Milky Mist

Wednesday, 7 June 2023

ராஞ்சியில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த மோஹர் சாகு இன்று கோடீஸ்வரர்

07-Jun-2023 By ஜி.சிங்
ராஞ்சி

Posted 05 Aug 2017

இப்போது மோஹர் சாகுவுக்குச் சொந்தமாக ராஞ்சியில் இரண்டு மாடிக் கட்டடம் இருக்கிறது. ஆனால், இது முன் எப்போதும் இருந்ததில்லை. கடினமான வாழ்க்கைச் சூழலைக் கடந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ராஞ்சியில் புன்தாக் பகுதியில் அவர் 1966-ம் ஆண்டு பிறந்தார். ஒரு வேளை உணவாவது முழுமையாக கிடைக்குமா என்ற ஒரு கேள்விக்குறியான வறுமைச் சூழலில் சாகுவின் குடும்பம் இருந்தது. அவரது தந்தை ஒரு ரிக்ஷா ஓட்டுநராக இருந்தார். அவரது தாய் வீட்டிலிருந்து அவல் தயாரித்து விற்று வந்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/25-07-17-12pigtree.jpg

மோஹர் சாகு, 12 வயதில் இருந்து வேலை பார்க்கத் தொடங்கினார். ஆனால், பன்றி வளர்ப்பு பண்ணை வைத்தபிறகுதான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.(புகைப்படங்கள்;மோனிருல் இஸ்லாம் முலிக்)

 

அப்போது அவர்கள் குடும்பத்தில் நான்கு குழந்தைகளைக் காப்பற்ற வேண்டி இருந்தது. எனவே, அவருடைய அப்பா மிகவும் கஷ்டப்பட்டு, நாள் ஒன்றுக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து வருவார். “அப்படியான ஒரு வறுமைச் சூழல் மிகவும் பரிதாபகரமானது” என்று நினைவு கூறுகிறார் சாகு. “எங்களுடையக் குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக என் தாய் நாள் ஒன்றுக்கு இரண்டு  அல்லது மூன்று ரூபாய் சம்பாதித்து கொடுப்பார்,” என்று சொல்கிறார்.

இந்தச் சூழலில் அவருக்குக் கல்வி கற்பது என்பது ஒரு எட்டாக் கனவாக இருந்தது என்றும் அவர் சொல்கிறார். “எனக்கு 5 வயதாக இருந்த போது, ராஜ்கியா மத்ய வித்யாலயா என்ற இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளியில்  என் தந்தை என்னைச் சேர்த்து விட்டார். எப்படியோ 7-ம் வகுப்பு வரைக்கும் படித்து விட்டேன். ஆனால், தொடர்ந்து நான் படிப்பதற்கு, சீருடை உள்ளிட்டவற்றுக்குச் செலவு செய்ய என் தந்தை மிகவும் சிரமப்பட்டார்."

 12 வயதுக்குப் பின்னர், அவர் பள்ளியில் இருந்து இடை நின்று விட்டார். குடும்ப வறுமையைப் போக்க தன்னால் ஆனதைச் செய்யலாம் என்று அவர் நினைத்தார்.  அவருடைய மூன்று சகோதரர்களில் மூத்தவர் சாக்ரியா, ஏற்கனவே ராஞ்சியில் ஒரு தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். 

“என்னுடைய பகுதியில் பொருட்களைக் கொண்டு செல்லும் தொழிலாளியாக  நானும் என் வேலையைத் தொடங்கினேன்.  நான் தினமும் 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை சம்பாதிப்பேன். இப்போது இதைக் கேட்பதற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அந்த நாட்களில் இது போதுமான ஒன்றாக இருந்தது.”

அவரைப் போன்ற வயதுள்ள குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடும் சூழலில், கோதுமை, தானியங்கள் அல்லது அரிசி ஆகியவை அடங்கிய அதிக கனமான பைகளைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார்.

“இது என் முதுகெலும்பையெல்லாம் முறிக்கின்ற வேலை. இரவு நேரங்களில் உடலெல்லாம் வலி எடுக்கும்,” என்று அந்தக்  கடினமான நாட்களை நினைவு கூறுகிறார். “ஆனால், என் குடும்பத்துக்காக நான் சம்பாதிக்க  வேண்டும் என்றால், இதை விட்டால் வேறு வழி இல்லை.”

தொடர்ந்து 6 மாதங்கள் தொழிலாளியாகப் பணியாற்றிய பின்னர், அவரது தந்தைக்கு இருந்த தொடர்புகள் மூலமாக,  ரிக்ஷா கண்காணிப்பாளராக உயர்ந்தார்.

ரிக்ஷாவை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கும் உரிமையாளர்களுக்காக, தினமும் எத்தனை ரிக்ஷாக்கள் வாடகைக்கு விடப்படுகின்றன எனும் கணக்குகளை நிர்வகித்து வந்தார். இதனால், அவரின் வருமானம் சிறிதளவு உயர்ந்து, மாதம் 75  ரூபாய் என்று ஆனது. முந்தைய வேலையை விட இது பரவாயில்லை என்ற சூழல்.

 “ஆண்டு தோறும் 30 ரூபாய் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் என்னுடைய உரிமையாளர் சொன்னார்,” என்று சிரித்தபடி கூறும் சாகு, தம்முடைய முந்தைய போராட்டகரமான வாழ்க்கையை விவரிக்கிறார். அவருக்குத் திருமணம் ஆனதும் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறுகிறது.

https://www.theweekendleader.com/admin/upload/25-07-17-12pigrick1.JPG

புகைப்படம் எடுத்தபோது, மோஹர் சாகு தம்முடைய பழைய சைக்கிள் ரிக்ஷாவை ஒட்டுவதற்கு சிறிது கூடத் தயங்கவில்லை.


1984-ம் ஆண்டு அவருக்குத் திருமணம் ஆனது. இப்போது மனைவி வந்து விட்டார். மேலும் எதிர்காலத்தில் குழந்தைகள் பிறந்தால், குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால், வேறு ஒரு நல்ல வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக, அப்போது பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்தார்.

ராஞ்சியில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் மாதம் 400 ரூபாய் சம்பளத்துக்கு விற்பனையாளராகச்  சாகு சேர்ந்தார். இந்த வேலையில் அவர் சேர்ந்தபோதுதான், தாம் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.

“விற்பனையாளராக நான் பணியாற்றிய போது என் மனம் கூர்மையடையத் தொடங்கியது. மூன்று வருடங்களில் அங்கு, விற்பனை உத்திகளைக் கற்றுக் கொண்டேன்,” என்று சாகு நினைவு கூர்ந்தார். இந்தப் பணியில் இருந்து 1987-ம் ஆண்டு விலகிய அவர், சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்று முடிவு செய்தார்.

ஒரு பெரிய வாய்ப்பைத் தேடுவதற்கு முன்பு அவருக்கு இது ஒரு கடினமான முடிவாக இருந்தது. “என்னுடன் என்பெற்றோர்கள், மனைவி, என் உடன் பிறந்த 2 சகோதர ர்கள் இருந்தார்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் என்னால் வீட்டில் ஒரு நாள் கூட சும்மா உட்கார்ந்திருக்க முடியாத நிலை அப்போது இருந்தது,” என்று கூறினார்.

சொந்தத் தொழில் முயற்சி வெற்றி அடைவதற்கு முன்பு, சாகு ரிக்ஷா ஒட்டத் தொடங்கினார். அதன் மூலம் தினமும் 40 ரூபாய் சம்பாதித்தார். அவருடைய மனைவி புல்லேஸ்வரி தேவி, குடும்ப வருமானத்துக்கு உதவி செய்வதற்காக அவல் விற்பனை செய்ய ஆரம்பித்தார். அவர் தினமும் 8 ரூபாய் முதல் 10  ரூபாய் வரை சம்பாதித்தார்.

சாகு, தன்னுடைய மாமியார் வீட்டுக்குச் சென்றார். அவர் ஒரு பன்றி பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய ஆலோசனை மற்றும் அறிவுரையைப் பெற்றார். மேலும் அப்போது, ராஞ்சியில் பிர்ஸா வேளாண்மை பல்கலைக்கழகத்தின் டீன் மற்றும் முதல்வராக இருந்த டாக்டர் சந்த் குமார் சிங்கை சாகு 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சந்தித்தார். இப்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.

https://www.theweekendleader.com/admin/upload/25-07-17-12pigprof.JPG

சாகு, டாக்டர் சந்த் குமார் சிங்கை ராஞ்சியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1980-களின் தொடக்கத்தில் சந்தித்தார். அவரிடம் இருந்து பன்றி வளர்ப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்.


“1980-ம் ஆண்டு பன்றி வளர்ப்பு குறித்து பத்து நாட்கள் சாகு பயிற்சி எடுத்துக் கொண்டார்,” என டாக்டர் சிங் நினைவு கூர்ந்தார். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை உருவாக்க அரசு முயற்சித்தபோது, பன்றிகளை எப்படி பராமரிப்பது மற்றும் எவ்வாறு ஊசி போடுவது, அவைகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

“அவர் இது குறித்து மிகவும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். உண்மையில் கடின உழைப்பாளியாக இருந்தார். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பன்றிகள் வளர்ப்பு குறித்து ஆலோசனைகள் கேட்பதற்காக இப்போதும் கூட, என்னிடம் வருவார்.  குறிப்பாக பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது குறித்துக் கேட்பார்”

சாகு அப்போது, தம்முடைய சேமிப்பான 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 சிறிய பன்றிகளை வாங்கினார்.  “என்னுடைய வீட்டின் பின்புறம் இருந்த 700 ச.அடி இடத்தில் அவைகளை மேய விடுவேன்,” என்று நினைவு கூர்ந்த சாகு, “அது என்னுடைய குடும்ப நிலம்,” என்றார்.

அவைகளுக்கு உணவு அளிப்பதுதான் பெரும் பிரச்னையாக இருந்தது. இந்த இடத்தில் சாகு, தம்முடைய மேன்மையை வெளிப்படுத்தினார். அவர், நகரில் இருந்த பெரிய மற்றும் சிறிய ஹோட்டல்களில், வீணான உணவுகள், மீந்த உணவுகளைத் தந்து உதவுமாறு கேட்டார்.

“அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன், இலவசமாக அவற்றைக் கொடுத்தனர்,” என்ற சாகு, “ பன்றி வளர்ப்பால், அழுக்கு மற்றும் குப்பைகள் சேர்ந்ததால், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னை வசைபாடினர். அடிக்கடி என்னுடன் சண்டை போட்டனர். ஆனால், அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. என்னுடைய வேலையைச் செய்து கொண்டிருந்தேன்,”  என்றார்.

பன்றிகளை மொத்த வியபாரிகளிடமும் மற்றும் சில்லரை விலையிலும் விற்றார். ஒரு ஆண்டு முடிவில் அவரால் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்தது. “எனக்குக் கிடைத்த வருவாயை என்னால் நம்ப முடியவில்லை,”  என்று கூறும் அவர், “ படிப்பறிவே இல்லாத மனிதனாக இருந்த எனக்கு இது ஒரு ஜாக்பாக்ட் போல இருந்தது.” தாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தீர்மானித்த அவர், தமக்குக் கிடைத்த லாபத்தில் மேலும் சில பன்றிகளை வாங்கி வளர்த்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/25-07-17-12piglittle.JPG

சாகு,வீட்டுக்குப் பின்னால் இருந்த 700 ச.அடி இடத்தில் 10 பன்றிகளுடன் தொழிலைத் தொடங்கினார்.


அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது பன்றி வளர்ப்பின் எண்ணி்க்கை 45 ஆனது. 1990-ம் ஆண்டில் அவரது ஆண்டு வருமானம்  ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டது. “எங்கள் மாநிலத்திலும், தவிர பீகார், அசாம் மாநிலத்திலும்  பன்றி கறிக்குப் பெரும் தேவை இருந்தது,” என்று விவரித்தார்.  

அவருடைய தொழில் வளர ஆரம்பித்தது. 1999-ம் ஆண்டு தம்முடைய கிராமத்தில் 64 ஆயிரம் ரூபாயில்  7 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கினார். பன்றி வளர்ப்பின் எண்ணிக்கை நூறைத் தொட்டது. இப்போது அவருடைய ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அதே வருடம் அவர் தம்முடைய பன்றி வளர்ப்பு பண்ணைக்கு, ‘மோஹர் சாகு பன்றி உற்பத்தி மையம்’ என்று பெயர் வைத்தார்.

பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் பன்றி வளர்ப்புத் தொழில் பற்றித் தெரிந்து கொள்ள அவரை நாடி வந்தனர். “நல்ல தரமான பன்றி கறி உற்பத்தி செய்பவன் என்ற பெருமையை நான் பெற்றேன்,” என்று தமக்குக் கிடைத்த புகழ் குறித்து விவரித்தார்.

பன்றிகளைச் சிறந்த இனமாக வளர்த்தெடுப்பதால், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மதுகோடா, அர்ஜூன் முண்டா ஆகியோரிடம் இருந்து முறையே 2006-ம் ஆண்டு, 2007-ம் ஆண்டு பாராட்டுகளைப் பெற்றார்.  அந்த சமயத்தில் அவரது பண்ணையில் பன்றிகளின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்தது. அவரது வருமானம் 20 லட்சம் ரூபாயைத் தொட்டது. இந்த நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாயைத் தொட்டது.

கோடீஸ்வரராக மாறிய பிறகும் சாகுவின் தினசரி வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. “நான் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுகிறேன். ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருட்களைச் சேகரிக்கிறேன்,” என்று சொல்கிறார். தவிரவும், 2004-ம் ஆண்டு அவர் வாங்கிய ஆட்டோ ரிக்ஷாவைத்தான் இப்போதும் ஓட்டுகிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/25-07-17-12pigrearing.JPG

சாகுவின் பன்றி வளர்ப்புத் தொழில் இப்போது ஒரு கோடி ரூபாய் வருவாயை எட்டி இருக்கிறது.


தம்மைத் தேடி வரும் இளைஞர்களுக்கு உதவி செய்கிறார். அவர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறார். அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறார். சாகுவுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனினும்,அவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவதை சாகு விரும்பவில்லை. இந்தத் தொழிலில் சாகு வெற்றி கரமாக ஈடுபட்டபோதிலும், பன்றி வளர்ப்புத் தொழிலை மக்கள் மதிப்பதில்லை என்று எண்ணுகிறார்.

மோஹர் சாகுவின் குறிப்பிடத்தக்க இந்த வெற்றியின் மூலம், ஒருவர் தன்னை நம்புவதைத் தவிர வேறு எதுவும் வெற்றியைத் தராது என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. உங்களுடைய வெற்றிக்குக் காரணம் என்ன என்று நான் கேட்டபோது, “நான் ஒரு போதும் என் நம்பிக்கையைக் கைவிட்டதில்லை,” என்று சாதாரணமாகச் சொல்கிறார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • Virudhachalam to Virginia

  விருத்தாசலம் டூ வர்ஜீனியா!

  தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

 • He sold garments on the footpath, now his turnover is Rs 60 crore

  உழைப்பால் உயர்ந்த நாயகன்

  பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

 • This is out of the box thinking!

  மாற்றி யோசித்தவர்!

  ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

 • He built a multi-crore business to fulfill his dream of travelling around the world

  சிறகு விரித்தவர்!

  அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்

 • The first woman entrepreneur from Nalli family builds family business

  பட்டு சாம்ராஜ்ய இளவரசி!

  நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்

 • How two college friends started a successful business

  மீண்டும் மீண்டும் வெற்றி!

  பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை