4 பேருடன் தொடங்கியவர் இப்போது 400 பேருக்கு சம்பளம் தருகிறார்!
20-Apr-2025
By குருவிந்தர் சிங்
கொல்கத்தா
மேற்குவங்க மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரான சுமன் ஹௌலதார், எப்போதுமே பெரிதிலும் பெரிதை விரும்புபவர். தமது கனவுகளின் மீது நம்பிக்கை கொண்டவர். சராசரியான பள்ளிப்படிப்பு மற்றும் நடுத்தர குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்த 37 வயது இளைஞர், ‘தனது இலக்கு எதுவென்று அறிந்த ஒருவருக்கு, வேறு ஒன்றும் வழியில் குறுக்கே வராது’ என்பதை நிரூபித்திருக்கிறார்.
இத்தகைய சுயநம்பிக்கையைக் கொண்டிருப்பதைத் தவிர சுமனிடம் வேறு ஒன்றும் இல்லை. அந்த சுயநம்பிக்கையை தம்முள் பாதுகாத்து வைத்ததால், அவர் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்.
|
சுமன் ஹௌலதார் ஃபோய்வீ (Foiwe) நிறுவனத்தை 50 ச.அடி இடத்தில், நாலுபேருடன் பெங்களூருவில் ஆரம்பித்தார். இன்றைக்கு அவருடைய கொல்கத்தா மற்றும் ரஷ்யாவில் உள்ள அலுவலகங்களில் 400 பேர் பணியாற்றுகின்றனர் (படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
சுமன், தம்முடைய ஐடி சேவை மற்றும் மேலாண்மை நிறுவனமான ஃபோய்வீ (Fusion of Intelligence with Excellence ) இன்ஃபோ குளோபல் சொல்யூசன்ஸ் எல்எல்பி-யை பெங்களூருவில் 50 ச.அடி இடத்தில், மூன்று பழைய கம்ப்யூட்டர்கள், ஒரு ரவுட்டர் (router), ஒரு செல்போன், சில மரசாமான்களுடன் 2010-ம் ஆண்டு தொடங்கினார். தம்முடைய சேமிப்பில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதில் முதலீடு செய்தார். ஒரு சிறிய ஸ்டோர் ரூமில் நான்கு பேருடன் நிறுவனத்தைத் தொடங்கினார். “பெரிய அலுவலக இடம் பார்க்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனவே, நான் ஒரு ஸ்டோர் ரூம் இடத்தை வாடகைக்கு எடுத்தேன். ஏனெனில் அந்த இடத்தை யாரும் வாடகைக்கு எடுக்க முன் வரவில்லை,” என்று சிரித்தபடி நம்மிடம் சொல்கிறார்.
இப்போது, ஃபோய்வீ நிறுவனம் பெங்களூருவுக்கு வெளியேயும் பரந்து விரிந்துள்ளது. அதன் அலுவலகம் கொல்கத்தாவிலும், அதே போல ரஷ்யாவிலும் இருக்கிறது. உலகம் முழுவதும் 400 பேர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தின் 2017-18ம் ஆண்டுக்கான ஆண்டு வருவாய் 18 கோடி ரூபாய்.
ஐடி சேவைகள் மேலாண்மை, உள்ளடக்க கட்டுப்பாடு (content moderation), வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை ஃபோய்வீ வழங்கி வருகிறது. “பிரபல பிராண்ட்களின் இணையதளங்களில் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்படும் கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள், மதிப்பீடுகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை 24 மணி நேரமும் கண்காணித்து மதிப்பீடு செய்கிறோம்,”என்கிறார் சுமன்.
“இப்படி வாடிக்கையாளர்கள் பதிவேற்றும் விஷயங்களை திறன்பட நிர்வகிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொருட்கள் மீது நம்பகத்தன்மை இருக்கும். உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்ய எங்களுடைய நபர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். இதனால், ஒரு பிராண்ட்டின் இணையதளத்துக்கு வருபவர்கள், சரியான உள்ளடக்கத்தைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.”
சுமன், 2010-ம் ஆண்டில் நடந்ததை நினைத்துப் பார்க்கிறார். அப்போது அவர் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டார். அலுவலக வாடகையாக மாதம் 800 ரூபாயை கொடுப்பதற்கு கூட சிரமம்.
சுமனின் வாழ்க்கைப் பயணம் எப்படித் தனித்துவம் வாய்ந்தது என்ற உண்மையை நீங்கள் மதிப்பிட முடியும். சுமன் இப்போது, உலகம் முழுவதும் உள்ள தம் அலுலகங்களுக்கு ஆண்டு தோறும் 1.5 கோடி ரூபாய் வாடகை தருகிறார்.
மேற்கு வங்கத்தில், கொல்கத்தாவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு 24 பாரகனா மாவட்டத்தில் உள்ள பிஸ்வந்த்பூர் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இந்த இளம் தொழிலதிபர், 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தார். சிறிய குடும்பத்தில், இரண்டு குழந்தைகளில் மூத்தவர் இவர்.
அவருடைய தந்தை ஒரு விவசாயி. அவரது தாய், குடும்பத்தலைவி. “வாழ்க்கையை சுமாராக ஓட்ட போதுமான வருமானம் இருந்தது. இருப்பினும் எங்கள் படிப்புக்காக, தந்தை சேமித்து வைத்திருந்ததைச் செலவழித்தார்,” என்கிறார் சுமன்.
|
பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் தம்முடைய ஊழியர்களுடன் சுமன்
|
1998-ம் ஆண்டு பாரக்பூரில் உள்ள போலானந்தா தேசிய வித்யாலயாவில் சுமன் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், பெங்களூரு சென்ற அவர், கேபிஎச்ஆர் ஹோட்டல் மேலாண்மை மையத்தில் ஹோட்டல் மேலாண்மையில் மூன்றாண்டு படிப்பில் சேர்ந்தார். அதே நேரத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான சில பயிற்சிகளும் மேற்கொண்டார்.
“பெரும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், என் தந்தை என் படிப்புக்காக செலவு செய்தார். எனவே, அவருக்கு மேலும் பளுவாக இருக்க விரும்பவில்லை. ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று எனக்கு கனவு இருந்தாலும் கூட, பட்டப்படிப்பை முடித்த உடன், வேலையில் சேர்ந்தேன்,” என்கிறார் சுமன்.
2001-ம் ஆண்டு ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனத்தில் மாதம் 7500 ரூபாய் சம்பளத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார். ”என்னுடைய வேலைக்கு இடையே மேலும் படித்தேன்,” என்கிறார் சுமன். 2003-ம் ஆண்டு பெங்களூரு ஏஎம்சி கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு முடித்தார். ராய்ப்பூர் மகாத்மா காந்தி திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து எம்.சி.ஏ முடித்தார்.
2010-ம் ஆண்டு வரை ஐபிஎம் மற்றும் யுனிசிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார்.”2010-ம் ஆண்டு என் கனவை நிறைவேற்றும் வகையில், என்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்,” என்கிறார் சுமன். “நான் மட்டும் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்காமல், நான் பெற்றதை இந்த சமூகத்துக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே, பலருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க விரும்பினேன்.”
2010-ம் ஆண்டு ஜூலையில் சுமன், ஃபோய்வீ குளோபல் சொல்யூஷன் எல்.எல்.பி என்ற பெயரில் தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார். ஒரு சிறிய ஸ்டோர் ரூமில் இருந்து அவரது முதல் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. தொடக்க காலங்களில், உள்ளடக்க கட்டுப்பாட்டு மதிப்பீடுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. அதன் தேவையை பலரும் புரிந்து கொள்ளவில்லை. சில காலம் சென்ற பின், சுமனின் நிறுவனம் நன்றாக செயல்படத் தொடங்கியது.
|
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தம்முடைய தொழிலை விரிவாக்கம் செய்வது என சுமன் திட்டமிட்டுள்ளார்
|
“என்னுடைய ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கும், வாடகை உள்ளிட்ட செலவுகளைச் செய்வதற்கும் பணத்தேவைகளுக்காக ஒரு காலத்தில் என்னுடைய குடும்பத்தின் நகைகளை விற்றேன். ஒரு பாறை போல என் குடும்பம் என்னைத்தாங்கி நின்றது என்பதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
சில தடங்கல்கள் இருந்தபோதிலும், முதல் நிதி ஆண்டில் 2.9 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் கிடைத்தது. வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவரது தொழில் வளரத் தொடங்கியது.
“நாங்கள் 100 சதவிகிதம் அளவுக்கு எங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் 85 சதவிகித வர்த்தகம் என்பது வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிடைக்கிறது. இப்போது, நாங்கள் முக்கியமான உள்ளடக்க மேலாண்மை நிறுவனமாக இருக்கிறோம். ஐடி சேவை மேலாண்மை, உள்ளடக்க மதிப்பீடு, வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை கையாளும் வகையில் உயர்ந்திருக்கிறோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார் சுமன். இப்போது தமது தொழிலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
சுமனின் வியத்தகு தொழில்முனைவுப் பயணம் நிரூபித்திருப்பது இதுதான்; எங்கிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எங்கே நீங்கள் போகப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். 123
அதிகம் படித்தவை
-
மொறுமொறு வெற்றி!
சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
நினைத்ததை முடிப்பவர்
ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்
-
கறி விற்கும் கார்ப்பரேட்!
பெரு நிறுவனங்களில் நல்ல பணியில் இருந்த இரு நண்பர்கள் அதைவிட்டுவிட்டு தரமான இறைச்சியை ஆன்லைனில் விற்பனை செய்ய இறங்கினார்கள். லிசியஸ் என்ற அந்த பிராண்ட் இரண்டே ஆண்டுகளில் 15 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார் உஷா பிரசாத்
-
உழைப்பின் வெற்றி!
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஒதுக்கப்பட்டனர். மும்பை புறநகரில் ஒழுகும் வீட்டில் குழந்தைப் பருவத்தை கழித்த ராஜேஷ், இன்றைக்கு மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் செய்து கொழிக்கிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை