ஒரு பைசா கூட முதலீடு இல்லாமல் 90 கோடி வருவாய்க்கு வித்திட்ட கல்லூரிக் கனவு! சாதித்த சங்கம் குழும வாரிசு!
08-Dec-2024
By சோபியா டேனிஷ்கான்
கோவை
தென் இந்தியாவில் சங்கம் குழும ஹோட்டல்கள் நடத்திவரும் வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் கார்த்திக் மணிகண்டன். குடும்ப வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தாமே சொந்தமாக ஏதேனும் செய்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார்.
பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரிப் பயணங்களை ஏற்பாடு செய்யும் தொழிலைத் தொடங்கினார். அந்த பணியே ஒரு வணிகமாக மாறியது. அவர் பட்டப்படிப்பு முடிக்கும் போது இந்த வணிகத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் அளவுக்கு நிகர லாபம் கிடைத்தது.
கார்த்திக் மணிகண்டன் கல்லூரியில் தமது வணிகத்தைத் தொடங்கினார். இப்போது அதனை 90 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனமாக கட்டமைத்திருக்கிறார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
கார்த்திக் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது குடும்பம் அவர் பொறியியல் படிக்க வேண்டும் என்று விரும்பியது. |
அந்த நாட்களில் அவர் தமது வணிக திறனை கூர்மைப்படுத்திக் கொண்டார். “ஹோட்டல்கள் குறித்த என்னுடைய அறிவு மற்றும் என்னுடைய குடும்பப் பின்னணி காரணமாக, பயணங்கள் ஏற்பாடு செய்யும் பொறுப்பில் நான் தீவிரமாக ஈடுபட்டேன். அதே போல கல்லூரிக்கு வருகை தரும் சிறப்பு பேச்சாளர்கள் தங்குவதற்கான வசதிகளையும் கவனித்துக் கொண்டேன்.” பெங்களூரு நகரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தைப் பார்வையிட இவரது வகுப்பு மாணவர்கள் செல்வதற்கான பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்புகளை இவர் எடுத்துச் செய்தது திருப்புமுனையாக அமைந்தது. “அந்த ஆண்டு கல்லூரியில் இருந்த 13 துறைகளின் (தலா நான்கு குழுக்கள் வீதம்) சார்பில் 50 பயணங்களை நான் ஏற்பாடு செய்தேன்,” என்கிறார் அவர். “பயணத்திட்டம் முழுவதையும் மிகுந்த கவனமாகத் தயாரித்து அதனை உரிய முறையில் செயல்படுத்த என்னுடைய நண்பர்கள் உதவினர். வாகனம், உணவு மற்றும் தங்குதல் ஆகியவை முதல் அனைத்து சேவைகளையும் நாங்கள் ஏற்பாடு செய்தோம். ஒவ்வொரு பயணத்தின்போதும் குறைந்த பட்ச வருவாய் ஈட்டினேன்.” இருப்பினும் அவர் கல்லூரி வகுப்புகளை எப்போதுமே தவற விடுவதில்லை. மெல்ல தமது தொழிலை கொஞ்சம், கொஞ்சமாக விரிவாக்கத் தொடங்கினார். இதர கல்லூரிகளுக்கும் பயண ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். 2009-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடிக்கும்போது 100 கல்லூரிகளுக்கு மேல் பயண ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தார். “என்னுடைய கல்லூரி ஹாஸ்டல் அறை எண் 201-இல் என்னுடைய அலுவலகம் செயல்பட்டது. கல்லூரியில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது தெரியும். மூன்றாம் ஆண்டு படிக்கும்போது இத்தொழில் வளர்ச்சி பெற்ற உடன் கல்லூரிக்கு அருகில் உள்ள வாடகை இடத்தில் ஓர் அலுவலகத்தை திறந்தேன்,” என ஒரு தொழில்முனைவோராக தமது பயணத்தைக் குறித்து கார்த்திக் குறிப்பிட்டார். எந்த பாடத்திலும் தோல்வியடையக் கூடாது, ஒருபோதும் வகுப்புகளைத் தவறவிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு அனுமதி வழங்கி ஊக்குவித்தது. “மாலை 4 மணி வரை நான் வகுப்புகளில் பங்கேற்பேன். பின்னர் என்னுடைய அலுவலகத்துக்குச் செல்வேன். அலுவலகத்துக்காக மாதம் 3000 ரூபாய் வாடகை கொடுத்து வந்தேன். பெரும்பாலான பேருந்துகள் இரவு நேரத்தில்தான் பயணத்தைத் தொடங்கும்,” என்றார் அவர். பயணங்களுக்கு சில இரவுகளில் 8 பேருந்துகள் கூட கிளம்பும். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வது என்பது மிகவும் கடினமான வேலை,” என்கிறார் அவர். வேலை முடிந்த பின்னர் தமது காரில் கல்லூரி ஹாஸ்டலுக்கு அவர் திரும்புவார். அடுத்த நாள் கல்லூரி வகுப்புகளுக்குத் தொடர்ந்து செல்வார்.
கார்த்திக் தமது ஊழியர்கள் சிலருடன் |
தமது நிறுவனம் ஒரு பைசா முதலீடு கூட இல்லாமல் தொடங்கப்பட்டது என்கிறார் கார்த்திக். பின்னர், இதர கல்லூரிகளுக்கும் அதனை விரிவாக்கினார். அவரது சம்பாத்தியமும் அதிகரிக்கத்தொடங்கியது. சில துண்டறிக்கைகள், போஸ்டர்கள், விசிட்டிங் கார்டுகளை அச்சடித்து விநியோகித்தார். சுற்றுலா மற்றும் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதற்கான உரிமத்தை கார்த்திக் குடும்பத்தினர் வைத்திருந்தனர். எனவே ஆரம்பத்தில் அவர் கோபி டிராவல்ஸ் என்ற பெயரில் பணியாற்றினார். அப்போது சொந்த நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்வதற்கு அவரது வயது மிகக் குறைவு. தொழில்முனைபவராக வளர்வதற்கே கார்த்திக் விதிக்கப்பட்டிருந்தார். தமது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே இதை அவர் உணர்ந்திருந்தார். திருவனந்தபுரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. 20 நாட்கள் மட்டுமே அங்கு பணியாற்றினார். அந்த வேலைக்காக தாம் படைக்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரது சம்பளத்தைக் கூட அவர் பெற்றுக் கொள்ளவில்லை. அங்கிருந்து வெளியேறினார். தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர வேண்டும் என்று கார்த்திக்கின் தந்தை விரும்பினார். அந்த நாட்டில் உள்ள மிகச்சிறந்த கல்லூரியான சீசர் ரிட்ஜ் கல்லூரியில் ஒரு இடத்தையும் அவர் பெற்றுக் கொடுத்தார். எனினும், கார்த்தில் வேண்டாம் என்று முடிவு செய்தார். தான் சிரமப்பட்டு கட்டமைத்த வணிகத்தை மேலும் வலுவாகத் தொடர முடிவு செய்தார். “என் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தேன். வெளிநாட்டில் படிக்கச் சென்று விட்டால், அந்த தொடர்புகள் எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் கையைவிட்டுப் போய்விடும்,” என்று விவரிக்கிறார். “எங்களுடையது சேவை தொடர்பான நிறுவனம். அங்கே இடைவெளி விடுவது என்பது ஆகாது. எனவே, என்னுடைய தந்தையிடம் 10 ஆண்டுகள் கால அவகாசம் கேட்டேன். அதுவரை சொந்தமாக தொழில் செய்வது என்றும் அதன் பின்னர் குடும்ப வணிகத்தில் சேருவது என்றும் கூறினேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். கோயம்புத்தூருக்கு திரும்பி வந்த கார்த்திக், ஜிடி ஹாலிடே பிரைவேட் லிமிடெட் என்ற பெயரைப் பதிவு செய்தார். தம்முடைய சேமிப்பில் இருந்து 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்து அலுவலகம் ஒன்றையும் திறந்தார். ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார். அது அவருக்கு பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் தமது 100 முகவர்களை மீட்டிங்கிற்காக ஒரு தொலைதூர இடத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டது. “நாங்கள் மசினகுடிக்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்துகொடுத்தோம். இந்த வேலையில் இருந்து ஒரு சிறிய அளவு லாபம் மட்டுமே கிடைத்தது. ஆனால் இதன் மூலம் இதர நபர்களிடம் எங்களுக்கு தொடர்புகள் ஏற்பட்டன. அவர்கள் பல வேலைகளை எங்களுக்குக் கொடுத்தனர்,”என்று நினைவு கூர்ந்தார். பயணம் மற்றும் சுற்றுலா தொழில் பல பரபரப்பான தருணங்களைக் கொண்டது. “2009-ம்ஆண்டு 10-12 பேருந்துகள் கல்லூரி பயணத்துக்காக டெல்லி, மணாலி மற்றும் மும்பை சென்றன. அப்போது ஸ்வைன் ஃப்ளூ தொற்று தீவிரமாக இருந்தது. எனவே மாநில அரசுகள் திடீரென மாநில எல்லைகளில் போக்குவரத்தை நிறுத்தின. பின்னர் பல நபர்களைத் தொடர்பு கொண்டு எங்கள் அனைத்து பஸ்களும் பாதுகாப்பாக புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வருவதை உறுதி செய்தேன்,” என்று நினைவு கூர்ந்தார். இன்னொருமுறை ஒரு பெருநிறுவனத்தின் குழுவைச் சேர்ந்த 100 பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். அந்த சமயத்தில் அங்கு நில அதிர்வு ஏற்பட்டது. “அங்கே பெரும் குழப்பம். ஆனால், அங்குள்ளவர்களைத் தொடர்பு கொண்டு அனைவரும் பாதுகாப்பாக ஊர் திரும்புவதை உறுதி செய்தேன்.”
கார்த்திக் மற்றும் அவரது மனைவி யாமினி. இருவருமே பயணப்பிரியர்கள். |
கார்த்திக் ஒரு பயண ஆர்வலர். தம்முடன் படித்த யாமினியை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இப்போது ஒரு மகள் இருக்கிறார். மகளுக்கும் பயணங்கள் பிடிக்கும். எனவே, கார்த்திக் அவ்வப்போது குடும்பத்துடன் பயணங்கள் மேற்கொள்கிறார். அவரது மிகவும் அண்மைக்கால விடுமுறைப் பயணம் துபாய். அவருக்கு விருப்பமான விடுமுறைக்கால இடம் என்றால், சந்தேகமே இல்லாமல் அது சுவிட்சர்லாந்துதான். தேவை எழும்பட்சத்தில் ஆல்ப்ஸ் மலையில்கூட ஒரு திருமணத்துக்காக தமிழ் விருந்து வழங்க அவரால் முடியும். சுற்றுலா இடங்களில் திருமணங்கள் நடத்துவதையும் அவர் ஏற்பாடு செய்ய தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.
அதிகம் படித்தவை
-
சேலையில் வீடு கட்டுபவர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில் வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
பயணங்கள் முடிவதில்லை!
அவர் ரஜினிகாந்த் போல ஒரு சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ஆனால் பசித்த இரவுகளும் பிளாட்பார தூக்கமும்தான் காத்திருந்தன. பி சி வினோஜ் குமார், இன்று 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவன உரிமையாளரைச் சந்திக்கிறார்.
-
நாற்பதிலும் வெல்லலாம்!
பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
மாவில் கொட்டும் கோடிகள்
தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
மாம்பழ மனிதர்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை
-
வெற்றியின் ஜூஸ்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். இணைந்து சொந்தமாக பல தொழில்கள் செய்து, இப்போது மும்பையில் பழச்சாறு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான வெற்றிக்கதையைத் தருகிறார் பி சி வினோஜ்குமார்