தாத்தா சொல்லை தட்டாத பேரன்! 29 வயதில் ஆட்டோ மொபைல் சந்தையில் 120 கோடி வருவாய் ஈட்டியவர்!
04-Dec-2024
By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி
லோஹியா ஆட்டோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 2008-ம் ஆண்டு சி.இ.ஓ-வாகப் பதவி ஏற்றபோது, ஆயூஷ் லோஹியா-வின் வயது 29தான். இதுவரை தடம்பதிக்காத பகுதிக்குள் அவர் நுழைந்தார். அயூஷின் தாத்தா நாராயண் குமார் லோஹியா, 1957ல் சில்வர் பாத்திரத்தால் ஆன லஞ்ச் பாக்ஸ் மற்றும் டார்ச்களை தயாரிருக்கும் தொழிலைத் தொடங்கி இருந்தார். பின்னர், அவர் பித்தளை மற்றும் செப்புத் தகடுகள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டார். டிசைன்கோ(Designco) என்ற கைவினைப் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் பின்னர் ரியல் எஸ்டேட் மற்றும் மாசில்லாத எரிசக்தி தயாரிப்பிலும் நுழைந்தார். அவருடன் அவருடைய நான்கு மகன்கள் மற்றும் பேரன்களும் தொழிலில் ஈடுபட்டனர்.
|
லோஹியா ஆட்டோ என்ற ஆட்டோமொபைல் ஸ்டார்ட் அப்- நிறுவனத்தின் பொறுப்பை 2008ம் ஆண்டு ஆயூஷ் லோகியா பெற்றார். அதனை 120 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் அளிக்கும் நிறுவனமாக கட்டமைத்தார்.
|
ஆட்டோ மொபைல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது நாராயண் குமார் லோஹியாவின் கனவாக இருந்தது. அவர், தமது பேரன் ஆயூஷிடம் இந்தத் தொழிலை ஒப்படைத்தார். முன்னதாக ஆயுஷ் டிசைன்கோ-வின் விற்பனை பிரிவில் ஆரம்ப கட்டப் பயிற்சிகளைப் பெற்றார். பின்னர் தானே உருவாக்கிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொழிலிலும் அனுபவம் பெற்றிருந்தார்.
இளைஞரான ஆயூஷ், தமது தாத்தாவினால் ஈர்க்கப்பட்டார். சவால்களை எதிர்கொண்டார். “இது லோஹியா குழுமத்தின்(லோஹியா குளோபல்) முதலாவது பி2சி உற்பத்தி. பஜாஜ், ஹோண்டா போன்ற பெரும் ஜாம்பவான்களின் போட்டியாளராக களம் இறங்கினோம். நான் அந்த சவாலை ஏற்றுக் கொண்டேன்,” என்கிறார் ஆயூஷ். “நாங்கள் வெறும் இரண்டு வகை பொருட்களுடன் உற்பத்தியைத் தொடங்கினோம். இப்போது பத்து வெவ்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறோம்.”
10 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழிலை தொடங்கினார்கள். தொடக்கத்தில் மின்னணு வாகனங்களில் கவனம் செலுத்துவது என்று திட்டமிட்டனர். “சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்கக் கூடிய, ஆரோக்கியமான வாழ்வுக்கு ஏற்ற, பெட்ரோல் செலவைக் குறைக்கக் கூடியதாக மின்னணு வாகனங்கள் இருக்கும் என்றும், எதிர்காலத்தில் நம்நாட்டில் இதுதான் நன்றாக விற்பனையாகும் என்றும் என் தாத்தா உணர்ந்தார். மின்னணு வாகனங்களின் வருகையால், பெட்ரோலுக்கான தேவை குறையும் என்று அவர் எதிர்பார்த்தார்,” என ஆயூஷ், தன் தாத்தா ஆட்டோமொபைல் தொழில் தொடங்கியதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை பகிர்ந்து கொண்டார்.
உத்ரகாண்ட் மாநிலத்தில் காசிப்பூரில் 50 ஏக்கர் இடத்தில் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கினர். லோஹியா ஆட்டோ, முதல் ஆண்டில் 2 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்டியது நல்ல தொடக்கமாக இருந்தது. எனினும், மின்னணு வாகனங்களுக்கான மானியத்தை அரசு விலக்கிக் கொண்டதால் அவர்கள் நிறுவனம் பிரச்னையைச்சந்தித்தது. எனவே, முதல் ஆண்டில் இருந்த வேகம் தொடரவில்லை.
நொய்டாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2016-ல் டீசலில் ஓடும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் பிரிவில் நுழைந்தது. இப்போது அவர்கள் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள், பயணிகளுக்கான அதே போல சரக்கு போக்குவரத்துக்கான மின்னணு ரிக்ஷாக்கள், மூன்று சக்கர பயண வாகனங்கள், ஹம்சபார் எனப்படும் சரக்கு மின்னணு வாகனங்கள், தவிர சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஆகியவை உட்பட 10 பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். மூன்று சக்கர வாகனங்களின் விலை 1.80 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இரண்டு சக்கர வாகனங்கள் 36,000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன.
300 ஊழியர்களுடன், லோஹியா ஆட்டோ 2017-18ல் 12000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதன் ஆண்டு வருவாய் 120 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 100 டீலர்கள் உள்ளனர். அவர்களது வாகனங்களை 40 நகரங்களிலும் விற்பனை செய்கின்றனர். லோஹியா குளோபலின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் 700 கோடி ரூபாயாக இருக்கிறது.
|
2020ம் ஆண்டுக்குள் லோஹியா ஆட்டோவின் ஆண்டு வருவாய் 500 கோடி ரூபாயைத் தொட வேண்டும் என்று ஆயூஷ் இலக்கு நிர்ணயித்துள்ளார்
|
நாராயண் குமாரின் மூத்த மகனான வினீத் குமார் லோஹியாவுக்குப் பிறந்தவர் ஆயூஷ். ராஜஸ்தானை சேர்ந்த வினீத், பின்னர் மொரதாபாத் வந்தார். இதன் பின்னர் 1995-ல் டெல்லிக்கு வந்தார். அங்குதான் ஆயூஷ் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் படித்தார். பின்னர் டெல்லி கலை மற்றும் வணிகவியல் கல்லூரியில் செலவு கணக்கியல் மற்றும் நிர்வாகம் எனும் சிறப்புப் படிப்புடன் கூடிய வணிகத்தில் பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படிக்கும்போது, டிசைன்கோ எனும் தம் குடும்பத்தின் கைவினைப் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் ஆரம்ப கட்டப் பணியாளராகச் சேர்ந்தார். வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஆரம்பக்கட்டத் திறன்களைக் கற்றுக் கொண்டார்.
“இந்த நிலையில், இருந்து நான் தொழிலில் ஈடுபட்டது வணிக நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது,”எனும் ஆயூஷ், லோஹியா குழுமத்தில் தமது ஆரம்ப கட்ட நாட்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “என்னுடைய பட்டப்படிப்பு முடிந்த பின்னர், டிசைன்கோ நிறுவனத்தின் விற்பனைப் பிரிவை கையாளும் பொறுப்புக் கொடுக்கப்பட்டேன். விற்பனைப் பிரிவு மேலாளராக புதிய சந்தை வாய்ப்புகளைத் தெரிந்து கொள்வதற்காக 2000ம் ஆண்டு மற்றும் 2005-ம் ஆண்டுக்கு இடையே நான் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன்.”
டிசைன்கோ-வில் அவர் பணியாற்றியபோது, அந்த நிறுவனம், அலங்கார உலோக வர்த்தகத்தில் அதிக அளவு ஏற்றுமதி செய்ததற்கான விருதைப் பெற்றது. 2005-ம் ஆண்டு ஒரு புதிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் பிரிவை கையகப்படுத்துவதற்கான கருவியாகவும் ஆயூஷ் செயல்பட்டார். அந்த ஆலையின் ஆண்டு ஸ்டீல் உற்பத்தித் திறனை 600 டன்னில் இருந்து 3000 டன் ஆக உயர்த்தினார்.
அவருடைய செயல்திறன் மற்றும் தொழில் திறமையால் ஈர்க்கப்பட்ட அவரது தாத்தா, அவரிடம் ஆட்டோமொபைல் தொழில் புரஜக்ட்டை ஒப்படைத்தார். இங்கும் அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார். மின்னணு வாகனங்களுக்கான மானியத்தை அரசு விலக்கிக் கொண்டபோது, டீசலால் இயங்கும் மூன்று சக்கரவாகனங்கள் தயாரிக்கும் உற்பத்தியில் இறங்கினார். இது இப்போது நிறுவனத்துக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தருகிறது.
|
தங்கள் நிறுவனத்தின் மின்னணு ஸ்கூட்டருடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார் ஆயூஷ்
|
2014-ல் லோஹியா ஆட்டோ, யுஎம் லோஹியா டூ வீலர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கியது. யுஎம் மோட்டார் சைக்கிள்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் 50:50 என்ற பங்குடன் கூடியதாக 100 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது.ரெனெகாட் கமாண்டோ கிளாஸிக், ரெனெகாட் கமாண்டோ மொஜாவேவ், ரெனெகாட் கமாண்டோ, ரெனெகாட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஆகிய நான்கு உயர் ரக பெட்ரோல் பயணிகள் பைக் விற்பனையைத் தொடங்கினர். இதன் விலை 1.59 லட்சம் முதல் 1.95 லட்சம் வரை உள்ளது. 2017-18ம் நிதி ஆண்டில் 9800 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயாக இருந்தது.
பயணிகள் பைக் சந்தையில் நுழைந்ததற்கான பின்னணி குறித்து விவரிக்கிறார் ஆயூஷ். ”பொருளாதார மந்தநிலை மற்றும் வீழ்ச்சியில் இருந்து எழுவதற்கு, எங்களுக்கு ஒரு பன்முகதிட்டமும் உத்தியும் தேவைப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியால் இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதற்கான விடை, யுஎம் லோகியாவாக இருந்தது. யுஎம் நிறுவனம் அமெரிக்க அடிப்படையிலான உற்பத்தித் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்த து. இப்போது நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் யூனிட்களை விற்பனை செய்கிறோம்.”
2014-ம் ஆண்டு ஆயூஷின் தாத்தா அவரது 84ம் வயதில் உயிரிழந்தபோது, லோஹியா குடும்பம் பெரும் இழப்பைச் சந்தித்தது. “மூத்த பேரன் என்ற வகையில் நான் அவருக்கு நெருக்கமானவனாக இருந்தேன். எனவே, எனக்கு தனிப்பட்டவகையில் இது ஒரு பேரிழப்பு,” என்கிறார் ஆயூஷ். “ஒருவரின் சிறந்த திறனை அறிந்து வேலைவாங்கும் திறன் உள்ளிட்டவற்றை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்,” எனும் ஆயூஷ் அதே உத்வேகத்துடன், லோஹியா ஆட்டோ நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 2020க்குள் 500 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி இருக்கிறார்.
|
லோஹியா ஆட்டோவில் 300 பேர் பணியாற்றுகின்றனர்
|
ஆயூஷ், தமது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதில் விருப்பம் கொண்டவர். குடும்பத்தில் அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருக்கின்றனர். இந்த வாரிசுகளில் பலர் அதே வீட்டில் குழந்தைப் பருவம் முதல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் விடுமுறையின் போது அருகில் இருக்கும் நைனிடால், முசோரி பகுதிகளுக்குச் செல்வதில் விரும்பம் கொண்டிருக்கின்றனர். அதே போல ஐரோப்பாவுக்கும் செல்கின்றனர். சுவிட்சர்லாந்து அவர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். ஆயூஷ் தமது குடும்பத்தைப் பற்றி வெளி உலகத்தில் அவ்வளவாக தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. அதே போல குழந்தைகள் பற்றியும் வெளியிடங்களில் விவாதிப்பதில்லை. அவர் அரிதாகத்தான் சமூக வலைத்தளங்களை உபயோக்கிறார்.
அவருடைய நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அவரது குழந்தைகள் அவரது வழியைப் பின்பற்றுவார்களா என்று கேட்டபோது, ஆயூஷ், “இது குறித்து என் குழந்தைகள் அவர்களாவே முடிவு எடுக்க வேண்டும் என்று விட்டு விடுவேன். தொழிலைப் பொறுத்தவரை அது தானே நீடித்துத் தொடரும் விதத்தை உருவாக்க விரும்புகிறேன்,” என்கிறார்.
அதிகம் படித்தவை
-
வைரஸ் எதிர்ப்பாளர்
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது
-
போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்
தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
பெரிதினும் பெரிது கேள்!
சென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
பூட்டிக்கிடக்கும் வீடுகளும் பணம் தரும்
பணக்காரர்களில் பெரும்பாலானோர் பிரபலமான சுற்றுலாதலங்களில், வீடுகள் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் பூட்டியே இருக்கும் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்று புதிய யோசனையைத் தந்து 52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் ரோஷன். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
ஆர்வத்தால் அடைந்த வெற்றி
ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
மருமகளின் வெற்றி!
தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த சிந்து, இங்கிலாந்தில் எம்பிஏ படித்து திரும்பியவர். திருணத்துக்குப் பின்னர் கணவர் குடும்பத்தின் செக்கு எண்ணெய் வணிக வர்த்தகத்தை 10 லட்சத்திலிருந்து 6 கோடி ஆக்கி உள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை