Milky Mist

Wednesday, 2 April 2025

ஐந்தே ஆண்டுகளில் 35 கோடி வருவாய்! அமெரிக்க வேலையை விட்டு அசத்தும் கோவை தொழிலதிபர்!

02-Apr-2025 By உஷா பிரசாத்
கோவை

Posted 30 Jul 2021

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் என நல்ல சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த வேலையை விட்டு விலகினார் பிரபு காந்திகுமார். கோவையில் உள்ள தமது குடும்ப தொழிலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தார். தமது தாத்தா தொடங்கிய உலோக வார்ப்பகப் பட்டறையில் சில ஆண்டுகள் பிரபு காந்திகுமார் பணியாற்றினார்.

தனக்கு தானே ஒரு லட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டு தனது சொந்த பட்டறையைத் தொடங்கினார். அவருடைய சொந்த தொழில் அவருக்கு போதுமான சவாலானதாக இல்லை. புதிதாக வேறு ஏதும் வாய்ப்புகள் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினார்.

பிரபு காந்திகுமார், டிஏபிபி பானங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பகட்டத்தில் பங்குதாரர் நிறுவனமாக 2016ஆம் ஆண்டில் மாம்பழம், ஆப்பிள் பழரசங்கள் தயாரிப்புகளுடன் தொடங்கினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) )

தன் 31வது வயதில் பிரபு, பழரசம் மற்றும் மென்பானங்கள் தயாரிப்பு தொழிலில்  இறங்கினார். அப்போது கோகோ கோலா, பெப்சி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாகும்.  

எனினும், பெரிய நிறுவனங்களுடன் மோதுவதற்கு பதில், ஒரு புதிய உத்தியாக, அடிமட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களை குறிவைத்து, குறைந்த விலையில் விற்பதற்கான பழரசங்களைத் தயாரித்தார். 5 ஆண்டுகளுக்குள் ஆச்சர்யபடத்தக்க வகையில் ரூ.35 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்தார்.

பிரபு ஆரம்ப கட்டத்தில் 2016ஆம் ஆண்டு தான்வி ஃபுட்ஸ் என்ற பங்குதாரர் நிறுவனத்தை  தன் மனைவி பிருந்தா விஜயக்குமாருடன் இணைந்து உருவாக்கினார். மாம்பழம், ஆப்பிள் பழரசங்கள் தயாரிப்பைத்  தொடங்கினார்.   “பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாம்பழம், ஆப்பிள் பழரசங்கள் 200மில்லி பெட் பாட்டில்களில் ரூ.20க்கு நன்றாக விற்பனை ஆனது,” என்றார் பிரபு.

“நாங்கள் முழுமையாக கவனம் செலுத்தும் சந்தையாக அது இருக்கும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”   குறைந்த விற்பனை விலை இருந்தபோதும் அவர்களுக்கு லாபம் கிடைத்தது.

“அந்த சமயத்தில் மொத்த விற்பனை வருவாய் சராசரியாக 24% முதல் 25% வரை இருந்தது. அப்போது நான் மட்டும்தான் விற்பனை பிரதிநிதியாக  இருந்தேன்.  போக்குவரத்து மற்றும் இதர செலவினங்கள் போக, நிகர வருவாய் என்பது சராசரியாக 10% முதல் 11 % ஆக இருந்தது,” என்கிறார். 

குடும்பத் தொழிலை கவனித்துக்கொள்வதற்காக அதிக சம்பளம் தரும் வேலையில் இருந்து பிரபு விலகினார். ஆனால், முற்றிலும் ஒரு புதிய துறையில் தனது சொந்த பிராண்டை முன்னெடுப்பதில் அவரது முயற்சி இருந்தது


“கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் விற்பனை உயர்ந்ததால் அதே விலைப்புள்ளியில் தொடர்ந்து நிர்வகித்து நிலைக்க முடிகிறது.” இப்போது அவரது நிறுவனத்தில் 60 ஊழியர்கள் உள்ளனர்.  

முதல் ஆண்டில் ரூ.40 லட்சம் ஆண்டு வருவாயுடன் வணிகம் நல்ல முறையில் நடைபெற்றது. அதில் இருந்து ஆண்டு தோறும் வருவாய் என்பது மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது.   “அதிஷ்டவசமாக, பெப்சி, கோகோ கோலா போன்ற பெரும் மல்டி நேஷனல் நிறுவனங்களின் வரம்புக்குள்  நாங்கள் ஒரு போதும் செல்லவில்லை. அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஒரு போதும் நாங்கள் ஒரு போட்டியல்ல என்று தீர்மானித்தோம். கிராமப்புறங்கள்தான் எங்களுடைய சந்தையாக இருந்தது,” என்றார் பிரபு.  

விநியோகஸ்தர்கள், கார்பனேற்றப்பட்ட மென்பானங்களை விரும்பியதால், அவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு அடிப்படையிலான கார்பனேற்றப்பட்ட பழரச பானங்களை 2017ஆம் ஆண்டு தொடங்கினர்.   அவர்களின் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்தது. வளர்ச்சியடைவதற்கு மேலும் முதலீடு தேவை என்று பிரபு உணர ஆரம்பித்தார்.

அவருடைய நண்பர் அருண் முகர்ஜியின் ஆலோசனையின் பேரில் 2018ஆம் ஆண்டு டிஏபிபி பானங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற  நிறுவனத்தை தொடங்கினார்.   தான்வி ஃபுட்ஸ் நிறுவனத்தை டிஏபிபி நிறுவனத்துடன் இணைத்து விட்டார்.(அவருடைய மகள் தான்வி, மனைவி பிருந்தா, தமது சொந்த பெயரான பிரபு ஆகியவற்றின் சுருக்கமே நிறுவனத்தின் பெயர்.)  

ஆரம்பகட்டத்தில் நிறுவனம், ரூ.26 கோடி மதிப்பீட்டில்  ரூ.2.5 கோடி நிதியை நண்பர் முகர்ஜி மற்றும் இதர ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டியது.  
தன் மனைவியும் மற்றும் டிஏபிபி நிறுவனத்தின் இயக்குநருமான பிருந்தாவுடன் பிரபு


“இரண்டு ஆண்டுகள் டிஏபிபி நன்றாக செயல்பட்டது. கடந்த ஆண்டு ஒரு சறுக்கல் ஏற்பட்டது.கோவிட் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை விற்பனையை இழந்து விட்டோம். இதற்கிடையேயும் 2020-21ஆம் நிதி ஆண்டில் 37% சதவிகிதத்துக்கு நெருக்கமாக வளர்ந்தோம், ரூ.35 கோடி ஆண்டு வருவாய்க்கு நெருக்கமாக வருவாய் ஈட்டினோம்,” என்கிறார் பிரபு.  

“இந்த நிதி ஆண்டிலும் கூட முதல் காலாண்டில் நாங்கள் விற்பனையை இழந்து விட்டோம். ஆனாலும் ஒரு திடமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம். வாய்ப்புகள் நன்றாக இருக்கின்றன. சீரான வளர்ச்சிக்கு உதவும் வகையில் விநியோக சங்கிலியை நாங்கள் நன்றாக கட்டமைத்திருக்கின்றோம்.”

  2019ஆம் ஆண்டு டிஏபிபி, ஸ்நாக்ஸ் 91 பிராண்ட் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை குறிவைத்து ரூ.5 என்ற விலையில் ஸ்நாக்ஸ்களை அறிமுகம் செய்திருக்கின்றனர்.  

டிஏபிபி தொடர்ந்து புதியவற்றை உருவாக்குவதில் வருகிறது. மில்லட் மைட் என்ற பிராண்ட்  பெயரில் காலை நேர தானிய உணவை கடந்த ஆண்டு கோவிட் பொது ஊரடங்கின் போது அறிமுகம் செய்தனர். இந்தியாவில் கிடைக்கும் ஏழு வகையான சிறுதானியங்களை உபயோகித்து, மூன்று வகைகளில்  இந்த உணவுகளை அறிமுகம் செய்தனர்.

  காலை உணவு தானியங்களை கடைகளிலும், அதே போல இணையத்தில் டி2சி மாதிரியில் தங்கள் நிறுவனத்தின் இணையதளத்தின் வாயிலாகவும் விற்பனை செய்கின்றனர். இன்றைக்கு, டிஏபிபியின் ஆப்பிள், மாம்பழம், திராட்சை ஆகிய சுவைகளுடன் பழரசங்கள், கார்ப்பனேற்றப்பட்ட எலுமிச்சை, ஆரஞ்சு சுவை கொண்ட மென் பானங்களை குல்ப் மற்றும் ப்ளூன்ஜ் என்ற பிராண்ட் பெயரில் ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர்.

உருளை கிழங்கு சிப்ஸ், சோள உருண்டைகள், சாக்கோ சுவைகள் மற்றும் ப்ரையும்ஸ் ஆகியவற்றை ஸ்நாக்ஸ் 91 மற்றும் தான்வி பிராண்ட் பெயர்களில் ரூ.5 விலையில் வழங்குகின்றனர். ஆல்கஹால் இல்லாத த்ரஸ்டி ஓவல் என்று அழைக்கப்படும் பீர் வகையை ரூ.50 விலையில் ரெஸ்டாரெண்ட்களில் அறிமுகம் செய்தனர்.

“பானங்களின் தயாரிப்பை மூன்றாம் தரப்பு உற்பத்தியாளர்களிடம் விட்டுவிட்டோம். அதிக முதலீடுகள் தேவைப்படாத வகையில் இது எங்கள் தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்தியது,” என்கிறார் பிரபு. முக்கியமாக பானங்களில் கவனம் செல்லுத்தும் வகையில், நிறுவனத்தின்  4000 ச.அடி கொண்ட தயாரிப்பு மையத்தை கோவையில் சொந்தமாக உருவாக்கி இருக்கிறார். தயாரிப்புகளை இறுதி செய்து பாட்டிலில் அடைக்கும் பணிகள் கோவை, கிருஷ்ணகிரி, தரும்புரி, சென்னை, புதுச்சேரி, மைசூரு மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் மூன்றாம்  நபரின் உற்பத்தி பிரிவுகளில் விட்டு விட்டனர்.

மாம்பழ கூழை கிருஷ்ணகிரியில் இருந்தும், ஆப்பிள் கூழை சென்னையில் உள்ள இமாசலபிரதேசம் மார்கெட்டிங்க் கார்ப்பரேசன் டெப்போவில் இருந்தும் நிறுவனம் கொள்முதல் செய்கின்றது.

டிஏபிபி தயாரிப்புகள் இப்போது தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில்  கடைகளில் கிடைக்கிறது.

டிஏபிபி பழரசங்கள் மற்றும் மென்பானங்கள் கிராமங்களில்  உள்ள கடைகளில் கிடைக்கிறது

பிரபு, கோவையில் கடந்த 2006ம் ஆண்டு பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் சான்ட்விச் புரோகிராமில் பிஇ முடித்தார். கல்லூரி வளாகத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் டிசிஎஸ் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தின் சென்னை காரப்பாக்கம் அலுவலகத்தில் ரீட்டெய்ல் கன்சல்ட் பிரிவில் பணியாற்றினார். 

இரண்டு ஆண்டுகளில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஒரு அமெரிக்க வாடிக்கையாளருக்காக போர்ட்போலியோ மேனேஜராக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். 2012ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கோவை திரும்பினார்.

குடும்பத்தின் உலோக வார்ப்புகள் உற்பத்தி தொழிலை பிரபு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். பிரபு அமெரிக்காவில் இருந்து கிளம்பும்போது மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

அதே ஆண்டில் ஐடி பொறியாளர் பிருந்தா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

பிரபுவின் தாத்தா பி.ஆர்.துரைசாமி, காந்திகுமார் வார்ப்பகத்தை 1976ஆம் ஆண்டு தொடங்கினார். அவரது தந்தை காந்திகுமார் துரைசாமி தொழிலைத் தொடர்ந்து நடத்தினார். “கன்சல்ட்டிங் பின்னணியில் இருந்து வந்ததால், நாள் ஒன்றுக்கு 15 முதல் 16 மணி நேரம் பணியாற்றுவது என் வழக்கம். ஆனால், சொந்த ஊருக்கு வந்தபோது அது போல செயல்பட முடியவில்லை,” என்றார்.

“என்னுடைய தந்தை ஏற்கனவே, தொழிலை நன்றாக  கட்டமைத்திருந்தார். என்னால் அங்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை.”

2013ம் ஆண்டு நியோகாஸ்ட் என்ற சொந்த பட்டறையை பிரபு தொடங்கினார். தொழில் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால், சுவாரஸ்யம் இல்லாமலும், சோம்பலாகவும் அவர் உணர ஆரம்பித்தார். இந்தியாவில் வளரும் வாய்ப்புகள் உள்ள பேக்கேஜ்டு உணவு தொழில் உள்ளிட்ட தொழில்கள் குறித்து ஆராய்ந்தார்.

கிராமத்தில் உள்ள குடும்பத்தின் குலதெய்வம் கோயிலுக்கு சென்றபோது, மென்பானம் குடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். உள்ளூர் கடையில் இருக்கிறதா என்று கேட்டார். ரூ.25 அல்லது ரூ.30 கொடுத்து உள்ளூர்காரர்கள் அது போன்ற பானங்களை வாங்க மாட்டார்கள் என்று கடைக்காரர் சொன்னார். எனவே, நகரங்களில் புகழ்பெற்று விளங்கும் முக்கியமான மென்பான பிராண்ட்களை ஒருபோதும் கடையில் விற்பதில்லை என்றும் சொன்னார்.  

அப்போதுதான் ரூ.10 என்ற விலையில் பழரச பாக்கெட் அல்லது கார்பனேற்றப்பட்ட மென் குளிர்பானம் தயாரிப்பு என்பது அவரது மனதில் தோன்றியது.

“இதற்கு பெரிய சந்தை இருக்கப்போகிறது என்று நினைத்தேன். இந்தியாவில் தினமும் 300 ரூபாய்க்கு கீழே சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவைவிட அதிகம் இருக்கிறது,” என்றார் அவர்

பிரபுவின் புதிய தொழில் முயற்சிகளுக்கு பிருந்தா துணை நிற்கிறார்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்துதல் தொழில்நுட்ப மையத்தின் குழுவின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் படி அங்கிருந்த சிறிய ஆய்வகத்தில்  பழ ரசங்களில் சோதனை முயற்சியை பிரபு தொடங்கினார்.  

முதன் முதலாக அவர்  பப்பாளி பழரசத்தை தயாரித்தார். பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.50,000 செலவில் 1000 லிட்டர்  பப்பாளி பழரசம் தயாரிப்பதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். பழரசங்களை 200 மில்லி பெட் பாட்டில்களில் நிரப்பினார். அவற்றை விற்பனை செய்வதற்காக  சந்தைக்கு எடுத்துச் சென்றார். ஆனால், ஒரு பாட்டில் பழரசம் கூட விற்பனை ஆகவில்லை.

  “பழரசம் ஆரோக்கியமானதாக, பல்வேறு வைட்டமின் சத்துகளை உள்ளடக்கியதாக இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களிடம் நான் பெற்ற கருத்துகளில் பப்பாளியானது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் என்றும், பெண்கள் முழுவதுமாக அதனை குடிப்பதை தவிர்க்கின்றனர் என்பதும் தெரிந்தது,” என்றார்  அவர்.

  விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்ற கருத்துகள் அடிப்படையில், மாம்பழ பழரசம் தயாரிப்பது என்று பிரபு தீர்மானித்தார். ஆப்பிளுக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் விரும்புவது மாம்பழ பழரசம்தான் என்று தெரிந்தது.   ரூ.40 லட்சம் வங்கிக் கடன் பெற்று, தம்மிடம் இருந்த சேமிப்புகளையும் கொண்டு, சிறிய தயாரிப்புப் பிரிவை கோவையில் தன்னுடைய மாமனாரின் நிலத்தில் தொடங்கினார். 

அவரது மனைவி பிருந்தா  தகவல் தொழில்நுட்பத்தில்  பி.டெக் பட்டம் பெற்றவராவார். திருமணத்துக்கு முன்பு பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு ஆய்வாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.    பிரபுவுடன் இணைந்து தான்வி ஃபுட்ஸ் நிறுவனத்தை பிருந்தா தொடங்கினார்.தொழிலின் மிகப்பெரிய தூணாக விளங்கினார். அதே போல நிறுவனத்தின் தொழில்நுட்ப அம்சங்களை கவனித்துக் கொண்டார். டிஏபிபி நிறுவனத்தின் இயக்குநராகவும் பிருந்தா உள்ளார்.

பிரபுவின் தாய் முனைவர் பி.லட்சுமி ஒரு வழக்கறிஞராவார். கோவை சட்டக்கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவராவார். பிரபுவுக்கு இமையா என்ற தங்கை உள்ளார். அவர் கோவையில் வசிக்கிறார்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Dosamatic makers

    தோசைப் ப்ரியர்கள்

    பலருக்கு தோசை சாப்பிடப்பிடிக்கும். ஆனால் அதை கல்லில் ஊற்றி சுடுவதற்கு? தமிழரும்தோசைப் பிரியருமான ஈஸ்வர் தமது நண்பர் சுதீப் உடன் சேர்ந்து இதற்காக தோசாமேட்டிக் மிஷினை கண்டுபிடித்தார். இன்றைக்கு நாடு முழுவதும் ஈஸ்வரின் தோசாமேட்டிக் இடம் பிடித்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Selling comfort

    கம்பளிகளின் காதலன்!

    பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Innovating mind

    ஆர்வத்தால் அடைந்த வெற்றி

    ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • The first woman entrepreneur from Nalli family builds family business

    பட்டு சாம்ராஜ்ய இளவரசி!

    நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்

  • Money in Refurbished Mobiles

    பழசு வாங்கலையோ! பழசு!

    பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • No soil, no land, agriculture revolution in terrace in chennai

    மண்ணில்லா விவசாயம்

    ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற மண் இல்லாமல் விவசாயம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை தொழில்முயற்சியாகக் கைக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால். ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற அவரது நிறுவனம் வேகமாக வளர்கிறது. பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை