தமிழகத்தின் இரும்பு மனிதர்! அயராத உழைப்பில் 800 கோடி ஆண்டு வருவாய்!
30-Oct-2024
By பி சி வினோஜ் குமார்
திருச்சி
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘அசைக்கமுடியாத வலிமைமிக்க அம்மன் டிஆர்ஒய் முறுக்குக் கம்பிகள்’ என்ற கோஷத்துடன் தமிழ் ஊடகங்களில் வெளியான புதிய விளம்பரம் கவனத்தை ஈர்த்தது. அம்மன் டிஆர்ஒய் (Amman TRY) என்ற பெயரில் அழைக்கப்பட்ட பிராண்டின் வெற்றிப்பயணம் இப்படித்தான் தொடங்கியது.
அந்த நாட்களில், தமிழகத்தில் இருந்து சிலர் மட்டுமே கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் முறுக்குக் கம்பிகளைத் தயாரித்தனர். பெரும்பாலான கம்பிகள் மாநிலத்துக்கு வெளியே இருந்து , வைசாக் ஸ்டீல் (பொதுத்துறை நிறுவனம்), டாடா ஸ்டீல்(தனியார்) போன்ற நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டன.
|
அம்மன் டிஆர்ஒய் முறுக்கு கம்பிகள் நிறுவனர் எம்.சோமசுந்தரம் ஆரம்ப காலகட்ட பயிற்சிகளை தமது தந்தையின் பழைய இரும்புக்கடையில் இளம் வயதிலேயே பெற்றார். (புகைப்படங்கள்:சிதம்பரம்)
|
இந்நிலையில்தான் உள்ளூரில் தொடங்கப்பட்ட அம்மன் டிஆர்ஒய் பிராண்ட் விரைவிலேயே புகழ்பெறத் தொடங்கியது. அதன் பின்னணியில் இருந்து அதன் செயல்பாட்டை விரிவாக்கியவர், இளம் நிறுவனர் சோமசுந்தரம் . இவர், திருச்சி தேசிய கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் படித்தவர். அம்மன் டிஆர்ஒய் முறுக்குக் கம்பிகளுக்கான விளம்பரத்துக்கான மூளையாக செயல்பட்டவரும் இவரே.
“2001-ம் ஆண்டு எங்களுடைய உற்பத்தி திறன் மாதத்துக்கு 1000 டன்களாக இருந்தது. இப்போது பல்வேறு அளவுகளில் ஒரு லட்சம் டன் இரும்பு கம்பிகளை ஆண்டுதோறும் தயாரிக்கின்றோம்,” என்கிறார் 44 வயதாகும் சோமசுந்தரம். இவர் 800 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் ஸ்டீல் குழுமத்தின் நிறுவனர். இவரது தந்தை எஸ்.பி. முத்துராமலிங்கம் 1978-ல் திருச்சியில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்.
நான், திருச்சி ஃபாத்திமா நகரில் இருக்கும் அம்மன் டிஆர்ஒய்-யின் பரந்து விரிந்த தொழிற்சாலையில் இருக்கிறேன். இது சென்னையில் இருந்து 360 கி.மீ தொலைவில் உள்ளது. ஊடகங்களுக்கு அரிதாகத்தான் சோமசுந்தரம் பேட்டி கொடுப்பார். அந்த அரிய பேட்டிகளில் ஒன்று இது.
“அம்மன் என்பது எங்கள் குலதெய்வம். டிஆர்ஒய் என்பது திருச்சி என்ற பெயரின் சுருக்கம்,” என இந்த பிராண்ட் பெயரின் பின்னணி குறித்து விவரிக்கிறார். இப்போது தமிழகம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேரளாவின் சில பகுதிகளில் இந்த பிராண்ட் விரிவடைந்துள்ளது.
“தமிழகத்தில் டிஎம்டி(Thermo Mechanically Treated) கம்பிகள் சந்தையில் 12 சதவிகிதம் எங்கள் பங்கு இருக்கிறது. சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால், இதர மாநிலங்களுக்கான வணிகத்தில் அவ்வளவாக நாங்கள் கவனம் செலுத்தவில்லை,” என்கிற அவர், தொடர்ந்து, “திருச்சியில் இருந்து தொலைதூரங்களில் உள்ள இடங்களுக்கு சரக்கை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. போட்டிகள் நிறைந்த சந்தையில் இது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது. திருச்சியைத் தவிர வேறு சில இடங்களிலும் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் சந்தையை விரிவாக்க உள்ளோம்,” என்கிறார்.
திருச்சியில் உள்ள நாகமங்கலத்தில் முதல் ஸ்டீல் ரோலிங் தொழிற்சாலையை தமது 23வது வயதில் சோமசுந்தரம் தொடங்கினார். அப்போதுதான் அவர் பட்டப்படிப்பை முடித்திருந்தார். ஸ்டீல் தொழிற்சாலை ஒன்றை நடத்திய அனுபவம் கூட இல்லாமல், தமது தந்தையின் பழைய இரும்பு தொழிலில் கிடைத்த சில நடைமுறை அறிவைக் கொண்டு மட்டும் இதனைத் தொடங்கினார்.
“இரும்பு குறித்த அடிப்படை அறிவை அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டேன். கார்பன், மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற அதில் உள்ளடங்கியிருக்கும் கூறுகள் குறித்த அறிவைப் பெற்றேன்,” எனும் அவர், “பல்வேறு வகையான இரும்பு வகைகளை பிரிக்க கற்றுக் கொண்டேன். எந்த வகையான இரும்பு, வார்ப்பு தொழிற்சாலைக்குச் செல்லும், ரோலிங் தொழிற்சாலை அல்லது உருக்கு பிரிவுக்கு செல்லும் இரும்பு எது என்றெல்லாம் அடையாளம் கண்டுகொண்டேன்.”
|
தமிழகத்தின் டிஎம்டி இரும்பு கம்பிகள் சந்தையில் அம்மன் டிஆர்ஒய் நிறுவனம் 12 சதவிகிதத்தை கைவசப்படுத்தியுள்ளது.
|
பழைய இரும்புகளை ஏற்றிக் கொண்டு இரும்பு தொழிற்சாலைகளுக்குச் செல்லும் லாரிகளில் ஒரு கிளீனர் போல அவரும் ரகசியமாகச் செல்வார். தொழிற்சாலைகள் எப்படி செயல்படுகின்றன என்று மனதில் குறித்துக் கொள்வார். கெட்டிக்காரத் தொழிலதிபர் என்று நாம் அவரை அழைக்கலாம். தப்பே இல்லை!
சோமசுந்தரம், தமது தந்தையின் பழைய இரும்பு தொழில், கீழ்நிலையில் இருந்து வளர்ச்சி பெற்றதைக் கண்டிருக்கிறார். ஆறுமாதத்துக்கு ஒருமுறையோ அல்லது அதற்கு பின்னரோ குடும்பத்துடன் லாம்பர்டா ஸ்கூட்டரில் சினிமாவுக்குப் போனது பற்றி நினைத்துப் பார்கிறார். அவரது தந்தை தொழில் விஷயமாக ஒருமுறை வெளியூர் சென்றால், வீட்டுக்கு திரும்பவும் 10-15 நாட்கள் கழித்துத்தான் வருவார்.
“ரயில்வே, பெல் , என்.எல்.சி போன்ற அரசு நிறுவனங்களில் இருந்து அவர் பழைய இரும்பு பொருட்களை வாங்குவார். பின்னர் அதனை ஒரு சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றி இரும்புத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைப்பார்.”
“ரயில்வே சரக்குப் பெட்டியை ஏற்பாடு செய்வதற்கு ஒரு வாரம் கூட ஆகும். அந்த காலகட்டத்தில் சரக்கு அனுப்பப்படும் வரை அவர் ரயில் நிலையத்தில்தான் இரவு தங்குவார்,” என்கிறார் சோமசுந்தரம். குடும்பத் தொழிலில் 15 வயதிலேயே ஈடுபடத் தொடங்கியவர் இவர். “என் தந்தை உந்துதல் பெற்ற நபராக இருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அவர் பணியாற்றுவார். எங்களுடைய வளாகத்தில் இருந்து தினமும் இரண்டு லாரி பழைய இரும்புகள் வெளியேறும் வரை ஓய்வு, ஒழிச்சல் இன்றி வேலைபார்ப்பார்.”
சோமசுந்தரம், இளம் வயதிலேயே தமது தந்தையின் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்ததில் பெருமை கொள்கிறார். அவரது தந்தை சொந்த நிறுவனத்தைத் தொடங்கும் முன்பு ஒரு ஸ்டீல் வர்த்தக நிறுவனத்தில் 1971-ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை கணக்காளராகவும், கொள்முதல் அலுவலராகவும் பணியாற்றியவர்.
|
திருச்சி ஃபாத்திமா நகர் ஆலையில் இரும்பு கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன.
|
“ஞாயிற்றுக்கிழமைகளில் லாரியில் லோடு ஏற்றுவதற்கு ஆட்கள் கிடைப்பது சிரமம். நானும் எனது அண்ணாவும் லாரியில் லோடு ஏற்றும் வேலையை செய்வோம். என் தந்தை எங்களுக்கு தினக்கூலியாக தலா 5 ரூபாய் கொடுப்பார். எங்கள் இருவருக்கும் அது பெரிய தொகையாகத் தெரிந்தது,” என்று நினைவுகூர்கிறார்.
திருச்சி தேசிய கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை மாலை நேர வகுப்புகளில் படித்த சோமசுந்தரம், அப்போதே தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கும் இரும்பு ஏலங்களில் பங்கேற்று, ஏலம் எடுப்பார்.
“ஏலம் எடுப்பவர்களில் நான்தான் இளம் வயதினனாக இருந்தேன். அப்போது என்னுடைய மீசை கூட முழுமையாக வளர்ந்திருக்கவில்லை,” என்று பலத்த சிரிப்புடன் தொழிலின் ஆரம்ப காலகட்டங்கள் குறித்து நினைவு கூர்கிறார்.
கல்லூரியில் படிக்கும்போது ஒரு மறக்கமுடியாத சம்பவம் நடந்தது. ஈரோடு ரயில் நிலையத்தில் தடம்புரண்ட 40 டேங்கர் சரக்கு ரயில் பெட்டிகள் நசுங்கிக் கிடந்தன. இதனை அகற்றுவதற்கான டெண்டரை எடுத்திருந்தனர். இதனால், சோமசுந்தரம் ஈரோடு சென்றார். “அந்த வேலை மிகவும் சவாலாக இருந்தது. அந்த ரயில் ஆயில் ஏற்றிக் கொண்டு சென்றபோதுதான் தடம்புரண்டது. எனவே, அதனை வெல்டிங் மூலம் வெட்டி எடுப்பது சிரமமாக இருந்தது, நானும், என்னுடைய குழுவினரும் இரவு பகலாக பணியாற்றினோம். ரயில்வே அதிகாரிகள் அதனை ஒருவாரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினர். அவர்கள் கொடுத்த காலக்கெடுவுக்குள் விரைவாக முடித்தோம்.”
இதே போல பல ரயில்வே ஒப்பந்தங்களை அவர்கள் மேற்கொண்டனர். “அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் எல்லாம், அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டன. இதையடுத்து அகற்றப்பட்ட பழைய தண்டவாளங்களை ஏலம் மூலம் நாங்கள் கொள்முதல் செய்தோம்,” என்று நினைவு கூர்கிறார். “ஏலத்தின் போது நான் விலை குறிப்பிடுவேன். பொருளின் மதிப்பு, அதனை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவு ஆகியவற்றை கணக்கிட்டு ஏலத் தொகையை குறிப்பிடுவோம். இதில் நான் உறுதியாக இருப்பேன். எப்போது விலை குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஏலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியமாகும்.”
|
2011-ம் ஆண்டு ஆந்திரமாநிலம் நாயுடு பேட்டையில் சோமசுந்தரம் ஒரு பில்லட் ஆலையை நிறுவினார்.
|
இந்த உள்ளார்ந்த தொழில் நுணுக்கங்கள் எல்லாம் அவரது தந்தையிடம் இருந்து உள்வாங்கியவை. தொழிலின் மீதான ஆர்வம், தொடர்ந்து தேடல் ஆகியவையே எல்லைகளை நோக்கித் தள்ளியது. தன் தந்தையைப் பார்த்து அவரது நிழலில் வளர்ந்தவர், 1990ல் 1.5 கோடிரூபாய் செலவில் ரோலிங் மில் ஒன்றைத் தொடங்கினார். சொந்தப் பணம் 50 லட்சம் ரூபாய், கடன் நிதி ஒரு கோடி ரூபாயைக் கொண்டு தொடங்கினார்.
இந்த ஆலையில், சிடிடீ((CTD)) பார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தொழில் அவ்வளவு எளிதாக இல்லை. ஐந்து மாதங்கள் வரை ரோலிங் மில் நஷ்டத்தில் இயங்கியது. “ரூ.25 லட்சம் வரை இழந்தோம். கஷ்டப்பட்டு சேர்த்தபணம் புகையாகப் போகிறதே என்று நிலை குலைந்தேன்,” எனும் சோமசுந்தரம், “இந்த வேலையை நிறுத்தி விடலாம் என்று எண்ணினேன். ஆனால், அந்த யோசனையை விட்டு விட்டேன். நிறுத்தியிருந்தால், 100 ஊழியர்கள் பாதிக்கப் பட்டிருப்பார்கள்.”
அதற்கு பதிலாக, தொழில் தொடங்கியது முதல் அதுவரை நடந்த உற்பத்தி செயல்பாடுகளை முழுவதுமாக ஆய்வு செய்தார். மூலப்பொருட்களின் தரம் குறைவாக இருந்ததைக் கண்டுபிடித்தார். இதனால்தான் கழிவு பொருட்கள் அதிகரித்து, நஷ்டம் ஏற்பட்டது என்று அறிந்தார்.
மீண்டும் நிறுவனம் செயல்படுவதற்கு, புதிதாக பணம் தேவை. ஒரு தனியார் நிதி உதவியாளரை அணுகி 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். “நான் பெரிய ரிஸ்க் எடுத்தேன். மிக குறுகிய காலத்திலேயே குளறுபடிகளைத் தீர்க்க முடிந்தது. நிறுவனத்தை லாபத்தை நோக்கி திருப்பினேன்,” என்கிறார். உற்பத்தி தரத்தை அதிகரித்து, கழிவை குறைத்தார். விசாகப்பட்டினம் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து பார்களை வாங்கினார். இரண்டு மாதத்துக்குள் நிலைமை மாறத் தொடங்கியது.
“நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு முகவரிடம் இருந்து அடுத்தடுத்து ஆர்டர்கள் கிடைத்தன. இது என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது,” என்கிறார். அந்த சமயங்களில் தன் அம்பாசிடர் காரில் முகவர்களிடம் இருந்து ஆர்டர்கள் எடுக்க அலைந்து கொடிருந்தார். “ உடனே ரயிலில் ஏறி நாகர்கோவில் சென்றேன். அடுத்த நாள் காலை அவர்கள் கடையைத் திறந்தபோது அங்கே இருந்தேன். எங்களது பிராண்ட்டை எதற்காகத் தேர்ந்தெடுத்து வாங்கினீர்கள் என்பதை அந்த கடைக்காரரிடம் தெரிந்து கொள்ள விரும்பினேன்,” என்றார். அவர் பெற்ற பதில்தான், பெரிய சந்தைப்படுத்தல் உத்தியை நோக்கி அவரது கண்களை திறந்தது. அதனை மாநிலம் முழுவதும் அமல்படுத்தி மிகப்பெரிய வெற்றியும் பெற்றார்.
|
தொழிலாளர்களுடன் சோமசுந்தரம் நெருங்கிப் பழகுகிறார்.
|
“அந்த கடையின் உரிமையாளர் என்னிடம், கம்பியை வளைக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள்தான் எங்கள் பிராண்டை வாங்கும்படி கூறினார்கள் என்றும், எங்கள் நிறுவனத்தின் கம்பிகள் வலுவானதாகவும், வளையக் கூடியதாகவும் இருப்பதாகவும் அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்,” என்கிறார் சோமசுந்தரம். அந்த நேரத்தில்தான், தமது பிராண்ட்டை முன்னெடுப்பதில் சாதாரண தொழிலாளர்களின் சக்தி என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்.
மாநிலம் முழுவதும் உள்ள கம்பிகளை வளைக்கும் பணியாளர்களை, கட்டடத் தொழிலாளர்களிடம் அம்மன் டிஆர்ஒய் நிறுவனம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டதற்கு இந்த சம்பவமே ஒரு பொறியாக இருந்தது. சோமசுந்தரம், தமிழகத்தில் உள்ள நகரங்கள், சிறு நகரங்களுக்குச் செல்வார். உள்ளூர் முகவர்களின் உதவியுடன் ஆயிரக்கணக்கான கம்பி வளைப்பாளர்களைத் தொடர்பு கொள்வார். வாரம் தோறும் திருமண மண்டபங்களில் அவர்களைக் கொண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
“ஒரு கூட்டத்தில் 300 முதல் 1000 பேர் வரை பங்கேற்றனர். பத்து ஆண்டுகளில் 400 முதல் 500 கூட்டங்கள் நடத்தினேன். கம்பிகளை வளைக்கும் தொழிலாளர்கள் எங்கள் பிராண்ட்டின் தூதுவர்கள் ஆயினர்,” என்றார்.
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, பிராண்ட் வளர்ச்சி பெற்றது. ஆரம்ப காலகட்டங்களில், அம்மன் டிஆர்ஒய் நிறுவனத்துக்கு டிஓஆர் 40(TOR 40 ) கிரேடு மறுக்கப்பட்டது. இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு இது மிகவும் முக்கியமாகும். அம்மன் டிஆர்ஒய் நிறுவனத்துக்கு டிஓஆர் 40 சான்று கிடைக்கவிடாமல் தடுத்து, சிலர் தங்கள் சொந்த நலனுக்காக செயல்படுவதாக சோமசுந்தரம் சந்தேகப்பட்டார்.
அனைத்துப் போட்டியாளர்களும் தரத்துக்கான ஹால்மார்க் முத்திரையாக டிஓஆர் 40-பெற்ற செருக்குடன் இருந்தனர். வளர்ந்து வரும் நிறுவனமான அம்மன் டிஆர்ஒய் நிறுவனத்துக்கு இது பின்னடைவாக கருதப்பட்டது. இது போன்ற சூழலில் பலர் தைரியத்தை இழந்திருப்பார்கள். ஆனால், சோமசுந்தரம் தைரியத்தை இழக்கவில்லை. விரைவிலேயே அவர் இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் பிஐஎஸ்(BIS) சான்றிதழைப் பெற்றார். பிஐஎஸ் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட எஃப்இ415 கிரேட்(FE415), அம்மன் டிஆர்ஒய் இரும்பு கம்பிகள் என்று அதனை முன்னெடுத்தார்.
|
ஒரு மூலையில் தள்ளப்படும்போது, புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் எப்போதும் எழுவது இவரது வழக்கம்.
|
“ஒரு உண்மையான தொழில்முனைவு நபர் எப்போதும் தம்மை இழப்பதில்லை,” என்று சொல்லும் அவர், “டிஓஆர் 40 தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருந்தால், நான் சிக்கிக் கொண்டிருப்பேன், ஆனால், நான் அதற்கு மாற்று என்ன என்று பார்த்தேன். எஃப்இ415 கிரேட் என்னை காப்பாற்றி விட்டது. ஆரம்பத்தில் இது மக்களிடம் அதிர்வை உண்டாக்கவில்லை. ஆனால், விரைவிலேயே ஒட்டு மொத்த இரும்பு கம்பி தொழில்களும் எஃப்இ415 கிரேட் கேட்க ஆரம்பித்து விட்டன. இந்த சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. டிஓஆர் 40 கிரேட் மறைந்து போனது.”
தொழில் வளர்ச்சியடைந்தபோது, உற்பத்தியை அதிகரிக்க கட்டமைப்பை முன்னெடுப்பதில் சோமசுந்தரம் கவனம் செலுத்தினார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 2004-ம் ஆண்டு இரும்பு உற்பத்தியின் இரண்டாம் கட்ட தயாரிப்புக்கான பில்லட் தொழிற்சாலையைத் தொடங்கினார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில், 1250 கிலோவாட் காற்றாலை மின்சார ஆலை ஒன்றையும் நிறுவினார். இந்த ஆலை இப்போது தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு 20 லட்சம் யூனிட் மின்சாரம் வழங்குகிறது. இது இந்த நிறுவனத்தின் மின்சார செலவில் ஒரு கோடி ரூபாயை மிச்சப்படுத்துகிறது.
இரண்டாவது ரோலிங் மில் திருச்சியில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.350 கோடியைத் தொட்டது. மேலும் ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நாயுடு பேட்டையில் ரூ.100 கோடி முதலீட்டில் ஒரு பெரிய ஒருங்கிணைந்த பில்லட் ஆலையை தொடங்கினார். நாயுடு பேட்டையில் இந்த தொழிற்சாலை தொடங்க காரணம், கர்நாடகாவின் பெல்லாரி இரும்பு தாது மண்டலம் , கிருஷ்ணாம்பேட்டை துறைமுகம்(40 கி.மீ), சென்னை துறைமுகம்(80 கி.மீ) ஆகியவை அருகாமையில் இருந்ததால், தங்கள் தொழிலுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்பினார்.
|
தொழில் மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டிலும் மனைவி வனிதா, சோமசுந்தரத்துடன் இணையாகத் தொடர்ந்திருக்கிறார்.
|
தாம் பெற்றதை இந்த சமூகத்துக்கு திரும்பிக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் சோமசுந்தரம். “ஒவ்வொரு ஆண்டும் 500 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குகின்றோம். கிராமங்களில் சாலை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தருகின்றோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் வெளியூரில் இருக்கிறார். எப்போதெல்லாம் திருச்சியில் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் காலை வேளைகளில் தமது நண்பர்களுடன் ஷட்டில் விளையாடுகிறார். அவரது மூத்த மகன் சரண் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ (உலோகவியல்) இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இளைய மகன் யஸ்வந்த் பத்தாம் வகுப்புப் படிக்கிறார்.
மனைவி வனிதா, அலுவலக நிர்வாகத்தில் ஈடுபடுகிறார். தொழிலை வளர்த்தெடுக்க தொடர்ந்து மார்க்கெட்டிங் டீம் உடன் கலந்தாலோசிக்கிறார்.
இந்த தம்பதி ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள். கணவருடன் அவருடைய புதிய ஜாவா பைக்கில் ஒரு ரவுண்ட் போக வேண்டும் என்கிறார் வனிதா. வனிதாவின் இந்த ஆசை சோமசுந்தரத்துக்கு புன்னகையை வரவழைக்கிறது. தான் எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான சவால்களுக்கு இடையே இது அவருக்கு ஒரு இளைப்பாறலுக்கான வாய்ப்பு அல்லவா?
அதிகம் படித்தவை
-
மீண்டும் மீண்டும் வெற்றி!
பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
வெற்றிமேல் மிதப்பவர்
உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை
-
பள்ளத்தில் இருந்து சிகரத்துக்கு!
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? தேவன் லாட் எழுதும் கட்டுரை
-
கலக்குங்க கரோலின்!
பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
காகிதத்தில் மலர்ந்த கோடிகள்
வெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
பந்தன் என்னும் பந்தம்
மிகவும் எளிய பின்னணி கொண்ட சந்திர சேகர் கோஷ், கிராமப்புற மகளிரின் நிலை கண்டு மனம் நொந்தார். அவர்களுக்கு உதவ அவர் தொடங்கிய பந்தன் என்ற சிறுகடன் நிறுவனம் ஏராளமான பெண்களின் வாழ்க்கையை மாற்றியதுடன் இன்று வங்கியாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை