உலகின் முதல் தோசை தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கி வெற்றி பெற்ற நண்பர்கள்!
24-Jan-2025
By உஷா பிரசாத்
பெங்களூரு
ஒரு சுவையான உணவைத், தயாரித்துத் தரும்பொழுது, அதை உண்பவர் பாராட்டும்போது திருப்தியும், ஆனந்தத்தையும் பெற முடியும். அதே நேரத்தில் ஒரு மெஷின் மூலம் சுவையான தோசை தயாரித்துக் கொடுத்து பாராட்டுப் பெற்றால் எப்படி இருக்கும்?
தோசாமேட்டிக் (Dosamatic) என்ற உலகின் முதல் தோசை தயாரிப்பு எந்திரம் மூலம் இதுசாத்தியம் ஆகியிருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது ஈஸ்வர் கே.விகாஸ், சுந்தீப் சபாத் இருவரும் இந்த எந்திரத்தைத் தயாரித்தனர்.
|
கல்லூரியில் படிக்கும் போது ஈஸ்வர் கே.விகாஸ் (படத்தில் இருப்பவர்), தம்முடைய நண்பர் சுதீப் சபாத் உடன் சேர்ந்து தோசை தயாரிக்கும் இயந்திரத்தைத் தயாரித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து முகுந்தா ஃபுட்ஸ் என்ற கிச்சன் ரோபாடிக் நிறுவனத்தைத் தொடங்கினர். (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)
|
இருவரும் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு முகுந்தா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் 6 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டியது. இப்போது அவர்களின் எந்திரம், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், கேஃப்டீரியா-க்கள் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரி கேன்டீன்கள் ஆகியவற்றிலும், பி.எஸ்.எஃப்., டி.ஆர்.டி.ஓ (ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்) ஆகிய நிறுவனங்களிலும் உபயோகிக்கப்படுகிறது.
இந்த வணிகரீதியான எந்திரம், இப்போது 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது ஒரு மணி நேரத்தில் 50-60 தோசை தயாரிக்கும். தொடர்ச்சியாக 14மணி நேரம் இயங்கும். தோசை மாவு, ஆயில், தண்ணீர் ஆகியவற்றை தனித்தனி கண்டெய்னர்களில் போட வேண்டும். தோசையின் அளவு, தோசையின் அடர்த்தி(1 மி.மீ முதல் 7 மி.மீ) ஆகியவற்றையும் தேவைப்படும் அளவு செட் செய்து கொள்ள முடியும்.
இது வரை அவர்கள், 500 எந்திரங்களை விற்றுள்ளனர். இதில் 60 சதவீதம் இந்தியாவில் மட்டும் விற்றுள்ளன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்ரீலங்கா, துபாய் மற்றும் மியான்மர் நாடுகளில் 40 சதவிகிதம் அளவுக்கு இந்த இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
முதன் முதலாக இந்த எந்திரம், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்கு விற்பனை செய்யப்பட்டது. “வடக்கில் ரிஷிகேஷில் இருந்து, எங்கள் மிஷினுக்கு ஆர்டர் கிடைத்தது ஆச்சர்யமாக இருந்தது, அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் எங்களிடம் 2013-ம் ஆண்டு ஆர்டர் கொடுத்தனர். மிஷினை 2014-ம் ஆண்டு டெலிவரி கொடுத்தோம்,” என்கிறார் முகுந்தா ஃபுட்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஈஸ்வர்.
ஈஸ்வர் ஒரு உணவுப் பிரியர். சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தபோது, இதுபோன்று தோசை தயாரிக்கும் தானியங்கி மிஷின் தயாரிக்க வேண்டும் என்ற யோசனை அவருக்குள் உதித்தது.
|
தோசாமேட்டிக், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 60 தோசைகளைத் தயாரிக்கிறது. இந்த இயந்திரம் 14 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும்.
|
தோசை விரும்பியான, ஈஸ்வர், சென்னையில் கிடைக்கும் மொறு, மொறுப்பான பேப்பர் ரோஸ்ட் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் ஒருபோதும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தார். 2011-ம் ஆண்டு கல்லூரியில் முதல் ஆண்டு முடிவில், அவரும் அவரது நண்பர் சுதீப்பும், தோசை மிஷின் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
இரு இளைஞர்களும், அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பண உதவி பெற்றனர். ஆனால், அவர்களின் திட்டத்துக்கு மேலும் அதிகப் பணம் தேவைப்பட்டது. எனவே, ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த அதாவது பகுதிநேரமாகக் கூட பணியாற்றவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
கல்லூரி விழாவில், ஈஸ்வர் ஃபுட் ஸ்டால் அமைத்தார். சென்னையில் அரிதாகக் கிடைக்கும், வடாபாவ் மற்றும் ஜல் ஜீரா உணவுவகைகளை விற்பனை செய்யத் திட்டமிட்டனர். ஆனால் இந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்க தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வாங்கப் பணம் இல்லை. எனவே,முதலில் சிறிதளவு பணத்தில் உணவு கூப்பன்களை ஈஸ்வர் அச்சிட்டார். அந்தக் கூப்பன்களை கல்லூரி வளாகத்தில் விற்பனை செய்தார்.
“வடாபாவ் கூப்பன் விலை 15 ரூபாய், விழாவுக்கு முன்பாக ஐந்து கூப்பன்கள் வாங்குவோருக்கு 10 ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்படும் என தள்ளுபடி விலையில் கூப்பன்களை விற்றேன். எனவே, ஸ்டால் தொடங்கும் முன்பே அனைத்துக் கூப்பன்களும் விற்றுவிட்டன. அந்தப் பணத்தை வைத்து மளிகைப் பொருட்கள் வாங்கினோம். தவிர 15 ஆயிரம் ரூபாய் லாபமும் கிடைத்தது,” என்கிறார் புன்னகையுடன் ஈஸ்வர்.
ஈஸ்வர், சுதீப் இருவரும், இரண்டாவது ஆண்டு படிக்கும்போது, கல்லூரி நேரம் முடிந்த பின்னர், சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலைபார்த்தனர். அவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது.
ஈஸ்வர், ஒரு சி.இ.ஓ-வின் எக்ஸ்க்யூட்டிவ் உதவியாளராக 11 மாதங்கள் பணியாற்றினார். சுதீப், சந்தை ஆய்வாளராக மூன்று மாதங்கள் பணியாற்றினார்.
பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற வடிவமைப்புப் போட்டிகளில் பங்கேற்று பணப்பரிசுகளைப் பெற்றனர். அதில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வரை சேமித்தனர். அவர்கள் 2012-ம் ஆண்டு முதலாவது தோசாமேட்டிக் மிஷினை உருவாக்கினர். பின்னர் இருவரும், சேர்ந்து தங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள சாலையோர இட்லி விற்கும் கடையை அணுகினர். அந்த கடையின் உரிமையாளருடன் ஒரு ஒப்பந்தம் செய்தனர்.
|
முகுந்தா ஃபுட்ஸ், மாதம் தோறும் 70 முதல் 80 வணிக ரீதியாலான மெஷின் தயாரிக்கும் திறன்கொண்டது.
|
“வார இறுதி நாட்களில், எங்கள் காலேஜில் இருந்து நாங்கள் தயாரித்த பெரிய மிஷினை, கடைக்கு எடுத்துச் செல்வோம். அதை வைத்து அந்த கடையின் உரிமையாளர் தோசை தயாரிப்பார்.
“தலா 20 ரூபாய் விலையில் 100 முதல் 150 தோசைகள் வரை விற்பார். ஒவ்வொரு தோசைக்கும் எங்களுக்கு 5 ரூபாய் தருவார்,” என்கிறார் ஈஸ்வர்.
“அந்த இட்லிக் கடையில், மிஷினை நான்கு மாதங்கள் சோதனை செய்தோம். மிஷினால் சுடப்பட்ட தோசைகளை மக்கள் விரும்பி சாப்பிட்டனர். அதன் தரம், சுவை குறித்து எந்தவித புகாரும் எழவில்லை.”
“மிஷினின் எடையை 150 கிலோவில் இருந்து 60 கிலோவாக குறைக்க வேண்டும் என்பது எங்களின் அடுத்த சவால். டேபிளில் வைக்கும் அளவுக்கு ஒரு சிறிய மிஷின் ஆக தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஒரு ஆட்டோவில் எடுத்துச் செல்லப்படும் அளவுக்கு எடை குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்,” என்கிறார் ஈஸ்வர்.
அவர்களின் மாதிரி இயந்திரத்தைப் பார்த்த, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முழுமையாக முடிக்காத அலஸ்டய்ர் என்பவர், அந்தக் குழுவில் இணைந்து, 9 மாதங்கள் பணியாற்றினார்.
“ஆரம்பத்தில் எங்கள் மிஷின் 10 முதல் 20 தோசைகள் தயாரித்தது. அலஸ்டய்ர் அந்த மிஷினை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினார். அதன் பின்னர், தொடர்ந்து 100 தோசைகள் தயாரிக்கும் திறனைப் பெற்றது. எங்களின் மாதிரி இயந்திரத்தை, அவர் மேம்படுத்தியதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஒரு தேவதை போல வந்தார். அவரது வேலையை முடித்தார். துபாயில் டர்ட் பைக்கை உருவாக்க சென்றுவிட்டார்,“ என்று நினைவுகூறுகிறார் ஈஸ்வர்.
2013 ஆம் ஆண்டு இந்தியன் ஏஞ்சல் நெட் ஒர்க் மூலம் இவர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனம் 1.5 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றது. அப்போது அவர்கள் பொறியியல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தனர்.
|
ஆர்&டி குழுவின் தலைவர் ராகேஷ் ஜி பாட்டீலுடன் ஈஸ்வர்.
|
1.2 லட்சம் ரூபாய்க்கு முதல் மிஷினை டெலிவரி கொடுத்த பின்னர், அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. 2014-ல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 100 மிஷின்களை விற்பனை செய்தனர்.
“நாங்கள் ஒரு கிச்சன் ரோபாடிக்ஸ் கம்பெனியாக, உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தானியங்கி இயந்திரங்களை தயாரித்து வருகிறோம்,” என்கிறார் முகுந்தா ஃபுட்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ மற்றும் குழுவின் ஹார்டுவேர் நிபுணரான சுதீப்.
“ஈஸ்வர், உணவு வகைகளை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அது எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று என்னிடம் சொல்வார். அதை ஒரு மிஷினில் எப்படி தயாரிப்பது என்பது குறித்து நான் பணியாற்றுவேன்,” என்று மேலும் அவர் கூறுகிறார்.
முகுந்தா ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஆர்&டி பிரிவின் தலைவராக ராகேஷ் ஜி பாட்டீல் இருக்கிறார். 20-களின் நடுத்தர வயதில் இருக்கும் இளம் பொறியாளரான இவர்,10 கிலோ அளவிலான வீட்டு உபயோகத்துக்கான தோசாமேட்டிக் மெஷினை வடிவமைத்திருக்கிறார். இந்த மிஷினில் பான்கேக், ஆம்லேட் ஆகியவற்றைத் தயாரிக்க முடியும்.
இது தவிர, 6 முதல் 12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கக் கூடிய தோசா மிக்ஸ், சட்னி வகைகள் ஆகியவற்றையும் தோசாமேட்டிக் ஸ்டோர் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்தனர்.
|
‘தோசாமேட்டிக் ஸ்டோர்’என்ற பிராண்ட் பெயரில், ரெடி மிக்ஸ் தோசை மற்றும் சட்னி வகைகள் விற்பனை செய்யத் தொடங்கினர்.
|
இவர்களின் மிக்ஸ் வகைகள், 100 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள், வரும் நாட்களில் 25 கோடி ரூபாய் நிதி திரட்டி, வீடுகளில் பயன்படும் தோசாமேட்டிக் மிஷின்கள் தயாரிக்க உள்ளனர். தங்களின் தயாரிப்புகளுக்கு சந்தையில் உள்ள வரவேற்பைப் பொறுத்து அடுத்த நிதி ஆண்டில் ஆண்டு வருவாயை 100 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
அதிகம் படித்தவை
-
ஒடிஷாவின் சுவை!
ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்
-
மெத்தென்று ஒரு வெற்றி
மாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
வேகமும் வெற்றியும்
திருச்சி கைலாசபுரத்தில் பிறந்து வளர்ந்த அன்சார், சிறுவயதில் மெக்கானிக் ஷாப்புகளில் பொழுதைப் போக்குவது வழக்கம். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ரூ.10 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தனி ஒருவன்
இருபத்து மூன்று வயதாகும் அஸ்ஸாம் இளைஞர் ராஜன் நாத், பத்து மாதத்தில் 35 லட்சம் வருவாய் ஈட்டி கலக்குகிறார். இவர் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவ இ-போஸ்டல் நெட்ஒர்க் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தனி ஆளாக தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
வெற்றிப்பயணம்
ராஞ்சியில் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டிருந்தவர் கிருஷ்ணமோகன் சிங். இப்போது அவர் பல பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் ஜி சிங்
-
மலைக்க வைக்கும் வளர்ச்சி!
உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி, இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை