பரோட்டாக்காரப் பையனின் பலே வெற்றி! தொழிலதிபர் ஆகி ஆண்டுக்கு பதினெட்டு கோடி வருவாய் ஈட்டுகிறார்!
08-Oct-2024
By பி சி வினோஜ் குமார்
சென்னை
தந்தையின் சாலையோர உணவுக் கடையில் பரோட்டா போட்டதன் காரணமாக பள்ளியில் படிக்கும் போது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியவர் அவர். இன்று அவர் ஒரு சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட் கடைகளின் உரிமையாளர். ஆண்டு வருவாய் 18 கோடி.
சாலை ஓர உணவு விற்பவராக இருந்து, கிராண்ட் கேமன் தீவில் (Grand Cayman Island) உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தலைமை சமையல்காரராக உயர்ந்து, பின்னர், சென்னை திரும்பி சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களைத் தொடங்கியவர். சுரேஷ் சின்னசாமியின் இந்த பயணம் மிகவும் வியப்புக்குரியது. வாழ்க்கையில் கடினமான சூழல்களை உடைத்து, சாதனை படைக்க விரும்புவோருக்கு மிகவும் ஊக்கம் தருவது.
|
1980-களில் சுரேஷ் சின்னசாமியின் தந்தை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் தள்ளுவண்டியில் வைத்து உணவுக்கடை நடத்தி வந்தார். இந்தக் கடினமான சூழலில் இருந்து வந்தவர் சுரேஷ். இப்போது அவர் சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களின் உரிமையாளர்.(புகைப்படங்கள்: ரவிக்குமார்)
|
பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருக்கும் சுரேஷ் (37), சென்னையில் உள்ள சுவாமி’ஸ் தோசக்கல் (Samy’s Dosakall) சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களின் நிறுவனர். உணர்ச்சிவசப்படாமல், மகிழ்ச்சிகரமாக, தமது குழந்தைப் பருவத்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
“பெசன்ட்நகர் கடற்கரையில் 1979-ம் ஆண்டு ஒரு தள்ளுவண்டியில் என் தந்தை உணவுக் கடை நடத்தி வந்தார். பின்னர், இதே போன்று ஒரு கடையை மெரினா கடற்கரையில் 1987-ல் தொடங்கினார். இது தவிர அடையாறு பகுதியில் சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து, மதிய உணவு விற்பனை செய்தார். ஆட்டுக்கறி, கோழிக்கறி குழம்பு ஆகியவற்றுடன் முழு சாப்பாடு விற்பனை செய்தார்.”
அவர்களுடைய அடையாறு உணவு கடையில் மதிய உணவு நேரத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள், கட்டடத்தொழிலாளர்கள் அதிக அளவுக்கு திரண்டு வந்தனர். இதனால் அவர்கள் தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது.
“12 வயது சிறுவனாக இருந்தபோது, என்னுடைய தந்தைக்கு நான் உதவி செய்தேன். நானும், என்னைவிட 3 வயது இளையவனான என்னுடைய சகோதரனும், உணவு தயாரிப்பதற்கும், பாத்திரங்களை கழுவுவதற்கும் உதவி செய்வோம்,” என்கிறார் சுரேஷ். அப்போது அவர் ஆல்காட் நினைவு பள்ளியில் மாணவராக இருந்தார். மதியம் சத்துணவுடன் இலவசக் கல்வியை கற்று வந்தார்.
இந்நிலையில் அவரது குடும்பம் திண்டுக்கல்லுக்கு இடம் பெயர்ந்தது. அப்போது அவருக்கு 13 வயது. அவருடைய தந்தை பெரியகோட்டை என்ற கிராமத்தில் விவசாயம் செய்ததுடன் அருகில் உள்ள பழனியில் சிறிய உணவகத்தையும் தொடங்கினார். இதனால் சுரேஷ் படிப்பு தடைப்பட்டது.
சுரேஷ் தமது தந்தையுடன் அந்த உணவகத்தில் வேலை பார்த்தார். அவருடைய சகோதரர், கிராமத்தில் விவசாயப் பணிகளுக்கு உதவி செய்தார். அதே நேரத்தில் உள்ளூர் பள்ளியில் படித்து வந்தார். எனினும், எதிர்பார்த்தபடி அவரது குடும்பத்துக்கு விவசாயத்தில் இருந்து போதிய வருவாய் கிடைக்கவில்லை. எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சென்னை திரும்புவது என்று முடிவு செய்தனர்.
சென்னையில் அவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்ரீனிவாசபுரத்தில் ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்தனர். மீண்டும் அவர்கள், உணவு வியாபாரத்தைத் தொடங்கினர். அப்போது, தமது தந்தையின் உணவு கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சுரேஷ் தானே இன்னொரு உணவுக்கடையைத் தொடங்கினார். இட்லி, தோசை, பூரிகள் விற்க ஆரம்பித்தார். அப்போது அவரது வயது 15.
“விரைவிலேயே என் தந்தையை விட அதிகமாக நான் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அவர் 200 ரூபாய்க்கு விற்பனை செய்தால், நான் 250 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். பின்னர், மதிய உணவு விற்றேன். எனக்கு அருகில் இன்னொரு உணவுக் கடையையும் தொடங்கினோம். என்னுடைய அம்மா அதனைக் கவனித்துக் கொண்டார். முதன் முறையாக வேலைக்கு ஆட்களும் நியமித்தோம்,” என்கிறார் சுரேஷ்.
|
கிராண்ட் கேமன் தீவில் ஹோட்டல் ரிட்ஜ் கார்ல்டன், ஓர் உல்லாசக் கப்பல் ஆகியவற்றில் சமையல்கலைஞராக சுரேஷ் பணியாற்றினார்
|
அவரது கடைக்கு வந்த மூத்த வாடிக்கையாளர் ஒருவரின் அறிவுரையை கேட்டபோது சுரேஷ் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக ஒரு தனியார் டுடோரியலில் சேர்ந்து படித்தார்.
உணவுக் கடை வேலை முடிந்த பின்னர், தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை படித்தார். 37 சதவிகித மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதனை அடுத்து பெசன்ட் நகரில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் 12ம் வகுப்பு வரை படித்தார்.
பள்ளியில் படிக்கும்போது, அவருடன் படித்த மாணவர்கள் அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். “புரோட்டாகாரப் பையன் என்று என்னை அவர்கள் அழைத்தார்கள். ஆனால், அதற்காக நான் கவலைப்படவில்லை. வெட்கப்படவும் இல்லை. மேலும் கடினமாக உழைப்பில் ஈடுபட உந்துதலாகத்தான் அந்த கிண்டல்கள் இருந்தன,” என்கிறார் சுரேஷ். பள்ளி முடிந்த உடன் தொடர்ந்து அவர் உணவுத் தொழிலில் ஈடுபட்டார்.
12-ம் வகுப்பு முடித்த பின்னர், 1997-ம் ஆண்டு அவர் துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் பி.ஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பில் மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டில், போரூரில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார்.
“அப்போது எங்கள் தொழிலில் இருந்துபோதுமான பணம் சம்பாதித்தோம். கல்வி மூலம் மட்டுமே அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும் என்று நான் உணர்ந்தேன். எனவே, என்னுடைய படிப்பில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.”
“காலையில் இருந்து மாலை 3 மணி வரை நான் கேட்டரிங் வகுப்பில் இருப்பேன். அதன் பின்னர், செய்முறை அறிவுக்காகவும், அனுபவத்துக்காகவும் இன்ஸ்டியூட்டின் முன் அனுமதியுடன், சவேரா ஹோட்டல் கிச்சனில், நள்ளிரவு வரை பணியாற்றினேன்,” என்கிறார் சுரேஷ்.
|
தோசக்கல் ரெஸ்டாரெண்டில் அவர்கள், பல்வேறு வகையான அசைவ உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் வழங்குகின்றனர்
|
மாலை நேரக்கல்லூரிக்கு அவர் முறையாகச் செல்லவில்லை. ஆனால், தேர்வுகளை தவறாமல் எழுதினார். தேர்வில் வெற்றி பெற்று பட்டம் பெற்றார். பின்னர், 2001-2003ல் தொலைதூரக் கல்வி வழியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்) முடித்தார்.
பயணிகள் கப்பலில் சமையல்காரராகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 2001-ம் ஆண்டு சுரேஷ் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். சென்னையில் உள்ள இண்டஸ் ஹாஸ்பிட்டாலிட்டி கேரியர்ஸ் அண்ட் டிரைனிங் சென்டர் வழங்கிய ஒரு மாதப் படிப்பில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, மும்பையில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். உலகின் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான கார்னிவல் பயணிகள் கப்பலில் தமது கனவு பணியைப் பெற்றார்.
சுரேஷ் மியாமிக்குப் பயணித்து கப்பல் வேலையில் சேரவேண்டும். இப்பயணச் செலவுக்காக அவரது பக்கத்து வீட்டுக்காரர், தம்முடைய நகைகளை அடகு வைக்கத் தந்தார். இதை வைத்து சுரேஷின் குடும்பம் ஒரு லட்சம் ரூபாய் திரட்டியது. அந்த சமயத்தில் சுரேஷின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. ஆனால், ஒட்டு மொத்த கடனையும், ஒரு சில மாதங்களில் சுரேஷ் அடைத்து விட்டார்.
“கப்பலில் நான், 500 அமெரிக்க டாலர் சம்பளத்துக்கு உதவி சமையல் ஆளாக வேலைக்குச் சேர்ந்தேன். பகுதி நேரமாக ஹவுஸ் கீப்பிங் வேலையில் இதை விட அதிகமாக, அதாவது மாதம் 600 டாலர் சம்பாதித்தேன். அறைகள், டாய்லெட் சுத்தம் செய்தல், பெட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்தேன்.
“ஒவ்வொரு ஆண்டும் எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஐந்தாம் ஆண்டில், நான் கப்பலில் இருந்து விலகியபோது, தலைமை சமையலராக டிப்ஸ் உட்பட மாதம் 2000 அமெரிக்க டாலர் பெற்றேன்,” என தமது பயணம் குறித்து, அண்மையில் தான் தொடங்கியிருக்கும் வடபழனி ரெஸ்டாரெண்டின் வசதியான சூழலில் இருந்து சுரேஷ் நினைவுகூர்கிறார்.
கார்னிவல் கப்பலில் இருந்து, கரீபியனில் உள்ள கிராண்ட் கேமன் தீவுக்குப் பணிக்குச் சென்றார். அங்கே, ஒரு ஜமைக்கா நாட்டவருக்காக ஒரு பார் மற்றும் ரெஸ்டாரெண்டை அமைத்துத்தரும் வேலை செய்தார். பின்னர், ஏழு மாதங்கள் கழித்து அந்தத் தீவில் உள்ள முன்னணி ஹோட்டலான ரிட்ஜ் கார்ல்டானில் பணியில் சேர்ந்தார்.
“2013-ம் ஆண்டு வரை, கார்ல்டான் ஹோட்டலில் நான் தலைமை சமையலராகப் பணியாற்றினேன். இந்தக் காலகட்டத்தில் என்னுடைய சம்பாத்தியம், மாதம் 4 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தது. தவிர என்னுடைய மனைவி திவ்யாவையும் இங்கே கூட்டி வந்தேன். அவர், ஸ்பாவில், ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். அவர் மாதம் தோறும் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தார்,” என நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சுரேஷ்.
சென்னையில் 2008-ம் ஆண்டு திவ்யாவை திருமணம் செய்தார். அதே ஆண்டில் கப்பலில் அவருக்காக வேலை தேடிக் கொடுத்தார்.
|
தொடர்ந்து சமைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் சுரேஷின் விருப்பம்.
|
“இது ஒரு காதல் திருமணம். சவேராவில் பணியாற்றியபோதே எனக்கு திவ்யாவைத் தெரியும்,” என்று சொல்கிறார் சுரேஷ்.
இந்த தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு, நல்ல சேமிப்புடன் சென்னைக்குத் திரும்பி வந்தனர். சென்னையில் உள்ள ஒரு சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்டில் தலைமை சமையலராக சுரேஷ் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பிராண்டை முன்னெடுக்க அவர் உதவி புரிந்தார்.
2016-ம் ஆண்டு சொந்தமாக சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களைத் தொடங்க வேண்டும் என்று சுரேஷ் தீர்மானித்தார். 1.8 கோடி ரூபாய் முதலீட்டுடன், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் 10,000 சதுர அடியில் ஒரு ஃபுட் கோர்ட் தொடங்கினார்.
இந்த வெற்றியின் காரணமாக, அடுத்த சில மாதங்களில் தஞ்சாவூர், விக்ரவாண்டி உள்ளிட்ட இடங்களில் மேலும் ஐந்து ரெஸ்டாரெண்ட்களைத் தொடங்கினார். பல்வேறு திட்டங்களில் கூடுதலாக 3 கோடி ரூபாய் முதலீடு செய்தார். அனைத்து இடங்களும், உணவு விடுதிக்கான ஹால் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இவைகள், நிறுவனத்துக்கு கூடுதல் வருவாயைக் கொடுத்தன.
“என் சொந்தப் பணத்தை முதலீடு செய்தேன். ஹோட்டலில் கிடைக்கும் லாபத்தில் இருந்து எடுத்து புதிய நிறுவனங்களில் திரும்பவும் முதலீடு செய்தேன். பணப்பற்றாக்குறை ஏற்படும் போது, தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து கடன் வாங்குவேன். லாபத்தில் இருந்து அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பேன்.”
“2017-18ம் நிதி ஆண்டில் எங்களுடைய ஆண்டு வருவாய் 18 கோடி ரூபாயாக இருக்கிறது. என்னுடைய ஹோட்டல்கள் லாபத்தில் இயங்குகின்றன. ஒவ்வொரு மாதமும், லாபத்தில் 25 சதவிகிதத்தை என்னுடைய ஊழியர்களுக்கு வழங்குகிறேன். இது அவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதுடன், இந்த தொழில் மேலும் லாபத்துடன் இயங்க, அவர்கள்கூடுதலாக உழைக்கின்றனர்,” என்கிறார் சுரேஷ். தமது நிறுவனத்தை பிராப்பரைட்டர்ஷிப் நிறுவனமாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது நிறுவனத்தில் இப்போது 400 பேர் பணியாற்றுகின்றனர்.
|
வடபழனியில் உள்ள சாமி’ஸ் தோசக்கல் நிறுவனத்தின் முகப்புப் பகுதி
|
சுரேஷின் ரெஸ்டாரெண்ட், அசைவ உணவுக்காக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. தமது வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து இந்த நல்லெண்ணத்தை முதலீடு செய்வதில் சுரேஷ் ஆர்வமாக இருக்கிறார். வடபழனி ரெஸ்டாரெண்டில், ஒவ்வொரு உணவு வகையும் 99 ரூபாய் விலை என்று புதுமையான விலையை அறிமுகம் செய்திருக்கிறார். இதனால், அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சுரேஷின் சகோதரர், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர், கிண்டியில் உள்ள மையப்படுத்தப்பட்ட சமையல் பிரிவைப் கவனித்துக் கொள்கின்றனர். வாரத்துக்கு மூன்று முறையாவது அங்கு சென்று வருகின்றனர்.
“பெரியதாக செயல்பட வேண்டும் என்பதுதான் என் நோக்கம். சாதனை வளர்ச்சியைப் பெறுவதற்காக, எல்லா முயற்சியிலும் ஈடுபடுவேன்,” என்கிறார் சுரேஷ். அவரது மனைவி இப்போது, குழந்தைகளுக்கு யோகா, இசை கற்றுத்தருகிறார்; தன் ஆறு வயது மகன் சூர்யாவுடன் நேரத்தைச் செலவிடுகிறார்.
அதிகம் படித்தவை
-
கரும்பாய் இனிக்கும் இரும்பு!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
தொழிலதிபரான பேராசிரியர்
நாமக்கல் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த பழனி ஜி பெரியசாமி, அமெரிக்கா சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தன் பொருளாதார அறிவைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியிருக்கும் குழுமம் ஆயிரம் கோடிகளைத் தாண்டி வர்த்தகம் செய்கிறது. பிசி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
இளம் சாதனையாளர்
பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
காதல் தந்த வெற்றி
பீகார் மாநில இளைஞர் விகாஸ் குத்குத்யா, டெல்லியில் இருக்கும் தமது காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போனார். அங்குதான் அவருக்கு ஒரு புதிய தொழில் யோசனை தோன்றியது. இன்று அவர் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பொக்கே மலர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். பிலால் ஹாண்டு எழுதும் கட்டுரை
-
குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்
பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.