்கின்றன.”
இவர்கள், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். தங்களது வாழ்க்கையும், பணிகளும் சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொள்வதைப் பார்த்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு தொழில் தொடங்கும் முன்பு, அவர்கள் பல்வேறு வித்தியாசமான வேலைகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகள் இருந்தனர்.
கடின உழைப்புடன், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டனர். 2004-ம் ஆண்டு இந்தியா திரும்பி வரவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தபோது, அவர்களிடம் 220,000 அமெரிக்க டாலர் என்ற பெரும்தொகை இருந்தது. (அப்போது இதன் மதிப்பு ரூ.1.25 கோடி), அதனை பெங்களூர் கொண்டு வந்து தொழிலில் முதலீடு செய்தனர்.
ஹரிஷ் எப்போதுமே நகரவாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திசாலியான நபர். பெங்களூரில் உள்ள பிஎம்எஸ் பொறியியல் கல்லூரியில் சிவில் டிரான்ஸ்போர்ட் எஞ்சினியரிங் படித்தார். அவரது கல்லூரியில் படித்த வட இந்திய மாணவர்களுக்கு பொறியியல் வடிவமைப்புகளை வரைந்து கொடுத்து உதவினார்.
|
ஏஇசி நிறுவனத்தில் பெரும்பாலும் 100 சதவிகிதம் பெண்கள்தான் பணியாற்றி வருகின்றனர்.
|
தமது வீட்டில் ஒரு சிறிய அறையில் சில தொழில்நுட்ப வரைபடங்களை வரையும் நபர்களைக் கொண்டு, தலா 100 ரூபாய்க்கு வரைபடங்களை வரைந்து வாங்கினார். பின்னர் அதனை மாணவர்களுக்கு சிறிது லாபத்தொகையில் விற்பனை செய்தார். “இதுதான் என்னுடைய முதல் தொழிலாக இருந்தது,” என்கிறார்
பொறியியல் பட்டப்படிப்பு முடிந்ததும், ஒரு கட்டுமான நிறுவனத்தை அவர் தொடங்கினார். பணிமுடிவடைந்ததற்கு பின்னும் பணம் பெறுவது தாமதமாக இருந்தது. இதனால், இந்த நிறுவனம் தொடந்து செயல்படுவது சிரமாக இருந்தது. ”இதனை மூடிவிடுவது என முடிவு செய்தபோது, சிங்கப்பூரில் உள்ள ஒரு சீன நிறுவனமான ஸ்டார்கோ டிரேடிங் என்ற நிறுவனத்தில் இருந்து நல்ல வேலை தேடி வந்தது,” என்று நினைவுகூறுகிறார். ஸ்டார்கோவில், ஹரிஷ் இந்திய வர்த்தகத்தை முன்னெடுப்பது, இந்தியாவில் இருந்து கட்டுமானப் பொருட்களை பெறுவது ஆகியவற்றுக்கான பொறுப்பாளராக இருந்தார்.
ராஷ்மி, ஹரிஷ் இருவரும், ஒருவருக்கொருவர் பி.யூ,சி படிக்கும்போதில் இருந்தே அறிமுகம் ஆனவர்கள். ஹரிஷ் பொறியியல் மேற்படிப்பு படிக்கச் சென்றார். ராஷ்மி பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி படித்தார்.
“நான் சிங்கப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, என் தாய் என்னிடம், திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். எனக்கு தெரிந்த ஒரு நபரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவரிடம் சொன்னேன்,” என்று ராஷ்மியை திருமணம் செய்து கொண்டதை நினைவுகூறுகிறார் ஹரிஷ். “பெங்களூருவுக்கு ஒருமுறை சென்றபோது, ராஷ்மியைச் சந்தித்தேன். இரவு உணவுக்காக அவரை வெளியே அழைத்துச் சென்றேன். அப்போது அவரிடம் என் காதலைச் சொன்னேன். 1992-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனக்கு 26 வயது. ராஷ்மிக்கு 25 வயது.”
சிங்கப்பூரில் ஹரிஷின் ஆலோசனையின்படி, அவரது நிறுவனம் இந்திய கைவினைப் பொருட்களை விற்பதற்கான ஷோரூம் ஒன்றை தொடங்கியது. ராஷ்மி ஹரிஷுடன் பணியாற்றத் தொடங்கினார். அவர் சில்லறை விற்பனையைக் கவனித்துக் கொண்டார். இந்தியாவில் இருந்து கட்டுமானப்பொருட்களை இறக்குமதி செய்யும் பணிகளை ஹரிஷ் கவனித்துக் கொண்டார்.
நல்ல வாய்ப்புகளுக்காக 1994-ம் ஆண்டு இருவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கிருந்த இயற்கைவாழ்வியல் கல்லூரியில் ராஷ்மி மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார்.
உடனடியாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. வீடு வீடாகச் சென்று விபத்து காப்பீடு பாலிசி விற்பனையில் ஹரிஷ் ஈடுபட்டார்.
“ரொம்ப சிரமப்பட்டு முயன்றேன். ஒரே ஒரு பாலிசிதான் விற்பனை செய்ய முடிந்தது,” என்று புன்னகையுடன் நினைவு கூர்கிறார் ஹரிஷ். இதன் பின்னர், சிட்னியில் உள்ள தள்ளுபடி சில்லறை விற்பனை நிறுவனமான கிளின்ட்ஸ் கிரேஸி பார்கெய்ன்ஸில் வேலை கிடைத்ததும், அவரது துயரம் முடிவுக்கு வந்தது.
“அந்த நிறுவனத்துக்கு நேர்காணலுக்குச் சென்றபோது, அவர்கள் என்னிடம் வித்தியாசமாகச் சிந்திக்கும் நபர்களை, மிகவும் உற்சாகமானவர்களை வேலைக்கு எடுப்பதாகச் சொன்னார்கள். நான் அந்த நேர்காணலுக்குத் கோட் சூட் போட்டு சென்றிருந்தேன், ஆஸ்திரேலிய கலாசாரத்தில் அவ்வாறு யாரும் உடையணிவதில்லை. ஒரு வித்தியாசமான ஆள் என்று என்னைப் பற்றி அவர்கள் நினைத்திருக்கலாம்,” என்றபடி சிரிக்கிறார் ஹரிஷ்.
|
மூன்று ஆண்டுகள் வரை ஹரிஷ், ராஷ்மி இருவரும் தலா 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக எடுத்துக் கொண்டனர். நிறுவனத்தில் வரும் லாபத்தை மீண்டும் நிறுவனங்களிலேயே முதலீடு செய்தனர்.
|
இந்தியாவில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களை கொள்முதல் செய்யும் பிரிவில் ஹரிஷ் நியமிக்கப்பட்டார். “திண்பண்டங்கள் பிரிவில் பணியாற்றுவது முற்றிலும் எனக்கு புதியதாக இருந்தது. எனினும், அது பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். உலகம் முழுவதும் பல பயணங்கள் மேற்கொண்டேன்.”
க்ளின்ட் நிறுவனத்தில் மொத்த விற்பனைப் பிரிவில் ராஷ்மிக்குக்கும் வேலை கிடைத்தது. அதன் தின்பண்டங்கள் பிரிவில் பணியாற்றத் தொடங்கியதும், ஆறு ஆண்டுகளில் அதன் விற்பனையை மூன்று லட்சம் டாலரில் இருந்து 50 லட்சம் டாலராக உயர்த்தியதாக ஹரிஷ் சொல்கிறார்.
மெல்போர்ன் நகரில் உள்ள ஹெரிடேஜ் சாக்லேட்ஸ் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைத்ததும், 18 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார் ஹரிஷ். மெல்போர்ன் நகரில், பிளாஸ்டிக் குழாய் உற்பத்தி நிறுவனத்தில் ராஷ்மி பணியாற்றினார். தவிர கிராஃபிக் டிசைன் பயிற்சி மேற்கொண்டார்.
ஹெரிடேஜ் சாக்லேட் உடனான ஒப்பந்தம் முடிந்த பின்னர், இருவரும் சிட்னிக்குத் திரும்பினர். ஆஸ்திரேலியன் எக்ஸ்போர்ட் கனெக்ஷன் (ஏஇசி) என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனம், இந்தியப் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்தது.
ஒன்றரை ஆண்டில் அந்த தொழிலை மூடிவிட்டு, 2004-ம் ஆண்டு பெங்களூரு வந்தனர். ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது வீட்டையும் விற்று விட்டனர். கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தைச் சேமிப்பாக்க் கொண்டு வந்தனர்.
பன்னார்கெட்டா சாலையில் ஒரு சிறிய தொழிற்சாலையை எடுத்து இருவரும் காகிதப் பூக்கள் தயாரிக்கத் தொடங்கினர். “ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தபோது, ஸ்கிராப் புக் தொழிலை அறிந்திருந்தோம். தாய்லாந்தில் இருந்து பல்வேறு வகையான காகிதப்பூக்கள் வந்ததைப் பார்த்தோம்,” என்கிறார் ராஷ்மி.
வண்ணங்கள் குறித்து ராஷ்மி நல்ல தெளிவு கொண்டவர். வளைந்து கொடுக்கும் கற்பனைத் திறன் கொண்டவர். மெல்போர்ன் நகரில் இருக்கும்போது, மேற்கொண்ட கிராபிக் டிசைன் பயிற்சி அனுபவத்தை இங்கே பரிசோதித்தார். அது நன்றாகப் பலன் அளித்தது.
|
நாடு முழுவதும் 21 இட்சி பிட்ஸி ஸ்டோர்கள் உள்ளன
|
“எங்களுடைய சொந்த வடிவமைப்புடன் வந்தோம். எங்களுக்காக காகிதப்பூக்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி அளித்தோம், “ என்கிறார் ராஷ்மி. பெங்களூருவில் 20 ஊழியர்களுடன் முதல் தொழிற்சாலையை அவர்கள் தொடங்கினர். ஆரம்ப கட்டத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால், ஏறக்குறைய தொழிலை மூடிவிடுவது என்று முடிவு செய்து விட்டனர். அப்போது இங்கிலாந்தில் இருந்து ஒரு வாடிக்கையாளர் பெரும் ஆர்டர் ஒன்றைக் கொடுத்தார். தவிர 1,00000 அமெரிக்க டாலரை முன்பணமாகக் கொடுத்தார். இதன் மூலம் மீண்டும் இதில் அவர்கள் களம் இறங்கினர். “அவர்தான் எங்கள் மீட்பர்,” என்கிறார் ஹரிஷ்.
ஹரிஷ் முன்பு வேலைபார்த்த சிட்னி நகரின் கிளின்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் முன்வந்து 100000 அமெரிக்க டாலர் கொடுத்து உதவினார். “எப்படி எங்களுக்கு இந்தச் நல்ல திருப்பம் ஏற்பட்டது என்று என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை,” என்கிறார் அவர்.
சீனாவில் ஒன்று, தாய்லாந்தில் இரண்டு, இந்தியாவில் ஏஇசி என உலகம் முழுவதும் நான்கு நிறுவனங்கள்தான் கையால் செய்யப்படும் காகிதப் பூக்களை உருவாக்குகின்றன. லிட்டில் பேர்டி என்ற பிராண்ட் பெயரில் இட்ஸி பிட்ஸி நிறுவனத்தின் மூலம் கைவினைப் பொருட்கள், காகிதப் பூக்களை விற்பனை செய்கின்றனர்.
தங்களுடைய ஸ்டோர்களில் அவர்கள், கையால் உற்பத்தி செய்யப்படும் மணிகளையும் விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டிக், கண்ணாடி, டெரகோட்டா, பீங்கான் ஆகியவற்றால் செய்யப்படும் மணிகளை சரமாக கோர்த்து மக்கள் தங்கள் சொந்த நகைகளை தாங்களே செய்து கொள்கின்றனர்.
இதுவரை, இருவரும் வெளியில் இருந்து ஏதும் நிதி திரட்டவில்லை. “எங்களுக்குப்போட்டியில்லை. நாங்கள் உயிர்ப்புடன் வளர்ந்தோம். மூன்று ஆண்டுகள் வரைக்கும், நாங்கள் இருவரும் தலா 20,000 ரூபாயை நிறுவனத்தில் இருந்து சம்பளமாக எடுத்துக் கொண்டோம். எங்களுக்கு என்ன லாபம் கிடைக்கிறதோ, அதனை திரும்பவும் தொழிலேயே மறுமுதலீடு செய்கிறோம்,” என்று சொல்கிறார் ஹரிஷ்.
|
ஏஇசி மற்றும் இட்ஸி பிட்ஸி நிறுவனங்கள் நேரடியாக 1,000 பெண்களுக்கும், மறைமுகமாக 1000 பெண்களுக்கும் வேலை வாய்ப்பு தருகின்றன.
|
டி-சர்ட் கழிவுகளை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் காகிதத்தில் இருந்து ஏஇசி நிறுவனத்துக்கு கைகள் மூலம் காகிதப்பூக்கள் தயாரிக்கப்படுகின்றன. “தொழிற்சாலைகள் பழைய டி-சர்ட்களை இழைகளாக மாற்றுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து நாங்கள் டி-சர்ட் கழிவுகளை வாங்கி அதனை காகிதங்களாகத் தயாரிக்கின்றோம். அந்த காகிதங்கள் அழகிய பூக்களாகத் தயாரிக்கப்படுகின்றன,” என்கிறார் ஹரிஷ்.
இவர்களின் மூத்த மகள் விபா (23), தொழிலகப் பொறியியல் & மேலாண்மையில் 2017-ம் ஆண்டு பட்டம் பெற்றார். பின்னர் பெற்றோருடன் இணைந்து, தொழிலின் முகநூல், இ-காமர்ஸ் வர்த்தகம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்கிறார்.
அவர்களின் இளைய மகள், இஷா(16) பி.யு.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் சொந்தத் தொழிலில் ஈடுபடுகிறார். ஓவஞ்சர்ஸ் என்ற பிராண்ட் பெயரில் கப்கேக்குகளைத் தயாரிக்கும் அவர், மாதம் தோறும் 20,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
தம் கனவுகளை வளர்த்தெடுக்கும் இந்தத் தம்பதி, தங்களது காகிதப் பூக்களின் வழியே உண்மையில் பல நூறு மக்களின் வாழ்வில் பரவலாக மணம் வீசச் செய்திருக்கின்றனர்.
அதிகம் படித்தவை
-
மண்ணின் மகள்
பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
இளமையில் புதுமை
சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை
-
தலைக்கவச மனிதர்!
நாட்டுப் பிரிவினையின்போது வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பம் அவருடையது. துணிப்பைகள் தைக்க ஆரம்பித்து 200 கோடி ரூபாய் புரளும் நிறுவனம் தொடங்கியது வரையிலான வெற்றிக்கதைக்கு சொந்தக்காரர் அவர். சுபாஷ் கபூரின் கதையை எழுதுகிறார் பார்த்தோ பர்மான்
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்
பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!
புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை