தாயிடம் 8,000 ரூபாய் கடன் பெற்று தொழிலைத் தொடங்கினார், இன்று ஆண்டு வருவாய் 6.5 கோடி!
06-Dec-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
நல்ல சம்பளம் தரும் பெருநிறுவனத்தின் வேலையை விட்டு விலகி, ஒரு தொழில்முனைவோராக மாறுவது என்பது பலருக்கு கடினமான செயல். ஆனால், பெங்களூரைச் சேர்ந்த சவுரவ் மோடி எனும் 23 வயது இளைஞர், 1.6 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் வாங்கிய எர்னஸ்ட்&யங்க் நிறுவன பணியை விட்டு விலக முடிவுசெய்தார்.
இப்போது 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஜஸ்ட் ஜுட் (Just Jute) எனும் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சி.இ.ஓ-வாக இருக்கும் அவர், தன் நிறுவனத்துக்கு 2015-16 ஆம் ஆண்டில் 6.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறார். வேலையை விட்டதை நினைத்து அவர் பெருமையே கொள்கிறார்.
|
சவுரவ் மோடி 2005-ம் ஆண்டு தமது தாயிடம் 8000 ரூபாய் கடன் பெற்று தம்முடைய தொழிலைத் தொடங்கினார் (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)
|
அவரது நிறுவனம் சணலால் (Jute) ஆன பைகள், ஃபோல்டர்கள், பெல்ட்கள், பர்ஸ்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கிறது. அவர்களின் பொருட்கள் இந்தியாவின் முன்னணி சங்கிலித் தொடர் கடைகளில் கிடைக்கின்றன. தவிர, சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தத்தொழிலில் ஒரு சதவிகிதம் கூட அனுபவம் இல்லாதவர் அவர். புதுமையான இழையைக் கொண்டு பொருட்கள் தயாரிக்கும் சுயமான தொழில் முனைவோராக மாறி இருக்கிறார். சணல் இழை நீடித்திருக்கக் கூடியது. அதை அனைவரும் விரும்பும் விதத்தில் மாற்றி உள்ளார்.
நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த சவுரவ், தமது தாயிடம் 8000 ரூபாய் கடன் வாங்கி இந்தத் தொழிலைத் தொடங்கினார்.
பழைய தையல் மிஷின் ஒன்றை 1800 ரூபாய்க்கு வாங்கினார். தவிர, பகுதி நேரமாக டெய்லர் ஒருவரையும் பணி அமர்த்தினார். விஜயநகரில் உள்ள தமது வாடகை வீட்டின், கார் நிறுத்தும் 100 ச.அடி இடத்தில் தமது நிறுவனத்தைத் தொடங்கினார்.
“எங்கள் வீட்டின் உரிமையாளர், அந்த கார் நிறுத்தும் இடத்தை வீட்டின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. அதற்கும் மாதம் 300 ரூபாய் வாடகை வேண்டும் என்று கேட்டார்,” என்று நினைவு கூறுகிறார் சவுரவ்
நல்ல சம்பளத்துடன் கூடிய பெருநிறுவனத்தின் பணியை சந்தோஷமாக அனுபவித்து வந்த சமயத்தில், அவர் தொடங்கிய தொழில் ஆரம்ப காலகட்டங்களில் கடினமான அனுபவத்தைக் கொடுத்தது.
2007-ம் ஆண்டு மிகவும் மோசமான சூழலை அவர் சந்தித்தார். அவரது நிறுவனத்தில் பணியாற்றிய 30 பேரும் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னைக்கு உரிய காலகட்டத்தில் இருந்து, ஊக்கத்துடனும், தீர்க்கமான முடிவுடனும் மீண்டு வந்தார்.
இன்றைக்கு, அவரது நிறுவனத்தில் 100 பேர் பணியாற்றுகின்றனர். காமாட்சிபாளையத்தில் 10,000 ச.அடி-யில் இரண்டு பிரிவுகளை நடத்தி வருகிறார்.
கிறிஸ்ட் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்ற சவுரவ், எர்னஸ்ட்&யெங்க் நிறுவனத்தில் வரி ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார். அங்கு ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.
அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்க விரும்பினார். ஆனால், நிதி நிலைமை சரியில்லாதது மற்றும் குடும்ப பிரச்னைகளால், அந்த கனவை நனவாக்க முடியவில்லை.
|
மனைவி நிகிதா உடன் சவ்ரவ். அவரது மனைவியின் வடிவமைப்பு அனுபவம் நன்கு உதவுகிறது
|
“கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பதற்காக எனக்கு இடம் கிடைத்தது. ஆனால், அதன்பின்னர், சணல் இழையில் பொருட்கள் தயாரிப்பதுதான் என்னுடைய விதி என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் அவர்.
சவுரவ்வுக்கு பெருநிறுவனத்தின் வேலை போரடிப்பதாக இருந்தது. எனவே, தந்தையின் தொழிலில் சேர நினைத்தார். அங்கு அவர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
அசாம் தேயிலையின் பல்வேறு பிராண்ட்டுகளுக்கு அவர்கள் விநியோகஸ்தர்களாக இருந்தனர். அசாம் தேயிலையை பெங்களூரு மற்றும் அதன் சுற்றியுள்ள சிறுநகரங்களுக்கு விநியோகம் செய்தனர். இந்தத் தொழில், வசதியான வாழ்க்கை வாழ குடும்பத்துக்குப் போதுமானதாக இருந்தது.
சவுரவ்வின் பெற்றோர், அசாமில் இருந்து வந்தவர்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெங்களூருவில் செட்டில் ஆனவர்கள். அவரது மூத்த சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. சவுரவ் தமது பெற்றோருடன் தங்கி இருந்து, தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்தார்.
“என்னுடைய தந்தையிடம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். அது ஒரு எளிதான மார்க்கெட்டிங் வேலைதான். கிராமப் பகுதிகளுக்கான மார்க்கெட்டிங் வேலைகளைப் பார்த்துக்கொண்டேன்.”
“ஆனால், நான் ஒரு பெரியதொழிலில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவே திருப்தி தரும் என உணர்ந்தேன். ஒரு நாள், என் தந்தையின் தொழிலில் இருந்து நான் விலகினேன். என் தந்தையும் என் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்,” என்கிறார் சவுரவ்.
பெங்களூருவில் சணல் பைகளைத் தேடி அலைந்தபோது, நாமே சணல் பைகள் தயாரித்தால் என்ன என்ற ஐடியா அவருக்கு வந்தது.
பரிசாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சணல் பைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். பெங்களூருவில் எங்குமே சணலால் ஆன பைகள் கிடைக்கவில்லை. கொல்கத்தாவில் இருந்துதான் வாங்கவேண்டும் என்ற தகவல் கிடைத்தது.
|
காமாட்சிபாளையம் பிரிவில் பணியாளர்கள் பைகள் தயாரிக்கின்றனர்
|
“அப்போது பெங்களூருவில் யாரும் சணல் பைகள் விற்கவில்லை. ஒருவர் கூட அந்தப் பைகளை தயாரிக்கவும் இல்லை அப்போதுதான் ‘ஜஸ்ட் ஜுட்’ நிறுவனம் தொடங்குவதற்கான கருத்து எனக்குள் ஏற்பட்டது,” என்கிறார் அவர்.
பெங்களூருவில் உள்ள சில்லரை விற்பனைக் கடைகளுக்குச் சென்று சவுரவ், எந்தவிதமான பொருட்கள் பெங்களூருவில் விற்பனையாகும் என்று ஆய்வு செய்தார்.
நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தபோது, நல்ல டெய்லர் கிடைக்கவில்லை. பகுதி நேரமாக பணியாற்றுவதாக ஒருவர் சவுரவிடம் சொன்னார். ஆனால், 10 கி.மீ தள்ளி இருக்கும் அவரை தினமும் இரவு 8 மணிக்கு அழைத்து வந்து விட்டு, மீண்டும் அவரை நள்ளிரவு கொண்டு போய் விடவேண்டும்.
இந்த சவால்களுக்கு இடையே, சவுரவுக்கு ஒரே ஒரு ஆறுதலாக உதவி செய்பவராக இருந்தது அவரது உறவினர் சித்தார்த். பெங்களூருவில் அவர் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். “சித்தார்த், அந்த டெய்லரை கூட்டி வந்து, திரும்பவும் அழைத்துச் சென்று விடுவார்,” என்கிறார் சவுரவ்.
தொடக்கத்தில், உள்ளூரிலேயே சிறிய ஆர்டர்களைப் பெற்று பைகள், ஃபோல்டர்களைத் தயாரித்துக் கொடுத்தனர்.
“வாய் வழி விளம்பரத்தால் என் நிறுவனம் பரவலாக பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. என்னுடைய தந்தையின் வாடிக்கையாளர்களில் ஒருவர், தேயிலையை பேக் செய்வதற்காக சணல் பைகள் வேண்டும் என்று கேட்டார். அவர் 500 பைகள் தயாரித்துத் தரும்படி ஆர்டர் கொடுத்தார். என்னுடைய நிறுவனத்தைத் தொடங்கிய 4 முதல் 5 மாதத்தில் எனக்கு கிடைத்த முதல் ஆர்டர் இதுதான்,” என்கிறார் சவுரவ்.
அதன்பின்னர், பெங்களூருவின் பெரிய நகைக்கடை உரிமையாளர் ஒருவர், தமது வாடிக்கையாளர்களுக்கு கிஃப்ட் ஆக கொடுப்பதற்கு சணல் பைகள் தயாரித்துத் தரும்படி ஆர்டர் கொடுத்தார்.
“இந்த ஆர்டரில் இருந்து நான் பணம் சம்பாதிக்கத் தொடங்கினேன். மேலும் ஒரு தையல் மிஷின் வாங்கினேன். மேலும் இரண்டு பகுதி நேர டெய்லர்களைப் பணியமர்த்தினேன்,” எனும் சவுரவ், “பணிகள் முடிய இரவு நேரம் ஆகும் போது, அந்த டெய்லர்கள் என்னுடைய வீட்டிலேயே தங்கினர். அந்த சமயத்தில் மிகவும் ஆதரவாக இருந்த என் பெற்றோருக்கு எந்த வகையில் நன்றி சொல்ல முடியும் என்று தெரியவில்லை.”
|
ஜஸ்ட் ஜுட் தயாரிப்புகள், இந்தியாவின் முன்னணி சங்கிலித் தொடர் சில்லரை விற்பனைக்கடைகளில் கிடைக்கின்றன
|
ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுமதியாளரிடம் இருந்து 2006-ம் ஆண்டு 70 ஆயிரம் ரூபாய்க்கு முதல் பெரிய ஆர்டர்கிடைத்தது. “அந்த வாடிக்கையாளர் எனக்கு 50 சதவிகிதத்தொகையை அட்வான்ஸ் ஆகக் கொடுத்தார். எனவே, மேலும் நான்கு தையல் மிஷின் வாங்கினேன். மேலும் மூன்று டெய்லர்களை வேலைக்குச் சேர்த்தேன்,” என்கிறார் சவுரவ்.
சவுரவ், பருத்திப் பைகளும் தயாரிக்கத் தொடங்கினார். அவரது தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது. 2006-ம் ஆண்டில் அவரது நிறுவனம் நல்ல நிலையை அடைந்தது.
“எந்த ஒரு தொழிலும் தரத்தில் நிலைத்திருப்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு மகிழ்ச்சியான வாடிக்கையாளர் என்பவர், பலன் தரும் 10 வாடிக்கையாளர்களுக்குச் சமமானவர்,” என்கிறார் சவுரவ்.
2008-ம் ஆண்டு சவுரவ், நிக்கிதாவை திருமணம் செய்தார். கம்ப்யூட்டர் வடிவமைப்பு திறன் கொண்ட நிக்கிதா, அனிமேஷன் படித்திருந்தார்.
புதுமண தம்பதிகளான அவர்கள் இருந்தபோது, அவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், சவுரவ் அதிர்ச்சியடைந்தார்.
“அதிக ஆர்டர்கள் கையில் இருந்தன. ஆனால் பொருட்கள் தயாரிக்க முடியவில்லை. பல ஆர்டர்கள் கையைவிட்டுப் போயின. என்னுடைய வாடிக்கையாளர்கள் வேறு இடத்தில் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர்.”
“ஏறக்குறைய நிறுவனத்தை மூடிவிடுவது என்று முடிவு செய்து விட்டேன். எதற்காகவும் பின்வாங்கக் கூடாது என என் மனைவி நிக்கிதா, என்னை ஊக்கப்படுத்தினார். தொழிலை மீண்டும் கட்டமைக்க எனக்கு உதவினார்,” என்கிறார் சவுரவ்.
வேலை நிறுத்தம் செய்த அனைத்து ஊழியர்களையும் வேலையில் இருந்து நீக்கினார். அடுத்த ஆறுமாதத்தில் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்த்தார். தவிர, தொழிலை விரிவாக்கம் செய்ய வங்கியில் கடன்களும் வாங்கினார்.
நிக்கிதா, தம்முடைய வடிவமைப்புத் திறனை வெளிப்படுத்தினார். புதிய வடிவமைப்புகளை உருவாக்கினார். “நிக்கிதாவின் வடிவமைப்புத் திறனால், எங்கள் போட்டியாளர்களைவிடவும் ஒரு படி முன்னேறினோம்,” என்கிறார் சவுரவ்.
அவர்களின் தொழில் செழிப்படையத் தொடங்கியது. கைப்பைகள், பர்ஸ்கள், லேப்டாப் பைகள், ஃபோல்டர்கள் ஆகியவற்றைத் தயாரித்தனர். ஆர்கானிக் காட்டன், பாலியூரிதீன் ஆகியவற்றிலும் பரிசோதனை அடிப்படையில் பொருட்கள் செய்தனர்.
|
2008-ம் ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தொழிலை கைவிட நினைத்தபோது, தொடர்ந்து நடத்தும்படி சவுரவ்-க்கு நிக்கிதா ஊக்கமூட்டினார்.
|
மொத்த தொழிலில், பைகள் விற்பனை 70 சதவிகித இடம் வகித்தது. முன்னணி பெருநிறுவனங்கள் ஜஸ்ட் ஜுட்டின் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.
தங்களின் பொருட்களுக்கு பிராண்ட் பெயர் இருக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்ந்த சவுரவ், 2013-ம் ஆண்டு நிக்கிதாவின் பெயரை சுருக்கி NYK என்ற பிராண்ட் பெயரில் முதல் லேபிளை உருவாக்கினார்.
இன்னும் 10 ஆண்டுகளுக்குள், ஜஸ்ட் ஜுட் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 100 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று சவுரவ் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
சவுரவின் மனைவி நிக்கிதா, வீட்டில் அவரை நன்கு புரிந்து கொண்ட, ஆதரவான பார்ட்னர் என்பதைப் போல தொழிலிலும் அவ்வாறே இருக்கிறார். எனவே இன்றைக்கு சவுரவ் சந்தோஷமாக இருக்கிறார். நாள் முழுவதும் கடின உழைப்புக்குப் பிறகு, வீட்டுக்குத் திரும்பிய உடன், தமது ஆறு வயது மகள் பியாவுடன் தம்முடைய நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
அதிகம் படித்தவை
-
மண்ணில்லா விவசாயம்
ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற மண் இல்லாமல் விவசாயம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை தொழில்முயற்சியாகக் கைக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால். ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற அவரது நிறுவனம் வேகமாக வளர்கிறது. பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை
-
அசத்துகிறார் ஆன்சல்!
மார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
என் வழி தனி வழி!
ராணுவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா. ஆனால் அவர் தனியாக லாஜிஸ்டிக் துறையில் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார். இன்றைக்கு அவரது நிறுவனம் 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது. சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை...
-
பட்டு சாம்ராஜ்ய இளவரசி!
நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்
-
கம்யூனிஸ்ட் தொழிலதிபர்!
கன்னியாகுமரியில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தவர், டீக்கடை வைத்திருந்தவர் ஆகிய பின்னணியைக் கொண்டவர் மம்மது கோயா. இன்று 1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் விகேசி காலணிகள் நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் ரெனிதா ரவீந்திரன்