பழச்சாற்றுக் கடைகளில் பழுத்த பணம்! சரிந்த குடும்பத்தை மீட்ட இளம் தொழிலதிபர்!
30-Oct-2024
By அன்வி மேத்தா
புனே
ஹேமங்க் பட், சுயமாக முன்னேறிய ஒரு தொழிலதிபர். தன்னிடம் ஒரு பைசா கூட இல்லாத சூழலிலும் தன் 18 வது வயதில் சொந்தமாகத் தொழில் தொடங்கியவர். இன்றைக்கு அவரின் எச்.ஏ.எஸ் (HAS) எனும், சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட் மற்றும் ஜூஸ் கடைகள் மும்பையில் புகழ் பெற்று விளங்குகின்றன. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, சரியான முதலீட்டு உத்திகள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அவர் இதை அடைந்திருக்கிறார்.
பட் வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர். தெற்கு மும்பையில் உயர் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தொழில் முடங்கியபோது, குடும்பம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. எனவே அவர்கள் மும்பையை விட்டுச் செல்வது என்று முடிவு எடுத்தனர். ஆனால், அப்போது 18 வயதாக இருந்த பட், மும்பையிலேயே தங்கியிருப்பது என்று முடிவு எடுத்தார். ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஆக பணியில் சேர்ந்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் தோறும் ரூ.1000 முதல் ரூ.2000 வரை மட்டுமே வருமானம் கிடைத்தது.
|
ஹேமங்க் பட், ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆக வாழ்க்கையைத் தொடங்கி. பின்னர் தொழிலதிபராக உயர்ந்தார். (புகைப்படங்கள்; சிறப்பு ஏற்பாடு)
|
“நான் எனது படிப்பைத் தொடர்ந்தேன். வணிகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றேன். ஆனால், ஒருபோதும் என் பெற்றோரிடம் இருந்து நான் பணம் பெற்றதில்லை,” என்கிறார் பட். 25 வயதாக இருந்தபோது, அவர் மாதம் தோறும் 90,000 ரூபாய் வருவாய் ஈட்டினார்.
2005-ம் ஆண்டு நரிமன் பாயிண்ட்டில் உள்ள ரோட்டரி கிளப்பில் சேர்ந்த பிறகுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்ப்பட்டது. “25வது வயதில், ரோட்டரியன்களிலேயே இளம் வயதினனாக இருந்தேன். நான் பல்வேறு நபர்களை சந்தித்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய தொழிலதிபர்களாக அல்லது பெருநிறுவனங்களின் தலைவர்களாக இருந்தனர். அவர்களைச் சுற்றி இருந்தபோது, வாழ்க்கையில் அவர்கள் சிந்திக்கும் திறன், அவர்களின் முடிவு எடுக்கும் திறனை நான் புரிந்து கொண்டேன்,” என்கிறார் பட்.
ரோட்டரி இயக்கத்தில் சேருமாறு அவரை, தேயாங்க், ரேகா தம்பதிதான் அழைத்தனர். இருவரும் அவருடைய நண்பர்கள். ரோட்டரி கிளப்பில், சூரஜ் சரோகி என்ற முதலீட்டாளர், பங்கு வர்த்தகரை பட் சந்தித்தார்.
“அவர்தான் என்னுடைய கெளரவ ஆலோசகர். பல்வேறு துறைகளில் நாங்கள் ஆராய்ச்சி செய்தோம். உற்பத்தி பொருள் சார்ந்த தொழில்களில் பரிசோதனை அடிப்படையில் முதலீடு செய்தோம்,” என்று நினைவு கூறுகிறார் பட்.
இந்த ஆரம்ப கட்ட நிலை மற்றும் தொடர்புகள், மூலம் சரியான முறையில் பட் பணம் ஈட்டத்தொடங்கினார். ஒரு போதும் அவர் வேலைக்குச் செல்லுவதில்லை என முடிவெடுத்தார். ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருந்தபோதிலும், பல்வேறு தொழில்களில் அவர் முதலீடு செய்தார்.
|
பட், இப்போது லாபத்தில் இயங்கும் 15 எச்.ஏ.எஸ் ஜூஸ் பார்கள் நடத்துகிறார்
|
2010ம் ஆண்டு வாசியில் இனோர்பிட் மாலில், எச்.ஏ.எஸ் ஜூஸ் மையத்தை அவர் தொடங்கினார். இந்த பிராண்ட் 2007-ல் தொடங்கப்பட்டது. “அந்த நேரத்தில் இந்த பிராண்டை வைத்திருந்த ஒருவர், பிராண்டை கைவிட முடிவு செய்தார். நான் அவருடைய பங்குகளை வாங்கினேன்,” என்கிறார் பட். சூரஜுடன் இணைந்து 50;50 என்ற அடிப்படையில் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் முதல் கடையைத் தொடங்கினார். இப்போதும் கூட அவர்கள் இருவரும் சரிசமமான பங்குதாரர்களாக இருக்கின்றனர். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலை பட்டும், நிதியை சூரஜூம் கவனித்துக் கொள்கின்றனர்.
“இனோர்பிட் மாலில் இந்த மையத்தைத் தொடங்கியபோது, எங்களின் மாத விற்பனை 2.5 லட்சம் ரூபாயாக இருந்தது. இது செலவுகளைச் சரிக்கட்டுவதற்கே போதுமானதாக இருந்தது. ஆனால், ஆறுமாதங்களில், குறைவான சந்தைப்படுத்துதல், தரமான பொருளைத் தருவது என்ற முன்னெடுப்பு முயற்சிகள், வாடிக்கையாளர் சேவை ஆகியவை காரணமாக 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை விற்பனை அதிகரித்தது.”
பட் அப்போது ரிஸ்க் எடுத்ததன் விளைவாக பிராண்ட் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இப்போது எச்.ஏ.எஸ் -க்கு மும்பை முழுவதும் மட்டுமின்றி புனே மற்றும் இதர நகரங்களிலும் லாபத்துடன் கூடிய 15 கிளைகள் இருக்கின்றன.
“ஜூஸ் சந்தை என்பது சிறியது என்றாலும் முக்கியமானது. தொழிலை லாபகரமாக மாற்ற, ஜூஸ் ப்ளேவர்களில் பல பரிசோதனைகளை நாங்கள் மேற்கொண்டோம். ஜூஸ் தயாரிக்க அதிக தரம் வாய்ந்த பழங்களை உபயோகித்தோம். 2010-ம் ஆண்டு முதல் ஒரு புதிய முறையில் செய்யப்பட்ட செக்கில் பிழியப்பட்ட ஜூஸ்களை விற்பனை செய்தோம். இது எங்களுடைய பிராண்டின் தனித்துவமான விற்பனை கருத்தாக்கமாகும்,” என்கிறார் அவர்.
சவுத் பாம்பே என்று அழைக்கப்படும் சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்களையும் அவர் தொடங்கினார். அதில் 6 கிளைகளில் மும்பையின் பராம்பரியத்தோடுகூடிய தென்னிந்திய உணவு வகைகளையும் வழங்குகிறார். “எங்களுக்கு மும்பை, புனேவில் ரெஸ்டாரெண்ட்கள் உள்ளன. அதனை விரிவுபடுத்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ஒரு புகழ்பெற்ற ரெஸ்டாரெண்ட் பிராண்ட் ஆக உருவாக்க வேண்டும்,” என்கிறார் பட்.
|
பட், தன் ஊழியர்களுடன் சவுத் பாம்பே ரெஸ்டாரெண்ட் முன்பு நிற்கிறார்.
|
இங்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான உணவு வகைகளை தயாரிக்கப்படுவதைப் பார்க்கும் வகையிலான லைவ் கிச்சன் இருக்கிறது. “இது ஒரு உணவு சேவை வழங்கும் இடம்மட்டுமல்ல. இங்கு வருபவர்கள் தங்கள் நேரத்தை செலவழிக்கவும், நல்ல உணவு உண்ண வேண்டும் என்று விரும்பினோம்,” என்று முடிக்கிறார்.
பட் உணவு தொழிலில் முதலீடு செய்வதற்கு, மும்பையில் நூற்றாண்டு கண்ட பி பகத் தார்சந்த் பிராண்ட் தான் உந்துதலாக இருந்தது. எனவே, அதன் உரிமையாளர் பிரகாஷ் சாவ்லாவைச் சந்தித்து, நவீன உணவகமுறை குறித்தும், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்களை மால்களில் திறப்பது பற்றியும், தெருக்களில் உணவுக் கடைகள் திறப்பது பற்றியும் பேசினார்.
“அப்போதில் இருந்து அவர் எனது கவுரவ ஆலோசகர் ஆகிவிட்டார். பல ஆண்டுகளாக இந்த தொழிலை அவர்கள் குடும்பம் எப்படி நடத்தியது என்பதைக் கற்றுக் கொண்டேன். தொழிலை நடத்துவதற்கான நேர்மை, மதிப்பீடுகள், கொள்கைகளை அவர்களிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் உணவுத் தொழிலில் தரத்தையும் சுவையையும் கடைபிடித்தனர்.”
“இருவரும் இணைந்து, நகரில் உள்ள மால்களில் ரெஸ்டாரெண்ட்கள் தொடங்கினோம். எங்களுக்குச் சொந்தமாக 7 உணவகங்கள் உள்ளன. மூன்று தனிநபர் நடத்தும் கடைகளாகவும், நான்கு கடைகள் பங்குதாரர் அடிப்படையில் பி பகத் தாராசந்த் உடன் இணைந்து நடத்தும் கடைகளாகவும் உள்ளன,” என்கிறார் பட். உணவுத்தொழிலின் முக்கியத்துவம் குறித்து பகத் தாராசந்திடம் இருந்து, பட் பாடங்கள் கற்றுக் கொண்டார். பல்வேறு வகையான வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்தும் கற்றுக் கொண்டார்.
|
பட்டின் தொழில் முனைவுப் பயணம் பலரை கவர்ந்துள்ளது
|
அவரது மனைவி ஏக்தா பட், அவரது முயற்சிகளுக்கு நல்ல முறையில் ஆதரவு தெரிவிக்கிறார். அவர்தான் எச்.ஏ.எஸ் மற்றும் சவுத் பாம்பே-யின் கணக்குவழக்குகள், நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். அவரது மகன் ஹாவிஸ்(7), மகள் கேஷவி (6) இருவரும் உணவுப்பிரியர்கள்.
பல்வேறு நகரங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ரெஸ்டாரண்ட்டாவது தொடங்க வேண்டும் என்று பட் திட்டமிட்டிருக்கிறார். பிட்சா ஹட் அல்லது டொமினாஸ் போல இந்தியன் உணவு பிராண்ட்கள் கொண்ட பல கிளைகள் உருவாக வேண்டும் என்று பட் விரும்புகிறார். கடந்து வந்த அவரது பாதையைப் பார்த்தால் அவரது கனவு நிறைவேறக் கூடும் என்றே தோன்றுகிறது.
அதிகம் படித்தவை
-
குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்
பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
சேலைகள் தந்த கோடிகள்
கொல்கத்தாவின் வீதிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று சேலை வியாபாரம் செய்தவர் பைரேன். இன்றைக்கு அவர் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் சேலை மொத்த வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
பணம் காய்க்கும் மரங்கள்
மரத்தில் பணம் காய்க்குமா? ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் சிங் என்கிற தொழிலதிபரின் பண்ணையில் உள்ள நெல்லி மரங்கள் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் வருவாய் தருகின்றன. நெல்லியைப் பதப்படுத்தி பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் தயாரிக்கிறார். பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
வெற்றிப் படிக்கட்டுகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை
-
வளர்ச்சியின் சக்கரங்கள்!
ஒரே ஒரு அம்பாசடர் டாக்ஸியோடு தொடங்கப்பட்டதுதான் பர்வீன் ட்ராவல்ஸ். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உழைத்தார் அதன் உரிமையாளர் அப்சல். இன்று 400 கோடிக்கும் மேல் மதிப்புள்ளதாக வளர்ந்திருக்கும் அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்
-
மெத்தென்று ஒரு வெற்றி
மாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை