2 லட்சம் முதலீடு; 3 கோடி வருவாய்! 3 டி பிரிண்டர் தொழிலில் ஜெயித்த ஏழு இளைஞர்கள்!
05-Oct-2024
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
அந்த சிறிய அறைக்குள் அவர்கள் ஏழுபேரும் ஒன்றாக இருப்பதே சிரமம். இங்கிருந்துதான் அந்த ஏழுபேரும் 3 டி பிரிண்டர்களை உருவாக்கி, அதனைப் பள்ளிகளுக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். வெறும் நான்கு ஆண்டுகளில் அவர்களின் ஆண்டு வருவாய் 3 கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது.
இந்த ஏழுபேரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள் மட்டுமின்றி, ஒரேமாதிரியான கனவுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், 2012-ம் ஆண்டு பால பாரதி பப்ளிக் பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்ற பின்னர் , இந்த ஏழுபேர் குழு பிரிந்தது. அவர்கள் தத்தமது வழிகளில் பயணித்தனர். வெவ்வேறு உயர்கல்வி படிப்புகளை முடித்தனர். எனினும் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். சுற்றுலா செல்வதற்காக மீண்டும் சேர்ந்தனர்.
|
3டெக்ஸ்டர்(3Dexter) நிறுவனர்கள்: நிற்பவர்களில் (இடது புறம் இருந்து) நிக்குஞ்ச், ரவ்னாக், சாந்தனு மற்றும் பரத்; உட்கார்ந்திருப்பவர்கள் (இடதுபுறமிருந்து) சமர்த், ராகவ் மற்றும் நாமான்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
நண்பர்கள் இணைந்து சாகசப் பயணம் செல்வதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப் பார்த்த இதர நண்பர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டனர். “எனவே நாங்கள் சாகசப்பயணத்துக்காக ஸ்மாப்ஸ்டர்ஸ்(Smapsters) என்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினோம்,” என்று நினைவு கூறுகிறார் ஏழுபேர்களில் ஒருவரான ராகவ் சரீன்.
20 முதல் 25 பேர்களைக் கொண்ட பயண ஆர்வலர்களுக்கு அவர்கள் பயணங்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனால் குறுகிய காலத்தில் அவர்கள் ரூ 2 லட்ச ரூபாய் லாபத்தைப் பெற்றனர். இந்தப் பணத்தைக் கொண்டு, இந்த குழுவினர் 3டெக்ஸ்டர் நிறுவனத்தை ரவ்னாக் சிங்கியின் அடைசலான ஒரு அறையில் தொடங்கினர். அந்த அறையில்தான் அவர்கள் பிஎஸ்3கேம்ஸ் விளையாடுவார்கள்.
துணை நிறுவனரில் ஒருவரான நாமான் சிங்கால்(25), நினைவு கூர்ந்தபோது, “நாங்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். ஒரு 3 டி பிரிண்டரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தோம். அந்த பிரிண்டர் வந்ததும், அதனை பிரித்துப் போட்டோம். அது எப்படி இயங்குகிறது என்று பார்த்தோம். பின்னர் இந்தியாவில் கிடைக்கும் உதிரிபாகங்களையும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களையும் கொண்டு, சொந்தமான வெர்ஷனை உருவாக்கினோம்.”
முன்னரே எழுதப்பட்டு இருக்கும் மென்பொருள் ஃபைலில்இருந்து 3டி பிரிண்டர் பிரிண்ட் செய்கிறது. முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்ஸி சர்வதேச 3 டி பிரிண்டிங் தொழில் சந்தை 2020-ம் ஆண்டில் 20 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இதில் இந்திய சந்தையின் பங்கு 79 மில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
“யார் வேண்டுமானாலும், மேக்கர்ஸ் & பையர்ஸ் மற்றும் ஸ்கெட்ச்அப் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி எந்த ஒரு படத்தையும் வரையமுடியும். பிரிண்டர் அதை பிரிண்ட் செய்யும்போது, ஒன்றின்மேல் ஒன்றாக படுக்கை வசத்தில் லேயரை உருவாக்குகிறது,” என்கிறார் சிங்கால். “இறுதியாக பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட 3டி வடிவம் கிடைக்கும். மர பிரேம்களைக் கொண்ட 3 டி பிரிண்டர்களை முதலில் தொடங்கினோம். அதனை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்றோம். ஓரளவு லாபம் சம்பாதித்தோம்.”
சிங்கால் உடன், சரீன்(25), சிங்கி(25), நிகுஞ்ச் சிங்கால்(22), ஸ்மர்த் வாசுதேவ்(25), பரத் பத்ரா (25) மற்றும் சாந்தனு குவத்ரா(25) ஆகியோருடன் நரேந்தர் சியான் சுக்லாவும் 3டெக்ஸ்டர் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பட்டியலில் இருக்கின்றனர்.
ஐசிஏ எஜூஸ்கில்ஸ் என்ற கணிதம் மற்றும் நிதி பயிற்சி மையத்தின் இயக்குனராக இருக்கும் சுக்லா, இந்த ஏழு நண்பர்களின் இலட்சியத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். “அவர், கவுரவ ஆலோசகர் என்பதற்கும் அப்பாற்பட்டவர். எங்களுக்கு சரியான திசையை நோக்கி வழிகாட்டுபவர். செலவை கட்டுப்படுத்துவது குறித்து அவர் அளிக்கும் ஆலோசனைகள் எங்களுக்கு உதவுகின்றன. பட்டை தீட்டப்பட்ட தொழில் அதிபர்களாக எங்களை மாற்றுகின்றன,” என்கிறார் சிங்கி.
|
ஒரு பள்ளியில் 3டி பிரிண்டிங் குறித்துப் பயிற்சி நடக்கிறது
|
இந்த பிரிண்டரைச் சந்தைப்படுத்துவதுதான் அவர்களுக்கு உண்மையான சவாலாக இருந்தது. “இந்த பிரிண்டர், பேஷன் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் பேருதவி செய்வதாக இருக்கும். தவிர, ஆர்க்கிடெக்டுகள் தங்களின் வரைபடங்களை முடிக்கும் முன்பு, ஸ்கெட்ச்-களை இதில் பார்த்துக் கொள்ளலாம்,” என்கிறார் அவர்.
ஆனால், இந்த நண்பர்கள், கல்வித்துறையில் கவனம் செலுத்துவது என்று திட்டமிட்டனர். மாற்றத்தை உருவாக்குவோம் என்ற அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்காக பணிபுரியும் தன்னார்வ நிறுவனத்தில் இவர்கள் சேவை செய்பவர்கள் என்பது கூடுதல் செய்தி.
“எனவே, சுமார் 20 பள்ளிகளுக்குச் சென்றோம். அங்கே இந்தப் புதிய தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவது குறித்து இலவசமாகப் பயிற்சிகள் கொடுத்தோம். டெல்லி துவாகராவில் உள்ள மேகஸ்ஃபோர்ட் பள்ளியில் பரிசோதனை முயற்சியாக மூன்றுமாதம் இந்த திட்டத்தை மேற்கொண்டோம். அவர்களின் பாடத்திட்டத்தில் 3 டெக்ஸ்டர் இடம் பெறும் படி ஒரு பாடத்திட்டத்தை வகுத்தோம்,” என தங்களின் புதுவிதமான சந்தைப்படுத்துதல் திட்டம் குறித்துக் கூறுகிறார் சிங்கி.
அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது சரியான பாதையாகத் தோன்றியது. மாணவர்கள் புதியதை கற்கவேண்டும் என்ற நோக்கத்துடன், பாடத்திட்டத்தில் 3டி பிரிண்டிங்கை சேர்க்கும் திட்டத்துடன் பள்ளிகளுக்கு அவர்கள் சென்றனர்.
இப்போது அவர்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான பேக்கேஜில் பள்ளிகளின் தேவைக்கு ஏற்றப் பல்வேறு வகையான பிரிண்டர்களை வழங்குகின்றனர்.
“நாங்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம் அல்லது எங்களது பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். அங்கு தொடர்ச்சியாக வகுப்புகள் நடக்கின்றன. ஒரு குழந்தைக்கு கட்டணம் ஆண்டுக்கு ரூ.1200 ஆக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு மாதத்துக்கும் ரூ.100 அல்லது ஒரு வகுப்புக்கு ரூ.40 க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. மாணவர்கள் புதிய நவீன பொருட்களை உருவாக்குகின்றனர். இது வளரும் குழந்தைகளை முடிவின்றி மகிழ்விக்கிறது,” என்றபடி மெதுவாகச் சிரிக்கிறார் சிங்கி.
|
நாடு முழுவதும் உள்ள 150 பள்ளிகளுடன் டெக்ஸ்டர் ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கு குழந்தைகளுக்கு 3 டி பிரிண்டிங் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்
|
மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மேக்கர்ஸ் &பையர்ஸ் என்ற ஆஸ்திரேலிய நிறுவனத்தின் அனுமதி பெற்ற எளிமையான மென்பொருளை உபயோகப்படுத்தி 3டி டிசைன்களை உருவாக்குகின்றனர். அதே நேரத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கூகுள் நிறுவனத்தின் ஓப்பன் சோர்ஸ் மென்பொருளான ஸ்கெட்ச் அப்பை உபயோகித்துப் படம் வரைகின்றனர்.
சைட்லைன் மேப்ஸ்(Sightline Maps) என்ற இணையதளத்தின் உதவியுடன் மாணவர்கள் எந்த ஒரு நில அமைப்பையும் கூகுள் மேப்பில் தேடமுடியும். அது மலைச்சிகரமானாலும், எரிமலையானாலும், பீடபூமியானாலும், நினைவு சின்னமானாலும் அதனை 3டி மாடலாக வரையமுடியும்.
“இப்போது 3டெக்ஸ்டர் 150 பள்ளிகளில் சேவைபுரிகிறது. ஆண்டு தோறும் 300 யூனிட்கள் விற்பனை செய்கின்றனர். இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பள்ளிகளில்கூட 3டெக்ஸ்டர் குறித்து ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், நாங்கள் சங்கிலித்தொடர் பள்ளிகளை இலக்காக வைத்துள்ளோம். இதன் மூலம் குறைந்த முயற்சியில் அதிக லாபம் பெற முடியும்,” என்கிறார் சிங்கால்.
ஒவ்வொரு நகரங்களிலும் சந்தைப்படுத்துதல், விற்பனையைக் கவனித்து வரும் பங்குதாரர் நிறுவனங்களை அதிக அளவு தொடர்பு கொள்வது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
பிரதான குழுவின் மூலம், கொல்கத்தா, சென்னை மற்றும் மதுரையில் உள்ள பங்குதாரர் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சங்கிலித் தொடர் பள்ளிகளைத் தவிர பி2பி என்ற முறையில் இருந்து பி2சி முறைக்கு மாறுவதற்கு பிரான்ஞ்சைஸ் கொடுக்கும் வழிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
மரத்தால் செய்யப்பட்ட பிரேம்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்ட 3டி பிரிண்டர்கள் இப்போது, நேர்த்தியான மற்றும் ஸ்டைலான உலோக பிரேம் கொண்டதாகத் தயாரிக்கப்படுகிறது. 3டி படங்களை உருவாக்கும் பொருட்கள் பிளாஸ்டிக்கில் இருந்து பி.எல்.ஏ, ஏ.பி.எஸ், நைலான் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் என சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்த நிறுவனம் ஏழு நண்பர்களால் 5 ஊழியர்களுடன் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 40 முழு நேர ஊழியர்கள் இருக்கின்றனர். முதல் ஆண்டில் 40லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் இருந்தது. இப்போது மூன்று கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இதன் நிறுவனர்கள் ஆரம்பத்தில், மாதச் சம்பளமாக ஆளுக்கு 20 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டனர். இப்போது மாதம் 50 ஆயிரம் ரூபாய் அவர்களுக்குக் கிடைக்கிறது. இரண்டு சிங்கால் சகோதரர்களான சிங்கி மற்றும் சரீனும் முழு நேரமாகப் பணியாற்றுகின்றனர். வாசுதேவ், பாத்ரா மற்றும் குவத்ரா ஆகியோர் வேறு பணிகளில் இருப்பதால் முக்கியமான நாட்களில் மீட்டிங்களில் பங்கேற்கின்றனர்.
இந்த நண்பர்கள் ஒரு குடும்பத்தைப் போல இருக்கின்னர். அவர்களின் பெற்றோரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். எனினும், அவர்களது பெற்றோர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்வதை விரும்பவில்லை. ஆயினும் அவர்களது பெற்றோர் எப்போதுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
அவர்களுக்குள் கருத்துமோதல் வருவது உண்டுதான்.ஆனால் சோதனையான நேரங்களில் அவர்களை நட்பு தாங்கி நிற்கிறது. கடுமையான விவாதங்களின் இறுதி முடிவு இனிப்பாகவே எப்போதும் இருக்கும்!
அதிகம் படித்தவை
-
தோல்விகளுக்குப் பின் வெற்றி
கோவையை சேர்ந்த பிரிதேஷ் ஆஷர், மேகா ஆஷர் தம்பதி வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர். இப்போது அதை ரூ.25 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி உள்ளனர். இதற்கு முன்பு சில தொழில்களை செய்து நஷ்டத்தைச் சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
பர்பிள் படை
கூடைப்பந்து விளையாட்டில் இந்திய அணியில் இடம்பெற்றவர். ஆனால் ஒரு காயம் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாமல் போக, தனது தந்தையுடன் இணைந்து, அவரது கார் வாடகை வியாபாரத்தை ரூ.300 கோடி வருவாய் பெறும் நிறுவனமாக மாற்றினார். தேவன் லாட் சொல்லும் வெற்றி கதை.
-
பந்தன் என்னும் பந்தம்
மிகவும் எளிய பின்னணி கொண்ட சந்திர சேகர் கோஷ், கிராமப்புற மகளிரின் நிலை கண்டு மனம் நொந்தார். அவர்களுக்கு உதவ அவர் தொடங்கிய பந்தன் என்ற சிறுகடன் நிறுவனம் ஏராளமான பெண்களின் வாழ்க்கையை மாற்றியதுடன் இன்று வங்கியாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை
-
வறுமையில் இருந்து செழிப்புக்கு
இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்
-
தன்னம்பிக்கையின் தூதுவர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
அர்ச்சனாவின் அசத்தல் வெற்றி!
பொறியியல் படித்து முடித்த உடன் தொழில் ஒன்றைத் தொடங்கிய அர்ச்சனாவுக்கு தோல்விதான் கிடைத்தது. எனினும் மனம் தளராமல் தனது கணவருடன் இணைந்து இயற்கை வேளாண் பண்ணை முறையில் ஈடுபட்டார். இப்போது வெற்றிகரமாக இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார். அர்ச்சனாவின் வெற்றிப்பயணம் குறித்து உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.