கிராமத்தில் ஐடி நிறுவனம்; லாக்டவுனிலும் சம்பள உயர்வு; அசத்தும் பஞ்சாபி பெண் தொழிலதிபர்!
30-Oct-2024
By சோபியா டேனிஷ் கான்
பஞ்சாப்
சிம்பா க்வார்ட்ஸ் எனும் ஐ.டி நிறுவனம், பஞ்சாப் மாநிலத்தில் தாங்க்ரா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. வரும் டிசம்பர் 2020 வரை ஒருவரைக் கூட வேலையை விட்டு அனுப்புவதில்லை என்று இந்த நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமது ஊழியர்களுக்கு இந்த நிறுவனம் சம்பள உயர்வு அளித்திருக்கிறது. அதுவும் தற்சமயம் வழக்கமான வாய்ப்புகளில் 40 சதவிகிதம் குறைந்து விட்டநேரத்தில். “இந்த கொரோனா காலத்தில் இது அவசியமானது என்பதால், சம்பளத்தை உயர்த்துவது என்ற அறிவிப்பை நேரடியாக வெளியிட்டேன்,” என்கிறார் நிறுவனத்தின் நிறுவனரான மந்தீப் கவுர் சிந்து.
“சம்பளம் கொடுக்க ரூ.30 லட்சம் வரை கடன் வாங்க வேண்டியிருந்தாலும் அதை
நான் பெரிதாக நினைக்கவில்லை. இந்த சம்பள உயர்வு முடிவின் விளைவாக
அனைத்து ஊழியர்களும் இரண்டு மடங்கு உழைப்பை நிறுவனத்துக்குக் கொடுக்கின்றனர். அதனால் இந்த கடினமான நேரத்திலும் 30 சதவிகித வணிகத்தை இன்னும் பெற்று
வருகின்றோம்.”
மந்தீப் கவுர் சித்து, தமது சொந்த கிராமத்தில் ஐடி நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அங்கு அவர், ஐஐடி மற்றும் ஐஐஎம்-களில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கின்றார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
உள்ளூர் பெண்ணான சித்து, தமது கணவர் மந்தீப் சிங் உடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனத்தில் ஐஐடி மற்றும் ஐஐஎம்-ஆகியவற்றில் படித்த பட்டதாரிகள் மட்டுமின்றி உள்ளூர் திறமையாளர்கள் உள்ளிட்ட 50 பேர் பணியாற்றுகின்றனர். அவரது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 2 கோடி ரூபாயாக இருக்கிறது. “2013-ம் ஆண்டின் முடிவில் நான் சிம்பா கார்ட் என்ற இ-வணிக இணையதளத்தைத் தொடங்கினேன்.இந்த தளத்தில் மின்னணு பொருட்கள் முதல் செருப்புகள் வரைஅனைத்தையும் விற்றேன்,” என்று நினைவு கூர்கிறார் 32 வயதாகும் சித்து. “முதல் ஆண்டு வருவாய் ஒரு கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், நிகர லாபம் உண்மையில் சேரவில்லை. எனவே, அதில் கவனத்தைக் குறைப்பது என்று தீர்மானித்தோம். அடுத்த ஆண்டு, சிம்பா க்வார்ட்ஸ் என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கினோம் ஆலோசனை, மென்பொருள் முன்னெடுப்பு, வீடியோ எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய சேவைகளை வழங்கி வருகின்றோம்.” சித்துவின் தந்தை அமிர்தசரஸ் நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள டாங்க்ராவில் ஒரு மாவு மில் வைத்திருக்கிறார். அவரது தாய் குடும்பத்தலைவி. தமதுகுழந்தைகளுக்கு கல்வி அளிப்பதுதான் அந்த தந்தையின் நோக்கமாக இருந்தது. சித்துவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். சித்து படிப்பில் சுட்டி. பள்ளி, கல்லூரி படிப்புகளில் முதல் இடங்களைப் பிடித்தார். அவரது வீட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கான்வென்ட் பள்ளியில் சித்து படித்தார். 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றபின்னர், அவரது வீட்டில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள லவ்லி புரபசனல் பல்கலைக்கழகத்தில் பிபிஏ+எம்பிஏ என்ற ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் அவர் சேர்ந்தார்.
சித்துவின் தந்தை சொந்தமாக டாங்க்ராவில் ஒரு மாவு மில் வைத்திருக்கிறார். அவரது தாய் குடும்பத்தலைவி |
அவரது பள்ளி நாட்களைப் போல வேன் இல்லாமல், ரயில் அல்லது பஸ் மூலம் தினமும் 120 கி.மீ பயணிக்க வேண்டி இருந்தது. ஒரு வகுப்பைக் கூட தவறவிட்டதில்லையாம். “என்னை விட பத்து வயது குறைவான என்னுடைய சகோதரருக்கும், எனக்கும் கல்வி அளிப்பது மட்டுமே தமது சூழல் மாற்றுவதற்கான வழி என்பதை என் தந்தை உணர்ந்திருந்தார். எனவே, நான் முழு மனதுடன் என்னுடைய கல்வியைப் பயின்றேன். “ “நான் எப்போதுமே பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடிப்பேன். கல்வி உதவித்தொகைக்கு இடையிலும், ஒவ்வொரு சமயமும் பல்கலைக்கழக கட்டணம் செலுத்தாமல் ஒரு குறிப்பிட்ட தொகை எப்போதுமே நிலுவையாக இருந்தது,” என்கிறார் ஒளிவு மறைவின்றி. பத்தாவது செமஸ்டரின் போது, தொழிலக பயிற்சிக்கு செல்வதற்கு மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. “என்னுடைய வகுப்பில் ஒரே ஒரு பெண்ணாக நான் மட்டும்தான் அந்த பயிற்சியை மேற்கொண்டேன். நான் கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமுக்கு அனுமதிக்கப்படமாட்டேன் என்பதுதான் இதன் அர்த்தமாக இருந்தது. ரஹேஜா குழுமத்தின் ஹைபர் சிட்டியில் நான் பயிற்சி பெற்றேன். அங்கு 2011-ம் ஆண்டு 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் எனக்கு வேலை கொடுத்தனர்,” என்கிறார் அவர். அந்தப் பணத்தை அவரது தாயிடம் கொடுத்து விட்டார். கல்லூரி கட்டணம் நிலுவையில் இருந்ததால் அதை அவரது தாய் கட்டினார். ஆகையால் அந்தப் பணத்தை வைத்து எதையும் செய்ததை அவரால் நினைவில் கொள்ள முடியவில்லை. 2012-ஆம் ஆண்டு அவர் பணியாற்றி வந்த அதே மாலில் பங்காங் நகரைச் சேர்ந்த ஒரு ஆடம்பர வகை நகை பிராண்ட் ஆன பிரிமா கோல்டு, கடையைத் திறந்தது. இதன் மூலம் சித்து ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டார். விலை உயர்ந்த நகைகளை விற்பனை செய்யும் அந்த கடை, சந்தைப்படுத்துவதற்கான ஆட்களைத் தேடியபோது, மால் அதிகாரிகள் சித்துவின் பெயரைப் பரிந்துரை செய்தனர்.
பிரிமா கோல்டு நிறுவனத்தில் வேலை செய்த குறுகிய காலத்தில் தமது சந்தைப்படுத்தும் திறன்கள், ஒப்பந்தங்களை இறுதி செய்யும் திறன்களை வலுப்படுத்திக் கொண்டார் |
“அவர்கள் எனக்கு இரண்டு மடங்கு சம்பளம் தர தயாராக இருந்தனர். அங்கு நான் பிராண்ட் முன்னெடுப்பு பணிகள் மற்றும் அத்துடன் நிறுவனத்தின் விற்பனை ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டேன். வடிவமைப்பு நகை என்ற வகையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு தங்க நகை செட் 12-15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.” “எங்களுக்கு உயர் மட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். பிரபல கிரிக்கெட்வீரர் நவஜோத் சிங் சித்து மற்றும் அவரது மனைவி எங்கள் கடைக்கு தொடர்ந்து வந்தனர். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் நகைகளை எல்லாம் எளிதாக விற்க முடிந்தது,” என்றார் அவர். எனினும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப்பின்னர் அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. பல்வேறு தொழில் யோசனைகள் குறித்து சிந்திக்க ஆரம்பித்தார். 2013-ம் ஆண்டு மந்தீப் சிங்கை அவர் திருமணம் செய்தார். அவருடன் அவர் தமது உணர்வுகளை மட்டுமின்றி, அவருடைய முதல் பெயரையும் பகிர்ந்து கொள்கிறார். அவரது கணவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். தமது மனைவி கிராமத்தில் தொழிலைத் தொடங்குவதற்கு அவரும் ஆதரவாக இருந்தார். தங்களது தொழில்நிறுவனத்தைத் தொடங்கியபின்னர், மந்தீப் சிங்குக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. எனவே அங்கு குடிபெயர்ந்தார். இப்போது சித்து சில மாதங்கள் அமெரிக்காவில் அவருடன் வசிக்கின்றார். அப்போது சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களை கட்டமைக்கும் வகையில் அவர் நேரத்தை செலவிடுகிறார். தமது பணி அனுபவம் பற்றி பேசும்போது, தமது சந்தைப்படுத்தும் திறன்கள் காரணமாக தமக்குக் கிடைக்கும் 10 வாய்ப்புகளில் ஒன்பது வாய்ப்புகளை உறுதி செய்யும் திறன் பெற்றுள்ளதாகக் கூறுகிறார். “சந்தைப்படுத்துதலில் என்னுடைய அனுபவம் மற்றும் நிபுணத்துவம், சிம்பா க்வார்ட்ஸுக்கு சாதகமான நிலையைக் கொடுத்துள்ளது. நான் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றேன். வாய்ப்புகளுக்கான வழிகளை எப்போதும் பின் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை அது உறுதி செய்கிறது,” என்று விவரிக்கிறார்.
ஐடி துறையில் வேலையை விட்டு அனுப்புவது என்பது நடைமுறையாகிப்போன சூழலில் சிம்பா க்வார்ட்ஸ் ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுள்ளனர் |
உலகம் முழுவதும் இருந்து உள்ள அனைத்து வாடிக்கையாளர்களிலும், ஒரு மோசமான வாடிக்கையாளரை கூட எப்போதுமே அவர் எதிர்கொண்டதில்லையாம். அவர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் 4-6 மாத புரஜெக்ட்களுடன் வணிகத்தொடர்பை தொடங்கியவர்கள் இப்போது அவர்களுடன் தொடர்ந்து வணிகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களின் சேவைக்கட்டணம் என்பது மிகைப்படுத்தப்பட்டதாகவோ, குறைவானதாகவோ இல்லை. கிடைக்கும் பணத்துக்கு நல்ல மதிப்பை அவர்கள் கொடுக்கின்றனர். இந்த நோக்கம்தான் வாடிக்கையாளர்கள் வளர்வதை உறுதி செய்கிறது. அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்கிறது என அவர் குறிப்பிடுகிறார். “ஒரே ஒரு ஊழியருடன் நாங்கள் தொடங்கினோம். தேவையின் அடிப்படையில் மேலும் பலரை வேலைக்கு எடுத்தோம். என்னுடைய ஊழியர்கள்தான் என் முதலீடு என்பதை நான் உண்மையில் நம்புகின்றேன். எனவே, ஐஐடி-ஐஐஎம் பட்டதாரிகள் நேர்முகத்தேர்வுக்காக வரும்போது, அவர்களின் தொழில்நுட்ப திறன்களைப் பரிசோதிப்பதற்கு மத்தியில் பெரும் வெற்றியை நோக்கி நிறுவனத்தை இட்டு செல்லும் சுய உந்துதல் கொண்டவர்களைத்தான் நான் தேர்ந்தெடுக்கின்றேன். பின்னர் அவர்களுக்கு நல்ல சம்பளம் தருகின்றேன்,” என்று தமது குழுவை கட்டமைத்த உத்தியைப் பற்றிக் கூறுகிறார். தவிர சிம்பா க்வார்ட்ஸ் நிறுவனம் உள்ளூர் மக்களையும் வேலைக்காகத் தேர்ந்தெடுக்கிறது. அடிப்படை கல்வி அறிவு கொண்டவர்களை 6000-7000 ரூபாய் வரையிலான சம்பளத்துக்கு தேர்வு செய்கின்றனர். பின்னர் ஆங்கிலத்தில் பேசுதல், மென் திறன் போன்ற பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்கின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்குள் அவர்களில் சிலர் மாதம் 40 ஆயிரம் ரூபாய்வரை சம்பளம் பெறுகின்றனர். அவருடை சகோதரர் மன்ஜோத் சித்து பிடெக் படிக்கிறார். அவருடைய நிறுவனத்தில் 7-8 மணி நேரம் பணியாற்றுகின்றார். “கல்லூரியில் இருந்து திறமையான மாணவர்களை அவர் கொண்டு வந்தார். தங்கள் திறமைக்கு ஏற்ப இந்த மாணவர்கள் 15,000-50,000 வரை சம்பளம் பெறுகின்னர். இணையதளம் வழியே அவர்கள் ஏற்கனவே நிறையக் கற்றுக் கொள்வதால் அவர்களுக்கு கல்லூரி கல்வி என்பது சோர்வடையச் செய்வதாக இருக்கிறது,” என்று விவரிக்கிறார். புதிய அலுவலகம் கட்டுவதற்காக அவர் ஒரு இடத்தை வாங்கி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இப்போது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். இப்போது வரை எந்தவித கடன்களும் இன்றி அவரது நிறுவனம் உள்ளது.
பின்தங்கிய மக்களுக்காக உதவுவதற்கு தன்னார்வ நிறுவனம் ஒன்று நடத்தி வரும் சித்து, ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராகவும் இருக்கிறார். |
ஸ்மைல்ஸ் கேர் என்ற ஒரு தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வரும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில் 390 பிரச்சார நிகழ்வுகளை நடத்தி உள்ளார். தேவையில் இருப்பவர்களுக்கு இதுவரை 50,000 காலணிகளை வழங்கி உள்ளனர். தன் நிறுவன ஊழியர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும் பொழுது, அவர்களும் இது போன்ற சமூகத்தில் பின்தங்கிய மக்கள் மீது அக்கறை கொள்வார்கள் என்று சித்து நம்புகிறார். ரெஸ்டாரெண்ட் நடத்திவரும் இவரது வாடிக்கையாளர் ஒருவர், பொது ஊரடங்கு காரணமாக பொருளாதார அழுத்தத்தில் தவிக்கிறார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து கட்டணம் இல்லாமலேயே சேவைகளை வழங்குகிறார் சித்து. இந்த கடினமான சூழலில் அவர் செய்யும் உதவி இது. 30-40 சதவிகிதம் வரை தொழிலில் சரிவு இருந்தபோதிலும் இன்னும் கூட தொழில்வாய்ப்புகளுக்கான அறிகுறிகள் தெரிவதால் நம்பிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். தாமும் தாழ்வான நிலையில் இருந்து வளர்ச்சி பெற்றவர் என்ற முறையில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் பிரச்னைகளை இந்த டெட்எக்ஸ் பேச்சாளர் உணர்ந்தே இருக்கிறார். “ தொழிலதிபர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சரியான தருணம் இது. இதன்மூலம் பல குடும்பங்களுக்கு உதவமுடியும்,” என்று சொல்லி முடிக்கிறார் சித்து.
அதிகம் படித்தவை
-
சிறிய கடையில் பெரிய கனவு
அரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
-
ஆர்வத்தால் அடைந்த வெற்றி
ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
மளிகையில் மலர்ச்சி!
தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
ஒரு மசால்தோசையின் வெற்றி!
கேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை