22 கோடி வருவாய் ஈட்டும் ரேமண்ட் முகமை! பிரமாதமான சக்ஸஸ் ஸ்டோரி!
08-Oct-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
பெங்களூரு கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான ஜெயாநகர் காம்ப்ளக்சில், 700 ச.அடியில் நேத்ரா எனும் பல்வேறு பிராண்ட்களைக் கொண்ட டெக்ஸ்டைல் உள்ளது. இந்தக் கடையை பி.டி.சைலேந்த்ரா 1976-ம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்தொடங்கினார்.
“அந்த காலகட்டத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய வீடுகளைக் கொண்ட பெங்களூரு ஜெயாநகரில் ஒரு ஷோரூம் திறக்க வேண்டும் என்று நான் கனவு கண்டேன். அதைப்போல நான் எனது ஷோரூமை திறந்தேன்,” என்று நினைவு கூர்கிறார் 22 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் கஜனானா ஆண்கள் ஆடையகம் பிரைவேட் லிமிடெட் (Gajanana Men’s Wear Private Limited) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பி.டி.சைலேந்த்ரா(67).
|
1996-ல் ரேமண்ட் ஸ்டோரை பி.டி.சைலேந்த்ரா தொடங்கினார் (புகைப்படங்கள்; ஹெச்.கே.ராஜசேகர்)
|
20 ஆண்டுகள் கழித்து, ஒரு ரேமண்ட் முகவராக ஆனார். ஜெயாநகரின் இன்னொரு பகுதியில் ரேமண்ட் பிராண்டின் தனிச்சிறப்பு வாய்ந்த அவுட்லெட்டை திறந்தார்.
இன்றைக்கு, ஜெயாநகரில் 11,000 ச.அடியில் 11-வது மெயின்ரோடு, 4-வது பிளாக்கில் ரேமண்ட் இருக்கிறது. இது பெங்களூரின் அடையாளமாகவும், இந்தியாவில் முதல் மூன்று ரேமண்ட் முகமைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
சைலேந்த்ராவின் தொழில் முனைவுப் பயணம் என்பது அவர், பட்டப்படிப்பை முடித்த பின்னர் தொடங்கியது. பெங்களூருவில் அந்த காலகட்டத்தில் முன்னணி கிரிமினல் வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.தேவதாஸ் மகனான சைலேந்த்ரா பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். சைலேந்த்ராவுக்கு 9 முதல் 5 மணி வரையிலான அலுவலகப் பணியில் ஒரு போதும் ஆர்வம் இருந்ததில்லை.
பட்டப்படிப்பை முடித்ததும், அவர், ஸ்குரூ தயாரிக்கும் ஒரு சிறுதொழில் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்தார். பின்னர், அந்த நிறுவனத்தில் இருந்து விலகி, மோடி, டிக்ஜாம் மற்றும் மோடெல்லா போன்ற டெக்ஸ்டைல் பிராண்ட்களுக்கான விநியோகஸ்தராக இருந்தார். அடுத்ததாக, நேத்ராவைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிராண்ட்களின் ஆயத்த ஆடைகள் மற்றும் சட்டைகள், பேண்ட்களை விற்பனை செய்தார்.
|
11,500 ச.அடியில் பரந்து விரிந்திருக்கும் ரேமண்ட் ஸ்டோர், பெங்களூரு நகரின் அடையாளமாக இருக்கிறது.
|
1990-களின் மத்தியில், ரேமண்ட் ஷோரும் முகவர் ஆவது என்ற முக்கியமான முடிவை சைலேந்த்ரா எடுத்தார். ஒரு ரேமண்ட் ஷோரூமுக்கு 4000 ச. அடி இடம் தேவை. எனவே, 1995-ல் சைலேந்த்ரா, ஜெயாநகரில் 2,400 ச.அடி மனையை வாங்கி, அங்கு, அடித்தளம், தரைத்தளம், மூன்று தளங்களைக் கொண்ட ஒரு வணிக கட்டடத்தை 60லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார்.
“அடித்தளம், தரைத்தளம் ஆகியவற்றை மட்டும் என்னுடைய ஷோரூமுக்காக வைத்துக் கொண்டு, மீதம் இருந்த மூன்று தளங்களையும்,என்னுடையமுதலீட்டு தொகையை திரும்பப் பெறும் வகையில் விற்பனை செய்தேன். முதல் ரேமண்ட், ஆயத்த ஆடை தயாரிப்பு ஷோரூம் நல்ல முறையில் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளில், இதனை 11,500 ச. அடி ஷோரூம் ஆக விரிவாக்கம் செய்தேன்,”என்கிறார் சைலேந்த்ரா.
80 லட்சம் ரூபாய் முதலீட்டு இருப்புடன் தொடங்கப்பட்ட இந்த ஷோரும், இரண்டாம் ஆண்டில் 1.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்டியது. அது இப்போது 22 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
150 பணியாளருடன் இன்றைக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் நிறுவனம் இது. சைலேந்த்ரா, தமது தொழில் முனைவுப் பயணத்தை முழு திருப்தியுடன் திரும்பிப் பார்ப்பதற்கு உரிய காரணங்கள் இருக்கின்றன.
“இது வரையிலும், எனக்கு இது நம்ப முடியாத அனுபவமாகவே இருக்கிறது. 1980-ம் ஆண்டு ரேமண்ட் உடன் தொடர்பு உண்டானதில் இருந்து டீலர் ஆகவும் அதேபோல முகவராகவும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறேன்.” என்கிறார் சைலேந்த்ரா. அந்த சமயத்தில், தம்முடைய முயற்சிகளுக்கு எதிரான பாதகமான கருத்துகளை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு, முன்னோக்கி நடைபோட்டார்.
|
கஜனானா ஆண்கள் ஆடையகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நரேந்தர் வார்னே உடன் சைலேந்த்ரா
|
ரேமண்ட் முகமையை சைலேந்த்ரா தொடங்கியபோது, அந்தத் தொழிலில் இருந்த அனுபவசாலிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ‘ஷோரூம் அமைய உள்ள இடம், முக்கியமான குடியிருப்புகளைக் கொண்ட பகுதி. இந்த இடத்தில் தொடங்குவது நல்ல யோசனை அல்ல. தோல்வியடையும்’, என்று சொன்னார்கள்.
ஜெயாநகர் 11-வது மெயின்ரோட்டில் முதன் முதலில் தொடங்கப்பட்ட வணிக நிறுவனமாகஇப்போது ரேமண்ட் இருக்கிறது. “என்னுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன். என்னால் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்பினேன். ஆண்டுகள் கடந்தபோது, என்னுடைய நம்பிக்கை சரி என்று நிரூபணம் ஆனது. கிளையும், மொட்டுகளையும் விட்டபடி என்னுடைய தொழில் தினந்தோறும் வளர்ச்சி அடைந்து வந்தது,” என்கிறார்.
பக்கத்தில் இருந்த கட்டடங்களையும் சைலேந்த்ரா வாங்கினார். கடையின் தளத்தை விரிவு படுத்தினார். உயர்துணி வகைகளைக் கொண்ட ரேமண்ட் சேர்மன்’ஸ் லெக்ஷன் எனும் உயர் ரக ஆடைகளின் புதிய பிரிவை 4000 ச.அடி-யில் தொடங்கினார்.
இந்த மாற்றத்துடன், பெங்களூரு ஜெயாநகர் ரேமண்ட் , தென் இந்தியாவில் இம்மாதிரியான முதல் ஷோரும் என்ற புகழைப் பெற்றது.
|
ஷோரூமில் ஒரு வாடிக்கையாளரின் தேவையைக் கவனிக்கிறார் சைலேந்த்ரா
|
“உள்கட்டமைப்புகள் முதல் பர்னிச்சர்கள் வரைபுதிய வசதிகளுடன் கூடிய ஷோரூம் ரேமண்ட் உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. எங்களுடைய வாடிக்கையாளர்களின் வகைகளுக்கு ஏற்ப அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஷோரூம் மாற்றப்பட்டிருக்கிறது,” என்று நம்மிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சைலேந்த்ரா.
வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப தைத்தல் மற்றும் ஆயத்த ஆடையகம் ஆகியவற்றுக்கு இடையே உரிய அளவுடன் ஆடைகள் உருவாக்கப்பட வேண்டும். ரேமண்ட் கருத்தாக்கத்தின் படி சேவை தொடர்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கு ஆடைவகைகள் சரி செய்து தரப்படுகின்றன.
அமைச்சர்கள் முதல் பிரபலங்கள் வரை சைலேந்தாரவின் ஷோரூமில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆரம்ப காலகட்டத்தில் சிதார் மாஸ்ட்ரோ ரவிசங்கரும் ஷோரூமுக்குத் தொடர்ந்து வருகைதரும் வாடிக்கைக்கையாளர்களில் ஒருவர்.
ஒரு நிறுவனத்தின் முகமை என்ற வகையில், சைலேந்த்ராவின் இந்தப் பெரிய வெற்றிக்கு பின்புலமாக இருப்பது எது? “நான் எப்போதுமே ஷோரூம் தளத்தில் வாடிக்கையாளர்களுடனும், விற்பனைப் பிரதிநிதிகளுடனும்தான் இருப்பேன். என்னுடைய வர்த்தகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக நான், பணம் வாங்கும் கல்லாப்பெட்டி அருகில் நான் ஒருபோதும் அமர்ந்ததில்லை,” என்று விவரிக்கிறார்.
தம்முடைய உண்மையான வெற்றிக்குக் காரணமான பண்புகளை விவரிக்கும்போது, சொந்தக் கட்டடத்தில் ஷோரூம் வைத்ததால், வாடகை என்று ஒன்று கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்கிறார்.
ஒரு தொழில் முனைவோராக மற்றும் ஒரு நிறுவனத்தின் முகவராக ஆவதற்கு சைலேந்த்ரா வழங்கும் அறிவுரை; “உங்கள் லாபம் என்று நீங்கள் கருதுவதை நூறு சதவிகிதமும் எடுத்துச் சென்று விடாதீர்கள்.”
“அதில் 50 சதவிகிதத்தை உபயோகியுங்கள். மீதி 50 சதவிகிதத்தை அப்படியே வைத்திருங்கள். எந்தவித இழப்பும் இன்றி, தொழில் வளர்ச்சி அடைந்து விட்டது என்பது உறுதியாகத் தெரிந்த உடன் மீதி 50 சதவிகிதத்தை முதலீடு செய்யுங்கள்.”
|
கஜனானா ஆண்கள் ஆடையகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சைலேந்த்ரா மனைவி நேத்ராவும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
|
சைலேந்த்ரா மனைவி நேத்ராவும், நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். தொழிலின் செயலாக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறார். அவரது மனைவி உட்பட கஜனானா ஆண்கள் ஆடையகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மேலும் 6 பேர் இயக்குனர்களாக உள்ளனர்.
சைலேந்த்ராவுக்கு மகன் பிரித்வி, மகள் பிரியங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். எட்டுக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவர் சைலேந்த்ரா. அவரது குடும்பத்தில் அவர் மட்டும்தான் தொழில் முனைவோராக இருக்கிறார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கான கற்பித்தலுக்கான பரிகர்மா மையம் எனும் பள்ளியில் சைலேந்த்ரா தனது ஓய்வு நேரத்தை செலவிடுகிறார்.
பெங்களூருவில் உள்ள தன்னார்வ நிறுவனமான பரிகர்மா மனிதநேய பவுண்டேஷனுடன் இணைந்து சைலேந்த்ராவின் தாயின் நினைவாக உருவாக்கப்பட்ட சரஸ்வதி மெமோரியல் டிரஸ்ட் சார்பில் இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது.
அதிகம் படித்தவை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
உயரப் பறத்தல்
விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை
-
கண்ணாடியால் ஜொலிப்பவர்!
ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம். அவர் 12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
தையல் கலைஞர்களின் உச்சம்
குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!
தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்
புலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...