பழைய கார்களை வாங்கி விற்கும் 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அசத்தல் இளைஞர்!
30-Oct-2024
By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி
தன் பத்தாம் வயதில் ஜதின் அகுஜா, பேனா ஒன்றை தமது நண்பரிடம் மூன்று ரூபாய் என சிறிய லாபத்துக்கு விற்றார். இன்றைக்கு 32-வது வயதில், பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz - BBT) என்ற புகழ் பெற்ற பழைய கார்களை விற்கும் முன்னணி பிராண்ட் கடையின் உரிமையாளராக இருக்கிறார். அவரது நிறுவனத்தில் பி.எம்.டபிள்யூ., ஆடி, லம்போர்கினி(Lamborghini) மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகிய கார்களை விற்பதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் புரிகிறார்.
கூர்கானில் உள்ள பிக் பாய் டாய்ஸ் ஷோரூமை அவ்வளவு எளிதாக யாரும் தவறவிட்டு விட முடியாது. புதுபாணியிலான கம்பீரமான ஷோரூம் உள்ளே பார்க் செய்யப்பட்ட கார்கள், 50 லட்சம் ரூபாய் விலையில் இருந்து 4 கோடி ரூபாய் வரை இருக்கின்றன.
|
2005-ம் ஆண்டு மும்பை மழை வெள்ளத்தின் போது, ஜதின் அகுஜா, ஒரு மெர்சிடிஸ் காரை மறுசீரமைத்து, 25 லட்சம் ரூபாய் லாபத்துக்கு விற்றார். அதுதான், 2007-ம் ஆண்டு பிபிடி என்ற இந்த ஷோரூம் பிறப்பதற்கு காரணமாக இருந்தது. (புகைப்படங்கள்: நவ்நிதா)
|
“வாடிக்கையாளர்கள், நல்ல சிறந்த காரை பெறுவதை உறுதி செய்கிறோம். பார்ப்பதற்கு பழைய கார் போல தோற்றமளிக்கக் கூடாது என்பது பி.பி.டி-யின் தனிச்சிறப்பான கருத்தாகும். ஒவ்வொரு காரும், விற்பனைக்குச் செல்லும் முன்பு, 150 முறைகளில் தரம் சரிபார்க்கப்படுகிறது. அந்த காரை நல்ல முறையில் வாடிக்கையாளர்கள் பராமரிப்பதற்கும் நாங்கள் வழிகாட்டுகிறோம்.”
“20 சதவிகிதம் தொகையை முன்பணமாகப் பெறுகிறோம். மீதித் தொகைக்கு லோன் பெற்றுத் தருகிறோம். அதே போல மீண்டும் திரும்ப வாங்கிக் கொள்ளும் திட்டத்தின்படி காரை விற்பனை செய்கிறோம். நாங்கள் காரை திரும்ப வாங்கிக் கொள்ளும்போது, அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப 60-80 சதவிகிதம் அளவுக்கு பணம் தருகிறோம்,” என்று விவரிக்கிறார் ஜதின்.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ஜதின். அங்குள்ள மாதா ஜெய் கவுர் பப்ளிக் பள்ளியில் படித்தார். 2002-ம் ஆண்டு மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்தார். அவர் பேட்ச்சில் முதலிடம் பிடித்த மாணவர்களில் அவரும் ஒருவர்.
அவருடைய முதல் காதல் எப்போதுமே கார்கள் மீதுதான். கல்லூரி முடித்த ஆறு மாதங்களில், பியட் பாலியோ (Fiat Palio) காரை 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். வெற்றிகரமான சாட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆக இருக்கும் அவரது தந்தையிடம் இருந்து 1.30 லட்சம் ரூபாய் வாங்கி செலவழித்து, அந்த காரைப் புதுப்பித்தார்.
ஆனால், அந்த காருக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை என்கிறார் அவர். “அந்த காருக்கு 1.5 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். ஒரு லட்சம் ரூபாய் நஷ்டமாகும் நிலை ஏற்பட்டது. இதனால், நான் அதிருப்தி அடைந்தேன். எனவே, அந்தக் காரை விற்பதில்லை என்றும், அதனை நானே உபயோகிப்பது என்றும் முடிவு செய்தேன்.”
2005-ம் ஆண்டுதான் அவர் லாபகரமான ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டார். அந்த ஆண்டு மும்பை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, மெர்சிடிஸ் காரை வாங்கினார். அதனை மறு சீரமைத்தார். 25 லட்சம் ரூபாய் லாபத்தில் அதனை விற்றார்.
ஜதின், தமது முதல் வாடிக்கையாளர் பற்றி பேசுகிறார். “அவர் என்னுடைய வழிகாட்டியாக மாறிவிட்டார். நல்ல நண்பராகவும்,எனக்கு உந்துதலாகவும் இருக்கிறார். முதல் தலைமுறை தொழில் செய்பவரும் அதிசயங்கள் செய்ய முடியும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.”
|
பிபிடி. உயர் ரக கார்களையும் விற்பனை செய்கிறது.
|
2006-ம் ஆண்டில், பேன்சி மொபைல் எண்களுக்கு நல்ல சந்தை இருக்கிறது என்று தெரிந்து கொண்டார். எனவே, அவர் 99999 என்ற வரிசை கொண்ட 1200 சிம்கார்டுகளை வோடஃபோன் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். பிரிமியம் விலையில் அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தார். குறுகிய காலத்தில் 24 லட்சம் ரூபாய் சம்பாதித்தார்.
2007-ம் ஆண்டில், தம்முடைய சேமிப்பு, தந்தையின் பணம் ஆகியவற்றுடன் 2 கோடி ரூபாயில் மோகஸ் கார்ஸ் லிமிடெட் என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் இருந்து புதிய கார்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்கும் பணியை மேற்கொண்டார்.
விரைவிலேயே பிரச்னைகளை எதிர்கொண்டார். வாடிக்கையாளர்கள் பொதுவாக, தம்முடைய பழைய கார்களைக் கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக புதிய கார்களை வாங்கினர். ஆனால், பழைய கார்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதில் ஜதின் பிரச்னைகளைச் சந்தித்தார். “இதனால்தான், என்னுடைய நிறுவனம் இழப்பை சந்திக்கத் தொடங்கியது. பழைய கார்களை என்ன செய்வது என்று என்னிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. இந்த வர்த்தகத்தில் இருந்தவர்கள் எனக்குத் தவறாக வழிகாட்டி இருக்கின்றனர்,” என தாமே தம்மை நிலை நிறுத்திக் கொள்ள தொடங்கியபோது எதிர்கொண்ட பிரச்னைகளை பற்றி ஜதின் விவரிக்கிறார்.
பிரச்னைகளைப் பற்றி சிந்தித்ததால் அது தீர்வை நோக்கி அவரைக் கொண்டு சென்றது. முன்பு அவர் பழைய மெர்சிடிஸ் காரை விற்று நல்ல லாபம் பார்த்த அனுபவம், அவரின் தொழிலை மாற்றியது.
2009-ம் ஆண்டு, பிக் பாய் டாய்ஸ் அல்லது பிரபலமாக அறியப்படும் பிபிடி-யைத் தொடங்கினார். இங்கு பழைய சொகுசு கார்கள் புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பிபிடி உச்சத்தைத் தொட்டது. முதல் ஆண்டில் மட்டும் 6 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் ஈட்டியது. அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு வருவாய் கூடியது. 2016-ம் ஆண்டு, பிபிடி-யை தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு உள்ளாக அவரது நிறுவனம் 100 கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தாண்டியது.
கூர்கான் தவிர பிபிடி-க்கு தெற்கு டெல்லியில் ஒரு ஷோரூம் இருக்கிறது. மும்பை மற்றும் ஐதராபாத்தில் ஷோரூம் திறக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
|
தமது நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 1000 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதுதான் ஜதினின் இலக்கு
|
தம்முடைய மதிப்பீட்டின் படி வரும் ஆண்டுகளில் அனைத்து மெட்ரோ நகரங்களிலும், பிபிடி-யை கிளை பரப்ப வேண்டும் என்று ஜதின் திட்டமிட்டுள்ளார்.
சுயமாக முன்னேறிய மனிதரான அவர், கடின உழைப்புதான் தமது வெற்றிக்கு காரணம் என்று சொல்கிறார். “2007-08ம் ஆண்டில், நான் அக்வா பெர்ப்யூம் உபயோகிக்கும் நாட்களில் விற்பனை நன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். பின்னர் காலப்போக்கில் அந்த நம்பிக்கை மாறியது. கடின உழைப்புக்கு வேறு மாற்று இல்லை,”என்றபடி சிரிக்கிறார் அவர்.
இந்த வெற்றி மந்திரத்தைப் பின்பற்றித்தான் அவர் வாழ்கிறார், பணிபுரிகிறார். அதன் பிரதிபலனை அனைவரும் காணலாம். அவரது கண்ணோட்டம், தனிப்பட்ட வளர்ச்சி, எங்கெங்கும் இருக்கும் மக்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. தம்மைப் போலவே, கார்கள் மீது காதல் உள்ள 100 ஊழியர்களுடன், வெற்றிக்கான பாதையில் அவர் இணைந்திருக்கிறார்.
ஜதின் என்ற மனிதர், சில ஆச்சர்யகரமான முரண்பாடுகளைக் கொண்டவர். மிகவும் கடின உழைப்பைக் கொண்டவர். கூடுதலாக, அவருக்கு பார்ட்டிகள் பிடிக்கும் எனினும், அவருக்கு மதுப்பழக்கம் இல்லை.
டிடிசி-1 என்ற நம்பர் பிளேட் கொண்ட ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி என்ற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை ஓட்டும் அவருக்கு, 4.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்பது கனவு காராக இருக்கிறது!
|
கூர்கானில் உள்ள பிபிடி ஷோரூமில் தமது ஊழியர்களுடன் ஜதின்
|
அவரது தொழிலில் அண்மையில் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்களைப் பற்றி பேசுகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, கார்களின் விற்பனை பாதிக்கப்படவில்லை என்று சொல்கிறார். அப்போது வாடிக்கையாளர்கள் லோன் வாங்கினர். ஆனால், ஜி.எஸ்டி- வரிவிதிப்பு விற்பனையை பெரும் அளவுக்குப் பாதித்தது.
“சொகுசு கார்களுக்கு 48 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது. அது அதிக அளவாக இருந்தது. பாதகமான விதியாகவும் இருந்தது. மாருதி, மகேந்திரா, டாடா மற்றும் நானும் அரசு துறையின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றபோது இதை சரி செய்ய வேண்டும் என்று கேட்டோம். எனவே, இது 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது,” என்று அவர் விவரிக்கிறார். பழைய சொகுசு கார்களை மட்டுமின்றி, மாசெரேட்டி, பி.எம்.டபிள்யூ ஆகியவற்றின் புதிய கார்களையும் பிபிடி விற்கிறது.
சச்சின்டெண்டுல்கர், ஷாரூக்கான் ஆகியோர் பயன்படுத்திய கார்களை வாங்கியுள்ளார். தவிர, திரைப்படங்களில் தம்முடைய காரைப் பயன்படுத்தி பிராண்ட் செய்வதற்கு சினிமா தயாரிப்பாளர்கள் ஹாலிவுட் ஏஜென்சீஸ்களுடன் ஜதின் இணைந்து செயல்படுகிறார்.
இது போன்ற விளம்பரங்கள் தெளிவாக பலன் தர ஆரம்பித்தன. பிபிடி-யிடம் இப்போது பல பிரபலங்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பட்டியல் இருக்கிறது. பாடகர் ஹனி சிங், கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் மற்று விராட்கோலி, உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் இருக்கின்றனர். மாதம் ஒன்றுக்கு 30 கார்களை ஜதின் விற்பனை செய்கிறார்.
|
பிபிடி ஷோரூம் உள்ளே விற்பனைக்காக உயர்ரக கார்கள் வைக்கப்பட்டுள்ள காட்சி
|
வெற்றியில் கர்வம் பிடித்த மனிதராக மாறவில்லை ஜதின். இன்ஜினியரிங் படித்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் உள்ளார். இப்போதும் கூட, தமது ஒர்க் ஷாப்பில் சந்தோஷமாக இருக்கிறார்.
இப்போதைய ஆண்டு வருவாய் 250 கோடியுடன், ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருவாயை நோக்கி நிறுவனத்தை எடுத்துச் செல்வதுதான் தமது நோக்கம் என்கிறார் அவர். தமது மகள் ஜாரா-வுக்கான சொத்தாக இதை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். தமது தந்தை தனக்கு இருந்தது போல தமது மகளுக்கான உந்துதலாக தானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அதிகம் படித்தவை
-
விளையாட்டாக ஒரு வெற்றி!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
தொழிலதிபரான பேராசிரியர்
நாமக்கல் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த பழனி ஜி பெரியசாமி, அமெரிக்கா சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தன் பொருளாதார அறிவைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியிருக்கும் குழுமம் ஆயிரம் கோடிகளைத் தாண்டி வர்த்தகம் செய்கிறது. பிசி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
போராடி வெற்றி!
டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த கரன் சோப்ரா, திடீரென அந்த வேலையை விட்டுவிட்டு எல்இடி விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு அதில் தோல்வியை கண்டார். எனினும் விடா முயற்சியுடன் போராடி, இப்போது ஆண்டுக்கு 14 கோடி வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
கண்ணாடியால் ஜொலிப்பவர்!
ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம். அவர் 12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
தையல் கலைஞர்களின் உச்சம்
குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை