இவர் விற்கும் ஹாட் டாக் விலை 30 ரூபாய்தான், ஆனால் ஆண்டு வருவாயோ 3.5 கோடி!
07-Jun-2023
By ஆகான்ங்ஷா துபே
இந்தூர்
தன் எட்டு வயதில் டீ விற்று வாழ்க்கையைத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்று இந்தூரில் புகழ்பெற்ற ஒரு உணவக உரிமையாளர். ஆண்டுக்கு 3.5 கோடி வருவாய் ஈட்டுகிறார்.
இந்தூரில் துகான் தெரு, 56ம் எண்ணில் உள்ளது அவரது சின்னஞ்சிறிய 120 ச.அடி கடை. இதில் இருந்து வீட்டுக்கு அவர் எடுத்துச் செல்லும் பணத்தைவிட அவர் எடுத்துச்செல்லும் நன்மதிப்புதான் முக்கியமானது. வாடிக்கையாளர்களுக்கு சிரத்தையுடன் தரமான உணவை பரிமாறுவதன்மூலம் அதை அவர் சம்பாதித்திருக்கிறார். அது அவரது வாழ்க்கையை ஊக்கமளிக்கும் கதையாக்கி இருக்கிறது.
|
விஜய் சிங் ரத்தோர், ஜானி ஹாட் டாக் கடையை 500 ரூபாயுடன் தொடங்கினார். ஆனால், இப்போது அதன் ஆண்டு வருவாய் ரூ.3.5 கோடியாக இருக்கிறது (புகைப்படங்கள்: ராகேஷ்)
|
“சுத்தமான உணவை நீங்கள் பரிமாற வேண்டியது முக்கியம். நாம் என்ன உணவை உண்ண முடியுமோ அதனை மட்டுமே பரிமாற வேண்டும். பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக தரத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது,” என தமது தொழிலின் தத்துவம் குறித்துப் பேசுகிறார் ரத்தோர்.
இந்த தத்துவம் ஒரு புறம் இருக்க, 1978-ம் ஆண்டு காலகட்டத்தில் அவர் முன்னெடுத்த தொழில் யோசனை காலத்தால் முந்தியதாக இருந்ததும் முக்கியமானது.
1978-ம் ஆண்டு சொந்தமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் தீர்மானித்தபோது, பல்வேறு இடங்களில் வேலைபார்த்து சேர்த்த சேமிப்பாக ரூ.500 இருந்தது. இந்தூரில் செயல்படுத்தலாம் என்று அவருக்கு தோன்றிய யோசனைகள் எல்லாம் அந்த மண்ணுக்கு அந்நியமாக இருந்தன.
அவர் தயாரித்த எளிமையான உணவுப்பொருளுக்கு ஹாட் டாக் என்ற ஒரு மாயாஜாலமான பெயருடன் ஜானி என்ற வார்த்தையை சேர்த்து ஜானி ஹாட் டாக் (Johny Hot Dog)என்று பெயர் சூட்டினார். 1970-ம் ஆண்டுகளில் ‘ஜானி மேரா நாம்’ என்ற தேவ் ஆனந்த், ஹேமாமாலினி, ப்ரான் நடித்த புகழ்பெற்ற இந்திப் படத்தால் ஈர்க்கப்பட்டு இந்தப் பெயரை வைத்தார்.
ஜானி வாக்கர் என்ற அவரது காலத்திய ஒரு புகழ் பெற்ற ஸ்காட்ச் விஸ்கி பிராண்ட் பெயரும் இதற்கு ஒரு காரணம் என அவர் ஒப்புக்கொள்கிறார்.
“இந்தூரில் பொதுவாக விஜய் சாட் ஹவுஸ் அல்லது சர்மா ஸ்வீட்ஸ் என்ற பெயரிலான கடைகள் இருக்கும். அதே போல, நானும் ரத்தோர் ஹாட் டாக் என்று எனது பெயரை வைத்திருந்தால், அது போதுமான கவனத்தைப் பெற்றிருக்காது. வாடிக்கையாளர்களை சம்பாதித்திருக்காது,” என்கிறார் ரத்தோர்.
ஹாட் டாக்குக்கு வருவோம். மேலை நாடுகளில் பரிமாறப்படும் ஒரிஜினல் ’லிங்க் சாசேஸ் சாண்ட்விச்சை’ இதுவரை ரத்தோர் ருசித்துப் பார்த்ததில்லை.
“நகரில் ஒரு புகழ்பெற்ற திரையரங்கம் இருந்தது. அங்கே ஆங்கிலப்படங்கள் மட்டும் திரையிடுவார்கள். அங்கே திரைப்படங்கள் பார்க்கும் அளவுக்கு எங்களிடம் பணம் இருக்காது. எனினும் வேலை முடிந்ததும் அங்கே கூடி இருப்போம். அப்போது விற்கப்படும் ஹாட் டாக் என்கிற உணவுப் பொருளை ஆர்டர் செய்வோம்,” என்கிறார். அங்கிருந்தான் தான் தயாரிக்கும் உணவுக்கு ஹாட் டாக் என்ற பெயரை வைக்கலாமே என அவருக்குத் தோன்றி இருக்கிறது.
|
ரத்தோரின் அன்பாக பழகும் இயல்பு, சுவையான உணவு, குறைந்த விலை ஆகியவை அவருக்கு விசுவாசமான வாடிக்கையாளர்களைக் கொடுத்திருக்கிறது.
|
எனினும், இவரது ஜானி ஹாட் டாக், மேற்கத்திய ஹாட்டாக்கில் இருந்து மிகவும் வேறுபட்டதாகும். இது தடிமனான மென்மையான வட்டவடிவிலான பன். ஒரு தாவாவில் வறுத்துக் கொடுக்கப்படும். அதில் எச்சில் ஊறவைக்கும் உருளைக்கிழங்கு டிக்கி அல்லது கட்லெட் வைத்து கொடுக்கப்படும். அத்துடன் அதற்கேற்றவாறு காரசட்னி மற்றும் வெங்காயம் சேர்த்துப் பரிமாறப்படும்.
“நாங்கள் உள்ளூரில் கிடைக்கும் நெய், சுத்தமான வெண்ணெய், பன் உபயோகித்து தயாரிக்கின்றோம். இதுதான் ஹாட் டாக்-க்கு தனிசுவையைத் தருகிறது,” என்கிறார். இதன் சாதகமான அம்சம் என்னவெனில், கச்சோரி, சமோசா போல அல்லாமல் எளிதாக சமைக்க முடியும். ஆரோக்கியமான உணவான இதை காலை, மதியம், இரவு உணவாகக்கூட உண்ணமுடியும்.
இந்த சூடான உணவு, ஒவ்வொரு முறையும் சுத்தமான ஸ்டீல் தட்டுகளில் பரிமாறப்படுகிறது.” நாங்கள் ஒருபோதும் பிளாஸ்டிக் அல்லது பயன்படுத்தித் தூக்கி எறியும் வேறு மாற்றுக்குப் போகவில்லை. அதிகபட்ச சுத்தத்தை கடைபிடிக்கின்றோம்,” என்கிறார் ரத்தோர்.
’தாது’ என்று ரத்தோரை அவரது வாடிக்கையாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இப்போது இணைய வழி விற்பனை உட்பட தினமும் 4000 ஹாட் டாக்குகளை விற்கின்றார். வார இறுதி நாட்களில் 400 முதல் 600 ஹாட் டாக்குகள் வரை கூடுதலாக விற்பனையாகும். வெஜிடபிள் ஹாட் டாக், எக் பென்ஜோ ஹாட் டாக், மட்டன் ஹாட்டாக் என்ற மூன்று வகையான மெனு மட்டுமே அவர்கள் பரிமாறுகின்றனர்.
எந்த ஹாட்டாக் ஆக இருந்தாலும் ரத்தோரின் ஹாட் டாக் விலை ரூ.30மட்டுமே. தானியங்கி செயல்முறையில் மேலும் விலையைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறார் ரத்தோர். குழந்தைப் பருவத்தில் ஏழ்மை மற்றும் வறுமையை அனுபவித்தவர் அவர், இன்னும் அந்த நாட்களை நினைவில் கொண்டிருக்கிறார்.
|
ஜானி ஹாட் டாக் , மூன்று வெவ்வேறு வகைகளில், கிடைக்கிறது. அனைத்துமே ஒரே விலை. ரூ.30 மட்டுமே.
|
“உண்ணப்படும் ஒவ்வொரு துளியின் மதிப்பும் எனக்குத் தெரியும்,” என்கிறார் ரத்தோர். அவர் 1978ம் ஆண்டில் 75 பைசாவுக்கு ஹாட் டாக் விற்கத் தொடங்கினார். அந்த நாட்களில் தினமும் 50 முதல் 60 ஹாட் டாக்குகளை விற்பனை செய்வார். அவரின் இயல்பு மற்றும் நட்பு ஆகியவற்றின் காரணமாக அவரது அந்த கடை புகழுடன் வளர்ந்தது. அவரிடம் உள்ள இந்த தன்மை காரணமாக முதன் முறையாக அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளருடைய மனதில் கூட, முழுவதுமாக வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அவர் உருவாக்கி விடுவார்.
இந்தூரைச்சேர்ந்த சில பொறியாளரகள் தங்களது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போது அவரை கவுரவிக்கத் திட்டமிட்டுள்ளதே இதற்குச் சான்று. ஸ்ரீ கோவிந்த்ராம் சேக்ஸாரியா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாணவர்களாக இருக்கும்போதிருந்தே ரத்தோரை அவர்கள் அறிந்திருந்தனர்.
கல்லூரி வளாகத்துக்கு வெளிய இருந்த கடைகளில் ரத்தோர் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனவே, அப்போதைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் நட்புக் கொண்டிருந்தார். அவரது ஜானி ஹாட் டாக் கடைக்கு அடிக்கடி வரும் அவர்கள் தொடர்ச்சியாக அவரிடம் தொடர்பு கொண்டிருந்தனர். பின்னர் சில காலகட்டங்களில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன், தவிர தங்களது பேரன், பேத்திகளுடன் அங்கு வருவார்கள்.
“இந்த மாணவர்கள் நன்கு புகழ்பெற்ற பொறியாளர்களாக, தொழில் முனைவோர்களாக மாறிவிட்டனர். எனினும் என்னிடம் முன்பு எப்படி அன்போடும் மரியாதையோடும் இருந்தார்களோ அதே போல இப்போதும் இருக்கின்றனர். அவர்கள் ஹாட் டாக் உணவை ருசிபார்க்க மட்டுமின்றி, அவர்கள் என்னை வந்து சந்தித்து பழைய நினைவுகளைப்பகிர்ந்து கொள்வதற்காகவும் வருகின்றனர்,” என்கிறார்அவர்.
ரத்தோர், ஒரு ஆண்டுக்கு முன்பு 60 வயதைக் கடந்து விட்டார். தினமும் அதிகாலை 4.40-க்கு எழும் அவர், யோகா செய்கிறார். தமது கடைக்கு 7 மணிக்குச் செல்வார். அந்த நாளின் ஏற்பாடுகளை மேற்கொள்வார்.
120 ச.அடி கடையின் ஒரு மூலையில் நின்றபடியே அவர் கட்லெட்கள், பன்களை திருப்பிப் போட்டபடியோ, வறுத்தபடியோ சுவையான உணவை தயாரிப்பதில் மூழ்கி இருப்பார். காலையில் இருந்தே வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்து நிற்பார்கள்.
இந்த கடை குளிர்சாதன வசதியோ அல்லது இருக்கைகளோ, டேபிள்களோ கொண்டிருக்கவில்லை என்றபோதிலும் வாடிக்கையாளர்கள் இங்கு தேடி வருவதை நிறுத்தி விடவில்லை. ரத்தோரின் மகன் ஹேமேந்திர சிங் ரத்தோர், கடந்த ஏழு ஆண்டுகளாக தமது தந்தைக்கு உதவி வருகிறார். குறிப்பாக இணையதளங்களின் வழியான உணவு விநியோகத்தை கவனித்துக் கொள்கிறார்.
ஹேமேந்திரா கூறுகையில், இணையதளம் வழியேயான விற்பனை வர்த்தகத்தை உயர்த்தி இருக்கிறது. வரும் நிதி ஆண்டில் 4 கோடிரூபாய் ஆண்டு வருவாய்கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கிறார். முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற கடைகளைத் தொடங்கும்படி பல்வேறு மட்டங்களில் இருந்து கோரிக்கைகள் வந்திருப்பதாக ரத்தோரும், ஹேமேந்திராவும் தெரிவிக்கின்றனர்.
|
ஜானி ஹாட் டாக்கில் ரத்தோர் செஃப் ஆக பங்கு வகிக்கிறார். பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவு அளிப்பதற்காக தினமும் காலை 7 மணிக்கு வந்து விடுகிறார்.
|
ஆனால் அதற்கு நம்பிக்கையான, சரியான பங்குதாரரை இன்னும் அவர்கள் இறுதி செய்யவில்லை. அண்மையில் ஊபர் ஈட்ஸ் ஏபிஏசி ரெஸ்டாரெண்ட் பார்ட்னர்ஸ் விருது 2019(Uber Eats APAC Restaurant Partners Awards 2019)-ஐ அவர்கள் பெற்றுள்ளனர்.
விவசாயி ஒருவரின் மகனான ரத்தோர் தமது 8 வயதில் வேலை செய்யத் தொடங்கி இருக்கிறார். சின்ன சின்ன வேலைகளைச் செய்திருக்கிறார். இது குறித்து கூறுகையில், “நான் அதிர்ஷ்டசாலி ஏனெனில் அந்த நாட்களில் குழந்தைத் தொழிலாளர் தடை சட்டம் இல்லை. என்னுடைய பெற்றோருக்கும், என் உடன் பிறந்த ஏழு பேருக்கு உதவுவதற்காகவும், இந்த வேலை எனக்கு முக்கியமாக இருந்தது.”
அந்த காலகட்டத்தில் விவசாயம் என்பது மின்வசதியை சார்ந்திருந்தது, விவசாயம் செய்வது லாபகரமாக இல்லை. எனவே, அவரது தாய் சமையல்வேலையில் இறங்கினார். இவருக்கும் அதனால் உணவுத் தொழில் பிடித்துப்போனது.
இப்போது தமது வேலையால் பணம் சம்பாதிக்க முடிவது மட்டுமின்றி, உண்மையான மரியாதை, வாடிக்கையாளர்களின் திருப்தி, நீடித்திருக்கும் உறவுகள் கிடைப்பது ஆகியவற்றால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
குழந்தைகள் கல்வி பறிக்கப்பட்டு, பிச்சை எடுப்பதைப் பார்க்கும்போது கவலை கொள்கிறார். ஹாட் டாக் விலையை அதிகரிக்கலாம் என்ற யோசனைக்கும் எதிராக இருக்கிறார்.
“ஏன் மிகவும் குறைவான விலையில் விற்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்கின்றனர். என் தகுதிக்கும் அதிகமாகவே கடவுள் எனக்குத் தருகிறார். எப்போதுமே கடவுளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஏன் அதிக பணம் வாங்க வேண்டும்? உணவை மலிவான விலையில் வழங்குவோமே?,” என்கிறார் ரத்தோர்.
அதிகம் படித்தவை
-
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு
கொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
ஒரு வயர்மேனின் வெற்றிக்கதை
வேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை
-
தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!
புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
சேவையில் லட்சாதிபதியான ஸ்ருதி
மனித வாழ்க்கையின் முடிவில்தான் ஸ்ருதியின் வணிகம் தொடங்குகிறது. இளம் மென்பொறியாளராக இருந்த ஸ்ருதி, தனியாகத் தொழில் செய்வதற்கு வித்தியாசமான இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
வெற்றியின் சுவை
கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்
-
அழகான வெற்றி
கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை