அப்பாவின் மளிகைக்கடையில் மறைந்திருந்த வணிக வாய்ப்பு! கோடிகளைக் குவிக்கத் தொடங்கியிருக்கும் இளைஞர்!
03-Dec-2024
By சோபியா டேனிஷ்கான்
சாரன்பூர்
டெல்லியில் இருந்து 200 கி.மீ தொலைவில் உ.பி-யின் மேற்கு பகுதியில் உள்ள சாரன்பூர் எனும் சிறுநகரில் உள்ள தந்தையின் மளிகை கடையை புதுப்பிக்க வேண்டும் என்று வைபவ் அகர்வால் தீர்மானித்தார். ஆனால், அந்த மளிகைக்கடைதான் விரைவிலேயே ஒரு நிறுவனத்தை கட்டமைப்பதற்கு உதவும் என்றோ வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் அது ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்டும் என்றோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
அப்போது வைபவ் அகர்வாலுக்கு வயது 27 தான். தந்தையின் கடை பெரிய இடத்தில் செயல்படும் அளவுக்கு வளர்ந்திருப்பதை கண்டார். ஆனால், ஒரு நகர டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்பதற்கான வசதிகளில் குறைபாடு இருந்ததையும் அவர் கவனித்தார். எனவே அந்த கடையை நவீனமயமாக்க வேண்டும் என்றும் புதிய தோற்றத்தை அளிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.
சாரன்பூரில் உள்ள தங்கள் குடும்பத்தின் மளிகைக் கடையில் இந்திய கிர்யானா கம்பெனி ஸ்டோர் நிறுவனர் வைபவ் அகர்வால். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
“கடை 1500 ச.அடியில் இருந்தது. ஆனால், பொருட்கள் எல்லாம் ஏனோதானோவென்று அடுக்கப்பட்டிருந்தன. சரக்கு எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் நிர்வகிக்கப்படவில்லை மற்றும் நவீன ரசீது முறையும் இல்லை,” என்றார் அவர். அவரது தந்தை 17 வது வயதில் ரூ.10,000 முதலீட்டில் தொடங்கிய கமலா ஸ்டோரை வைபவ் விரைவிலேயே நவீன பாணியிலான கடையாக , அந்த நகரின் பெரிய கடைகளில் ஒன்றாக மாற்றினார். கடையில் அருமையான அலமாரிகள் இருந்தன. அங்கே பொருட்கள் பிரிவு வாரியாக அடுக்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் அதனை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. டிஜிட்டல் வாயிலான சரக்கு இருப்பு நிர்வகிப்பு முறை விற்பனையான பொருட்கள் மற்றும் விற்பனைக்குப் பின்னர் சரக்கின் இருப்பு ஆகியவற்றை அறிய உதவியது. தந்தையின் மளிகைக்கடையை மாற்றிய அனுபவம், இந்தியாவில் சிறுநகரங்களில் உள்ள அனைத்து மளிகைக்கடைகளையும் நவீனமயமாக்க வேண்டும் என்ற ஒரு வணிக யோசனையையும் அவருக்குக் கொடுத்தது. அந்த யோசனையானது அவருக்கு மட்டுமின்றி, கடை உரிமையாளர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இருந்தது. வைபவ் கடைகளை பதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்கும் பணிகளை செய்து தர ஆரம்பித்தார். கூடுதலாக பருப்பு வகைகள், மசாலாக்கள், மளிகைக் கடைக்குத் தேவையான இதர பொருட்களை முறையான அடிப்படையில் விநியோகித்தார். இதன் மூலம் அவருக்கு சீராக வருமானம் கிடைத்தது. புதிதாக வடிவமைக்கப்பட்ட கடைகளுக்கு அதிக அளவு வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கியதால், விற்பனை அதிகரித்து வருவாயும் உயர்ந்தது. “நான் 2018 ஆம் ஆண்டு தனிப்பட்ட உரிமையாளர் நிறுவனமாக இந்தியன் கிர்யானா கம்பெனி ஸ்டோர் நிறுவனத்தை பதிவு செய்தேன். ரூ.2.5 லட்சம் ரூபாயுடன் தொடங்கினேன்,” என்கிறார் வைபவ். “இதுவரை நாங்கள் 12 நகரங்களில் 50 கடைகளுடன் இணைந்து பணியாற்றி உள்ளோம். பெரும்பாலும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள கடைகளில் கவனம் செலுத்துகின்றோம்.”
குடும்பத்துக்கு சொந்தமான மளிகைக்கடையை நவீனமயமாக்கிய பின்னர், வைபவ் 50 மளிகைக்கடைகளை 2017ஆம் ஆண்டு தாம் தொடங்கிய நிறுவனம் மூலம் நவீனமயமாக்கினார் |
2019-20 நிதியாண்டில் அவரது நிறுவனம் ரூ.1 கோடி ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்த ஆண்டு ரூ.5 கோடியை நெருங்க உள்ளது. சாரன்பூரில் உள்ள ஒரு கடைக்காக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் பெற்றார். இதுதவிர உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் நடைபெற்றுவரும் ஒரு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். “இந்த சில்லறை வணிக பங்குதாரர்கள் எங்களுடைய பணியை மற்றவர்களுக்குச் சொல்கின்றனர். அதனால் இயல்பாகவே நாங்கள் வளர்வதற்கும் அது உதவுகிறது,” என்கிறார் வைபவ். “ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தின் வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்,”என்கிறார் அவர். ”பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 முதல் 40 மாவட்டங்களுக்கு நான் பயணித்துள்ளேன். ஒவ்வொரு 2 கி.மீக்கும் இடையே மளிகைக்கடைகளில் பணி கலாசாரம் வேறுபடுவதை உணர்கின்றேன். எந்த வகையான வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்கின்றோம் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்,” அறிமுகம் இல்லாத துறையில் பயணித்த போதிலும், ஒரு மளிகைக்கடை உரிமையாளரின் மகன் என்பது உண்மையிலேயே உதவியாக இருந்தது. எனவே மளிகைக்கடைகளில் மாற்றங்களை மேற்கொண்ட போது கடைகள் பார்ப்பதற்கு மட்டும் புதுவிதமாக இல்லாமல் கடைகளில் விற்கப்படும் பொருட்களில் தரத்தையும் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக பணியாற்ற முடிந்தது. “எங்களுடைய தொழிற்சாலையில் இருந்து தரமான பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை நாங்கள் விநியோகித்தோம்,” என்றார் அவர். “சுத்தமான, ஆரோக்கியமானவற்றை உண்ண வேண்டும் என்பதை நாங்கள் முன்னெடுத்தோம். உதாரணமாக நாங்கள் எங்களுடைய பங்குதாரர்கள் கடையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை விடவும் கடுகு எண்ணையை முன்னெடுத்தோம். கடுகு எண்ணையின் பலன்கள் என்பது அளவிடமுடியாதது. ஆராய்ச்சியாளர்களால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.” இறுதியாக பொருளைப் பெறும் வாடிக்கையாளர் நலனே முக்கியம் என்பதை மனதில் வைத்து நெறிமுறையோடு வளர்ச்சியடையவேண்டும் என்பதை வைபவ் வலியுறுத்துகிறார்.
வைபவ் நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட கடைகளில் ஒன்று |
சந்தைப்படுத்துவதற்காக ஒரு குழுவை அவர் வைத்திருக்கிறார். அவர்களை அவர் கற்பிப்பவர்கள் என்று அழைக்கிறார். அவர்கள் மளிகைக்கடைகளின் உரிமையாளர்களை சந்தித்து கடைகளை நவீனப்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கின்றனர். “இன்றைக்கு 90 சதவிகித மளிகைக்கடைகள் பாரம்பரிய முறைப்படி செயல்படுகின்றன. அதில் 60 சதவிகித கடைகள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை,” என்றார் அவர். ஆனால், வைபவ் மற்றும் அவரது குழுவினர், பல்வேறு மளிகைக் கடைகளின் உரிமையாளர்களை நவீனமயமாக்க சம்மதிக்க வைத்துள்ளனர். மின்னணு ரசீது முறை, மின்னணு எடை, பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை கடைகளுக்கு விநியோகித்தல் போன்றவை இதில் அடங்கும். “பெரும்பாலான மளிகைக்கடைகளில் பருப்பு வகைகள், தானியங்கள் சாக்குப் பைகளில்தான் வைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு எங்கள் தொழிற்சாலையில் இருந்து பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை அறிமுகம் செய்தோம். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தினோம். இருப்புகள் வீணாவதையும் முடிவுக்குக் கொண்டு வந்தோம்,” என்று கூறினார். “ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை எடைபோட்டு கட்டிக் கொடுக்கின்றனர். பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் விலை அதிகம் என்று கருதப்படுகிறது. ஆனால், நாங்கள் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்து, சில்லறை விற்பனையாளர்களை எங்களது வாடிக்கையாளர்கள் ஆக்கி உள்ளோம்.” டெல்லி, என்சிஆர், ஹரித்வார், ரூர்கி, சாரன்பூர் உளிட்ட 12 நகரங்களில் இவர்கள் பங்கேற்ற 50 கடைகள் அமைந்துள்ளன.
தந்தை மற்றும் இதர குழு உறுப்பினர்களுடன் தமது குடும்பத்துக்குச் சொந்தமான கடைமுன் வைபவ் |
“அலமாரியில் அடுக்கி வைப்பதற்கான பணிகளை ஒருங்கிணைக்கும் பங்குதாரர், சிறிய கடையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு ஏற்றதாக மிகவும் அழகாகப் பொருட்களை அடுக்கி வைக்கிறார். அக்கவுண்டிங் சாஃப்ட்வேர் உதவியுடன் சரக்குகளை நிர்வகிக்கும் பணிகளையும் நாங்கள் வழங்குகின்றோம்,” என்று விவரிக்கிறார். “மாதக்கட்டணத்தில் தரவு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்யும் சேவைகளையும் வழங்குகின்றோம். ஒரு கடையின் உரிமையாளர் எந்த பொருள் நன்றாக விற்பனை ஆகிறது. எந்த பொருட்கள் காலாவதியாகின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும். தவிர சரக்குகளின் பட்டியலையும் நிர்வகிக்க முடியும்.” லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் தேசிய தொழில்நுட்ப மையத்தில் வைபவ் தகவல் தொழில்நுட்பத்தில் பிடெக் முடித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் உதவியாளராக ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் சம்பளத்தில் ஓர் ஆண்டு அங்கு பணியாற்றினார். பின்னர் மாதம் ரூ.10,000 எனும் குறைவான மாத சம்பளத்தில் ஒரு எஃப்எம்சிஜி நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பணியில் சேர்ந்தார். தமது சொந்த ஊரில் மளிகைக்கடைகளுடன் நெருக்கமான முறையில் பணியாற்றினார். “இது எனக்கு மளிகைக்கடை உரிமையாளர்களின் மனதைப் புரிந்து கொள்ள உதவியது. ஒரு ஆண்டு கழித்து புதுடெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ சேர்ந்தேன். அங்கு நான் வழிகாட்டுதல் மற்றும் சரியான திசையுடன் என்னை சீர்படுத்திக் கொண்டேன்,” என்றார் வைபவ் அவருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், ஆறுமாதத்துக்குள் அந்த நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார். 2017ஆம் ஆண்டு நவம்பரில் சாரன்பூர் திரும்பி வந்தார். முதலில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கடையை புதுப்பித்தார். அவரது வெற்றிகரமான தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கினார். இன்றைக்கு அவரிடம் 11 பேர் கொண்ட குழு உள்ளது. தொழிற்சாலையில் 13 பேர் பணியாற்றுகின்றனர். அங்கு அவர்கள் பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் மசாலாப்பொருட்களை த இந்தியன் கிர்யானா கம்பெனி, சாய் இந்தியாவின் கேஎஸ் சாய்கா என்ற பிராண்ட் பெயரில் பேக்கேஜ் செய்கின்றனர். “சாரன்பூரில் செவ்வாய்கிழமை வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும். எனவே என்னுடைய வார விடுமுறையை செவ்வாய்கிழமை எடுத்துக் கொள்கின்றேன். இதர குழு உறுப்பினர்கள் , சில்லறை வணிக பங்குதாரர்களின் தேவையில் தொடர்புடையவர்கள் சுழற்சி அடிப்படையில் வார விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர்.” வைபவ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். வணிக நடவடிக்கைகளை அதிகரித்து நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல தமது நிறுவனத்தில் முதலீட்டாளர்களை இணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதிகம் படித்தவை
-
அம்பிகாவின் நம்பிக்கை!
ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
கூச்சத்தை வென்றவர்
டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
காபி தரும் உற்சாகம்
வடோதராவில் இரண்டு நண்பர்கள் 12 லட்சம் முதலீடு செய்து 2008-ல் காபி ஷாப் தொடங்கினர். இப்போது அவர்களுடைய காபிஷாப் நிறுவனம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளரும் நிறுவனம். 8.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் கவிதா கனன் சந்திரா
-
மீண்டும் மீண்டும் வெற்றி!
பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
தன்னம்பிக்கையின் தூதுவர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை