Milky Mist

Saturday, 18 May 2024

அன்று நடைபாதையில் கடை வைத்த ராஜா, இன்று 60 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்

18-May-2024 By உஷா பிரசாத்
பெங்களூரு

Posted 21 Sep 2017

பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா நாயக்கைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் கதை போல இருக்கும். இந்த கட்டுரையின் கதாநாயகன், ஏழைக் குடும்பத்தின் பின்னணியில் பிறந்தவர். பெரிய ஆளாகவேண்டும் என்று கனவு கண்டு ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகிறார். 

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது படிப்பைப் பாதியில் விட்டவர் ராஜா. ஏழை தலித் குடும்பத்தில் பிறந்த இவர், இப்போது இருக்கும் நிலையை அடைய கடினமாகப் போராடி இருக்கிறார். ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக பல்வேறு தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அனைத்து நிறுவனங்களின் வருவாய் எல்லாம் சேர்த்து 60 கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது. 

https://www.theweekendleader.com/admin/upload/jun24-16-LEAD1.jpg

ராஜா நாயக் ஏற்றுமதியில் இருந்து ஒதுக்கப்பட்ட  உடைகளை நடைபாதையில் வைத்து விற்பனை செய்தார். இப்போது அவருக்குச் சொந்தமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)

 
ஏற்றுமதியில் இருந்து ஒதுக்கப்பட்ட உடைகளை வாங்கி நடைபாதையில் வைத்து விற்பனை செய்து முதன் முதலாகத் தொழில் தொடங்கியபோது அவரது வயது 16-தான் ஆகி இருந்து. இப்போது நியூட்ரிப்ளானெட் ஃபுட்ஸ் எனும், நுண்ணூட்ட சத்துணவுப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும்  அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இந்தப் பன்முக தொழில் அதிபரின் வாழ்க்கை, அற்புதமான ரோலர் கோஸ்டர் பயணம் போல பிறரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.  

“ஒவ்வொரு தொழிலில் இறங்கும்போதும், அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்திருக்கிறது. என்னுடைய வழியில் குறுக்கிட்ட ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பணமாக்கி இருக்கிறேன்,” என்று பெருமை கொள்கிறார் 55 வயது தொழில் அதிபரான, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பரம ரசிகரான ராஜா. 


1970-ல் வெளியான அமிதாப்பச்சன் நடித்த திரிசூல் என்ற திரைப்படம் ராஜாவை மிகவும் ஈர்த்தது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஒரு ரூபாய் கூட இல்லாத ஏழையாக இருந்து ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக உயர்வார்.

https://www.theweekendleader.com/admin/upload/jun24-16-LEADwater.jpg

ராஜா மிகவும் பெரிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ஆனால், இன்னும் பல புதிய திட்டங்களுடன் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறார்.

 
இப்போது ராஜாவுக்கு பல்வேறு தொழில்கள் சொந்தமாக இருக்கின்றன. அக்ஷ எண்டர்பிரைசஸ் நிறுவனம் அட்டைப்பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபடுகிறது. எம்.சி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கப்பல் மற்றும் போக்குவரத்தில் ஈடுபடுகிறது. ஜலா பீவரேஜஸ் நிறுவனம், பாட்டில் குடிநீர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. 

தமது மனைவி அனிதாவின் கனவை நனவாக்கும் வகையில், ராஜா தற்போது, உடல் அழகைப் பேணும் ஸ்பா தொழிலிலும் இறங்கி இருக்கிறார். Purple Haze (பற்பல் ஹெய்ஸ்) எனும் பெயர் கொண்ட ஆண், பெண் இருபாலருக்குமான . சங்கிலித் தொடர் spaக்களை ஆரம்பித்திருக்கிறார். 

“என்னுடைய மூன்று மகன்களும், இதர தொழில் நிறுவனங்களைக் கவனித்துக் கொள்கின்றனர். நான் இப்போது நியூட்ரிபிளானெட் ஃபுட்ஸ் நிறுவனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன், 

"நாங்கள் சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில்-மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்) ஆகிய அரசு நிறுவனங்களுடன் இணைந்து உடலுக்குச் சக்தி அளிக்கும் ஜெல்கள், வெள்ளை சியா விதைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எண்ணைய் ஆகியவற்றைத் தயாரிக்கிறோம்,” என்கிறார் ராஜா.

மொத்த வருவாயில் 80 சதவிகிதம், எம்.சி.எஸ் லாஜிஸ்டிக் மற்றும் அக்ஷ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்து கிடைப்பதாக அவர் சொல்கிறார். 

ஏழை  குழந்தைகளுக்காக கே.ஜே.உயர் நிலைப்பள்ளியை ராஜா நடத்தி வருகிறார். தவிர ஒரு நர்சிங் மற்றும் பி.எட் கல்லூரியையும் நடத்தி வருகிறார்.  
 
ராஜா மிகவும் பெரிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ஆனால், இன்னும் பல புதிய திட்டங்களுடன் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறார். 


1976-ம் ஆண்டு, போதுமான அளவுக்குப்  பணத்தைச் சேமித்த பின்னர், ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். சில ஆசிரியர்களையும் வேலைக்கு அமர்த்தினார். ஒரு தொடக்கப்பள்ளியை ஆரம்பித்தார். இந்தப் பள்ளிதான் இப்போது, 600 மாணவர்கள் படிக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளியாக உயர்ந்திருக்கிறது. 

அதே போல, ஜலா பீவரேஜஸ் நிறுவனத்தைத் தொடங்கியதற்கான பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில், ஒரு கிராமத்து  உணவு விடுதியில், தலித்கள் புறக்கணிக்கப்படுவது குறித்த செய்தியை  ராஜா  படித்தார். 

https://www.theweekendleader.com/admin/upload/jun24-16-LEADAnita.jpg

ராஜாவின் மனைவி அனிதா, பெங்களூரில் உள்ள Purple Haze என்ற சங்கித் தொடர் சலூனுடன் கூடிய spa-க்களைக் கவனித்துக் கொள்கிறார்.


தலித்களுக்கு டம்ளரில் குடிநீர் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதில் ஒருவர் தலித்களின் கைகளில் தண்ணீரை ஊற்றினார். அதைத்தான் அவர்கள் குடிக்க முடிந்தது. இதை அறிந்த ராஜா, அந்தக் கிராமத்துக்குச் சென்று தலித்கள் எப்படியெல்லாம் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

“அந்த நாளில்தான், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என என் மனதில் தோன்றியது. இப்போது எங்கள் நிறுவனத்தின் வாட்டர் பாட்டிலை வாங்கும் பொதுமக்கள், இதன் உரிமையாளர் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தானா? என்று சோதிக்க முடியுமா?” என்று கேட்கிறார். 

ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்த ராஜாவின் பால்ய காலம் வறுமையில் மூழ்கி இருந்தது. “குறைந்த வருவாயைக் கொண்டு, என் தந்தையால் குடும்பத்தின் பொறுப்புகளைக் கவனிக்க முடியவில்லை. இதனால், குடும்பத்தில் இருக்கும் ஏழு பேருக்கும், ஒரு வேளையாவது  நல்ல உணவு கிடைப்பது கூடப் பிரச்னையாக இருந்தது.” 

“பள்ளியில் எனது கல்விக் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியாத சூழலில், அடிக்கடி நான் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறேன். இது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. எங்களுடைய பள்ளிக்கட்டணத்தை செலுத்தவும், செலவுகளை ஈடுகட்டவும், குடும்பத் தலைவியாக இருந்த என் அம்மா, தம்மிடம் இருக்கும் சிறு நகையைக் கூட வட்டிக்கடையில் அடகு வைப்பார்.” 
 
“அந்த வறுமையான நாட்களில், நான் மதிய உணவு கொண்டு வராதபோது,  உணவு இடைவேளையில், பள்ளிக்கு வெளியே வெறுமனே திரிந்து கொண்டு இருப்பேன்,” என்று மேலும் அவர் சொல்கிறார். 

ராஜாவிடம் இருந்த தொழில் முனைவுத் திறன் அவரது 16-வது வயதில்  இளம் பருவத்திலேயே வெளிப்பட்டது. பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், தமது  நண்பனான தீபக்குடன் நேரத்தைச் செலவிடுவார். தீபக் ஒரு பஞ்சாபி. அவரும் ராஜாவைப் போலவே பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர். 

“ஒரு முறை தீபக்கின் மாமா, எங்களிடம், இப்படி வீணாக நேரத்தைச் செலவழிப்பதை விட்டு விட்டு, ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார். அப்போது நானும், தீபக்கும் வீட்டை விட்டு வெளியேறி, கார்மென்ட் தொழிலில் எங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதித்தோம்,” என்று நினைவு கூர்கிறார் ராஜா.  

https://www.theweekendleader.com/admin/upload/jun24-16-LEADsons.jpg

அவருடைய மகன்கள் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். புதிய வாய்ப்புகளை ராஜா தேடிக் கொண்டு இருக்கிறார்.


இருவரும் சம அளவு முதலீடு செய்தனர். 10 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சென்னைக்குச் சென்ற மறக்க முடியாத, தம்முடைய துணிச்சலான செயல் பற்றி ராஜா குறிப்பிடுகிறார். 

”என் தாய், சிறுகச் சிறுக சேமித்து, சமையல் அறையில் வாசனைப் பொருட்கள் வைக்கும் சிறு டப்பாக்களில் மறைத்து வைத்திருந்த பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். சென்னை சென்ற நாங்கள், அங்கே கார்மென்ட் நிறுவனம் ஒன்றில், ஏற்றுமதியில் இருந்து கழித்துக் கட்டப்பட்ட  துணிகளை வாங்கிக் கொண்டு பெங்களூரு திரும்பினோம்,” என்று அந்த நாட்களை நினைவு கூர்கிறார் ராஜா. 

அப்படிக் கொண்டு வந்த துணிகளில் 80 சதவிகிதம், நீல நிற உடைகளாக இருந்தன. மைக்கோ தொழிற்சாலை அருகே அதனை நடைபாதையில் போட்டு விற்க முடிவு செய்தனர். மைக்கோ நிறுவன ஊழியர்கள் நீல நிற சீருடையில்தான் வேலைக்குச் செல்வார்கள். எனவே அங்கு போட்டால் நன்றாக விற்கும் என்று நினைத்தனர். 

“முதல் நாளிலேயே எங்களிடம் இருந்த அனைத்துத் துணிகளையும் விற்று விட்டோம். அதன் மூலம் எங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்த து. அந்தப் பெரும் லாபத்தைக் கண்டு எங்களுக்குள் பரவசம் ஏற்பட்டது. மேலும் அதிக நேரத்தை நாங்கள் வீணாக்கவில்லை. அதே நாள் இரவில் திருப்பூருக்கு பஸ் ஏறினோம். (தமிழகத்தில் உள்ள கார்மென்ட் தொழில் நகரம்).

“அங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவில், ஏற்றுமதியில் இருந்து கழிக்கப்பட்ட துணிகள் கிலோ ஒன்றுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்பட்டன.”
 

https://www.theweekendleader.com/admin/upload/jun24-16-LEADlast.jpg

ஜலா பீவரேஜஸ் என்ற குடிநீர் தயாரிப்பு நிறுவனம், சமூக நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

“நாங்கள் திருப்பூரில் இருந்து சட்டைகள், உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கி  வந்து பெங்களூரில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டினோம். சில ஆண்டுகளிலேயே இந்தத் தொழில் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருந்த து,” என்று அவர் நினைவு கூர்கிறார். 

முதன் முதலாக ஈடுபட்டத் தொழிலில் வெற்றியை ஒரு கைபார்த்த ராஜா, பெரிய திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தார். அவர் ஆங்கில மீடியம் பள்ளியில் படித்திருந்ததால், அவருக்கு பிறருடன் இயல்பாக ஆங்கிலத்தில் பேசுவது கைவரப்பெற்றது. 

நடைபாதையில் தொழிலைத் தொடங்கிய அந்த இருவரும்,பின்னர், ஒரு வண்டியில் வைத்து துணிகளை விற்கத் தொடங்கினர், அதன் பிறகு,  எங்கெங்கு கண்காட்சிகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் விற்பனை செய்தனர். 

கார்மென்ட் தொழிலில் இருந்து கொண்டே, அவர்கள் கோல்ஹாபுரி செருப்புகள் விற்பனையையும் தொடங்கினர். “நாங்கள் கோல்ஹாபுரி செருப்புகளை மொத்த விலையில் ஜோடி ஒன்றுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை வாங்குவோம். பிரிகேட் ரோட்டில் ஒரு கடையில் அதனை 100 ரூபாய்க்கு விற்றோம். இந்தத் தொழிலிலும் அதிர்ஷ்ட தேவதை எங்கள் பக்கமே இருந்தாள். எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது”

கோரமங்களாவில்  தாவா என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கினர். “நாங்கள் அந்த ரெஸ்டாரண்டை மூன்று ஆண்டுகள் வரை வெற்றிகரமாக நடத்தினோம். பின்னர், தீபக்கின் உறவினர் ஒருவருக்கு விற்றுவிட்டோம்,” என்கிறார் ராஜா. 

1991 காலகட்டத்தில் ராஜா, அக்‌ஷய் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை இன்னொரு பங்குதாரருடன் இணைந்து தொடங்கினார். பின்னர் எம்.சி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்தார். இன்றைக்கு, எம்.சி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ராஜா இருக்கிறார். 


 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • Snack king

  ஒரு ‘நொறுக்’ வெற்றி!

  மணீஷுக்கு பதினொரு வயதாக இருந்தபோது தந்தை செய்துவந்த தொழில் நொடித்துபோனதைக் கண்டார். அந்த நிலையில் இருந்து மீண்டு, உள்ளூரிலேயே நொறுக்குத்தீனி தயாரிப்பு தொழிலை தொடங்கி இன்றைக்கு ரூ.10 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழிலாக அதனை கட்டமைத்திருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

 • Craft queen

  கைவினைக்கலை அரசி

  பீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.

 • Master of cookery books

  சமையல் ராணி

  நித்தா மேத்தாவின் கணவர் மருந்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. அந்த சமயத்தில், சமையல் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டிய நித்தா மேத்தா, இன்றைக்கு பல கோடிகள் குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளர் ஆகியிருக்கிறார். சோபியா டேனிஸ்கான் எழுதும் கட்டுரை

 • Home made food flowing unlimited

  வீட்டுச்சாப்பாடு

  சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

 • Dosamatic makers

  தோசைப் ப்ரியர்கள்

  பலருக்கு தோசை சாப்பிடப்பிடிக்கும். ஆனால் அதை கல்லில் ஊற்றி சுடுவதற்கு? தமிழரும்தோசைப் பிரியருமான ஈஸ்வர் தமது நண்பர் சுதீப் உடன் சேர்ந்து இதற்காக தோசாமேட்டிக் மிஷினை கண்டுபிடித்தார். இன்றைக்கு நாடு முழுவதும் ஈஸ்வரின் தோசாமேட்டிக் இடம் பிடித்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

 • Selling popcorn and minting money

  மொறுமொறு வெற்றி!

  சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை