வடா பாவ் விற்று 55 லட்சம் கடனை அடைத்தவர்!
24-Jan-2025
By பி சி வினோஜ்குமார்
மும்பை
தீரஜ் குப்தா இனிப்பு மற்றும் பாரம்பரிய உணவுத்தொழிலில் ஈடுபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் டிப்ளமோ, சிம்பயாசிஸ் நிறுவனத்தில் எம்பிஏ. இந்த தகுதிகள் இனிப்பு விற்பனை செய்யும் துறையில் நுழைய தனக்குப் போதுமானவை என்று அவர் நினைத்தார்.
“சாக்லேட்களை எப்படி விற்கிறார்களோ அதே போல் இந்திய இனிப்பு வகைகளையும் விற்கவேண்டும். எல்லா கடைகளிலும் கிடைக்கச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். ரசகுல்லா, குலாப்ஜாமூன் போன்ற இனிப்புகளைச் செய்யும் நிறுவனம் ஒன்றை 15 லட்சரூபாய் வங்கிக் கடனுடன் தொடங்கினேன்.
|
மும்பை புறநகர் மலாடில் தீரஜ்குப்தா 2001-ல் 200 சதுர அடி கடையில் ஜம்போகிங் நிறுவனத்தைத் தொடங்கினார் (படங்கள்: ஹெச்கே ராஜசேகர்)
|
“இனிப்புகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க நிறைய ஆய்வு செய்தேன். ஆனால் இந்த தொழிலில் நஷ்டமே ஏற்பட்டது. அதனால் மேலும் பணத்தை முதலீடு செய்தேன். அப்பா, சகோதரனிடம் கடன் வாங்கினேன்.
“அப்போது எனக்கு 25 வயது. ஒன்றரை ஆண்டுகள் அந்த தொழிலை நடத்தினேன். நிறைய தவறிழைத்தேன். அந்த தொழிலை மூடியபோது 55 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது,” நினைவுகூர்கிறார் தீரஜ். ஆனாலும் அவர் பீனிக்ஸ் பறவை போல் நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இப்போது அவர் ஜம்போகிங் என்ற மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற 29 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யும் துரித உணவகச் சங்கிலியை உருவாக்கி உள்ளார்.
தீரஜ் தன் தந்தைக்கு நன்றி சொல்கிறார். அவர்தான் தீரஜ் நினைத்ததைச் செய்ய அனுமதி அளித்தவர். அத்துடன் இரண்டாவது தொழில் திட்டத்தைத் தொடங்கவும் பணம் கொடுத்தார்.
“என்னுடைய முதல் தொழில்முயற்சி தோல்வியுற்று 5 மாதங்கள் கழித்து 2001-ல் அப்பாவிடம் 2 லட்சரூபாய் கடன் வாங்கி ஜம்போகிங் தொடங்கினேன். மலாட் ரயில்நிலைய வாசலில் முதல் கடை 200 ச.அடி பரப்பில் தொடங்கப்பட்டது.
"அந்த கடையின் மாடியில் 50 சதுர அடியில் என் அலுவலகம். நான்குபேர் வேலை செய்தார்கள். முதல் நாளில் இருந்தே லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தோம். என்னுடைய நிஜமான எம்பிஏ என் முதல் தொழில் அனுபவம்தான் என்று நினைக்கிறேன். என்ன கட்டணம்தான் அதிகம் 55 லட்சம்!” அவர் சிரிக்கிறார். மும்பையில் கோரிகாவோன் கிழக்கில் அவரது கார்ப்பரேட் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.
வடா பாவ் கடை ஆரம்பிக்கும் அவரது யோசனையை ஆரம்பத்தில் யாரும் வரவேற்கவில்லை. தெரு வியாபாரிகள் மட்டுமே வடா பாவ் விற்பார்கள். மதிப்பு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி இதைச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை!
|
70 ஜம்போகிங் கடைகள் உள்ளன அதில் 47 மும்பை, புனேயில் உள்ளன.
|
இப்போது 16 ஆண்டாக ஜம்போகிங் 20 வகையான வடாபாவ்களை விற்பனை செய்கிறது. 70 ப்ரான்சைஸி கடைகள் உள்ளன. மும்பை, புனேயில் மட்டும் 47 கடைகள் உள்ளன. ஹைதராபாத், இந்தூர், பெங்களூரு, லக்னோ, அமராவதி ஆகிய இடங்களில் மீதிக்கடைகள் உள்ளன.
ஜம்போகிங் தொடங்கியதில் இருந்து பல விஷயங்களை தீரஜ் உணர்ந்துள்ளார். இந்நிறுவனமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
|
ஜம்போ கிங் 20 வகையான வடாபாவ் விற்பனை செய்கிறது
|
“புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள், தங்கள் திட்டங்களில் வளைந்து கொடுக்கவேண்டும். தாங்கள் நினைத்ததையே செய்யவேண்டும் என்பதில்லை. எது பலனளிக்கிறதோ அதைக் கண்டுபிடித்து அந்த வழியே செல்லவேண்டும்.
“ஒரு கட்டத்தில் நாங்கள் இந்தியா முழுக்க விரிவுபடுத்தினோம். ஆனால் பல நகரங்களில் வடாபாவுக்கு சந்தை இல்லை என்று பின்னர் உணர்ந்தோம்.
“அதனால் இப்போதைக்கு நாங்கள் மகாராஷ்டிராவுக்கு வெளியே விரிவு செய்வதை நிறுத்தி உள்ளோம். மும்பை, புனேவில் கவனம் செலுத்துகிறோம்.
“இந்த இரு நகரங்களிலும் 200 கோடி ரூபாய் மார்க்கெட் இருப்பதாக நாங்கள் கணக்கிடுகிறோம். புதிய சந்தையில் நுழைவதற்கு முன்னால் நன்றாக விளம்பரம் செய்ய பணம் ஒதுக்க விரும்புகிறோம்,” என்கிறார் தீரஜ்.
|
ஜம்போகிங் கடைவாசலில் கூட்டம் (படம்: சிறப்பு ஏற்பாடு)
|
முதல் ஆண்டு ஜம்போகிங் விற்பனை 40 லட்ச ரூபாய். தீரஜ் தன் கடன்களை அடைக்கத் தொடங்கினார். மூன்று ஆண்டுகள் கழித்து இரண்டாவது கடையை 2003-ல் கண்டிவிலியில் தொடங்கினார்.
தொழில் வளர்ந்தது. விரிவாக்கம் செய்ய கடைகளை நேரடியாகத் தொடங்குவதா ப்ரான்சைஸ் முறையில் தருவதா என்று குழப்பம் ஏற்பட்டது. கடைசியில் பிரான்சைஸ் மாதிரியையே பின்பற்ற முடிவு செய்தார்
“முதல் மூன்று கடைகள் எங்கள் சொந்தக்கடைகள். அதன் பின்னர் பிரான்சைஸி கொடுக்க முடிவுசெய்தோம். முதல் மூன்று கடைகளையுமே கூட அப்படிக்கொடுத்துவிட்டோம்.
“2009-ல் சில நிதி நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்து 35 சதவீதம் பங்குகளைப் பெற்றன. அப்புறம் கடைகள் அனைத்தும் எங்களுக்குச் சொந்தமாக இருந்தால் நல்ல கட்டுப்பாடு இருக்கும் என நினைத்தோம்.
“எனவே ப்ரான்சைஸ் கொடுத்ததை மெல்லத் திரும்பப்பெற ஆரம்பித்தோம். 23 கடைகள் சேர்ந்தன. 153 தொழிலாளர்கள். அதன் பின்னர்தான் ஆள் சேர்ப்பு, நிர்வாகம் இதிலேயே நேரம் செலவாகிறது என்று உணர்ந்தேன்.
|
தீரஜ் தன் தயாரிப்புகளில் ஒன்றை ருசிக்கிறார்
|
“கடைகளை நடத்துவது நம் வேலை அல்ல என்று உணர்ந்து பழையபடி பிரான்சைஸ் கொடுத்துவிட்டோம்,” என்கிறார் தீரஜ்.
“ப்ரான்சைஸ் எடுக்க 15- 20 லட்ச ரூபாய் கட்டவேண்டும். 8 சதவீதம் விற்பனையில் ராயல்டி கொடுக்கவேண்டும். அடுத்த ஆண்டிலிருந்து இதை 10 சதவீதம் ஆக்கப்போகிறோம். ஏனெனில் விளம்பரம் அதிகம் செய்யவிருக்கிறோம்,” என்கிறார் அவர்.
இப்போது அவர் ப்ரான்சைஸ் தருவதில் தன் கவனத்தைச் செலுத்துகிறார். தயாரிப்புகளை விநியோகம் செய்ய வலுவான கட்டமைப்பை உருவாக்கி உள்ளார்.
“மும்பை மற்றும் புனேயில் மைய சமையலறைகள் இரண்டு வைத்துள்ளோம். லூதியனாவில் சாஸ் தயாரிக்கும் ஆலை உள்ளது. நியூயார்க்கில் கேட்டாலும் மறுநாளே அனுப்பமுடியும். இதை உருவாக்குவதில் நிறைய தொழில்நுட்பம் செலவிட்டுள்ளோம்.” என்கிறார் தீரஜ்’
கல்லூரியில் எம்பிஏ படிக்கும்போது அவர் ரீட்டா என்கிற கேரள மாணவியை நேசித்தார். தன் முதல் தொழிலைத் தொடங்கியபின்னர் அவரையே திருமணம் செய்துகொண்டார்.
|
விளம்பரம் செய்ய போதுமான நிதி சேரும்போது பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வது தீரஜின் திட்டம்
|
பிரச்னைகளின் போது ரீட்டா உறுதியாக உடனிருந்தார். “அவர் இப்போது சொந்தமாக நிறுவனம் நடத்துகிறார். எங்களுக்கு ஆரம்பத்தில் அவர்தான் மார்க்கெட்டிங், பிஆர் செய்தார். இப்போது மற்ற நிறுவனங்களுக்கும் செய்கிறார்,” விளக்குகிறார் தீரஜ்.
வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டன், மெக்டொனால்டின் ரே க்ராக், சோனியின் அகியோ மோரிடோ, ஜே ஆர் டி டாடா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை அவர் விரும்பிப்படித்துள்ளார். தொழில்தொடங்க உந்துசக்தியை அவர்களிடமிருந்து அவர் பெற்றார்.
தீரஜுக்கு நேஹா 14, கரண் 10 என இரு குழந்தைகள். நேஹா தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீராங்கனை. ஆனால் இப்போது துப்பாக்கி சுடுதலில் இறங்கி உள்ளார்.
“ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும்போட்டியில் தங்கம் வெல்வது அவளது கனவு,” என்கிறார் தீரஜ். 2018-ல் ஜம்போகிங்கை 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனமாக ஆக்கவேண்டும் என்பது தீரஜின் உடனடி இலக்கு!
அதிகம் படித்தவை
-
வேர் ஈஸ் த பார்ட்டி?
வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
விரக்தியை வென்ற மனோசக்தி!
மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.
-
ஆராய்ச்சி தந்த வெற்றி
அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
தன்னம்பிக்கையின் தூதுவர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
வேகமும் வெற்றியும்
திருச்சி கைலாசபுரத்தில் பிறந்து வளர்ந்த அன்சார், சிறுவயதில் மெக்கானிக் ஷாப்புகளில் பொழுதைப் போக்குவது வழக்கம். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ரூ.10 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்
தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை