Milky Mist

Thursday, 21 November 2024

கோடிகளை நோக்கிப் பயணிக்கும் கோவை தம்பதியின் புதிய தொழில் முயற்சி!

21-Nov-2024 By உஷா பிரசாத்
கோவை

Posted 14 Feb 2021

கோயம்புத்தூரிலும் அதனை சுற்றி உள்ள விவசாயிகளுடனும் இணைந்து சொந்த வணிகத்தைத் தொடங்குவது என தீர்மானித்தபோது, செல்வகுமார் வரதராஜன் தம்முடைய வேர்களுக்குத் திரும்பினார் என்றுதான் சொல்லவேண்டும்.  கோவையில் வாழும் மக்களுக்கு புத்தம் புதிய பண்ணைப் பொருட்கள் மற்றும் தரமான பால் விற்பனை செய்வது என்பது அவரது திட்டம்.

சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே தம்மம்பட்டி கிராமத்தில்  விவசாயி ஒருவரின் மகனாக பிறந்து வளர்ந்தவரான செல்வகுமார், லேமென் அக்ரோ வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை கடந்த 2016ஆம் ஆண்டு, தமது சொந்த சேமிப்பு மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கடன்வாங்கி ரூ.30 லட்சம் முதலீட்டில் தொடங்கினார்.

செல்வகுமார் வரதராஜன், நிறுவனர், வில்ஃபிரஷ்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

முதல் ஆண்டில் ரூ.8 லட்சம் என சிறிய அளவில் வணிகம் தொடங்கியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 45-50 சதவிகித வளர்ச்சி கண்டது. 2020-21ஆம் நிதி ஆண்டில் ரூ.4.1 முதல் ரூ. 4.3 கோடி ஆண்டு வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“லேமேன் அக்ரோ என்ற நிறுவனத்தைத்தொடங்கும் எண்ணம் என் மனைவியால் பிறந்தது.  நான் அந்த எண்ணத்தை வளர்த்தேன்,” என்றார் செல்வகுமார்(38). இரண்டே வயதான தமது ஷ்ரிங்கா என்ற மகளுக்கு பெங்களூரில் தரமான பால் அதாவது கலப்படம் இல்லாத பால் கிடைக்கவே இல்லை. அப்போதுதான் அதில் ஒரு வாய்ப்பு இருப்பதை அவரது மனைவி ஷர்மிளா கண்டுபிடித்தார். இவர்கள், கோவையில் தங்களது நிறுவனத்தைத் தொடங்குவது என்று திட்டமிட்டனர். கோவையை சுற்றி கிராமங்கள் நிறைய இருப்பதால் பால் மற்றும் பண்ணை பொருட்களைப் பெற்று விநியோகிக்க முடியும் என்று கருதினர்.

உற்பத்தி செய்பவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, பொருட்களை கொள்முதல் செய்து தம்முடைய பிராண்டின் கீழ் விற்பனை செய்யும் ஒரு மாதிரியில் நகர்ப்புற மக்களுக்கு கிராமங்களில் இருந்து பசுமையான, தூய்மையான விவசாயப் பொருட்களை இன்றைக்கு லேமேன் அக்ரோ விற்பனை செய்கிறது.

100 விவசாயிகளிடம் இருந்து தினமும் 1800 லிட்டர் பாலை கொள்முதல் செய்து தமது பிராண்ட் பெயரான வில்ஃபிரஷ்(வில்லேஜ் ஃபிரஷ்) என்ற பெயரில்  கோயம்புத்தூர் நகரில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது.   இடைத்தரகர்கள் இன்றி கண்ணியமான வருவாயை விவசாயிகள் அடைய செல்வகுமார் நிறுவனம் உதவுகிறது. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கின்றனர். அவர்கள் மாதம் தோறும் ரூ.37,000 சம்பாதிக்கின்றனர்.   வில்ஃபிரஷ் நிறுவனத்துக்கு 2000-க்கும் அதிகமான சந்தா பயனாளர்கள் உள்ளனர். இந்நிறுவன பொருட்கள் கோவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட அபார்ட்மெண்ட்களில் சென்று சேர்கின்றன. மேரியட் மற்றும் ஐடிசி வெல்கம் போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கும் அவர்கள் விநியோகிக்கின்றனர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த செல்வகுமார், தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோவையில் கார்ப்பரேட் செகரட்டரிஷிப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் கட்டுப்பாடு படிப்பில் முதுநிலைப்பட்டமும் பெற்றார். பெரியார் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் எம்ஃபில் பட்டம் பெற்றார்.
விநியோக பணியில் ஈடுபடும் தமது ஊழியர் குழுவுடன் செல்வகுமார்


முதுநிலைப் பட்டம் முடித்த உடன் வேலை தேடுவதற்காக 2013ஆம் ஆண்டு செல்வகுமார் பெங்களூரு சென்றார். அசென்ஜர் பிபீஓ நிறுவனத்தில் தரவு மதிப்பீடு அசோசியேட் ஆக பணியில் சேர்ந்தார். அந்தப் பணியில் அ வர் வசதியாக உணர வில்லை என்பதால் நான்கு மாதங்களுக்குள் பணியில் இருந்து விலகினார். அதன்பின்னர் அவர், வீடுகளுக்குச் சென்று டியூஷன் எடுத்தார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பயிற்சியாளராக  ஓராண்டுவரை வேலைபார்த்தார். பின்னர், தேசிய கல்லூரி, ஐசிஎஃப்ஏஐ(ICFAI)-யில்  பணி நியமன ஒருங்கிணைப்பாளர், நிதித்துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.

இதற்கிடையே 2009ஆம் ஆண்டு பிஎஸ்பிஎஸ் வணிக அகாதமி என்ற கல்லூரியை துணை நிறுவனர்களில் ஒருவராக உருவாக்கினார். 2013ஆம் ஆண்டு டிசம்பரில் பெங்களூரை விட்டு கிளம்புவது என்று முடிவு செய்தபோது  தமது பங்குதாரர்களுக்கு அதனை விற்றுவிட்டார்.

செல்வகுமார் அந்த தருணத்தில் ஷர்மிளா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் எம்பிஏ பட்டதாரி. ஜென்பேக்ட், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களில் வணிக ஆய்வாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  2012ஆம் ஆண்டு ஷ்ரிங்கா பிறந்தபோது டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஷர்மிளா விலகினார்.

  “பெங்களூரில் நாங்கள் வாங்கிய பால் பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்கள் தரமாக இல்லை என்ற அதிருப்தியில் என் மனைவி இருந்தார்,” என்றார் செல்வகுமார். “என்னுடைய பெற்றோர் பெங்களூரு வரும்போது, நாங்கள் உண்ணும் பொருட்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். விவசாயப்பின்னணியில் இருந்து வந்த நாங்கள், அங்கு நாங்கள் பெற்ற பொருட்களுக்கும், நகரில் நாங்கள் பெற்ற பொருட்களின் தரத்துக்கும் இடையே நிறைய வித்தியாசத்தைப் பார்த்தோம்.”

செல்வகுமாருக்கு இளம் வயதிலேயே தொழில்முனைவோர்ஆக வேண்டும் என்ற பொறி தெளிவாக தோன்றியிருந்தது. தம்மம்பட்டியில் அரசு பள்ளியில் படிக்கும்போது, செல்வகுமார், பெரும்பாலான நேரங்களை தமது தாத்தாவுடன் செலவிட்டார். தாத்தாவுக்கு  சொந்தமாக நிலம் இருந்தது. அவருடன் வேளாண்பொருட்களை விற்பதற்கு செல்வகுமார் சந்தைக்குச் செல்வது வழக்கம்.

“ஒரு கூடை நிறைய எடுத்துச் செல்லும்15 கிலோ தக்காளிக்கு என்னுடைய தாத்தா ரூ.60 மட்டுமே பெற்றார். அருகில் உள்ள நகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை ஆனது. சில்லறை விற்பனையாளருக்கு நுகர்வோர் தரும் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே விவசாயம் செய்பவர் பெறுகிறார் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார்.

செல்வகுமார் அப்போது ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். விவசாயிக்குக் குறைவாக கொடுக்கிறீர்களே என்று அப்போதே சந்தையில் வாக்குவாதம் செய்துள்ளார்.
பால் பண்ணையில் இருந்து கோவையில் உள்ள வில்ஃபிரஷ் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் அங்கிருந்து வீடுகளுக்கு பால் விநியோகிக்கப்படுகிறது


பின்னர் அவரே தாத்தாவிடம் பேசி தக்காளிகளை சைக்கிளில் எடுத்துச் சென்று பள்ளிக்குப் போகும் வழிய விற்பனை செய்தார். காலை ஏழுமணிக்கு தக்காளிகளை எடுத்துக் கொண்டு கிளம்பி, 8.30 மணிக்குள் 30 முதல் 40 கிலோ தக்காளிகளை விற்று முடித்தார்.

“நான் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்தேன். நாளொன்றுக்கு ரூ.400 கிடைத்தது. இதே அளவு தக்காளிகளுக்கு மண்டி உரிமையாளரிடம் இருந்து ரூ.150-க்கு மேல் என் தாத்தா வாங்கியதில்லை,” என்றார் அவர். பேரனின் விற்பனையில் மகிழ்ந்த அவரது தாத்தா ரூ.30 முதல் ரூ.40 வரை செல்வகுமாருக்கு லாபத்தில் பங்காக கொடுத்தார். “அந்த மாதத்தின் முடிவில் ரூ.1000-த்துக்கும் அதிகமாக நான் பணம் சேர்த்து விட்டேன்,” என்றார் செல்வகுமார் பெருமையுடன்.

செல்வகுமார் தொழில் தொடங்கியபோது, விவசாயிகளிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். “விவசாயிகள் எப்போதுமே தங்களுக்கான இடு பொருட்களை சில்லறை விலையில் பெறுகின்றனர். அவர்கள் விளைவிக்கும் பொருட்களை மொத்த விலையில் விற்கின்றனர். இது நியாயமில்லாத சூழலாக இருந்தது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் அதனை அப்படியே திருப்பி செயல்படுத்த நினைத்தோம். இப்போது, தேவைப்படும் விவசாயிகளுக்கு இடுபொருட்களை மொத்த விலையில் கொடுக்கின்றோம். அவர்களுடைய வேளாண் விளைபொருட்களை சந்தை விலையை விட 40 சதவிகிதம் அதிகம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றோம்.” “திறன்மிக்க வேளாண் இடுபொருட்கள் விநியோக சங்கிலியின் வாயிலாக விவசாயச் செலவை நாங்கள் குறைத்தோம். மாறுபட்ட விநியோக பாதை வாயிலாக அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு மதிப்பை அதிகரித்தோம்”.  

கோயம்புத்தூரை சுற்றி 15 கி.மீ சுற்றளவில் உள்ள கோவில்பாளையம், குரும்பாபாளையம், தேவம்பாளையம் மற்றும் பொன்னியகவுண்டன்புதூர் போன்ற கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகளுடன் அவர் ஒப்பந்தம் செய்திருக்கிறார். 

செல்வகுமார் கிராமத்தில் வளர்ந்தவர். அதனால் அவர் விவசாயிகளின் கடின உழைப்பை அறிந்திருக்கிறார்

வில்ஃபிரஷ் பால், லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. “தரத்தின் காரணமாக இதர விநியோகஸ்தர்களை விடவும் எங்களுடைய பால் 10 சதவிகிதம் அதிக மதிப்பில் வந்திருக்கிறது,” என்றார்.

பால் அதிகாலை நான்கு மணிக்கு சேகரிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு காலை 7 மணிக்கு முன்பு கொண்டு செல்லப்படுகிறது. லேமேன் அக்ரோ, ஏ1, ஏ2 இரண்டு வகை பாலும் கொள்முதல் செய்கிறது.

“பண்ணைகளில் இருந்து பால் 2000 ச. அடியில் கோவையில் வாடகைக்கு உள்ள எங்களது மையத்துக்கு வரும் அங்கே நாங்கள் பாலின் தரம் பரிசோதனை செய்கின்றோம். பிராண்ட்டிங் செய்கின்றோம். பேக்கிங் செய்கின்றோம். பின்னர் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்கின்றோம்,” என்று தங்களது வணிக நடைமுறைகளை செல்வகுமார் விவரிக்கிறார். 

கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றி  உள்ள பகுதிகளில் உள்ள நுண் தொழில்முனைவோர் மற்றும் வீடுகளில் பகுதி நேர தொழில்களில் ஈடுபட்டுள்ள 10 தொழில் முனைவோரிடம் (அனைவரும் பெண்கள்) இருந்து  கொள்முதல் செய்யப்பட்ட இட்லி/தோசை மாவு வகைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா தூள் ஆகியவற்றையும் விற்பனை செய்கின்றனர்.

“இட்லி/தோசை மாவு வகைகள் முதல் நாள் இரவு தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் பேக்கிங் நேரம் அச்சிடப்பட்டு மறுநாள் காலை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முதன்முறையாக இதனை செய்கின்றோம் என பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றோம்,” என்றார் செல்வகுமார்.


ஊறுகாய் தயாரிப்பாளர்கள், மசாலா தூள், சாக்லேட்கள் , நொறுக்குத் தீனிகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பெண்களையும் லேமேன் அக்ரோ நிறுவனம் தங்களுடன் இணைத்துள்ளது.

பால், பழங்கள், கீரைகள், பச்சைக்காய்கறிகள், தேன் மற்றும் முட்டைகள், எண்ணெய், இட்லி/தோசை, பிரட், பன்னீர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களை பண்ணையில் இருந்து வீடுகளுக்குக் கொண்டு செல்கின்றனர். வில்ஃபிரஷ் வாடிக்கையாளர்கள் விநியோகஸ்தர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளனர்.

  லேமேன் அக்ரோ, வில்ஃபிரஷ் என்ற மொபைல் செயலியைத் தொடங்கி இருக்கிறது. கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள இதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனம் நான்கு மஹேந்திரா ஜீட்டோ வாகங்களை(ஒப்பந்த அடிப்படையில்) பொருட்களை கொண்டு வருவதற்கு  உபயோகிக்கின்றது. வில்ஃபிரஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான 14 வாகனங்கள் தவிர இதர 26 இருசக்கர வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன. ஐந்து இ-பைக்குகள் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

ஜீட்டோ வாகனங்களின் ஓட்டுநர்கள் ரூ.37 ஆயிரம் சம்பாதிக்கின்றனர். வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாதம் ரூ.4000 முதல் ரூ.7000 வரை பெறுகின்றனர். செல்வகுமார், வில்ஃபிரஷ் வேலைவாய்ப்பு அமைப்பையும் உருவாக்கி உள்ளார். கல்லூரி மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்த உடன் வேலை கிடைப்பதற்கு இந்த அமைப்பு உதவுகிறது.

2019ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் நிதியாக ரூ.1.5 கோடியைப் பெற்றது. நாட்டின் முதலாவது ஹைபர் உள்ளூர் ஆன் லைன் மாதிரி என கோரும் இந்த நிறுவனம், தொற்று நோய் பரவிய காலகட்டத்திலும் கூட  வருமான சொத்தின் நிதி செயல்திறனை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  அடைந்தது.
செல்வகுமார் தமது மனைவி ஷர்மிளா மற்றும் மகள் ஷ்ரிங்கா ஆகியோருடன்

செல்வகுமார், ஷர்மிளா ஆகியோர் முக்கியமான நிறுவனர்களாக இருப்பதால் நிறுவனத்தில் 60% பங்குகளை வைத்திருக்கின்றனர். குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட இதர துணை நிறுவனர்கள் 25% பங்குகளையும், 15 % பங்குகளை முதலீட்டாளர்களும் வைத்திருக்கின்றனர்.

செல்வகுமார் இப்போது கோவையில் இருந்து செயல்படுகிறார். இதே போன்ற மாதிரியில் திருப்பூர், திருச்சி, மதுரையில் அடுத்த ஆண்டு செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றார். போட்டி என்று இருக்கும்போது, சந்தையில் இதர செயல்பாட்டாளர்களும் இயங்குவதற்கான இடம் இருக்கிறது என்று செல்வகுமார் சொல்கிறார்.

“கோவையில் 5 லட்சம் வீடுகள் இருக்கின்றன. 10  நிறுவனங்கள் களத்துக்கு வந்தாலும் கூட ஒவ்வொரு நிறுவனமும் 5000 வீடுகளை வாடிக்கையாகப் பெற முடியும். சந்தையில் இன்னும் கூட ஊடுருவ முடியும். பால் என்று வரும்போது, இந்தியர்கள் தங்களின் பிராண்ட்களுக்கு நம்பிக்கையானவர்களாக இருக்கின்றனர்,” என்கிறார்.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • pioneer in courier industry

    தன்னம்பிக்கையின் தூதுவர்

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • success story of son of  a farmer

    ஒரு கனவின் வெற்றி!

    வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.

  • Tailoring the Primeminister

    தையல் கலைஞர்களின் உச்சம்

    குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • The first woman entrepreneur from Nalli family builds family business

    பட்டு சாம்ராஜ்ய இளவரசி!

    நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்

  • The success story of sailor who became an entrepreneur

    வெற்றிமேல் மிதப்பவர்

    உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

  • Cleaning the City

    அசத்தும் ஐஏஎஸ்!

    மருத்துவரான அல்பி ஜான்,  குடிமைப்பணித் தேர்வு எழுதி முதன்முயற்சியிலேயே ஐ ஏ எஸ் ஆனவர்.  துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கிய‍ அவர், திடக்கழிவு மேலாண்மை நிர்வகிப்பில் சிறந்து விளங்குகிறார். சென்னை மாநகரை மேம்படுத்தும் மியாவாகி காடுகளை உருவாக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.