முன்னாள் ஐடி ஊழியர்கள், இன்று 7.4 கோடி ரூபாய் தேநீர் பிராண்ட் ஓனர்கள்
21-Nov-2024
By ராதிகா சுதாகர்
சென்னை
காப்பியில் இருந்து விலகி, சென்னை இப்போது தேநீர் கோப்பையை விரும்ப ஆரம்பித்து விட்டது. சென்னையைச் சேர்ந்த இரு நண்பர்கள் தேநீர் விற்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்து அதனை ஒரு பிராண்ட் ஆக முன்னெடுத்திருக்கின்றனர். பல்வேறு சுவைகளில் நன்கு சூடாக வழங்கப்படும் தேநீர் வியாபாரத்தின் மூலம் அவர்களின் 17 கடைகளில் இருந்து கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் 7.4 கோடி ரூபாய் புரண்டுள்ளது. அவர்களின் தேநீர் பிராண்ட் சாய் கிங்ஸ் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது.
நண்பர்களான ஜஹபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோபன் இருவரின் வெற்றிக்கதை விசித்திரமானது. முதலில் ஐடி தொழிலில் தொடங்கி, பின்னர், சென்னையின் தேநீர் சுவையில் இணைந்துள்ளனர்.
|
ஜஹபர் சாதிக் (இடது பக்கம்), பாலாஜி சடகோபன் இருவரும் 2016-ம் ஆண்டு ஒரு தேநீர் கடை தொடங்கினர். இப்போது சாய் கிங்ஸ் 17 சங்கிலித் தொடர் தேநீர் கடைகளாக வளர்ந்திருக்கிறது. (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
சாய் கிங்ஸ் தொடங்கும் முன்பு, இருவரும் சில தொழில்களை முயற்சித்துப் பார்த்தனர். “சென்னையில், பல்வேறு சுவைகளில் தேநீரை யாரும் வழங்குவதில்லை என்பதை உணர்ந்து, தேநீர் கடை தொடங்கும் யோசனைக்கு வந்தோம்,” என நினைவு கூர்கிறார் சாதிக்.
இவர்கள் இருவரும், ஒரு பெருநகரில் வசிக்கும் நடுத்தரவர்க்கத்தின் கனவுகளின் வழியாக பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் தான். பொறியியல் படிப்பது, ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை தேடுவது, பின்னர் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் ’செட்டில்’ ஆவது என்பதுதான் அது. இதில் இவர்கள் கடைசி கட்டத்தை தவிர்த்துள்ளனர் என்பதுதான் வித்தியாசம். அவர்களுடன் படித்தவர்கள், இலக்குகள், திட்டங்கள், ஆன்சைட் வாய்ப்புகள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு என்று போகும் நிலையில், அதிலிருந்து மாறுபட்டு இருக்கவே இருவரும் விரும்பினர்.
வங்கி மேலாளரின் மகனான சடகோபன்தான் முதலில் தொழில் தொடங்குவது பற்றி தமது நண்பர் சாதிக் உடன் விவாதித்தார். சாதிக் ஒரு வங்கி காசாளரின் மகன். நண்பரின் தொழில் யோசனைகுறித்து சந்தேகத்துடனே இருந்தார். சிறுவனாக இருக்கும் போது அவரது தந்தை கேபிள் டெலிவிஷன் தொழிலில் ஈடுபட்டதை நேரில் பார்த்திருக்கிறார். அவர் தந்தை தொழிலில் நஷ்டம் அடைந்ததையும் கண்டிருக்கிறார்.
இருப்பினும் செயலில் முதலில் குதித்தவர் சாதிக் தான். அவர் ஐ.டி நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை விட்டு விலகினார். ஜெபிஎஸ் வென்ஞ்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த தொழிலில் சடகோபனும் சின்ன பங்குதாரர். 2012-ம் ஆண்டு இந்த நிறுவனம், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு (ITES) பணிகளுடன் ஓர் அழகு நிலையம், சங்கிலித்தொடர் துரித உணவு நிறுவனம் உள்ளிட்ட சில பிராண்ட்களை பிரான்ஞ்சைஸ் எடுத்தது.
தற்போது 42 வயதாகும் சடகோபனை விடவும், சாதிக் இரண்டு வயது இளையவர். ஏறக்குறைய பத்தரை ஆண்டுகள் ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு (ITES) பணிகளில் , கிழக்கு முதல் மேற்கு வரை பல்வேறு நாடுகளில் பரவியிருந்த நிறுவனங்களில் பல்வேறு மனிதர்களை நிர்வகித்தவர்கள்.
இருவரும், வடசென்னையில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் பி.இ முடித்தனர். 2002-ம் ஆண்டு ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோதுதான் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாதிக் ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது சடகோபன் அங்கே சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றினர். சாதிக் இன்னொரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றபோதும், இருவரும் தொடர்பில் இருந்தனர்.
ஜெபிஎஸ் வென்ஞ்சர்ஸ் நன்றாகப் போய்க் கொண்டிருந்தபோது, சடகோபன் வேலையில் இருந்து விலகி, சாதிக் உடன் இணைந்தார். அவர்கள் ஒருமுறை டெல்லிக்கு பயணம் சென்றிருந்தபோது, சொந்தமாக ஒரு பிராண்ட்டை முன்னெடுத்துத் தொழிலில் ஈடுபடுவது என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியது.
|
சாய் கிங்ஸின் பணியாளர் எண்ணிக்கை 150 ஆக இருக்கிறது.
|
“பிரான்ஞ்சைஸ்களுடன் பணியாற்றியபோது எங்களுக்கு அது குறித்த ஆழமான புரிதல் ஏற்பட்டது. பானங்கள் விற்கும் கடை வைக்க வேண்டும் என்று 2007-ம் ஆண்டு ஒரு யோசனை உதித்தது. நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, கடந்து சென்ற ஒரு காஃபி ஷாப்பை பார்த்தோம். எனவே, காஃபி ஷாப் திறப்பது பற்றி நாங்கள் ஆலோசித்தோம்” என்கிறார் சடகோபன். “ஒரு குறிப்பிட்ட விலையில் அழகான சூழலில் தேநீர்’ என்ற யோசனை சாத்தியமான தொழிலாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது,” என்கிறார் சாதிக்.
சாய் கிங்ஸ் அக்டோபர் 2016-ல் பிறந்தது. முதல் கடை கீழ்ப்பாக்கத்தில் 350 ச.அடி-யில் திறக்கப்பட்டது. இதற்காக 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். மேலும் நான்கு கடைகள், ஒவ்வொன்றும் சராசரியாக 400 ச.அடியில் மத்திய சென்னையின் ஆடம்பரமான இடங்களில் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் 6 மாதத்துக்குள் திறக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றது. ஒரு கோப்பை தேநீர் ரூ.20 என தொடக்க விலை இருந்தது. சென்னையின் தெருக்களில் இருக்கும் வழக்கமான தேநீர் கடைகளில் விற்கும் தேநீரைவிட இது கொஞ்சம் விலை அதிகம்தான். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கமாக செல்லும் ஆடம்பரமான கஃபேக்களை விட விலை குறைவுதான். நகரின் தேநீர் ஆர்வலர்கள் மத்தியில் சாய் கிங்ஸ் இடம் பிடித்தது.
வேறு எதை விடவும், சாய் கிங்ஸ் தேநீர் சுவை என்று தனித்து அறியும் வகையில் இருந்தது. தேநீர் பல்வேறு வகைகளில் இஞ்சி முதல் செம்பருத்தி தேநீர் வரையும், ஹைதராபாத் சுலைமானி தேநீர் முதல் கேரளாவின் தம் தேநீர் வரையில் அவர்களின் கடைகளில் இருந்தன. பல்வேறு மூலிகை தேநீர் வகைகளும் கிடைத்தன.
சாய்கிங்ஸில் நொறுக்குத் தீனிகள் உண்டு. நூடுல் சமோசா முதல் சான்ட் விட்ச், குக்கீஸ், இனிப்பு முதல் நூடூல்ஸ் வரையில் சில மில்க் ஷேக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆன்லைனிலும் பதிவு செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்றும் வழங்குகின்றனர். உணவு விநியோக செயலி நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுகின்றனர். சிறப்பாக தயாரிக்கப்பட்ட கார்ட்போர்ட்டு ஃபிளாஸ்க் மூலம் தேநீர் உள்ளிட்ட பானங்களை சூடாக வாடிக்கையாளர்களின் இடங்களுக்குக் கொண்டு சேர்க்கின்றனர்.
|
சென்னையில் உள்ள ஒரு சாய் கிங்ஸ் கடை. தேநீர் குடித்தபடி அரட்டை அடிக்க ஏற்ற சூழலுடன்.
|
எல்லாமும் சரியாகச் சென்று கொண்டிருந்தது. முதல் நான்கு கடைகளில் ஒவ்வொன்றில் இருந்தும் மாதம் தோறும் 7 முதல் 9 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒவ்வொரு கடையிலும் மாதம் தோறும் 35,000 கோப்பைகள் தேநீர் விற்றது. ஆகவே தென் சென்னையில் தலா 40 லட்சம் ரூபாய் முதலீட்டில் மேலும் மூன்று கடைகளைத் தொடங்கினர்.
அவர்களின் வருவாய், நான்கு கடைகளில் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் என இருந்ததுடன், ஏழு கடைகளாக அதிகரித்து 2.3 கோடி ரூபாயாக வருவாய் உயர்ந்தது. அவர்கள் மேலும் 9 கடைகள் தொடங்கினர். அதன் மூலம் 7.4 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கடைகளின் ஊழியர் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அவர்கள் தங்களது 17வது கடையை சென்னை மேற்கு மாம்பலத்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கினர்.
“2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 20 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் எதிர்பார்ப்புடன் உள்ளோம்,” என்கிறார் சாதிக். அவர்கள் இருவரும் முந்தைய ஜெபிஎஸ் வென்ஞ்சர்ஸ் நிறுவனத்தை துறந்துவருவதுடன் அந்த நிறுவனத்தின் பிரான்ஞ்சைஸ்களையும் கொடுத்து வருகின்றனர். டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் உட்பட சாதிக்கின் இரண்டு சகோதரர்களிடம் அவற்றை ஒப்படைத்து விட்டனர்.
இப்போது அவர்கள் இருவரும் முழுக்க, முழுக்க சாய் கிங்ஸில் கவனம் செலுத்துகின்றனர். இப்போது 100 கடைகள் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். 2021-ம் ஆண்டுக்குள் மேலும் பல நகரங்களிலும் கடைகளைத் திறப்பது என்று திட்டமிட்டுள்ளனர். அதில் பெங்களூரிலும் இதே போல தொடங்கப்பட்ட ஒரு சங்கிலித் தொடர் தேநீர் நிறுவனத்தை கைப்பற்றுவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.
|
2019-20ம் நிதி ஆண்டில் ரூ.20 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்று சடகோபனும், சாதிக்கும் திட்டமிட்டுள்ளனர்.
|
“எங்களின் எல்லா விரிவாக்கப் பணிகளுக்குப் பின்னும், தேநீருக்கு என இருக்கும் சந்தையில் ஒருசிறிய பகுதியை மட்டுமே எங்களால் பிடிக்க முடியும் என்று நினைக்கிறேன்,” என்கிறார் சாதிக். அவர்கள் சாய் கிங்ஸின் பிராஞ்சைஸ் வாய்ப்புகளை பிறருக்கு அளிக்கவில்லை. “நாங்களே இதை தொடர்ந்து நடத்தினால்தான் தரத்தை நிர்வகிக்க முடியும் என்று நம்புகிறோம்,” என்கிறார் அவர்.
எல்லாவற்றுக்கும் மேலே, அவர்கள், வல்லுநர்களின் உதவியுடன் மெனு தயாரிப்பை முறைப்படுத்துவது குறித்து திட்டமிடுகின்றனர். அவர்களின் பல்வேறு கடைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு வகையான தேநீர், நொறுக்கு தீனிகள், மில்க் ஷேக் தயாரிப்பதில் நன்றாக பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
10 கடைகள் தொடங்குவதற்காக, 2010-ம் ஆண்டு ஒரு ஏஞ்சல் முதலீட்டாளரிடம் இருந்து 2.1 கோடி ரூபாய் நிதியை இருவரும் பெற்றனர். இப்போது மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன், மேலும் சில முதலீட்டாளர்களுடன் பேசி வருகின்றனர்.
“இப்போதைய நிலையில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேறினால், இந்த உலகமே எமது விளையாட்டுக் களமாக இருக்கும்,” என்கின்றனர், முதல் தலைமுறை தொழில் முனைவோர்களான இவர்கள். நல்ல உணவு மற்றும் திறன்மிகுந்த வணிகத்துக்கான ஆர்வத்தால் இணைக்கப்பெற்ற நண்பர்களின் வெற்றிக்கதை இது!
அதிகம் படித்தவை
-
வேர் ஈஸ் த பார்ட்டி?
வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
பூட்டிக்கிடக்கும் வீடுகளும் பணம் தரும்
பணக்காரர்களில் பெரும்பாலானோர் பிரபலமான சுற்றுலாதலங்களில், வீடுகள் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் பூட்டியே இருக்கும் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்று புதிய யோசனையைத் தந்து 52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் ரோஷன். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
அர்ச்சனாவின் அசத்தல் வெற்றி!
பொறியியல் படித்து முடித்த உடன் தொழில் ஒன்றைத் தொடங்கிய அர்ச்சனாவுக்கு தோல்விதான் கிடைத்தது. எனினும் மனம் தளராமல் தனது கணவருடன் இணைந்து இயற்கை வேளாண் பண்ணை முறையில் ஈடுபட்டார். இப்போது வெற்றிகரமாக இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார். அர்ச்சனாவின் வெற்றிப்பயணம் குறித்து உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
நாற்பதிலும் வெல்லலாம்!
பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
ஒரு தாயின் தேடல்
வெளிநாடுகளில் இருப்பது போல இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பொருட்கள் இருக்கிறதா என்று தேடினார் இளம் தாயான மாலிகா. ஆனால், அவருக்கு கிடைத்த பொருட்கள் தரமாக இல்லை. தொடர்ந்து தானே குழந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
மெத்தென்று ஒரு வெற்றி
மாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை