பழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்!
08-Jan-2026
By நரேந்திரா கௌசிக்
புதுடெல்லி
தெற்கு டெல்லிப்பகுதியில் ஒரு பெரிய செல்போன் கடைக்கு வெளியே பழைய போன்களை பழுதுநீக்கி விற்றவர் இன்று அதே தொழிலை 150 கோடிரூபாய் புரளும் பெரிய நிறுவனமாக மாற்றி இருக்கிறார். இதை எட்டே ஆண்டுகளில் நிகழ்த்தி இருக்கிறார்.
இன்று யுவராஜ் அமன் சிங், பழைய போன்களை விற்கும் தொழிலில் முக்கியமான நபராக இருப்பவர். அவர் தன் தொழிலின் ஆரம்ப நாட்களை நினைவுகூர்கிறார்.
|
|
|
டெல்லியில் சோனி எரிக்சன் கடைவாசலில் சாலையோரமாக ஒரு மேசையில் பழைய போன்களை விற்பனை செய்த யுவராஜ் அமன் சிங், இன்று 150 கோடி ரூபாய் நிறுவனம் ஒன்றுக்கு தலைவராக இருக்கிறார்.(படங்கள்: நவ்னிதா) |
“சாலையோரத்தில் ஒரு மேசையைபோட்டு போன்களை விற்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் பெரும் கூட்டம் சேர ஆரம்பித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசைக் கூப்பிடவேண்டி இருந்தது,’’ என்கிறார் 34 வயதாகும் இந்த முதல் தலைமுறை தொழிலதிபர். தெற்கு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராக்கிங் டீல்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 50,000 பழுதுநீக்கப்பட்ட பழைய போன்களை விற்கிறது. அதேபோல் பழைய டேப்லட்கள், பவர் பேங்குகள், மொபைல் போன் உபகரணங்கள் ஆகியவற்றையும் விற்கிறார்கள். டெக்னிக்ஸ் க்ரூப் ஆப் கம்பனிகள் என்ற குழுமத்தின் உப குழுமமாக ராக்கிங் டீல்ஸ் உள்ளது.
ஆப்பிள், சாம்சங், சோனி எரிக்சன், எல்ஜி, மைக்ரோமாக்ஸ், நோக்கியா, ஹெச்டிசி, சோனி, சியாமி, ப்ளாக்பெரி போன்ற நிறுவனங்களிடம் இருந்து திருப்பி வாங்கப்பட்ட, பெட்டியில் அடைக்கப்படாத, மற்றும் பழைய போன்களை வாங்கி அவற்றை சரிசெய்கிறார்கள். இதற்காக டெல்லி (15000 ச.அடி), பெங்களூரு (3000 ச.அடி) ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் நோய்டாவில் 5000 ச.அடி யூனிட் ஒன்றும் உள்ளது. இங்கே பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சரிசெய்கிறார்கள். அவர்களின் மொத்த விற்பனையில் 10 சதவீதம் ஏற்றுமதியில் கிடைப்பதாக சிங் கூறுகிறார்.
ஆன்லைனிலும் டெல்லியில் இருக்கும் 16 கடைகளிலும் இந்த போன்களை வாரண்டியுடன் விற்கிறார்கள். புதிய போன்களைவிட 40 சதவீதம் குறைந்த விலையில் இவை விற்கப்படுகின்றன.
|
|
|
சிங் தலைமையில் ராக்கிங் டீல்ஸ் 200 பேர் வேலைபார்க்கும் நிறுவனமாக மாறி உள்ளது. |
டெக்னிக்ஸ் எலெக்ட்ரானிகஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் ராக்கிங் டீல்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரான சிங் இங்கிலாந்தில் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியல் படித்துள்ளார்.
அவர் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் தன் மைத்துனரின் வேர்ஹவுஸ் ஒன்றில் வேலை பார்த்தார். 2003-ல் இந்தியா திரும்பியதும் டாடா டெலிசர்வீசஸின் பிரான்சைஸ் ஒன்றை எடுத்தார்.
டாடா நிறுவனத்தின் கருவிகளை விற்பதிலும் டாடா ஸ்கை இணைப்புகளைக் கொடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டாலும் இந்த புதிய பொருட்களை விற்பதில் லாபம் மிகக்குறைவாக இருப்பதைக் கண்டார்.
“டீலர்களே பெருமளவு லாபத்தைப் பெறுகிறார்கள். கீழே இருப்பவர்களிடம் அவர்கள் தார்மீக முறைப்படி நடந்துகொள்வதில்லை,’’ என்கிறார் சிங்.
2005-ல் முன்னாள் டாடா பணியாளர் ஒருவர், சோனி எரிக்சன் பணியாளர் ஒருவரை அறிமுகம் செய்வித்தார். அவர் சோனி எரிக்சனின் பழைய போன்களை விற்கும் வாய்ப்பைத் தந்தார்.
தெற்கு டெல்லியில் உள்ள சோனி எரிக்சன் கடையின் வாசலில் பழைய போன்களை விற்க ஆரம்பித்தார் சிங்.
|
|
|
பெங்களூரு, டெல்லி, நோய்டாவில் உள்ள ராக்கிங் டீல்ஸ் தொழிற்சாலைகளில் பழையபோன்களை சரிசெய்கிறார்கள் |
நல்ல வரவேற்பு இருந்தது. அதிலிருந்து சிங் திரும்பிப்பார்க்கவே இல்லை. “இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த தொழில் என்பதை உணர்ந்தேன். இதில் நல்ல லாபமும் இருந்தது,’’ என்கிறார்.
சாம்சங் நிறுவனத்துடன் 2008-ல் அவர்களின் பழைய போன்களை திரும்பப்பெறுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டார். அவற்றை சரிசெய்து ப்ளிப்கார்ட் மூலம் விற்றார். ராக்கிங் டீல்ஸ் உருவானது. முதல் ஆண்டிலேயே 20 கோடிக்கு விற்பனை. ஷாப் க்ளூஸ், இபே, ஸ்னாப் டீல், குயிக்கர், ஜங்க்லீ, ஸாப்பர் ஆகிய தளங்களிலும் இவர்களின் போன்கள் கிடைக்கின்றன.
அமெரிக்காவில் விற்பனைக்காக ஒரு பிரிவு வைத்துள்ளனர். வேறு சில நாடுகளுக்கும் விரிவு படுத்தும் திட்டம் உள்ளது. ராக்கிங் டீல்ஸ் நிறுவனம் 3 மாதம் முதல் ஒரு ஆண்டுவரை வாரண்டியுடன் பழைய போன்களை விற்கிறது. சுமார் 24 பரிசோதனைகளுக்குப் பின் அவை விற்பனைக்கு வருகின்றன.
இவை மூன்று பிரிவாக உள்ளன. ஏ (கீறல்கள் இல்லாதவை), பி (சிறு கீறல்கள் உள்ளவை), மற்றும் சி (ஒரளவு சிதைவு உள்ள போன்கள்) - விலையும் வேறுபடுகிறது. ப்யூச்சர்டயல், டெராஸிபார் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து போன்களை சரிசெய்வதில், சான்றளிப்பதில், அவர்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
டிடிடிசி கூரியர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலமாக தங்களால் விற்கப்பட்ட பழைய போன்களை மறு பழுதுபார்ப்பதற்காக திரும்பப்பெறுகிறார்கள். 200 பேர் பணிபுரியும் நிறுவனமாக ராக்கிங் டீல்ஸ் வளர்ந்துள்ளது.
ப்ரேம் சிங் என்கிறவர்தான் தன் நிறுவனமான டெக்னிக்ஸில் நீண்டகாலமாகப் பணிபுரிகிறவர் என்கிற சிங், தன் நிறுவனத்தில் இருக்கும் மூத்த பணியாளர்களை அவர்களின் உழைப்புக்காகப் புகழ்கிறார்.
நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் சிங்கின் அடுத்த இலக்கு ராக்கிங் டீல் என்கிற பிராண்டை பலப்படுத்துவதுதான். “நான் வாங்கி விற்கும் நிலையைக் கடந்துவிட்டேன். எங்கள் பிராண்டை மேலும் வலுப்படுத்துவதுதான் இப்போது முக்கியம்,’’ என்கிறார் அவர்.
|
|
|
ராக்கிங் டீல்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜை வலுப்படுத்துவதும் பங்குகள் வெளியிடுவதும் சிங்கின் எதிர்கால திட்டங்கள் |
சிங் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாத்தா, அப்பா இருவருமே ஐபிஎஸ் அதிகாரிகள். தன் நிறுவனத்துக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் பங்குகள் வெளியிடும் திட்டமும் வைத்திருக்கிறார் இவர்.
ஷாப்க்ளூஸ் இணையதளம் சமீபத்தில் நடத்திய சர்வே அதன் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் குறைந்த விலையில் கிடைக்கும் பழுதுபார்க்கப்பட்ட பழைய போன்களையே வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
ராக்கிங் டீல்ஸ் வரும் காலங்களில் போன் சந்தையை குலுங்கச் செய்யும் என்றே தோன்றுகிறது.
அதிகம் படித்தவை
-
பணம் சமைக்கும் குக்கர்!
வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை
-
தலைக்கவச மனிதர்!
நாட்டுப் பிரிவினையின்போது வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பம் அவருடையது. துணிப்பைகள் தைக்க ஆரம்பித்து 200 கோடி ரூபாய் புரளும் நிறுவனம் தொடங்கியது வரையிலான வெற்றிக்கதைக்கு சொந்தக்காரர் அவர். சுபாஷ் கபூரின் கதையை எழுதுகிறார் பார்த்தோ பர்மான்
-
ஒடிஷாவின் சுவை!
ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்
-
உயரங்களை எட்டியவர்
ராஜ்குமார் குப்தாவின் கதை அசாதாரணமானது. ஆலைத் தொழிலாளியாக ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ச்சிபெற்றவர். சின்னதாக ஒரு குடியிருப்பைக் கட்டுவதில் தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடத்தும் அளவுக்கு வளர்ச்சி. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
பயணங்கள் முடிவதில்லை!
அவர் ரஜினிகாந்த் போல ஒரு சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ஆனால் பசித்த இரவுகளும் பிளாட்பார தூக்கமும்தான் காத்திருந்தன. பி சி வினோஜ் குமார், இன்று 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவன உரிமையாளரைச் சந்திக்கிறார்.





