உடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்!
28-Jan-2025
By பிலால் ஹாண்டூ
புது டெல்லி
ஜெயராம் பானன் உடுப்பியில் உள்ள தன் வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த நாளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். இன்று அவருக்கு 64 வயதாகிறது. 1960களின் நடுவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் வட இந்தியாவின் நிகரற்ற ’தோசை கிங்‘ ஆகத் திகழ்கிறார்.
மும்பையில் ஒரு கேண்டீனில் பாத்திரம் கழுவி 18 ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்த இவர், இன்று சாகர் ரத்னா உணவகங்கள் குழுமத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார். அவற்றின் ஆண்டு வர்த்தகம் 70 கோடி! இவரது வளர்ச்சி விண்முட்டும் வளர்ச்சி அல்லவா?
உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மலிவு விடுதிகள், தொழில்பேட்டைகளில் கேண்டீன்கள் ஆகியவற்றை ஜெயராம் பானன், தன் பெயரில் உள்ள குழுமத்தின் மூலம் நடத்துகிறார். |
பானன் ஏழு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். தந்தை சற்றுக் கொடூரமாக நடந்துகொள்வார் என்று பானன் நினைவுகூர்கிறார். ஓட்டுநராக இருந்தவர் தந்தை. பள்ளியில் ஒழுங்காகப் படிக்காவிட்டால் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிவிடுவார்
13 வயதில் பானன் தேர்வில் தோற்றுப்போனார். அப்பாவின் பர்சில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடினார்.
அவர் மும்பைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டார். அழுகை முட்டியது. அவர் அழுவதைப் பார்த்த அதே ஊர்க்காரர் ஒருவர் மும்பையில் ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவன காண்டீனுக்கு அழைத்துச் சென்றார்.
அந்த நிறுவன காண்டீனில் பாத்திரம் கழுவும் வேலைதான் அவருக்குக் கிடைத்த முதல் வேலை. மாத சம்பளம் ரூ.18. அந்நாட்களில் உடுப்பியைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக மும்பைக்குச் செல்வதுதான் வழக்கம்.
“அவர்கள் தான் மும்பைக்கு தோசையைக் கொண்டுவந்தார்கள். மசாலா தோசை இந்தியாவின் நம்பர் 1 உணவு ஆனது,” என்கிறார் பானன். அவரது ஹோட்டல்களான சாகர் ரத்னா, ஸ்வாகத், ஷ்ரமன் போன்றவை மிகவும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன.
அவர் கவனத்துடன் வேலை செய்ததால் பாத்திரம் கழுவுவதில் இருந்து சர்வராக உயர்ந்தார். பின்னர் மேலாளர் ஆனார். எட்டு ஆண்டுகளுக்கு அங்கேயே வேலை செய்து, வியாபாரத் திறமையைப் பெருக்கிக்கொண்டார். மாதம் 200 ரூபாய் வரை சம்பாதித்தார்.
அங்கு வேலை செய்த நாட்கள் கடினமானவையாக இருந்தாலும் சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வத்தை அவருக்குள் விதைத்தன.
மும்பையில் தென்னிந்திய உணவகம் ஒன்று தொடங்க அவர் யோசித்தார். ஆனால் அவை நிறைய இருந்ததால் அந்த யோசனையைக் கைவிட்டார். 1973ல் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவரது சகோதரர் உடுப்பி ரெஸ்டாரண்ட் ஒன்றில் மேலாளராக வேலை செய்துகொண்டிருந்தார். அதன் பின்னர் பானனுக்கு ப்ரேமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது
அச்சமயம் அரசு செண்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தை காஸியாபாத்தில் 1974-ல் அமைத்தது. அங்கு காண்டீன் நடத்தும் உரிமத்தை பானன் பெற்றார். முதலீடு ‘2000 ரூபாய்க்கும் குறைவு.’
சாகர் ரத்னா ஹோட்டல்கள் உட்பட பானனுக்கு வட இந்தியாவில் 90 ஹோட்டல்கள் உள்ளன |
இது அவரது வாழ்வில் திருப்புமுனை. மூன்று சமையல்காரர்களை வைத்து தரமான உணவைக் கொடுத்தார். அவரது வாடிக்கையாளர்கள் சுவையான உணவுக்கு ரசிகர்கள் ஆயினர். அந்த கேண்டீன் வெற்றிகரமானதாக மாறியது.
“பெரிதாக எதாவது செய்ய அதுதான் தேவையான தூண்டுதலாக அமைந்தது,” புன்னகையுடன் பானன் கூறுகிறார்.
“அப்போதெல்லாம் உடுப்பி உணவு என்ற பெயரில் ஹல்திராமின் தோசைதான் டெல்லியில் கிடைக்கும். அது பிரபலமாகவும் எளிதில் கிடைப்பதாகவும் இருந்தது. ஆனால் அது போலியானது,” அவர் விளக்குகிறார்.
“நிஜமான சுவையுடன் கூடிய தோசை இரு இடங்களில் மட்டும் கிடைத்தது. ஒன்று லோதி ஹோட்டலில் இருக்கும் வுட்லண்ட்ஸ் உணவகம், மற்றொன்று அம்பாசடர் விடுதியில் இருந்த தாசபிரகாசா. ஆனால் இரு இடங்களிலும் விலை மிக அதிகம்.”
இதில் ஒரு வாய்ப்பு இருப்பதை அவர் உணர்ந்தார். தெருமுனையில் கிடைக்கும் உணவின் விலையில் வுட்லேண்ட்ஸ் இட்லி தோசையை வழங்க முடிவு செய்தார்.
தரமான தோசையை மலிவான விலையில் பானன் கொடுத்தார். |
அவரிடம் இருந்த 5000 ரூபாய் சேமிப்பைப் போட்டு டெல்லி டிபன்ஸ் காலனியில் 4 டிசம்பர் 1986-ல் அவர் தன் முதல் உணவகத்தைத் திறந்தார். 40 பேர் அமரக்கூடிய அந்த உணவகத்துக்கு சாகர் என்று பெயரிட்டு இட்லி, தோசை, சாம்பார் போன்ற தென்னிந்திய உணவுகளை வழங்கினார்.
முதல்நாள் விற்பனை ரூ 408. வாடகை ஒரு வாரத்துக்கு ரூ 3,250. ஆகவே அவர் ஆரம்பத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றாலும் தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்
காலை முதல் நள்ளிரவு வரை கடும் உழைப்பு. சாகரில் விற்பனை அதிகரித்தது. “தரமான உணவு, கட்டுப்படியாகும் விலை, நல்ல சேவை ஆகியவை இதற்கு உதவின என்று நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.
விரைவில் கடைக்கு மேலே இருந்த இடத்தையும் வாடகைக்குப் பெறவேண்டி வந்தது. அவ்வளவு கூட்டம்! ஆனால் அந்த இடமும் போதவில்லை! நீண்ட வரிசை சாப்பிடக் காத்திருந்தது.
நான்கு ஆண்டுகள் கழித்து 1991-ல் பானன் தான் முன்னர் போட்டியிட்ட வுட்லேண்ட்ஸ் என்ற உணவகத்தை வாங்கினார். டிபென்ஸ் காலனியில் அவரது உழைப்புக்கு பலன் இதுவாகும்!
”உடுப்பி போன்ற சின்ன நகரில் இருந்து வந்த எனக்கு இது பெரிய சாதனை. டிபென்ஸ் காலனி போல் அல்லாமல் இதற்கு நல்ல ஆடம்பரமான தோற்றம் அளிக்கத் தீர்மானித்தேன்.
பானனின் ஓர் உணவகத் தோற்றம் |
“நான் மேசை நாற்காலிகளுக்காக ரூ 50,000 செலவழித்தேன். விலையை 20 சதவீதம் அதிகரித்து, இந்த உணவகத்துக்கு சாகர் ரத்னா என்று பெயர் சூட்டினேன்,” பெருமையுடன் கூறுகிறார் பானன்.
சாகர் ரத்னா வேகமாக வளர்ந்தது. டெல்லியில் 35 இடங்களில் அது தொடங்கப்பட்டது. சாமானியர்களும் அடல்பிஹாரி வாஜ்பாயி போன்ற பிரபலங்களும் விரும்பி உண்ணும் இடமாக இது மாறியது.
1999-ல் லூதியானாவில் உள்ள மஹாராஜா ரீஜென்சி ஹோட்டலில் முதல் ப்ரான்சைஸ் தொடங்கினார். அடுத்த 15 ஆண்டுகளில் சண்டிகார், மீரட், குர்காவோன், மற்றும் பல இந்திய நகரங்களில் பிரான்சைஸ் முறையில் 36 உணவகங்கள் தொடங்கப்பட்டன. அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் உணவகங்கள் தொடங்கினர்.
சாகர் ரத்னா பெரிய பிராண்டாக வளர்ந்தது. ஆயினும் பானன் கடலோர உணவு வகைகளிலும் கவனம் செலுத்த விரும்பினார்.
“என் சொந்த ஊர் உடுப்பி கடற்கரை ஊர் அல்லவா? எனவே தென்னிந்திய கடல் உணவை அறிமுகப்படுத்த விரும்பினேன். 2001-ல் ஸ்வாகத் என்ற கிளையை டிபென்ஸ் காலனியில் என்னுடைய முதல் உணவகத்தில் இருந்து சற்றுத் தொலைவில் தொடங்கினேன்.”
இந்த வகை உணவு அப்போது அரிதாக இருந்தது. எனவே இந்த உணவகம் உடனே வெற்றிகரமானதாக மாறியது. வெளிநாட்டவர்களும் இந்தியர்களும் அங்கே உணவுண்ண படையெடுத்தனர்.
ஸ்வாகத் இப்போது 17 கிளைகளுடன் உள்ளது. மங்களூரு, செட்டிநாடு, மலபார் உணவுவகைகளை வழங்குகிறது. 2005-ல் மீலெ கைடு என்கிற ஆசிய உணவகங்கள் பற்றிய வழிகாட்டி நூல் ஸ்வாகத் முன்னணி கடலுணவு நிறுவனம் என்று குறிப்பிட்டது.
இப்போது பானன் வட இந்தியாவில் சாகர் ரத்னா, ஸ்வாகத் கிளைகளையும் சேர்த்து 90 உணவகங்களை நடத்துகிறார். இந்த விரிவாக்கம் அவரது வர்த்தகத்தைக் கூட்டி உள்ளது. 20-25 சதவீதம் லாபம் கிடைக்கிறது.
பெற்றோர் நினைவில்: உடுப்பியில் கார்கலாவில் அவரது பெற்றோர் நினைவாகத் தொடங்கப்பட்ட சாகர் ரத்னா உணவகம் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்குகிறது |
2000த்தில் சாகர் ரத்னாவின் வர்த்தகம் 12 கோடி. 2005-ல் அது 25 கோடியாக மாறி, இன்று சாகர் ரத்னா சங்கிலி உணவகங்கள் 200 கோடியாக மதிப்பிடப்படுகின்றன.
2011 ஆகஸ்டில் நியூயார்க்கைச் சேர்ந்த இந்தியா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் (இஈபா) என்ற தனியார் நிதி நிறுவனம் சாகர் ரத்னா குழுமத்தில் முதலீடு செய்தது. 180 கோடி ரூபாய் அளித்து 75 சதவீத பங்குகளைப் பெற்றுக்கொண்டது. புதிய சிஇஓ வை நியமித்தது. பானன் வசம் 22.7 சதவீத பங்குகள். அவர் இக்குழுமத்தின் தலைவராக இருந்தார். இதற்கு ஜெயராம் பானன் குழுமம் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டது. இந்தியா முழுக்க உணவகச் சங்கிலியை விரிவாக்க செய்யப்பட்ட நடவடிக்கை இந்த பங்கு விற்பனை ஆகும்.
ஆனால் அக்டோபர் 2013ல் இஈபா நிறுவனத்துடன் பானனுக்கு கருத்துவேறுபாடு உருவானது. அவர் பங்குகளைத் திரும்ப வாங்க முடிவெடுத்தார். தன் மகன் ரோஷனுடன் இணைந்து தன் குழுமத்தை பிற உப தொழில்களிலும் விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்.
இக்குழுமத்துக்கு இப்போது நட்சத்திர விடுதிகள், மலிவு விடுதிகள், கேண்டீன்கள், வெதுப்பகம் ஆகியவை உள்ளன. தின்பண்டங்கள், ஊறுகாய்கள், உடனே உண்ணும் உணவுவகைகள் ஆகியவையும் தயார் செய்கிறார்கள்.
பானன் மேலும் வளர ஆர்வமாக உள்ளார். மார்வாடிகள், ஜெயினர்கள் ஆகியோரின் உணவுப் பழக்கத்தை கவனித்து ஷ்ரமன் என்ற பெயரில் சங்கிலி உணவகங்களை உருவாக்கி உள்ளார். இங்கு பூண்டு, வெங்காயம் இல்லாமல் சாப்பாடு கிடைக்கும். “சந்தைக்கு ஏற்ப தொடர்ந்து மாறவேண்டும். நாங்களும் அப்படியே வளர்ந்துள்ளோம்,” என்கிறார் அவர்.
பானனின் பல்வேறு தொழில்களில் 10,000 பேருக்கு மேல் வேலை கிடைக்கிறது |
அவருடைய வெற்றியின் பலன்களை தர்மச் செயல்களுக்கும் பயன்படுத்துகிறார். 2010-ல் அவரது பெற்றோர் நினைவாக உடுப்பி கார்கலாவில் தொடங்கிய உணவகம் 10 ரூபாய்க்கு முழுச்சாப்பாடு தருகிறது. கிட்டத்தட்ட அவரிடம் வேலைபார்க்கும் பத்தாயிரம் பேரும் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். “நாம் வளர உதவிய சமூகத்துக்குத் திருப்பிச் செய்யவேண்டியது அவசியம்,” என்கிறார் அவர்.
பானன் தன் விடுதிகள் உணவகங்களுக்கு வருகிறவர்களுக்கு இன்னும் தலைவணங்கி வரவேற்பு அளிக்கிறார். இன்னும் டிபென்ஸ் காலனியில் உள்ள உணவகத்துக்கு தினமும் 2000 பேர் வருகை தருவதன் காரணத்தை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.
அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று , ருசியின் பாதையில் பயணித்து சிகரங்களைத் தொட்டுள்ளார்!
அதிகம் படித்தவை
-
தோசைப் ப்ரியர்கள்
பலருக்கு தோசை சாப்பிடப்பிடிக்கும். ஆனால் அதை கல்லில் ஊற்றி சுடுவதற்கு? தமிழரும்தோசைப் பிரியருமான ஈஸ்வர் தமது நண்பர் சுதீப் உடன் சேர்ந்து இதற்காக தோசாமேட்டிக் மிஷினை கண்டுபிடித்தார். இன்றைக்கு நாடு முழுவதும் ஈஸ்வரின் தோசாமேட்டிக் இடம் பிடித்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
என் வழி தனி வழி!
ராணுவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா. ஆனால் அவர் தனியாக லாஜிஸ்டிக் துறையில் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார். இன்றைக்கு அவரது நிறுவனம் 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது. சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை...
-
கீழடி: உரக்கக்கூவும் உண்மை
மதுரை அருகே கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வு தரும் செய்திகள் இந்திய வரலாற்றை இனி தெற்கே இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள். சங்ககாலத்துக்கும் முற்பட்ட இந்த நகர நாகரிகத்தைக் குறித்து ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் உரையாடி உதய் பாடகலிங்கம் எழுதும் கட்டுரை
-
இணைந்த கைகள்
நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ரோகித், விக்ரம் இருவரும் எம்.பி.ஏ., படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சேர்ந்து டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியவர்கள் இன்று 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
உயர வைத்த உழைப்பு!
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு மாதம் ரூ.1500 வேலைக்கு சென்றவர் சந்தோஷ் மஞ்சளா. சுயமாக மேற்படிப்பு முடித்து அமெரிக்கா வரை சென்று ரூ.1 கோடி ஆண்டு சம்பளம் பெற்றவர், இப்போது இந்தியா திரும்பி எடைகுறைப்புக்கு டயட் உணவு அளித்து வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை