Milky Mist

Friday, 22 August 2025

அன்று 5 லட்சம் முதலீடு, இன்று 80 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்

22-Aug-2025 By பி சி வினோஜ்குமார்
திருப்பூர்

Posted 05 Nov 2017

இது வழக்கமான தொழில் விதிகளுக்கு  மாறானது. பதினாறு ஆண்டுகளாக ஒரே ஒரு ஜெர்மன் ஏற்றுமதி வாடிக்கையாளரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, திருப்பூரில் ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது.  இந்த ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டும் கொண்டு, 2000-ம் ஆண்டில் 7 கோடி ரூபாய் ஆண்டு வருவாயில் தொடங்கி 2015-16ம் ஆண்டில் 80 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது அந்த நிறுவனம்.

“ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், இந்தத் தொழில் முறைதான் எனக்கு வெற்றியைத் தந்தது,” என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் 52 வயதாகும், வார்சா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ராஜா எம். சண்முகம். இந்த நிறுவனம் 1989-ம் ஆண்டில் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது.

https://www.theweekendleader.com/admin/upload/mar24-17-rajatab.JPG

1989-ம் ஆண்டு  சகோதரர், தாய் ஆகியோரை பங்குதாரர் ஆகச் சேர்த்துக்கொண்டு 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் வார்சா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை ராஜா சண்முகம் தொடங்கினார். (புகைப்படங்கள்; எச்.கே.ராஜசேகர்)


தொடர்ச்சியாகப்  பல தோல்விகளைச் சந்தித்த இளைஞர்களுக்கு சண்முகத்தின் வெற்றிக் கதை ஒரு பாடமாக இருக்கும். முட்டுச் சந்தில் வாழ்க்கை முடிந்து போகிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அவரின் இந்த நிஜ கதை உங்களுக்கு ஒரு வித்தியாசமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவும். ஒவ்வொரு இழப்பும் நல்லதுதான். ஒவ்வொரு அதிருப்தியும் உங்கள் நன்மைக்குத்தான் என்றும் அவரது அனுபவம் சொல்கிறது.

முதல் தலைமுறைத் தொழிலதிபரான சண்முகம், விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை ஆரம்பத்தில் ஒரு பருத்தி விவசாயி. பருவகாலப் பயிர்களை பயிரிட்டு வந்தார். 1970-ம் ஆண்டு வரை ஒரு பெரிய கிராமமாகத்தான் திருப்பூர் இருந்த து. இப்போதைய நகரத்துக்கு உரிய குணாதியங்கள் அப்போது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நான்கு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது வாரிசாக சண்முகம் இருந்தார். தமது குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை இன்னும் மறக்காமல் இருக்கிறார். அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு அம்பாசிடர் காரும், வீட்டில் சில குதிரைகளும் இருந்தன.

“என் தந்தை குதிரைகளை வளர்த்து வந்தார். திருப்பூரில் இருந்து 50 முதல் 60 கி.மீ தூரத்தில் உள்ள இடங்களுக்கு குதிரைகள் பூட்டிய வண்டியில்தான் செல்வோம்.”

“பள்ளி விடுமுறை நாட்களின் போது, அம்பாசிடர் காரில் நாங்கள் கோவில்களுக்கு சுற்றுலா செல்வோம். என் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் என 11முதல் 12 பேர் வரை அந்த அம்பாசிடர் காரில் நெருக்கியடித்து உட்கார்ந்தபடி பயணிப்போம். அது மிகவும் ஜாலியான அனுபவம்,”என்று சண்முகம் நினைவு கூர்ந்தார்.

அன்றைக்கும், இன்றைக்கும் நடுவில் திருப்பூர் ஒரு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் நகரமாக வளர்ந்துவிட்டது. 2000-த்துக்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான பிரிண்டிங், டையிங் தொழிற்சாலைகள் மற்றும் எம்ப்ராய்டரி நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன. இந்தத் தொழில்நகரத்தின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் தோராயமாக 36 ஆயிரம் கோடியாக இருக்கிறது.

திருப்பூரில் உள்ள பிஷப் உபகாரா சுவாமி பள்ளியில் சண்முகம் படித்தார். பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைக்காததால், ஐ.ஏ.எஸ் ஆகும் ஆசையுடன் பி.ஏ படிப்பில் சேர்ந்தார்.

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ வரலாறு பட்டப்படிப்பு முடித்த உடன், 1987-ல் ராஜா  சண்முகம் டெல்லி சென்றார். யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெறும் நோக்கத்துடன் டெல்லி சென்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டு எல்.எல்.பி படிப்பில் சேர்ந்தார். யூ.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் அதே வேளையில், சட்டம் சார்ந்த பட்டப்படிப்பையும் முடித்து விடலாம் என்று திட்டமிட்டார். முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/mar24-17-raja1.JPG

25 தொழிலாளர்களுடன் வார்சா இன்டர்நேஷனல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்றைக்கு 1000 பேர் வரை பணியாற்றுகின்றனர்.


அடுத்த ஆண்டு, அவர் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனா்,நேர்முகத் தேர்வு நிலையில் தோற்று விட்டார். எனினும், அவரது மூன்றாவது முயற்சியில் முதல் நிலையில் கூட அவர் தேர்ச்சி பெறவில்லை. எனவே, தமது ஐ.ஏ.எஸ் கனவுக்கு முற்றுப் புள்ளி வைத்த அவர், திருப்பூர் திரும்பினார்.

“என்னுடன் தேர்வு எழுதிய பலரும், இப்போது ஏதாவது ஒரு குடிமைப்பணியில் இருக்கின்றனர். சைலேந்திரபாபு, எம்.ரவி ஆகிய தமிழகத்தின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்னுடன் படித்தவர்கள்தான்,” என்கிறார் அவர்.

தமக்கு மட்டும் எதுவும் நல்லதாக நடக்கவில்லை என்றும், ஒட்டு மொத்த உலகமுமே தம்மை தோல்வியடையச் செய்கிறதே என்று நினைத்தார். அவரது பொறியியல் மற்றும் ஐ.ஏ.எஸ்  கனவும், ஒன்றும் இல்லாமல் பூஜியமாகி விட்டது. அவர் சட்டப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்கவில்லை.

1989-ம் ஆண்டு, அவரது இளம் சகோதரர், எம்.ராமசாமி சென்னை லயோலாவில் பட்டப்படிப்பு முடித்த உடன் திருப்பூர் வந்திருந்தார்.

அந்தத் தருணத்தில்தான் சகோதரர்கள் இருவரும் இணைந்து ஒரு நிறுவனம் தொடங்கலாம் என்று திட்டமிட்டனர். வார்சா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். 

வார்சா ஒரு பங்குதாரர் நிறுவனமாக இருந்தது. இரு சகோதரர்கள் மற்றும் அவர்களின் தாய் மூவரும் அந்த நிறுவனத்தில் சரிசமமான பங்குகளைக் கொண்டிருந்தனர். “சில நிலங்களை விற்று அதன் மூலம் 2 லட்சம் ரூபாய் சேர்த்தோம். எங்கள் சொத்தை அடமானமாக வைத்து 3 லட்சம் ரூபாய் வங்கியில் இருந்து கடனாகப் பெற்றோம். 5 லட்சம் ரூபாய் ஆரம்ப முதலீடு செய்தோம்.”

“முதல் தலைமுறை தொழிலதிபர்கள் என்பதால் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம். ஒவ்வொரு அனுபவத்தையும் பாடமாகக் கற்றுக் கொண்டோம்,” என்று நம்மிடம் பகிர்ந்தார் சண்முகம். 

 

https://www.theweekendleader.com/admin/upload/mar24-17-rajashirts.JPG

வார்சா இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் டிசர்ட்கள், ஜெர்மனியில் உள்ள டாம் டெய்லர் நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 

12 தையல் இயந்திரங்கள், 25 ஊழியர்களுடன் நிறுவனத்தைத் தொடங்கினர். உள்ளூர் ஏற்றுமதி நிறுவனத்தின் சப்-கான்ட்டிராக்ட் ஆக முதல் ஆர்டர் அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்கள் வெளியில் இருந்து நூல் கொள்முதல் செய்து, துணியை நெய்து வாங்கினர். அதன் பின்னர் அதற்கு டையிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி பணிகளை செய்த பின்னர், தங்கள் தொழிற்சாலைகளில் அவற்றைத் தைத்தனர். 4 ஆயிரம் ச.அடியில் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் தொழிற்சாலை அமைத்திருந்தனர்.

“முதல் ஆண்டில் நாங்கள் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டினோம். முதல் ஆண்டில் இருந்தே லாபம் தரும் நிறுவனமாக இது வளர்ந்தது. புதிய இயந்திரங்கள் வாங்குவதற்காக லாபத் தொகையையும் தொழிலிலேயே முதலீடு செய்தோம்,”என்கிறார் சண்முகம்.

பின்னர், மும்பையில் இருந்த வாடிக்கையாளரிடம், மேலும் ஒரு சப்-கான்ட்ராக்ட் பெற்றனர். இதனால், 1991-92ல் அவர்களின் தொழில் 50 லட்சம் ரூபாய் வருட வருமானத்தைத் தாண்டியது.

1992-ம் ஆண்டு அவர்கள், பெல்ஜியம் நிறுவனமான புட்டம்னாஸ் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்திடமிருந்து முதல் ஏற்றுமதி ஆர்டரைப் பெற்றனர். “அந்த நாட்களில் வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்வது என்பது சிக்கலாக இருந்தது. ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஃபேக்ஸ், டெலக்ஸ் வழியே மெசேஜ் அனுப்பி அப்பாயிண்ட்மென்ட் வாங்கி, அதன் பின்னர் அவர்களைச் சந்திக்கச் செல்வோம்.”

“முதல் ஆர்டரே பெரிய ஆர்டராக, 75 முதல் 80 லட்சம் ரூபாய் கொண்டதாக இருந்தது. இது ஒரு நல்ல திருப்புமுனையாக இருந்தது. எங்களுக்கு மேலும் ஆர்டர்கள் குவியத் தொடங்கின,”என்கிறார் சண்முகம்.

1995-96-ம் ஆண்டில் ஆண்டு வருவாய் 4.5 கோடியைத் தொட்டது. அப்போது, சண்முகம் ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். நிறுவனத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைத்தார். இரண்டே இரண்டு வாடிக்கையாளர்களை  - புட்டம்னாஸ் டெக்ஸ்டைல், மற்றும் டாம் டெய்லர் - மட்டும் வைத்துக் கொண்டார். 

https://www.theweekendleader.com/admin/upload/mar24-17-rajafull.JPG

நிலையான வளர்ச்சி:  2000-ம் ஆண்டில், ஒரே ஒரு வாடிக்கையாளர் இருந்தால் போதும் என்று ராஜா சண்முகம் முடிவு எடுத்தார்.

 

“எங்களுடைய நிதி நிர்வாகம் சரியாக இல்லை என்று கண்டறிந்தபோது இந்த முடிவை எடுத்தோம்.  பலன் தராத விஷயங்களில் நாங்கள் முதலீடு செய்திருந்தோம்,” என்கிறார் சண்முகம்.

இரண்டு ஆண்டுகளில் அவர்கள் ஆரோக்கியமான நிலையை அடைந்தனர். இந்நிலையில், டாம் டெய்லர் என்ற ஒரே ஒரு வாடிக்கையாளரின் ஆர்டரைப் பூர்த்தி செய்வதில் மட்டும் சண்முகம் கவனம் செலுத்தினார். “அந்த நேரத்தில் டாம் டெய்லர் நிறுவனம் நம்பிக்கை அளிக்கும், வளரும் நிறுவனமாக இருந்தது,”என்கிறார் அவர்.

2000-ம் ஆண்டில் வார்சாவின் ஆண்டு வருவாய் 7 கோடி ரூபாயாக இருந்தது. அந்த சமயத்தில் இரண்டு நிறுவனங்களும் இணைந்தே வளர்ச்சியடைந்தன. வார்சாவின் ஆண்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது.

“சில ஆண்டுகளில் வளர்ச்சி மெதுவாகவும், சில ஆண்டுகளில் சீரான வளர்ச்சியாகவும் இருந்தது. இதுவரையிலும் 2004-05ம் ஆண்டு எங்களுக்கு நல்ல ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டில் ஆண்டு வருவாய் 35 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாக எகிறியது.”

“டாம் டெய்லர் நிறுவனம், வேறு நிறுவனங்களில் இருந்தும் கொள்முதல் செய்தது. ஆனால், நாங்கள் அவர்களுக்கு மட்டும்தான் சப்ளை செய்தோம். அவர்களுக்கு மட்டும்தான் சப்ளை செய்ய வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எங்களுக்கு நிபந்தனை  விதிக்கவில்லை. இது எங்களுடைய விருப்பமாக இருந்தது,”என்று விளக்குகிறார் சண்முகம்.

எனினும், இந்த நிறுவனம் தற்போது மேலும் இரண்டு வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் 130 கோடிரூபாய் முதல் 150 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்ற இலக்கைத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

காரணம், அண்மையில் சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக ஆகி இருக்கிறார். அத்துடன்  திருப்பூர் முழுமையும் 2020ம் ஆண்டில் இப்போதைய 36 ஆயிரம் கோடி இலக்கில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை அடையவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.

“2020-ம் ஆண்டுக்குள் எங்கள் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை மூன்று மடங்காக உயர்த்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்,”என்கிறார் சண்முகம். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் நிப்ட் எனும் பேஷன் டெக்னாலஜி இன்ஸ்ட்டியூட்டின் தலைவராக 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை  இருந்திருக்கிறார். அவருடைய பதவி காலத்தில், இந்த இன்ஸ்டியூட்டுக்காக 1.65 லட்சம் ச.அடியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. 

இதுதவிர, அல்பைன் நிட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற 225 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தில் 25 சதவிகித பங்குகளையும் சண்முகம் வைத்திருக்கிறார். அது 2003-ல் தொடங்கப்பட்டது. அதற்கு ஒரு நூற்பாலை உள்ளது.  தொழிலக தையல் இயந்திரங்கள் வர்த்தகத்திலும் அந்த நிறுவனம் ஈடுபடுகிறது. இந்த நிறுவனத்தில் சண்முகத்தின் சகோதரர் ராமசாமியும் 25 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார்.

2013-ம் ஆண்டில், வார்சா, ஆல்பைன் நிறுவனம் ஆகியவற்றுடன் மேலும் 5 நிறுவனங்கள் இணைந்து அபக்ஸ் கிளாத்திங் கம்பெனி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். அதன் சார்பாக தங்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 30 மெகாவாட் திறன் கொண்ட ஒரு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பிரிவைத் தொடங்கினர்.

https://www.theweekendleader.com/admin/upload/mar24-17-rajatea.JPG

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கக் கட்டடத்தின் முன்பு ராஜா சண்முகம் நிற்கிறார். மதிய வேளையை அவர் இங்குதான் செலவிடுகிறார்.

 

தென்னை, தென்னை நார் கழிவுகளைக் கொண்டு பொருட்களை தயாரித்தல், தேங்காய் எண்ணைய் தயாரிப்பு உள்ளிட்ட  ஒருங்கிணைந்த தென்னை திட்டத்திலும் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது.

சண்முகம் ஒவ்வொரு நாளும் மதிய வேளையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துக்காக அர்ப்பணித்திருக்கிறார். இந்தச் சமூகத்துக்குச் செய்யும் சேவையாக இந்தப் பணியை அவர் கருதுகிறார்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வீட்டில் இருக்கவே விரும்புகிறார். வீட்டிற்குள் இருந்து கொண்டு டி.வி பார்ப்பது, மனைவி சுஜிதா, மகன் விஷாலுடன் பொழுதைக் கழிப்பது என்று இருக்கிறார். கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் முடித்திருக்கும் விஷால், அபெக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்.

இறுதியாக, தன்னுடைய கடந்த காலத்தைப் பின்னால் திரும்பிப் பார்க்கிறார். ஐ.ஏ.எஸ் ஆக முடியவில்லை என்று வருந்துகிறாரா? “ஒரு போதும் இல்லை. இதில் உண்மை என்னவெனில், ஐ.பி.எஸ் ஆக இருக்கும் என்னுடைய நண்பர்கள் இப்போது வருந்துகின்றனர். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றும், எனக்கு நானே சொந்தக்காலில் நிற்க கூடிய அதிர்ஷ்டசாலி என்றும் என்றும் அவர்கள் என்னைச் சொல்கின்றனர்,” என்று கூறியபடியே சண்முகம் சிரிக்கிறார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • He started transport business with a single lorry, but today owns 4,300 vehicles

    போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்

    தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Food for night

    இரவுக் கடை

    கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.

  • Styling her way  to the top

    அம்பிகாவின் நம்பிக்கை!

    ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Mumbai couple's juice chain doing roaring business

    வெற்றியின் ஜூஸ்

    நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். இணைந்து சொந்தமாக பல தொழில்கள் செய்து, இப்போது மும்பையில் பழச்சாறு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான வெற்றிக்கதையைத் தருகிறார் பி சி வினோஜ்குமார்

  • Girl from Mountain

    மலைக்க வைக்கும் வளர்ச்சி!

    உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி,  இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • The success story of an entrepreneur who started a restaurant chain serving traditional Odiya food

    ஒடிஷாவின் சுவை!

    ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்