தற்செயலாக உதித்த யோசனை, அள்ளித்தந்த 52 கோடி ரூபாய்
23-Nov-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
ஒரு வில்லா அல்லது விடுமுறைகால வீடு வாடகைக்கு எடுத்து அதில் தங்கும் போது, உங்களின் விடுமுறை மிகவும் ஜாலியான ஒன்றாக இருக்கும். ஒரு ஹோட்டல் அறையை விடவும், புதிய இடத்தில், அதாவது ஒரு முழு வீட்டில், இருக்கும் இடம் முழுவதிலும் நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.
2009-ம் ஆண்டின் கடைசியில் தொடங்கப்பட்ட ஆசியாவின், பெரிய விடுமுறை கால வாடகை இணையதளமான டிரிப் வில்லாஸ்(Tripvillas) எனும் தளத்தின் வழியே இந்த வசதியை ரோஷன் டி சில்வா (38) வழங்குகிறார். 3 லட்சம் ரூபாய் சேமிப்புப் பணத்தைக் கொண்டு ரோஷன் இந்த இணையதளத்தை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக இந்த இணையதளம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2016-17ல் 80 லட்சம் அமெரிக்க டாலரை (ரூ.52 கோடி) ஆண்டு வருவாயாக ஈட்டி உள்ளது.
|
2009-ம் ஆண்டு ரோஷன் டி’சில்வா, டிரிப்வில்லாஸ் எனும் இணையதளத்தைத் தொடங்கினார். இதில் தற்போது இந்தியா உட்பட 35 நாடுகளில் இருக்கும் 2 லட்சம் விடுமுறை கால வீடுகளின் விபரங்கள் உள்ளன. (புகைப்படங்கள்; விஜய் பாபு)
|
கர்நாடகாவின் ஹசான் மாவட்டத்தில் இருக்கும் சாகெல்ஸ்பூரில் 40 ஏக்கர் காஃபி தோட்டத்தின் மத்தியில் ரோஷன் குடும்பத்துக்குச் சொந்தமான பங்களா இருக்கிறது. ஆண்டில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் மட்டும்தான் அந்த பங்களாவில் அவரது குடும்பத்தினர் தங்குவர். எனவே, அந்த பங்களாவில் இருந்து கூடுதல் வருமானம் பெற என்ன செய்யலாம் என்று திட்டமிட்டபோது, தற்செயலாகத்தான் இந்த யோசனை அவருக்கு உதித்தது.
ரோஷனின் நிறுவனத்துக்கு சிங்கப்பூரில் தலைமை அலுவலகம் உள்ளது. இணையதளம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, இந்தியாவில் இருந்து 5000 வீடுகள் உட்பட, 35 நாடுகளில் இருந்து 2 லட்சம் விடுமுறை கால வீடுகளின் விவரங்கள் டிரிப்வில்லாஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து, இந்தோனேசியாவில் பாலி, இந்தியா ஆகிய இடங்கள்தான் டிரிப்வில்லாஸில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கின்றன. மேற்கில் இத்தாலி, அதைத் தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியவை பெரும் சந்தையாக இருக்கின்றன.
தங்கும் வீடுகள், விடுமுறைகால வீடுகள் ஆகியவற்றை இந்த இணையதளத்தில் சுற்றுலாப்பயணிகள் பதிவு செய்யமுடியும். “இது இரு தரப்புக்கும் வெற்றி தரும். வீடுகளின் உரிமையாளர்கள் ஆண்டு முழுவதும் இது போன்ற வீடுகளை உபயோகிப்பது இல்லை. அதை வாடகைக்கு விடுவதன் மூலம் அவர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கிறது,” என்கிறார் ரோஷன். “உலகத்தின் மிகவும் அழகான சுற்றுலா இடங்களில், அதிக இட வசதி கொண்ட விடுமுறைகால வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க முடியும்.”
டிரிப்வில்லாஸ் இணையதளம், வீட்டு உரிமையாளர்கள் பதிவு செய்வதற்கு ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கிறது. அதன் மூலம் தங்களின் வீடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அவர்கள் வரவேற்கலாம். அதற்கு உரிய பணத்தைப் பாதுகாப்பான முறையில் பெறுவதும் உறுதி செய்யப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தைத் தருவதற்கான வசதிகளும், அறிவுரைகளும் இணையளத்தில் உள்ளன.
1969-ம் ஆண்டு மங்களூருவில் இருந்து கத்தாருக்கு ரோஷனின் பெற்றோர் இடம் பெயர்ந்தனர். எனவே, ரோஷன் கத்தாரில்தான் பிறந்து வளர்ந்தார். கத்தாரில் அவரது தந்தை, கத்தார் உர நிறுவனத்தில், நிதி மேலாளராகப் பணியாற்றினார். அவரது தாய் எச்.எஸ்.பி.சி வங்கியில் பணியாற்றினார். ஓய்வுக்குப் பின்னர் 2008-ம் ஆண்டில், அவரது பெற்றோர் இந்தியாவுக்குத் திரும்பினர். இப்போது மங்களூருவில் வசிக்கின்றனர்.
மூன்று குழந்தைகளில் மூத்தவரான ரோஷன் 12-ம் வகுப்பு வரை கத்தாரில் படித்தார். பாம்பே ஐஐடி-யில் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பதற்காக 1996-ல் ரோஷன் இந்தியா வந்தார்.
|
ரோஷன் ஆரம்பத்தில், தம்முடைய மும்பையில் உள்ள பழைய ஃப்ளாட்டில் தமது நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர், சிங்கப்பூருக்கு தலைமை அலுவலகத்தை மாற்றினார்.
|
படிப்பை முடித்த பின்னர், மைசஸ் (Myzus) என்ற மொபைல் போனுக்கான கூடுதல் வசதி சேவைகள் அளிக்கும் நிறுவனம் ஒன்றை மும்பையில் 1999-ம் ஆண்டு ரோஷன் தொடங்கினார். பின்னர் அந்த நிறுவனத்தை 2006-ம் ஆண்டு விற்று விட்டார். 2006-ம் ஆண்டு பேடிரானிக் நெட் ஒர்க் (Paytronic Network,) தொடங்கினார். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார். இந்தியாவின் பெரிய, பணம் பெற்றுக்கொள்ளும் நெட்ஒர்க் நிறுவனமாக பேடிரானிக் வளர்ந்தது
எனினும், 2009-ம் ஆண்டு பேடிரானிக் நிறுவனத்தின் பங்குகளை விற்று விட்டார். பின்னர் எந்த ஒரு தொழிலும் தொடங்காமல், ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்த ஓய்வு காலத்தில்தான், ஹாலிடே ஹோம்ஸ் தொழில் தொடங்கலாம் என்ற ஆலோசனை அவருக்குள் உதித்தது.
“ஹசானில் உள்ள எங்களது பழைய வீட்டை புதுப்பித்தால், பெரும் அளவு பணம் செலவாகும் என்று நினைத்தேன். அந்த வீட்டை முழு நேரமும் பயன்படுத்தாவிட்டால், இந்த அளவுக்குப் பணம் செலவழித்ததற்கு பலன் இருக்காது என்று நினைத்தேன்,” என்று டிரிப்வில்லாஸ் தொடங்கியது பற்றி ரோஷன் விவரிக்கிறார்.
தமது சொந்த வீட்டை ஹாலிடே ஹோம் ஆக வாடகைக்கு விடலாம் என்று அவர் தீர்மானித்தார். தம்மைப் போன்ற வீட்டு உரிமையாளர்களை ஒன்றிணைத்து, உபயோகத்தில் இல்லாத வீடுகளை வாடகைக்கு விடும் தொழிலைத் தொடங்கலாம் என்றும் ரோஷன் திட்டமிட்டார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் இலவச வரி விளம்பர இணையதளமான, கிரைஜ்ஸ்லிஸ்ட்(Craigslist) மூலம் கவரப்பட்டு, எளிமையான இணையதளத்தைத் உருவாக்கத் திட்டமிட்டார். இவரது இணையதளத்தில், வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வீடுகள் பற்றிய விவரங்களை புரஃபைலாக உருவாக்க முடியும். ஹோட்டல்களுக்குப் பதிலாக, வீடுகளில் தங்க விருப்பம் தெரிவிக்கும் குடும்பத்தினருக்கு, இந்தத் தகவல்கள் இணையதளத்தின் வழியே அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, மும்பை சென்ற ரோஷன், அங்கு உள்ள தமது பழையை ஃபிளாட் வீட்டில் இருந்து இணையதளத்தைத் தொடங்கினார். ரோஷன் அப்போது, புதிய ஃபிளாட்டில் வசித்து வந்ததால், பழைய ஃபிளாட் காலியாகவே இருந்தது. எனவே, அதை தமது நிறுவனத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். மும்பையில் இருக்கும் வீடுகள் குறித்து தகவல் சேகரிப்பதற்காக இன்னொரு நபரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
இந்தியாவில் எந்தப் பகுதிக்கு அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர் என்று ஆய்வு செய்தார். அதில் கோவா முதலிடம் பிடித்தது. கோவா, மும்பை அருகில் உள்ள சாகெல்ஸ்பூர் மற்றும் லண்ணாவ்லா ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை தொடர்பு கொண்டார்.
“உலகம் முழுவதும் பரந்திருக்கும், பெரும்பாலான கோவாவாசிகளை எனக்குத் தெரியும். அவர்கள் எங்கு வசித்து வந்த போதிலும், அவர்களுக்கு கோவாவில் சொந்த வீடு இருந்தது. என்னுடைய யோசனையை அவர்களிடம் தெரிவித்தபோது, அதற்கு அவர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்,” என்கிறார் ரோஷன். “நான், கோவாவில் வசிக்காத அதே நேரத்தில் கோவாவை சொந்த ஊராகக் கொண்டவர்களை அணுகினேன். கத்தார், துபாய், லண்டன் இங்கெல்லாம் உள்ள கோவா அசோஷியேசன்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தேன்.”
|
வீடுகளைப் பதிவு செய்யும்போது, டிரிப்வில்லாஸ் இணையதளம் பணத்தை எடுத்துக் கொள்ளாது. வாடிக்கையாளர்களின் பணப்பரிமாற்றத்தின் போது, உரிய கமிஷன் மற்றும் பெற்றுக் கொள்கிறது.
|
இன்றைக்கு, டிரிப்வில்லாஸ், பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்திய இணையதளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உடனடி பதிவு முறையை முதன் முதலில் ஆன்லைன் சந்தையில் அறிமுகம் செய்ததும் டிரிப்வில்லாஸ்தான்.
ரோஷன், வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆசியாவில், விடுமுறைகால வாடகை விடுதிகளைத் தொடங்கியவர் என்ற பெருமைக்கு உரியவராக இருக்கிறார். முதல் 18 மாதங்களுக்கு டிரிப்வில்லாஸ் இணையதளம் மெதுவாக பிரபலம் ஆகத் தொடங்கியது. ஆயிரகணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உள்ளிட்டோர், தொழிலை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்தனர்.
முதல் ஆண்டில், டிரிப்வில்லாஸ் இணையதளத்தின் வழியே, ரோஷன் இலவசமாக சேவை வழங்கினார். வீட்டு உரிமையாளர்களிடம் பணம் பெறுவதற்கு, வணிக ரீதீயான எந்த ஏற்பாடும் செய்து கொள்ளவில்லை. மக்கள், இலவசமாகத் தங்கள் வீடுகள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தனர். சுற்றுலா செல்பவர்களும், வீட்டு உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, தங்கும் வீடுகளைப் பதிவு செய்தனர். வீட்டு உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பணம் பெற்றனர்.
“நான் பொறியாளர் ஆக இருந்தபோதிலும், இதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினேன். எந்த ஒன்றையும் மிகுந்த அக்கறையோடு நடத்தவில்லை. இணையதளத்தை உருவாக்குவதற்கு புரோகிராம் எழுதுவதற்கு கற்றுக் கொண்டேன்,” என்கிறார் ரோஷன்.
ஒரு ஆண்டு கழித்து டிரிப்வில்லாஸ் பிரபலம் அடையத் தொடங்கியது. 300 வீடுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போதில் இருந்து பணம் வசூலிப்பது என்று ரோஷன் தீர்மானித்தார்.
“வீடுகளை ஹாலிடே ஹோம்களாக வாடகைக்கு விடுவது என்பது இந்தியாவில் குறைந்த அளவே இருந்தது. எனவே, இங்கு குறைந்த அளவு வணிகம்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்,” என்று விவரிக்கிறார் ரோஷன். “2010-ம் ஆண்டில், நான் சிங்கப்பூர் சென்றேன். அங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தேன். தாய்லாந்த், பாலி போன்ற தென்கிழக்கு ஆசிய சந்தையைக் குறி வைத்து, வணிகத்தை ஆரம்பித்தேன்.”
சிங்கப்பூரில் ரோஷன் வணிகத்தைத் தொடங்கினார். முந்தைய வணிகத்தின்போது கிடைத்த, தம்முடைய சொந்த சேமிப்பான 2 லட்சம் அமெரிக்க டாலரை முதலீடு செய்தார். இதன் தொடர்ச்சியாக டிரிப்வில்லாஸ் நிறுவனத்துக்கு ஒரு தொழில்முறையான இணையதளம் கிடைத்தது. அங்கு 6 பேர் பணியாற்றினர்.
“2014-ம் ஆண்டில், டிரிப்வில்லாஸ் சார்பில், வீட்டு உரிமையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என இருதரப்பினருக்கும் பயன் அளிக்கும் வகையில் இந்தியாவில், உலகலாவிய வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தோம். இதனால், பெங்களூருவில் எங்களது இந்திய அலுவலகம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.” என்கிறார் ரோஷன்.
“ஹாலிடே ஹோம் வைத்திருக்கும் உரிமையாளர்களில் சிலர் மூத்த குடிமகனாகவோ அல்லது கொஞ்சம் வயதானவராகவோ இருப்பார்கள். அவர்களில் பலர், சொத்துகள் பற்றி எழுதுவதற்கு போதுமான தொழில்நுட்ப அறிவு இல்லாமல் இருக்கக் கூடும். எனவே, அவர்களுக்காகப் படங்களை பதிவேற்றம் செய்வதற்கு தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவில் இருக்கும் எங்களது குழுவினர் உதவுவார்கள். அவ்வாறு, பதிவு செய்யும்போது, மறுபடியும் அதை உறுதி செய்து கொள்வார்கள்.” என்று விவரிக்கிறார் ரோஷன்.
தென்கிழக்கு ஆசியாவின் சந்தையைக் குறிவைத்துச் செயல்படுவது பற்றி பேசும் ரோஷன், “பாலி மற்றும் தாய்லாந்து ஆகியவை பக்குவமடைந்த சந்தையாக இருந்தன. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், இந்த நாடுகளில் சொத்துகளை வாங்குகின்றனர். பின்னர், டிரிப்வில்லாஸ் போன்ற இணையதளங்களின் மூலம், பதிவு செய்து வீடுகளை ஹாலிடே ஹோம்ஸ் ஆக வாடகைக்கும் விடுகின்றனர்.”
|
ரோஷன், அமெரிக்க சந்தையை குறிவைத்திருக்கிறார். அடுத்ததாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சந்தைகளிலும் இந்த ஆண்டு நுழைய இருக்கிறார்.
|
நிதி ரீதியாக அதிக சுமையாகி விடக் கூடாது என்பதில் ரோஷன் எச்சரிக்கையாக இருக்கிறார். “நாங்கள் வீடுகளை விலைக்கு வாங்குவதில்லை. எனவே, எங்களது முதலீடு நடுநிலையோடுதான் இருக்கிறது,” என்கிறார்.
“நாங்கள் இணையதளத்தைத் தொடங்கிய சமயத்தில், அமெரிக்காவில் உள்ள எங்களைப் போன்ற நிறுவனங்கள், வீடுகளைப் பட்டியலிடும் உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலித்தனர். ஆனால், வீட்டு உரிமையாளர்களிடம் நாங்கள் வாடகை மட்டுமே வசூலித்தோம். வீடுகளைப் பதிவு செய்வதற்கு ஏதும் கட்டணம் வசூலிக்கவில்லை. வீடுகளில் தங்கும் வாடிக்கையாளர்கள் வாடகைக் கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தி விடுவார்கள். அதில் எங்களது கமிஷனை கழித்துக் கொண்டு, வீட்டின் உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவோம்.”
ஆரம்பத்தில் ஒரு சில தேவையில்லாத சம்பவங்கள் நடந்தன. யாரோ ஒருவர், கிரிக்கெட் நட்சத்திரம் டெண்டுல்கருக்குச் சொந்தமான லானெவ்லா வீட்டின் படத்தை பதிவு செய்திருந்தார். அதன்பின்னர், இது போன்ற பிரச்னைகள் ஏதும் டிரிப்வில்லாஸில் நிகழவில்லை.
டிரிப்வில்லாஸில் வீடுகளைப் பதிவு செய்பவர்களின் தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை முழுமையாக சரிபார்த்தபிறகே அனுமதிக்கிறார்கள். புரோக்கர்கள் யாரும் இதில் பதிவு செய்து விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். வீடுகளின் உரிமையாளர்கள், மின்கட்டணம் செலுத்திய பில், சொத்து வரி செலுத்தியதற்கான பில் ஆகியவற்றை ஆதாரமாக கொடுத்தால் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். டிரிப்வில்லாஸ் குழு இதனை முழுமையாக ஆய்வு செய்கிறது.
டிரிப்வில்லாஸின் வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களின் வாய்வழி விளம்பரமே உதவியாக இருந்திருக்கிறது. “இப்போது நாங்கள், இந்தியா, தாய்லாந்து, பாலி, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள பில்டர்களிடம் பங்குதாரர்களாகச் சேர்ந்து வருகிறோம். இந்த நாடுகளில், ஆண்டு முழுவதும் உபயோகிக்காமல் இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களை பில்டர்கள் அணுகி எங்களது தொழில் வாய்ப்புகள் பற்றிச் சொல்வார்கள்,” என்கிறார் ரோஷன்.
சிங்கப்பூர்தான், டிரிப்வில்லாஸின் தலைமை அலுவலகமாக இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சுற்றுலா இடங்களில் இருந்து அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் வருகின்றன. இந்த மண்டலத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்தும் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ரோஷன் தம் மனைவியுடன் சிங்கப்பூரில் வசிக்கிறார். அவர் மனைவி யோகா ஆசிரியராக இருக்கிறார். அவருக்கு ஏழு வயது மகள் இருக்கிறார். சிங்கப்பூர் மற்றும் பெங்களூருக்கு இடையே, சென்று வந்து இரண்டு அலுவலகங்களையும் ரோஷன் கவனித்துக் கொள்கிறார்.
டிரிப்வில்லாஸ் வளரும்போது, முன்னணி ஏஞ்சல் நிறுவனங்கள் நிதி உதவி அளித்தன. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்தின் ஒரு பிரிவான தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன், நியோடெனி லேப்ஸ், ப்ளூமீ வென்சூர்ஸ், மீனா வென்சூர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி உதவி அளித்துள்ளன.
“நாங்கள் சுய நிதியில் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு என சொத்துக்கள் ஏதும் இல்லாததால், தொழிலுக்கு என முதலீடு செய்யவில்லை. வருவாய் ஈட்டுவதற்கு உரிய களத்தை உருவாக்கிக் கொடுக்கிறோம்,” என்றார் ரோஷன்.
இந்த ஆண்டு டிரிப்வில்லாஸ், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தைகளில் நுழைகிறது. “இந்த நாடுகளில் எங்களுக்குப் போட்டியாக ஏர் பிஎன்பி (Air BNB), ஹோம் அவே (Home Away) ஆகிய இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு இரண்டாம் இடத்தைப் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்,” எனும் ரோஷனின் குறிக்கோள் இதோடு நிற்கப்போவதில்லை. அடுத்த ஆண்டு, அவர்கள் அமெரிக்க சந்தையில் நுழையத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதிகம் படித்தவை
-
கல்வி எனும் கைவிளக்கு
ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தாலும் திறம்பட கல்வி கற்று, ஆடிட்டர் ஆனவர் பிஜய் குமார். இன்று ஆடிட்டர் பணியைத் துறந்து, வருங்கால சந்ததியினர் முழுமையான கல்வியை கற்கும் வகையில் சாய் சர்வதேச பள்ளியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
கைவினைக்கலை அரசி
பீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
புதிதாய் ஒரு பழைய பிராண்ட்!
பழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!
தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்
பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.