இழந்த கோடிகளை மீட்டுத் தந்த கோழிகள்! நாட்டுக் கோழிப்பண்ணையில் வெற்றியைக் குவித்த இளைஞர்!
21-Nov-2024
By உஷா பிரசாத்
சென்னை
ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி ஊதியம் பெறும் உ யர் பதவியில் இருப்பவர்கள் அதைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டுக்கோழி வளர்ப்பில் குதிப்பார்கள் என்றால் நம்பமுடியுமா? ஆம் அதைச் செய்திருக்கிறார் செந்தில்வேலா. ஐபிஎம் நிறுவனத்தில் கடைசியாகப் பார்த்த வேலையை விட்டு விலகி இப்போது கோழிப்பண்ணை விவசாயியாகப் பிரகாசிக்கிறார்.
கே.செந்தில்வேலா உயரப்பறக்கும் பெருநிறுவன வேலையை தூக்கி எறிந்து விட்டு உற்சாகமாக கோழிப்பண்ணைத் தொழிலில் இறங்கியிருக்கிறார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
நிர்மலா இயற்கை பண்ணை என்ற பெயரில் கோழிப்பண்ணையை கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.5 லட்சம் முதலீட்டில் சென்னையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகில் உள்ள கிராமத்தில் தொடங்கினார். இப்போது அந்த பண்ணையில் ஆண்டு வருவாய் 1.2 கோடி ரூபாயாக உள்ளது.
செந்தில்வேலா நான்குவகை கோழிகள் வளர்க்கிறார். தமிழ்நாட்டின் கோழி இனமான-சிறுவிடை; நிகோபாரி எனும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த தூய கோழி இனம், மொட்டைக் கழுத்து எனப்படும் கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த கோழியினம், மத்திய பிரதேச மாநிலம் பழங்குடியினரால் வளர்க்கப்படும் கடக்நாத் எனும் கருங்கோழி இனம் ஆகியவை.
“இரண்டு காரணங்களுக்காக நான் கோழிப்பண்ணை தொழிலை தேர்ந்தெடுத்தேன். முதலாவது காரணம், உலகில் பெரும்பாலான உள்நாட்டு கோழி இனங்கள் காணாமல் போய்விட்டன. யாரும் அதனை மீட்டெடுக்கவில்லை. இரண்டாவதாக, அடுத்து வரும் தலைமுறைக்கு அல்லது எனது குடும்பத்தினருக்காகவாவது நான் நல்ல உணவை கொடுக்க விரும்பினேன்,” என்றார் செந்தில்வேலா(45). கோவிட்-19 பெருந்தொற்று அச்சம் இருந்தபோதிலும் அவருடைய கோழிப்பண்ணைத் தொழில் 2020-ல் 20 % வளர்ச்சி பெறும் நிலையில் உள்ளது.
2015-ஆம் ஆண்டு தனியார் நிறுவன வேலையை விட்டு விலகியபின்னர், இரண்டு ஆண்டுகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்திய பால், கோழி, மீன் பண்ணைகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை குறித்த பயிற்சி முகாம்களில் செந்தில்வேலா பங்கேற்றார்.
அதன்பின்னர் செந்தில்வேலா, ஒரு நண்பரிடம் இருந்து 1.5 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தார். அதில் 200 கோழி குஞ்சுகளை 450 ச.அடி இடத்தில் வளர்க்கத் தொடங்கினார். கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் போடுவதைத் தவிர்ப்பதற்கு நாட்டு இன கோழிகளை மட்டுமே வளர்ப்பது என்று தீர்மானித்தார்.
தமது மூன்று ஏக்கர் பண்ணையில் செந்தில்வேலா 11,000 கோழிகளை வளர்த்து வருகிறார். படத்தில் காணப்படுவது கருங்கோழிகள்பண்ணையில் தொடர்ச்சியாக அவர் பணம் முதலீடு செய்து வருகிறார். அவரது பண்ணை இப்போது மூன்று ஏக்கர் பரப்புக்கும் அதிகமாக உள்ளது. 7000 ச.அடி அளவுக்கான கொட்டகை அதில் இருக்கிறது. அவர் சராசரியாக 11,000 கோழிகளை வளர்த்து வருகிறார். மாதம் தோறும் 40,000 முட்டைகள், உயிரோடு 2,500 கோழிகள், 1500 கோழிக்குஞ்சுகள் ஆகியவற்றை விற்பனை செய்கிறார். அவரது சந்தை என்பது முன்பு உள்ளூர் அளவில் இருந்தது. இப்போது வெகுதூரத்துக்குப் பரந்து விரிந்திருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் என சராசரியாக 50 மொத்த விற்பனையாளர்களை அவர் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் உள்ள சில முன்னணி சங்கிலித்தொடர் ஹோட்டல்களும், மருத்துவமனைகளும் அவரது வாடிக்கையாளர்களாக உள்ளன. கருங்கோழியின் முட்டையை ரூ.30 எனவிற்பனை செய்கிறார். இதர நாட்டுக்கோழி இன முட்டைகள் ஒன்றுக்கு ரூ.15 என்று விற்பனை செய்கிறார். உயிரோடு நாட்டுக்கோழி கிலோவுக்கு ரூ.350 எனவும், கருங்கோழி கிலோவுக்கு ரூ.750 என்றும், விற்கிறார். ஒவ்வொரு கோழியும் சராசரியாக 1.5 கிலோ இருக்கிறது. கோழிக்குஞ்சுகளை ரூ.65க்கு விற்பனை செய்கின்றார். அவருடைய மொத்த வணிகத்தில் கருங்கோழி மற்றும் அதன் முட்டைகள் மட்டும் 25 சதவிகிதம் அளவுக்கு விற்பனை ஆகின்றன. வணிகம் வளர்ந்த போது, செந்தில் வேலா இதில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதைப் பார்த்தார். சென்னையின் தேவையில் ஆறு சதவிகிதத்தை மட்டுமே தன்னால் பூர்த்தி செய்ய முடிகிறது என்று உணர்ந்தார்.ஆனால், அங்கே பெரிய சந்தை காத்திருந்தது. “ இந்த பெரிய சந்தையின் தேவை பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. எனவே, மேலும் அதிகமாக உற்பத்தி (கோழிகள், முட்டைகள்) செய்ய என்னைப் போன்ற எண்ணம் கொண்ட விவசாயிகளைக் கொண்டு ஒரு கூட்டுறவு அமைப்பு உருவாக்கலாம் என்றும், மொத்த விற்பனையில் ஈடுபடுவது என்றும் நான் திட்டமிட்டு வருகிறேன்,” என்று கூறுகிறார். செந்தில்வேலா கணினி அறிவியல் பட்டதாரி. அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்போது அவர் சென்னையில் குடியிருக்கிறார். இவர் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் நியூ கேஸில் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். 2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மோட்டரோலா நிறுவனத்தின் கைபேசிகள் பிரிவில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார்.
பன்னாட்டு நிறுவன பணிக் காலங்களின்போது செந்தில்வேலா
2005-ஆம் ஆண்டு இறுதியில் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். பெங்களூருவில் உள்ள சாஸ்கன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே அவரது முதல் திட்டப்பணி, ஜப்பானின் பானாசோனிக் மொபைல் கார்ப்பரேஷனுக்கான வேலையாக இருந்தது. 2006-ஆம் ஆண்டு நவம்பரில் வெற்றிக்கொடியை அவர் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் பாரீஸ் நகரில் ஒரு ஆண்டு குடியிருந்தார். பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான ஒரு திட்டப்பணிக்காக அங்கு அவர் பணியாற்றினார். ”எங்களுடைய முதல் மகன் ஆதித்தியா பிறந்த சமயத்தில் நாங்கள் சென்னை வந்தோம். வெற்றிக்கொடி இந்தியாவில் தங்கியிருக்க விரும்பினார். எனவே, நான் மட்டும் பாரீஸ் சென்று, என்னை விடுவிக்கும்படி நிறுவனத்தின் தலைமையிடம் சொன்னேன்," என்று நினைவு கூர்கிறார். "நான் இந்தியா திரும்பி வந்தேன். இந்தியாவுக்குள் அவர்கள் எனக்கு தகுதியான பணி தரமுடியவில்லை என்பதால், 2008-ஆம் ஆண்டு சாஸ்கன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இருந்து விலகினேன்." சென்னையில் சிட்டிபேங்கில் உதவி துணைத் தலைவராக செந்தில்வேலா சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் துணைத் தலைவராக உயர்ந்தார். 2014-ஆம் ஆண்டு சிட்டிபேங்க்கில் இருந்து விலகி ஐபிஎம் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வளர்ச்சியின் இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். ஒரு ஆண்டு கழித்து ஐபிஎம் நிறுவனத்தில் இருந்து பதவியைத் துறந்த அவர், தமது பெரு நிறுவன வாழ்க்கை எனும் மாயையில் இருந்து விலகினார். அவரது ஆர்வம் விவசாயத்தை நோக்கித் திரும்பியது. இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்.
வார நாட்களில் செந்தில்வேலா தமது பண்ணையில் இருப்பார். வார இறுதி நாட்களில் சென்னைக்கு வருவார்
"இந்த சமயத்தில் இரண்டாவது மகன் அகிலன் பிறந்தான். பண்ணை தொழிலில் ஈடுபடுவதற்கு என் மனைவியை சம்மதிக்க வைக்க கடினமாக இருந்தது," என்று நினைவு கூர்கிறார் செந்தில்வேலா. பல ஆலோசனைகளுக்குப் பின்னர் இறுதியாக கோழிப்பண்ணை தொழில் செய்வது என தீர்மானித்தார். தமது பண்ணையை சீராக விரிவாக்கம் செய்தபோது, வாடிக்கையாளர் தளத்தையும் விரிவாக்கினார். தன்னைப் போன்ற பண்ணையாளர்களுடன் இணைந்து கூட்டுறவு கோழிப்பண்ணை அமைப்பது குறித்து செந்தில்வேலா மிகவும் தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். "எனது பண்ணையை அடிப்படையாக வைத்து ஒப்பந்த பண்ணைத் தொழில் போன்ற ஒன்றை முன்னெடுக்க நான் விரும்புகிறேன்," என்கிறார் அவர். "நான் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகள் கொடுப்பேன். தீவனங்கள் கொடுப்பேன். கோழியினங்களை வளர்ப்பது குறித்து அவர்களுக்கு வழிகாட்டுவேன். இது அவர்களின் கூடுதல் வருமானத்துக்கு உதவியாக இருக்கும். அதே நேரத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பையும் உருவாக்கும்." “ஒரு சிறிய விவசாயி, தம்முடைய 10 முதல் 15 சென்ட் நிலத்தில் 50 உள்நாட்டு இன கோழிக்குஞ்சுகளை வளர்க்க முடியும். தினமும் எளிதாக அவர் ரூ.400 சம்பாதிக்க முடியும். டிஜிட்டல் ஊடகம் வாயிலாக, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நான் அணுகுவேன். நல்ல நடைமுறைகளை அவர்கள் கற்பதற்கும் உதவுவேன்," என்றார் மேலும் அவர். தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், செந்தில்வேலாவின் பண்ணையை மாதிரி பண்ணையாக அங்கீகரித்திருக்கிறது. சிறுவிடை இன நாட்டுக் கோழிகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான ஆராய்ச்சியில் செந்தில்வேலா பண்ணையில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
குடும்பத்தினருடன் செல்பி: மனைவி, மகன்களுடன் செந்தில்வேலா |
தவிர வருவாயை அதிகரிப்பதற்காக தமது பண்ணையில் இயற்கை முறையில் எலுமிச்சை மற்றும் முருங்கை மரங்களை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார். அவரது பண்ணையில் நான்கு நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தேவைப்படும்போது தினக்கூலிகளுக்கு ஆட்களை அமர்த்திக் கொள்கிறார். கோழிப்பண்ணையில் ஈடுபடுவது குறித்து ஆர்வத்துடன் இருக்கும் மக்கள், மகாராஷ்டிராவில் இருந்து கூட தொடர்பு கொள்கின்றனர் என்று செந்தில்வேலா சொல்கிறார் . பண்ணையில் தமது மனைவியுடன் ஐந்து நாட்கள் தங்கியிருக்கிறார். வார இறுதி நாட்களில் சென்னையில் இருக்கின்றனர். சென்னையில் அவரது குழந்தைகள் உறைவிடப் பள்ளியில் தங்கிப் படிக்கின்றனர். பண்ணையில் ஈடுபடத் தொடங்கியதில் இருந்து தமது வாழ்க்கை முறையே மாறிவிட்டதாக சொல்கிறார் செந்தில்வேலா. "பெருநிறுவனத்தில் நாங்கள் பிறருக்காக வாழ்வோம். அந்த தடை இங்கே உடைபட்டிருக்கிறது," என்று சொல்லி நம்மிடம் இருந்து விடைபெறுகிறார்.
அதிகம் படித்தவை
-
மண்ணின் மகள்
பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
-
பூட்டிக்கிடக்கும் வீடுகளும் பணம் தரும்
பணக்காரர்களில் பெரும்பாலானோர் பிரபலமான சுற்றுலாதலங்களில், வீடுகள் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் பூட்டியே இருக்கும் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்று புதிய யோசனையைத் தந்து 52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் ரோஷன். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
மருமகளின் வெற்றி!
தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த சிந்து, இங்கிலாந்தில் எம்பிஏ படித்து திரும்பியவர். திருணத்துக்குப் பின்னர் கணவர் குடும்பத்தின் செக்கு எண்ணெய் வணிக வர்த்தகத்தை 10 லட்சத்திலிருந்து 6 கோடி ஆக்கி உள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
சறுக்கல்களை சாதனைகளாக்கியவர்
வணிகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தபோதிலும், சொந்தமாகத் தொழில் தொடங்கியபோது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தார் குமாரவேல். கவின்கேர் உரிமையாளர் ரங்கநாதனின் சகோதரரான அவர், ஒரு காலகட்டத்தில் சாதனைகளை நோக்கிப் பயணித்தார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
குறைந்த விலையில் நிறைந்த லாபம்!
ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.