Milky Mist

Saturday, 9 December 2023

கலாம் சொன்னார்! சந்தோஷ் செய்கிறார்! ஜார்க்கண்டில் ஒரு கனவு நனவாகிறது!

09-Dec-2023 By குருவிந்தர் சிங்
ஜாம்ஷெட்பூர்

Posted 03 Feb 2018

சந்தோஷ் சர்மா மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமை, சந்திக்காமல் இருந்திருந்தால், ஒரு மேலாண்மைத் துறை சார்ந்த நபராக மட்டுமே இருப்பார். அப்துல் கலாமை சந்தித்ததன் மூலம்,  மரபை மீறி சிந்தித்து எதிர்கால இளைய சமுதாயத்துக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சந்தோஷ், 2016-ம் ஆண்டில் மா (M’ma) என்ற  பால்பண்ணையைத் தொடங்கினார். இன்றைக்கு அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவரும், நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட தால்மா கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு கீழ் உள்ள பழங்குடியின இளைஞர்கள் ஆவர்.

https://www.theweekendleader.com/admin/upload/11-01-18-10cow1.jpg

நக்சலைட்களால் பாதிப்புக்கு உள்ளான தல்மா கிராமத்தில் வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞர்கள் 100 பேருக்கு, சந்தோஷ் சர்மாவின் மா பால்பண்ணையில் வேலை கிடைத்துள்ளது. (புகைப்படங்கள்: சமீர் வர்மா)

 

80 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 8 மாடுகளைக் கொண்டு, பால்பண்ணையைத் தொடங்கினார். இப்போது, 100 மாடுகள் இருக்கின்றன. இன்டிமா ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற அவரது கம்பெனியின் ஆண்டு வருவாய் 2016-17-ம் ஆண்டில் 2 கோடி ரூபாயாக இருக்கிறது.

அவரது ஆர்கானிக் பால் பண்ணை நக்ஸலைட்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஓர் பகுதியில் இருக்கிறது. ஜாம்ஷெட்பூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கும் அந்தப் பகுதியில் 40 வயது, தொழில்முனைவோரான சர்மா,  இளைஞர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அந்தப் பகுதியில்  பிரச்னைகள் இருந்ததன் காரணமாக, இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இது தவிர, ஒரு கல்வியாளராகவும், ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், சந்தோஷ் இருக்கிறார். ஒரு எழுத்தாளராக, நெக்ஸ்ட் வாட்ஸ் இன் (Next What’s In) என்ற புத்தகத்தையும், டிஸ்ஸோல்வ் தி பாக்ஸ் (Dissolve The Box) ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதி உள்ளார். ஐ.ஐ.எம் உள்ளிட்ட நாட்டின் உயரிய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை உரையாற்றுகிறார்.

ஜாம்ஷெட்பூரில் 1977-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி,  சந்தோஷ் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். அவரது தந்தை, மறைந்த எஸ்.ஆர்.சர்மா, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தில்  ஊழியராகப் பணியாற்றினார். குடும்பத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  போதாமல் குறைவான சம்பளமாக இருந்தது.

“நான் பிறந்த சமயத்தில், வீட்டின் நிதி நிலைமை நன்றாக இல்லை. என்னுடைய தந்தை, நான் பிறந்த ஒரு ஆண்டு கழித்து 1978-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்,” என்று நினைவு கூறும் சந்தோஷ், “எங்களுக்கு தெரிந்தவர்கள், பீகார் மாநிலம் சாப்ராவில் உள்ள பூர்வீக வீட்டுக்குச் செல்லும் படி அறிவுறுத்தினர். ஆனால், சாப்ராவில் கல்வி கற்பதற்கான வசதிகள் இல்லை என்பதால், என் தாய் அங்கு செல்ல விரும்பவில்லை.”

அவரது தாய், ஆர்.கே.தேவி, குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், அவரது தாய்க்கு, பசுமாடு ஒன்றை கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு அவரது தாய் பால் விற்பனையைத் தொடங்கினார்.

குல்மோஹர் உயர் நிலைப்பள்ளியில், 1994-ம் ஆண்டு சந்தோஷ், பத்தாம் வகுப்புப் படித்து முடித்தார். “நான் ஒரு நல்ல மாணவனாக இருந்தேன். எனது குடும்பம், எப்படியோ என் கல்விக்கான  செலவைப் பார்த்துக்கொண்டது. வீட்டு வேலைகளை சகோதரிகள் பார்த்துக் கொண்டனர். நானும், என்னுடைய சகோதரர்களும், வீடு வீடாகச் சென்று பால்விற்பனை செய்தோம்,” என்று சொல்கிறார் சந்தோஷ்.

கொஞ்சம், கொஞ்சமாக பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1994-ம் ஆண்டில், அவர்களிடம் 25 பசுக்கள் இருந்தன. வீட்டின் நிதி நிலமை மேம்பட்டிருந்தது.

https://www.theweekendleader.com/admin/upload/11-01-18-10cow5.jpg

மா பால்பண்ணையில் 100 கால்நடைகள் இருக்கின்றன. 

 

1996-ம் ஆண்டு, லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் 12-ம் வகுப்பில் வணிகப் பிரிவு பாடத்தை முடித்தார். பின்னர், டெல்லி சென்ற‍ அவர், டெல்லிப் பல்கலைக்கழகத்தில், பி.காம் (ஹானர்ஸ்) படிப்பில் சேர்ந்தார். அதே நேரத்தில் காஸ்ட் அக்கவுண்டன்சி பாடத்திலும் சேர்ந்தார். இரண்டு பாடத்தையும் ஒரே நேரத்தில் 1999-ம் ஆண்டு முடித்தார்.

முதன்முதலாக மாருதி நிறுவனத்தில் நிர்வாகவியல் தணிக்கைக் குழுவில் சந்தோஷூக்கு வேலை கிடைத்தது. மாத உதவித் தொகையாக 4,800 ரூபாய் கிடைத்தது. அங்கு ஆறுமாதங்கள் மட்டும் பணியாற்றினார்.

2000-ம் ஆண்டில், எர்னஸ்ட் அண்ட் யெங்க் நிறுவனத்தில் ஆய்வாளராக, நல்ல வேலை கிடைத்தது. மாதம் 18,000 ரூபாய் சம்பளம்.

“இந்த வேலையில் இருந்து 2003-ல் விலகினேன். ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவுடன், யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்காக வேலையில் இருந்து விலகினேன்,” என்று நினைவுகூறும் சந்தோஷ், “ஜாம்ஷெட்பூர் வந்து, மிகவும் அக்கறையோடு யு.பி.எஸ்.சி., தேர்வுக்குத் தயார் செய்தேன்” என்கிறார்.

எனினும் அதைக் கைவிட்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு பன்னாட்டு தேசிய வங்கியில் 2004-ம் ஆண்டு கிளை மேலாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு 35,000 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதே ஆண்டில் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த  அம்பிகா சர்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.   அந்த வங்கியில் சர்மா, ஆறுமாதங்கள் பணியாற்றினார். பின்னர் இன்னொரு வங்கியில் ஜார்கண்ட், பீகார், ஒடிசா மாநிலங்களின் தலைவராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

https://www.theweekendleader.com/admin/upload/11-01-18-10cow6.jpg

ஏர் இந்தியாவில் பணியாற்றிய சந்தோஷ் அங்கிருந்து விலகியபோது, மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.


அங்கு, மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2007-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவி  மேலாளராக மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இதன் பின்னர் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை எங்கும் பணியில் சேராமல் மூன்று ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொண்டார். 

“நான் எழுதுவதில் ஆர்வத்துடன் இருந்தேன். Next What’s In என்ற தலைப்பில் மேலாண்மை தொடர்பான ஒரு புத்தகம் எழுதினேன். இது 2012-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. Dissolve The Box என்ற என்னுடைய இரண்டாவது புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியானது. உடனே அது புகழ் பெற்ற நூலாகியது,” என்கிறார் சந்தோஷ்.

“ஒபரா வின்ப்ரே, சச்சின் டெண்டுல்கர்  மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 50 சி.இ.ஓ-க்கள் என்னுடைய புத்தகத்துக்கு பரிந்துரை செய்தனர். இதன் பின்னர், பெருநிறுவனங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கும், அதே போல ஐ.ஐ.எம். போன்ற மேலாண்மை நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் நான் பயிற்சி கொடுக்கத் தொடங்கினேன்.”

2013-ம் ஆண்டு இவ்வாறு ஓர் உரை நிகழ்த்திய சமயத்தில், ஏ.பி.ஜே. அப்துல்கலாமை அவர் சந்தித்தார். தம்மை வந்து சந்திக்கும் படி சந்தோஷூக்கு கலாம் அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பு சந்தோஷின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது இரண்டாவது புத்தகம், மனதில் உள்ள திறக்கப்படாத சக்திகளாக இருக்கும் மனப்பூட்டுகளைத் திறப்பதாக இருந்தது.

“என்னுடைய ஐடியாக்களால் அவர் ஈர்க்கப்பட்டார். எனவே, டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வரும்படி அழைத்தார்,” என்று கலாம் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி விவரிக்கிறார் சந்தோஷ்.

“இளம் தலைமுறைக்காகப் பணியாற்றும்படி என்னை அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் உள்ள 40 கோடி இளைஞர்களை இணைத்து, கிராமங்களில் பணியாற்றுவது என்று நாங்கள் திட்டமிட்டோம். எதிர்பாராதவிதமாக அவர் 2015-ம் ஆண்டு இறந்து விட்டார். எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. என்னுடன் அவர் மிகவும் எளிமையாகப் பழகினார். ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானியின் முன்பு நான் நிற்கிறேன் என்ற உணர்வு ஒருபோதும் எனக்கு வரவில்லை.”

https://www.theweekendleader.com/admin/upload/11-01-18-10cow3.jpg

மா பால்பண்ணையில் இருந்து தினமும் 15,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.


கலாமிடம் பகிர்ந்து கொண்டதன்படி தம்முடைய கனவை நோக்கி பணியாற்ற வேண்டும் என்று சந்தோஷ் நினைத்தார். “என்னுடைய குடும்பத்தில் இருந்து ஏற்கனவே எனக்கு, பால் பண்ணை குறித்த அறிவு இருந்தது. எனவே, அதைத் தொடங்க நினைத்தேன். பால் பண்ணை தொடங்குவதற்காக நிலம் எங்கே இருக்கிறது என்று தேடினேன்.”

சந்தோஷ், 2014-ம் ஆண்டு, தால்மா உயிரினப்பூங்காவுக்குள் நிலம் இருப்பதை அறிந்தார். நில உரிமையாளர்களிடம் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு, அவர்களிடம் இருந்து 68 ஏக்கர் நிலங்களைப்  பெற்றார். இதற்கு மாதம் தோறும் 30,000 ரூபாய் வழங்கினார்.

மா (தம்முடைய தாயின் அன்பு நினைவு காரணமாக ,மா என்று சுருக்கமாக பெயர் வைத்தார்) என்ற பெயரில், 2016-ம் ஆண்டு ஜனவரியில் பால் பண்ணைத் தொடங்கினார். அப்போது 8 மாடுகள் இருந்தது. 80லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். “குடும்பத்தினரின் சேமிப்பு மொத்தத்தையும் சேர்த்து, பணத்தை ஏற்பாடு செய்தேன்,” எனும் சந்தோஷ், “அந்தப் பகுதியில் மாவோயிஸ்ட்களின் தாக்கம் இருந்ததால், அங்கு பால் பண்ணை அமைக்க வேண்டாம் என்று எனது நண்பர்கள் கூறினர். ஆனால், எந்த விதத் தயக்கமும் இன்றி, அங்கே பால்பண்ணை தொடங்குவதில் உறுதியாக இருந்தேன்.”

ஜார்கண்ட் மாநிலத்தில், ஆர்கானிக் பால் விற்கும் ஒரே நிறுவனமாக மா பால்பண்ணை இருக்கிறது. “நாங்கள் சுத்தமான ஆர்கானிக் பால் விற்கிறோம். அதேபோல இப்போது பன்னீர், பட்டர் மற்றும் நெய் உற்பத்தி செய்கிறோம்,”  எனும் சந்தோஷ், “இப்போதைக்கு நாங்கள் ஜாம்ஷெட்பூரில் ஒவ்வொரு மாதமும், 15,000 லிட்டர் பால் விற்பனை செய்கின்றோம். எங்கள் பொருட்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் விற்று விடுகின்றன.  உணவுப் பொருட்களில், நாங்கள் செயற்கைப் பொருட்களைச் சேர்ப்பதில்லை.  உணவுப் பொருட்கள் ப்ரெஷ் ஆக விற்பனை செய்யப்படுகின்றன,” என்கிறார் சந்தோஷ். 

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களான கமலேஷ், நீரஜ் என்ற ஐ.ஐ.டி மாணவர்களின் ஆதரவுகளும் அவருக்குக் கிடைத்தன. இந்த நிறுவனத்தில் அவர்கள் முதலீடும் செய்திருக்கின்றனர். 

https://www.theweekendleader.com/admin/upload/11-01-18-10cow4.jpg

தமது உறவினர் ராகுல் சர்மா, மற்றும் மகனுடன் சந்தோஷ்.


நாடு முழுவதும் மேலாண்மை நிர்வாகம் தொடர்பான பயிற்சி வகுப்புகள் எடுப்பதில் சந்தோஷ் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். பால் பண்ணையின் முக்கியமான பணிகளை அவரது உறவினரான ராகுல் சர்மா கவனித்துக் கொள்கிறார். இதர குழு உறுப்பினர்களான குனால், மஹாதோ, ஷிகு, லோகேஷ், அஷிஸ், அசோக் மற்றும் பல கிராமத்தினரும் அவருடன் பணியாற்றுகின்றனர். சந்தோஷ், 2013-ம் ஆண்டில் ஸ்டார் சிட்டிசன் கவுரவ விருது, டாடா நிறுவனத்தின் 2014-ம் ஆண்டுக்கான அலங்கார் விருது, 2016-ம் ஆண்டில் ஜார்கண்ட் அரசின் யூத் ஐகான் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 

விவசாயம், சுற்றுலா இரண்டையும் விரிவாக்கம் செய்து, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இவர் சொல்கிறார். கிராம மக்களுக்காக மருத்துவமனை, பள்ளி தொடங்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.

வெற்றிக்கான அவரது மந்திரம்:  விருப்பத்துடன் உங்கள் கனவை பின் தொடருங்கள். ஆனால் இந்த சமூகத்துக்கு திரும்பித் தரவேண்டும் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • Business opportunity in old phones, Delhi entrepreneur’s success story

  டீல்..மச்சி டீல்!

  பழைய செல்போன்களை வாங்கிப் பழுது நீக்கி விற்கும் தொழிலில் பட்டையைக் கிளப்புகிறார் யுவராஜ் அமன் சிங். டெல்லியில் சாலையோர மேசையில் போன்களைப் போட்டு விற்றவர் இன்று 150 கோடி ரூபாய்க்கு விற்பனையை எட்டிய வெற்றிக்கதையை விளக்குகிறார் நரேந்திரா கௌசிக்

 • successful caterer

  கேட்டரிங்கில் சிகரம் தொட்டவர்

  மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் தேப்நாத். அவர் பிறந்த சமயம் அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் டெல்லிக்கு வந்து கடின உழைப்பால் கேட்டரிங் தொழிலில் வெற்றியைப் பெற்று இன்றைக்கு 200 கோடி ரூபாய் சொத்துகளை உருவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

 • Selling comfort

  கம்பளிகளின் காதலன்!

  பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

 • He built a multi-crore business to fulfill his dream of travelling around the world

  சிறகு விரித்தவர்!

  அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்

 • The first woman entrepreneur from Nalli family builds family business

  பட்டு சாம்ராஜ்ய இளவரசி!

  நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்

 • How a rickshaw puller became a crorepati in Ranchi

  அதிர்ஷ்டத்தைக் கொடுத்த பன்றிகள்

  மோஹர் சாகு, தம்முடைய 12 வயதில், ஒரு கூலி தொழிலாளியாக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 51 வயதில் ஒரு பன்றி வளர்ப்புப் பண்ணையின் உரிமையாளராக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாயைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை!