Milky Mist

Thursday, 10 July 2025

சைக்கிளில் பால் சேகரித்தவர் இன்று 300 கோடிகள் புரளும் பால் நிறுவனத்தின் அதிபதி!

10-Jul-2025 By ஜி சிங்
கொல்கத்தா

Posted 11 Dec 2017

1997-ல் சைக்கிளில் சென்று தன் கிராமத்து விவசாயிகளிடம் பால் வாங்கி விற்றுக்கொண்டிருந்தவர் நாராயண் மஜும்தார். இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அவரது ஆண்டு வருவாய் 225 கோடி. மூன்று பால் பதப்படுத்தும் நிலையங்கள் இருக்கின்றன. 22 பால் குளிரூட்டும் நிலையங்கள் மேற்குவங்கத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ளன

ரெட் கவ்(Red Cow) டெய்ரி ப்ரைவேட் லிமிடட் என்ற அவரது நிறுவனம் கிழக்கு இந்தியாவில் பெரிய பால் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

https://www.theweekendleader.com/admin/upload/28-10-17-06cow4.JPG

சைக்கிளில் பால் வாங்கிக்கொண்டிருந்த நிலையில் இருந்து நாராயண் மஜும்தார் மிக உயர்ந்த நிலையை எட்டி உள்ளார்.  அவரது நிறுவனம் ரெட் கவ் டெய்ரி பால் பொருட்கள் விற்பனையில் சிறந்து விளங்குகிறது( படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)


தினமும் அவர்கள் 1.8 லட்சம் லிட்டர் பால், 1.2 மெட்ரிக் டன்கள் பன்னீர், 10 மெட்ரிக் டன் தயிர்,  10-12 மெட்ரிக் டன் நெய், 1,500 கேன்கள் ரசகுல்லா, 500 கேன்கள் குலோப்ஜாமூன்கள் விற்பனை செய்கிறார்கள்.

2017-18 –ல் அவர் 300 கோடி வருவாயை எதிர்நோக்குகிறார். 

இருப்பினும் நாராயண் எளிமையானவராகவும் பணிவானவராகவும் இன்னும் இருக்கிறார்.

மேற்குவங்கத்தில் 25, ஜூலை, 1958-ல் புலியா என்ற கிராமத்தில் பிறந்தவர் நாராயண். அவருக்கு இரு சகோதரர்கள் இரு சகோதரிகள். அவரது தந்தை பிமலேந்து மஜும்தார் விவசாயி. அம்மா பெயர் பசந்தி மஜும்தார்.

 “என் அப்பாவுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் அது போதவில்லை. அவர் மேலும் சில வேலைகள் செய்வார். ஆனால் மாதம் 100க்குமேல் அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அதுதான் நான் பிறந்த போதிருந்த நிலை. நிதி நெருக்கடியில் குடும்பம் இருந்தது,” என்கிறார் நாராயண்.

கொல்கத்தாவில் இருந்து 15 கிமீ தொலைவில் தன்குனி என்ற இடத்தில் இன்று அவரது பளபளப்பான நவீன அலுவலகம் அமைந்துள்ளது.

1974-ல் தன் கிராமத்தில் இருந்த அரசுப்பள்ளியில் வங்கமொழி வழியில் தன் பள்ளிப்படிப்பை முடித்தவர் இவர். 1973ல் தன் சகோதரி திருமணத்துக்காக தந்தை நிலத்தின் ஒருபகுதியை விற்கும் நிலையில்தான் தங்கள் குடும்ப சூழல் இருந்தது என்று அவர் நினைவுகூர்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/28-10-17-06cowlead1.JPG

சைக்கிளில் அமர்ந்து போஸ் கொடுக்கிறார் நாராயண்


ராணாகாட் கல்லூரியில் வேதியியல் படிக்கச் சேர்ந்தவருக்கு  ஓராண்டில் ஆர்வம் போய்விட்டது. “எனக்கு வேதியியலில் ஆர்வம் இல்லை. அத்துடன் நான் விரைவாக சம்பாதிக்கவேண்டிய தேவையும் இருந்தது,” அவர் விளக்குகிறார்.

 “ஒரு கால்நடைத்துறை அதிகாரி பால் பண்ணைத் தொழிலில்  படிப்பை முடித்தால் விரைவாக வேலை கிடைக்கும் என்று சொன்னார். எனவே என் படிப்பை இடையில் மாற்றினேன்,”

1975ல் அவர் கர்னாலில் உள்ள தேசிய பால் நிறுவனத்தில் பால் தொழிலில் பி டெக் படிக்கச் சேர்ந்தார். செலவுக்குப் பணம் வேண்டுமே? தினமும் காலை 5- 7 வரை ஒரு பால் விற்பனையகத்தில் விற்பனையாளராக வேலைபார்த்தார்.

தினம் 3 ரூபாய் கிடைத்தது. என் அப்பா நிலத்தின் இன்னொரு பகுதியை விற்று கல்விக்கட்டணம் 12000 ரூ செலுத்தினார். என் தினப்படி செலவுக்கு நான் வேலை பார்த்தேன்,” என்கிறார் நாராயண்.

ஜூலை 1979-ல் படிப்பை முடித்தார். பல இடங்களில் வேலைபார்த்தார். ஒரு ஐஸ்கிரீம் நிறுவனம் பின்னர் வடக்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் ஒரு கூட்டுறவு பால்பண்ணையில்  மேற்பார்வையாளராக வேலை.

.

https://www.theweekendleader.com/admin/upload/28-10-17-07cow1.JPG

 மேற்கு வங்கத்தின் எட்டு மாவட்டங்களில் ரெட் கவ் மூன்று பால் பதப்படுத்தும் நிலையங்கள், 22 குளிரூட்டும் நிலையங்களை வைத்துள்ளது


ஓராண்டுக்கு மேல் அங்கு பணிபுரிந்தேன். 1980ல் அதை விட்டு விலகி கொல்கத்தாவில் வேறொரு பால் நிறுவனத்தில் 1300 ரூ சம்பளத்துக்குச் சேர்ந்தேன். அங்கு 5 ஆண்டுகள் வேலை பார்த்து 2,800 ரூ சம்பளம் வாங்கியபோது விலகினேன்.”

1982-ல் அவர்  ககாலி மஜும்தாரை மணம்புரிந்தார். இரு ஆண்டுகள் கழித்து நந்தன் மஜும்தான் என்ற மகன். 

1985-ல் அரபு நாட்டில் டென்மார்க் நாட்டு பால் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்றார். 18,000 ரூ சம்பளம். ஆனால் குடும்ப விசா கிடைக்காததால் திரும்பிவிட்டார்.

மீண்டும் பழைய வேலைக்கே சென்றார், அங்கே 10 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தார். 1995-ல் அவர் விலகியபோது தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணி உயர்வு பெற்றிருந்தார்.

அதே ஆண்டு இன்னொரு பால் நிறுவனத்தில் பொதுமேலாளராக மாதம் 50,000 ரூ சம்பளத்துக்குத் சேர்ந்தார். அந்நிறுவனம் பால், பால் பொருட்கள் தயாரிப்பில் இயங்கியது. அங்கே மேலும் பத்து ஆண்டுகள் 2005 வரை வேலைபார்த்தார். இங்கு பணிபுரிந்தபோதுதான் நாராயணுக்குத் திருப்பங்கள் ஏற்பட்டன.

அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்னிடம் அன்பாக இருப்பார். சொந்தமாக நிறுவனம் தொடங்க என்னை ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பால் நான் விவசாயிகளிடம் பால் பெற்று நான் பணிபுரிந்த நிறுவனத்துக்கே அளிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.

1997 ஜூன் 19-ல் நாராயண் தன் 40 வயதில் தொழிலதிபர் ஆனார். வீடு வீடாக சைக்கிளில் சென்று பால் சேகரித்தார். முதல் நாளில் 320 லிட்டர் பால் சேகரம்.

ரெட் கவ் மில்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 

https://www.theweekendleader.com/admin/upload/28-10-17-07cow3.jpg

 ரெட் கவ் தினமும் 1.8 லிட்டர் லட்சம் பால் விற்பனை செய்கிறது


 “சில கிராம சாலைகளில் சைக்கிளில் செல்லமுடியாது. நடந்து செல்லவேண்டி இருக்கும்,” என்கிறார் நாராயண்.  

விவசாயிகளிடம் பால் வாங்கி நிறுவனத்திடம் கொடுத்தேன். முதல் ஆண்டு லாபம் இல்லை. ஏனெனில் புது இடங்களில் இருந்து பால் சேகரிக்க கிடைத்த லாபத்தை முதலீடு செய்துவிட்டேன்.”  

1999-ல் அவர் தன் முதல் பால் குளிரூட்டும் நிலையத்தை ஹுக்ளி மாவட்டத்தில் ஆராம்பாக் என்ற இடத்தில் தொடங்கினார். மாத வாடகை 10,000 ரூபாய். அப்போது அவர் இன்னும் வேலை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.

 2000 வாக்கில் அவரது பால் சேகரம் தினமும் 30,000 -35000 லிட்டர்கள் ஆனது. ஆண்டு வருவாய் 4 கோடி. அதே ஆண்டு அவர் நிறுவனத்தை தன் மனைவியுடன் சமபங்கு நிறுவனமாக  மாற்றினார்.

2003-ல் நிறுவனத்தை பிரைவேட் லிமிடட்டாக மாற்றினார். அவரும் அவரது மனைவியும் இயக்குநர்கள். 

அதே ஆண்டு 25 லட்சம் செலவில் ஹௌரா மாவட்டத்தில் நிலம் வாங்கி உதயநாராயண்பூரில் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தைத் தொடங்கினார். ஜார்க்கண்ட், அஸ்ஸாமில் பால் விநியோகம் தொடங்கினார். 2003-4-ல் வருவாய் 6.65 கோடியாக உயர்ந்தது. 20 பணியாளர்கள் இருந்தனர்.  

https://www.theweekendleader.com/admin/upload/28-10-17-07cow.JPG

 மேற்குவங்கத்தில் ரெட் கவ் மிகப்பெரிய பால் நிறுவனம். 400 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள்.


இதன்பிறகு வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆண்டுக்கு 30 சதவீத வேகத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் இருந்தது. 2008-ல் அவரது பால் சேகரிப்பு தினமும் 70,000- 80,000 லிட்டர்களாக உயர்ந்தது.

 செறிவூட்டப்பட்ட மற்றும் இரட்டைச் செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்ய முடிவு செய்த அவர் அதற்கான பாக்கெட்டுகளில் அடைக்கும் வேலையை தன்கூனியில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்

தயிர், நெய், பன்னீர், ரசகுல்லா தவிர ஐந்து வகையிலான பால் பொருட்களை ரெட் கவ் விற்பனை செய்கிறது.

டிசம்பர் 2009 எங்கள் நிறுவனத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. அது என் மகன் நந்தன் நிறுவனத்தில் சேர்ந்த சமயம்,” என்கிறார் நாராயண்.

எம்பிஏ முடித்தவரான நந்தன்  இயக்குநராகச் சேர்ந்தார். அவர் நவீன அணுகுமுறையைக் கொண்டுவந்தார். 2011-12-ல் விற்பனை 74 கோடியாக உயர்ந்தது

2012-ல் நந்தனின் மனைவி ஊர்மிளா இன்னொரு இயக்குநராகச் சேர்ந்தார்.  இரு ஆண்டுகள் கழித்து, உதயநாராயண்பூரில்  2.84 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய பதப்படுத்தும் நிலையத்தைத்  தொடங்கினார். அங்கு தினமும் 50,000 லிட்டர் பால் பதப்படுத்த முடியும்.

2016-ல் இன்னொரு நவீன பதப்படுத்தும் நிலையத்தை புர்த்வான் மாவட்டத்தில் அவர் 18 கோடி முதலீட்டில் தொடங்கினார். 3.5 லட்சம்  லிட்டர் பால் அங்கு தினமும் பதப்படுத்த முடியும்.

https://www.theweekendleader.com/admin/upload/28-10-17-07cow2.JPG

கொல்கத்தா அருகே உள்ள தன் நிலைய ஊழியர்களுடன் நாராயண்


மேற்கு வங்கத்தில் ரெட் கவ் டெய்ரி இன்று மிகப்பெரிய பால் நிறுவனம். 400 பணியாளர்களும் 225 விநியோகஸ்தர்களும் உள்ளனர்.

“பால் கிரீம், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றையும் தயாரிக்க உள்ளோம்,” என்கிற நாராயண் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 400 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

இந்த 60 வயதாகும் தொழிலதிபர் தன் வெற்றிக்கு கடின உழைப்பையும் தன் பொருட்களின் தரத்தையும் காரணமாகச் சொல்கிறார்.

“கடினமாக உழையுங்கள், நேர்மையாக இருங்கள், நல்ல கல்வியைப் பெறுங்கள், வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்,” என்கிறார் நாராயண். மகத்தான வெற்றிக்கான அவரது மந்திரம் இது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Glossy in glass

    கண்ணாடியால் ஜொலிப்பவர்!

    ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம்.  அவர்  12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • Dustless paint! an innovative product

    ஆராய்ச்சி தந்த வெற்றி

    அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.

  • How the poultry business that was started with just Rs 5,000 became successful

    உழைப்பின் உயரம்

    தளராத மன உறுதியும், உழைப்பும், போராட்ட குணமும் சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சௌந்தரராஜனை மாபெரும் உயரங்களை எட்டவைத்துள்ளன. கோழித்தொழிலில் சுமார் 5500 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அவரைச் சந்திக்கிறார் பி சி வினோஜ் குமார்

  • Doctor tastes succes in healthcare and hotelbusiness

    விரக்தியை வென்ற மனோசக்தி!

    மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • fresh farm produce

    பண்ணையிலிருந்து வீட்டுக்கு!

    கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத்  திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.