அம்மம்மா…..! தினமும் 1.5 லட்சம் மொமோ விற்பனையா?
04-Dec-2024
By ஜி சிங்
கொல்கத்தா
ஆரம்பத்தில் அந்த நண்பர்கள் இருவருக்கும் தடுமாற்றம்தான். ஆனால் எட்டு ஆண்டுகளில் பிரமாதமான வெற்றிக்கதையை நிகழ்த்திக்காட்டி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான துரித உணவக நிறுவனம் ஒன்றைக் கட்டி எழுப்பியுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அந்நிறுவனத்தின் பெயர் வாவ் மொமோ புட்ஸ் பிரவேட் லிமிடட்.
“எங்களைக் குப்புறத் தள்ளிவிட்ட பல பிரச்னைகளைச் சந்தித்தோம் ஆனால் மீண்டும் எழுந்தோம்,” என்கிறார்கள் இளம் தொழிலதிபர்களும் முன்னாள் கல்லூரித் தோழர்களுமான வினோத் குமார் ஹோமாகய் மற்றும் சாகர் தரியானி.
|
வினோத்குமார் ஹோம்கய் (படத்தில்) தன் கல்லூரி நண்பர் சாகர் தரியானியுடன் இணைந்து தங்கள் முதல் மொமோ கடையை கொல்கத்தாவில் 30000 ரூ முதலீட்டில் 2008-ல் தொடங்கினார்.(படம்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)
|
அவர்களின் உணவு சாம்ராஜ்யம் சென்னை, புனே வரைக்கும் கூட நீண்டுள்ளது. 67 கடைகள் உள்ளன.
கொல்கத்தாவின் புனித சேவியர் கல்லூரியில் பிகாம் படிக்கும்போது இருவரும் நண்பர்கள் ஆயினர். இருவருமே நடுத்தர வர்க்கம். வினோத் புனித சேவியர் காலஜியேட் பள்ளியிலும் சாகர் புனித ஜேம்ஸ் பள்ளியிலும் படித்தவர்கள்.
கல்லூரியில் படிக்கும்போது அவர்கள் இருவருக்கும் வகுப்பறையைத்தாண்டி பொதுவானதாக இருந்தது மொமோ என்கிற உணவுப் பண்டத்தை வாங்கிச் சாப்பிடுவதில் இருந்த ஆர்வம். வினோத்துக்கு பூர்வீகம் நேபாளம் என்பதால் அங்கிருந்து உருவானதாகக் கருதப்படும் மொமோ மீது ஆர்வம் இருந்தது இயற்கை. சாகர் தான் படித்த பள்ளிக்கு வெளியே மொமோ விற்பவரின் கடையில் தின்று ருசி அறிந்தவர்.
“எம் கல்லூரி இறுதி ஆண்டில் எதிர்காலத்தை திட்டமிட்டோம். தெளிவான இலக்கு ஏதும் இல்லை. குழப்பான யோசனைகளே இருந்தன,” என்கிற வினோத்துக்கு 31 வயது. அவர் இந்நிறுவனத்தில் சிஓஓ ஆக உள்ளார்
“நாங்கள் மும்பையில் ஒரு பேக்கரி வைக்கலாம் என நினைத்தோம். ஆனால் மொமோ செய்யத் தெரியும் என்பதால் அதை விற்கும்கடை திறக்கலாம் என்று முடிவு செய்தோம்.” வினோத் இந்த யோசனையைச் சொன்னதும் சாகர் தனக்குப் பிரியமான பொருளே தொழிலாக மாறுவதில் உற்சாகம் கொண்டார்.
ஆனால் கல்லூரி கேம்பஸ் ப்ளேஸ்மெண்டில் பன்னாட்டு வங்கிகளில் நல்ல வேலை கிடைத்தது. அப்போதே ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம்.
”ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். நாங்கள் தொழில் தொடங்க விரும்பினோம்.” ஆனால் யார் முதலீடு செய்வார்கள்? வினோத்தின் தந்தை தனியார் நிறுவன ஊழியர். குறைவான வசதிதான்.
|
சாகர் (இடது) தன் அப்பாவிடம் 30000 ரூ தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தார்
|
அப்போதுதான் சாகரின் குடும்பம் உதவிக்கு வந்தது. “ என் அப்பாவிடம் எங்களுக்கு கடன் கொடுக்க சம்மதிக்க வைத்தேன்,” என்கிறார் சாகர்(30). அவர் இப்போது நிறுவனத்தின் சிஇஓ.
அவர் 30,000 ரூபாய் கொடுத்தார். ஜாதவ்பூரில் உள்ள உறவினர் ஒருவரின் மூன்று மாடி வீட்டின் தரைத்தளத்தை சமையலறையாகப் பயன்படுத்த அனுமதி வாங்கி, வாவ் மொமோ என்ற பெயரையும் வைத்தனர்.
ஒரு மேசையுடன் கூடிய 200 சதுர அடி சமையலறை, இரண்டு பகுதிநேர சமையல்காரர்கள், பக்கத்து மளிகைக்கடையில் கடனுக்கு வாங்கிய பொருட்களுடன் தொழில் தொடங்கியது.
பின்னர் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
தெற்கு கொல்கத்தாவில் கச்டாலா டொல்லிகுஞ்சே என்ற இடத்தில் ஸ்பென்ஸர் ரீடய்ல் கடையில் சின்னதாக ஒரு விற்பனைநிலையம் திறந்தனர். வாடகை மாத விற்பனையில் 18 சதவீதம். இந்த நிலையத்தை அமைக்கவும் பாத்திரங்கள் வாங்கவும் கடன்பெற்ற 30,000 ரூ செலவானது. 29, ஆகஸ்ட் 2008-ல் கடை திறந்தாகிவிட்டது.
“எங்கும் ஆட்டோவில் சென்று கடைகளின் வாசலில் நின்று துண்டறிக்கைகளை விநியோகித்தோம். இலவசமாக சாப்பிட்டுப்பார்க்க அனுமதித்தோம். முதல் நாள் விற்பனை 2,200 ரூ. மாதக்கடைசியில் 53000 ரூ விற்கும் அளவுக்கு உயர்ந்தோம்,” என்கிறார் வினோத்.
விற்பனையைப் பார்த்ததும் ஸ்பென்ஸர் காரர்கள் தங்கள் மற்ற கடைகளிலும் இந்த விற்பனை நிலையம் அமைக்க அனுமதிதர முன்வந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நகரின் பல பகுதிகளில் இதுபோல் சிறு விற்பனை நிலையங்களை வினோத்தும் சாகரும் அமைத்தனர்.
2010-ல் தாங்கள் சம்பாதித்த 14 லட்ச ரூபாயைப் போட்டு சால்ட் லேக் பகுதியில் தனியாக ஒரு உணவகத்தைத் தொடங்கினர்.
|
நாட்டில் இப்போது 67 இடங்களில் கடைகள் உள்ளன
|
அவர்கள் தொடங்கிய அதே சமையலறை 1200 சதுர அடிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. அங்கிருந்துதான் இப்போது நகர் முழுக்க சப்ளை ஆகிறது. அந்த கட்டடத்தின் முதல்தளம் அவர்களின் நிறுவனத் தலைமையகமாகவும் உள்ளது.
2011-ல் கொல்கத்தாவுக்கு வெளியே தங்கள் முதல்கடையை பெங்களூருவில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் தொடங்கினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த கடைகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. கொல்கத்தாவில் 34, மீதி டெல்லி, பெங்களூரு, சென்னை, புனே, கொச்சி ஆகிய நகர்களில்.
கொச்சியில் மட்டும் ப்ரான்சைஸ் அளித்துள்ளனர். மற்ற இடங்களில் எல்லாம் சொந்தக் கடைகளே. ஏஜேசி போஸ் சாலையில் 1200 சதுர அடி அளவுக்கு உள்ளதே இவர்களின் பெரிய உணவகமாகும்.
தினமும் 1.5 லட்சம் மொமோக்களை நாடு முழுக்க இவர்கள் விற்பனை செய்கிறார்கள். அதில் 85000 கொல்கத்தாவில் மட்டும். 850 பேர் நாடு முழுக்க வேலை செய்கிறார்கள். 30 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.
16 வகை மொமோக்கள், -அவித்தது அல்லது வறுத்தது, காய்கறி, காளான், பன்னீர், மீன், கோழி, இறால் போன்றவற்றை உள்ளே கொண்டது போன்ற வகைகள்- இங்கே கிடைக்கும். சாக்லேட் மொமோ கூட உண்டு!
2021-ல் 400 கடைகள் வரை விரிவாக்க திட்டமிடுகிறார்கள். ஐக்கிய ராஜ்யம், அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளுக்கும் விரிவாக்கத் திட்டம்.
அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களே அவர்களின் பயிற்சிகளாக அமைந்துள்ளன. “ஆரம்பத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கான அடிப்படை விஷயங்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது,” என்கிறார் வினோத்.
|
சமையலறையில் மொமோ செய்கிறார் வினோத்
|
“நாங்கள் ஆரம்பித்துவிட்டோம். ஆனால் அரசு அதிகாரிகள் முறையான உரிமம் பெறவில்லை என்று அபராதம் போட்டனர். இப்படி பிரச்னைகளுடன் தான் பயணித்தோம். தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டோம். இப்போதும்கூட நாங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறோம்,” என்கிறார் அவர்.
அவர்கள் எளிமையானவர்களாக இருக்கலாம். ஆனால் வாவ் மொமோவுக்கு 100 கோடி மதிப்பிட்டிருக்கிறது ஜூலை 2015-ல் இந்திய ஏஞ்சல் நெட்நொர்க்(ஐஏஎன்). 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடும் கிடைத்துள்ளது.
நிறுவனத்தில் சாகர் மற்றும் வினோத் சமமான பங்குகள் வைத்துள்ளனர். ஐஏஎன் 10 சத பங்குகளும் பணிபுரியும் தொழிலாளர்கள் 10 சத பங்குகளும் கொண்டுள்ளனர்.
சாதனை செய்திருந்தாலும் வினோத்தும் சாகரும் எளிமையாக இருக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு தங்கள் வருமானத்தில் இருந்து பங்களிக்கிறார்கள். ஏழை மக்களுக்காக புற்றுநோய் மருத்துவமனைகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் வெற்றியின் ரகசியம்? “எளிமை, ஆர்வம், மனந்தளராத அணுகுமுறை,” என்கிறார்கள் அவர்கள்.
அதிகம் படித்தவை
-
சேவையில் லட்சாதிபதியான ஸ்ருதி
மனித வாழ்க்கையின் முடிவில்தான் ஸ்ருதியின் வணிகம் தொடங்குகிறது. இளம் மென்பொறியாளராக இருந்த ஸ்ருதி, தனியாகத் தொழில் செய்வதற்கு வித்தியாசமான இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
வேர்களால் கிடைக்கும் வெற்றி
அகமதாபாத் ஐஐஎம்மில் படிப்பு முடித்தால் கை நிறைய சம்பளத்துக்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலை செய்யப்போவார்கள். ஆனால் கௌஷ்லேந்திரா, பீஹாரில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். ஜி.சிங் எழுதும் வெற்றிக்கதை
-
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு
கொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
ஆர்வத்தால் அடைந்த வெற்றி
ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
விளம்பரங்கள் தந்த வெற்றி
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
பயணங்கள் முடிவதில்லை!
அவர் ரஜினிகாந்த் போல ஒரு சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ஆனால் பசித்த இரவுகளும் பிளாட்பார தூக்கமும்தான் காத்திருந்தன. பி சி வினோஜ் குமார், இன்று 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவன உரிமையாளரைச் சந்திக்கிறார்.