ஒரு லட்சம் முதலீடு; 30 கோடி வருவாய்! அசத்தும் ஆந்திர இளைஞர்!
11-Sep-2024
By சோபியா டேனிஷ்கான்
ஹைதராபாத்
சிவாஜி என்ற தமிழ்ப் படத்தில் எப்படி அமெரிக்காவில் இருந்து திரும்பும் ரஜினி, இந்தியாவில் தொழில் தொடங்க நினைப்பாரோ அதுபோல் ஆசைப்பட்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த அரவிந்த் அரசவில்லி.
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில், 26 வயதில் அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள குளோப் பல்கலைக்கழகத்தில் அதிக சம்பளம் பெற்று வந்த வேலையில் இருந்து அரவிந்த் அரசவில்லி விலகினார். பின்னர் தனது சொந்த ஊரான ஆந்திரபிரதேசத்தில் உள்ள விஜயவாடாவுக்கு திரும்பி வந்த அவர், 2012ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீட்டில் வெளிநாட்டில் படிப்பதற்கான கல்வி ஆலோசனை மையத்தைத் தொடங்கினார்.
9 ஆண்டுகள் கழித்து, 170
பேர்
பணியாற்றக்கூடிய, ஆண்டு வருவாய் ரூ.30 கோடி ஈட்டும் இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர் ஆகியிருக்கிறார்.
அரவிந்த் அரசவில்லி, எக்செல்லா
கல்வி குழுமம் என்ற ஒரு வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனத்தை விஜயவாடாவில் ரூ.1 லட்சம்
முதலீட்டில் தொடங்கினார்(புகைப்படங்கள்: சிறப்பு
ஏற்பாடு)
|
“விஜயவாடாவில் தொழிலக பொறியியல் இளநிலைப் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் எம்பிஏ படிப்பது என்று தீர்மானித்தேன்,” என்கிறார் முதல் தலைமுறை பட்டதாரியான அரவிந்த். வெளிநாட்டில் எம்பிஏ படிப்பதற்காக அரவிந்த் ரூ.65 லட்சம் கல்வி கடன் வாங்கினார். “2009ஆம் ஆண்டு மினசோட்டா வணிகப்பள்ளியில் எம்பிஏ படித்தேன். பின்னர் குளோப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சேர்க்கை அலுவலராக 2010ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 40,000 அமெரிக்க டாலர்(அந்த காலகட்டத்தில் தோராயமாக ரூ.20 லட்சம்) சம்பளத்தில் பணியாற்றினார். “என்னுடைய சம்பாத்தியத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் என்னுடைய கல்விக்கடனை நான் திருப்பிச் செலுத்தினேன்.” அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை ஆலோசகராக அனுபவம் பெற்ற அவர், 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். விஜயவாடாவில் ஒரு வெளிநாட்டு கல்வி ஆலோசனை மையத்தை எக்செல்லா கல்வி குழுமம் என்ற பெயரில் தொடங்கினார். வெளிநாட்டில் உள்ள சில நல்ல கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு எக்செல்லா வழிகாட்டியது. படிப்பை முடித்ததும் வேலை கிடைக்கவும் உதவியது. தவிர மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறவும் உதவி செய்தது. “ஓர் அறை மட்டுமே கொண்ட அலுவலகத்தில் என்னுடைய நிறுவனத்தைத் தொடங்கினேன். முதல் ஏழுமாதம் எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை,” என்ற அவர், “தினந்தோறும் அலுவலகம் சென்றேன். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தேன். எந்த ஒரு வாடிக்கையாளரும் கிடைக்கவில்லை. பின்னர் நல்ல விஷயங்கள் நடந்தன. பலன் பெற்றவர்கள் கூறியதன் அடிப்படையில் பரிந்துரையின் பேரில் பலர் தேடி வந்தனர்”
அரவிந்த் தனது எக்செல்லோவை ரூ.1 லட்சம்
முதலீட்டில் தொடங்கினார். இன்றைக்கு
ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம்
சம்பளம் தருகிறார்
|
“இன்றைக்கு எங்களுக்கு தெலங்கானா, ஆந்திரா, அமெரிக்கா ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5000 விண்ணப்பங்களை பரிசீலிக்கின்றோம். இதில் 100க்கும் அதிகமான மாணவர்கள் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேரமுடிகிறது.” ஒவ்வொரு விண்ணப்பதாரரிடம் இருந்தும் 100 அமெரிக்க டாலர் சேவை கட்டணமாக வசூலிக்கின்றனர். முதன்மை சேவை வாடிக்கையாளர்களிடம் இருந்து தலா 1000 டாலர் சேவை கட்டணம் வசூலிக்கின்றனர்.அவர்களுக்கு கூடுதலாக சில சேவைகளை வழங்குகின்றனர். “இந்த வாடிக்கையாளர்களை நானே கவனித்துக் கொள்கின்றேன். இப்போதைய தருணங்களில் மிகவும் குறைவாகத்தான் நேரம் கிடைக்கிறது. மாணவர்களுக்கு ஆலோசனை தருகின்றேன். விண்ணப்பம் எழுதுவதற்கான வழிமுறைகள் குறித்தும் வழிகாட்டுகின்றேன். வெளிநாட்டில் வாழ்வதற்கும் அவர்களை தயார்படுத்துகின்றேன்,” என தமது முதல் நிறுவனம் குறித்து விவரிக்கிறார் அரவிந்த். அதன் இப்போதைய ஆண்டு வருவாய் ரூ.5 கோடியாக இருக்கிறது. அரவிந்த் தன்னுடைய இரண்டாவது நிறுவனமான பரம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை அமெரிக்காவில் இருந்தபோது தங்குவதற்கு வீடாக வாடகைக்கு எடுத்திருந்த மினியாபோலிஸ் அபார்மெண்ட்டில் 2015ஆம் ஆண்டு தொடங்கினார். “டெவோப்ஸ் தொழில்நுட்பத்துடன் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் வளர்ச்சி பெற்று வருவதை அறிந்தேன். மினியாபோலிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறிய நிறுவனங்களை அணுகினேன். நிறுவனத்தின் சர்வருக்கு உள்ளேயே தரவுகளை சேமித்து வைப்பதற்கு பதிலாக கிளவுட் தொழில்நுட்பத்தின் சாதகங்களை விரிவாக எடுத்துக் கூறினேன்,” என்கிறார் அரவிந்த். “உள்ளூர் நிறுவனங்களில் இருந்து சாதகமான பதில்களை பெற்றோம். நிறுவனங்களுக்காக கிளவுட் கம்யூட்டிங் முறைகளை கட்டமைப்பதற்கான ஆர்டர்கள் வரத்தொடங்கின.” பெஸ்ட் பை என்ற அமெரிக்காவின் பெரிய மின்னணு சங்கிலித்தொடர் நிறுவனம், சேஸ்பேங்க், வால்மார்ட், க்ரோகர் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்றனர். அமெரிக்க நிறுவனத்துக்கு ஊழியர்கள் தேர்வு செய்யும்பணி எளிதாக இருந்தது. “எங்களிடம் தகுதிவாய்ந்த ஊழியர்களைக் கொண்ட குழு இருந்தது. எங்களுடைய ஆலோசனை நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களை நாங்கள் வேலைக்கு தேர்வு செய்தோம்,” என்றார் அரவிந்த்.
தனது அலுவலக ஊழியர்களுடன் அரவிந்த் |
அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள நிறுவனத்தில் 100 ஊழியர்கள் உள்ளனர். மீதம் உள்ள ஊழியர்கள் இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். இந்திய அலுவலகம் ஐதராபாத்தில் இருக்கிறது. இது, அமெரிக்காவில் உள்ள குழுவுக்கு பின்தள ஆதரவை வழங்குகிறது. “2015ஆம் ஆண்டு ஆரம்பகால கட்டத்தில் நிறுவனத்தைத் தொடங்கியபோது, கணக்காளராக பணியாற்றினேன். தவிர மனிதவள மேலாளராகவும் நானே பணியாற்றினேன். ஊழியர்களை பணிக்கு சேர்க்க அப்போது பணம் இல்லை. இன்றைக்கு நாங்கள் 1,20,000 அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.85 லட்சம்) ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளமாக தருகின்றோம்.” நிறுவனத்தின் முதலாம் ஆண்டில் 2015-16ல் ஆண்டு வருவாய் 40,000 அமெரிக்க டாலராக இருந்தது. இன்றைக்கு இது வான் அளவுக்கு உயர்ந்து தோராயமாக ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் அமெரிக்க டாலராக அல்லது ஆண்டுக்கு ரூ.25 கோடியாக இருக்கிறது. நிறுவனமானது பெருந்தொற்று காலகட்டத்திலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றது. புதிய ஊழியர்களையும் வேலைக்கு எடுத்தனர். “ஆறுமாதத்துக்கு முன்பு 6 ஊழியர்களுடன் கனடாவிலும் சேவைகளைத் தொடங்கி உள்ளோம். இந்த ஆண்டின் இறுதியில் மெக்சிக்கோவில் ஒரு அலுவலகம் திறக்க உள்ளோம்,” என்கிறார் அரவிந்த். கிளவுட் கம்ப்யூட்டிங்கில்தான் தொடர்ந்து அவர் முதன்மையாக கவனம் செலுத்துகிறார். அரவிந்த்தின் தந்தை ரமேஷ் அரசவில்லி வங்கி கிளர்க் ஆக தன்னுடைய பணியைத்தொடங்கினார். மேலாளராக பதவி உயர்வு பெற்று அண்மையில் ஓய்வு பெற்றார். அவரும், அவருடைய மனைவி பத்மாவும் இணைந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்திருக்கின்றனர். அரவிந்த்துக்கு உடன் பிறந்த தங்கை தீபிகா என்பவர் உள்ளார். அவர் இப்போது மென்பொருள் பொறியாளராக இருக்கிறார். அரவிந்த் விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தார். அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது அவரது குடும்பம் டெல்லிக்கு குடி பெயர்ந்தது. அவருடைய தந்தை பணியாற்றிய வங்கியில் டெல்லிக்கு மாறுதல் ஆகி இருந்தது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அவரது தந்தை மாறுதல் ஆகிக் கொண்டே இருந்தார். எனவே அரவிந்த் பல்வேறு நகரங்களில் தனது படிப்பைத் தொடர்ந்தார். “நான் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளை டெல்லியில் படித்தேன். அப்போது இந்தி மொழி படித்தேன். ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புகளை நாக்பூரில் படித்தேன். அப்போது மராத்தி மொழியை தெரிந்து கொண்டேன். இப்போதும் கூட இந்த மொழி அறிவு எனக்கு உதவியாக இருக்கிறது,” என்கிறார் அரவிந்த்
அரவிந்த்துக்கு தெலங்கானா, ஆந்திரா, அமெரிக்காவில் அலுவலகங்கள் உள்ளன |
பின்னர், அவரின் குடும்பம் விஜயவாடாவுக்கே திரும்பி வந்தது. 2003ஆம் ஆண்டு புனித ஜான் பப்ளிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். கேஎல் பொறியியல் கல்லூரியில் தொழிலக பொறியியல் படித்தார். இந்தியா, அமெரிக்காவில் அலுவலகங்கள் இருந்ததால் அடிக்கடி இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பயணம் செய்ய நேர்ந்தது. “நான் நிறைய புத்தகங்கள் படித்திருக்கின்றேன். வாரத்துக்கு ஒரு புத்தகம் கூட படித்து முடிக்க முயற்சி செய்திருக்கின்றேன். மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை 2015ஆம் ஆண்டு படித்தேன். அந்த புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது,” என்கிறார் அரவிந்த். இப்போது அவருக்கு 35 வயது ஆகிறது. நாட்டில் உள்ள இன்னும் திருமணம் ஆகாத இளைஞர்களில் அவரும் ஒருவர். வேலையில் பிசியாக இருப்பதால் அவருக்கு திருமணம் நடைபெறுவது தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இப்போது அவர் தனக்கான பொருத்தமான பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார்.
அதிகம் படித்தவை
-
புதிதாய் ஒரு பழைய பிராண்ட்!
பழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
அசத்தும் ஐஏஎஸ்!
மருத்துவரான அல்பி ஜான், குடிமைப்பணித் தேர்வு எழுதி முதன்முயற்சியிலேயே ஐ ஏ எஸ் ஆனவர். துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கிய அவர், திடக்கழிவு மேலாண்மை நிர்வகிப்பில் சிறந்து விளங்குகிறார். சென்னை மாநகரை மேம்படுத்தும் மியாவாகி காடுகளை உருவாக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
சேலைகள் தந்த கோடிகள்
கொல்கத்தாவின் வீதிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று சேலை வியாபாரம் செய்தவர் பைரேன். இன்றைக்கு அவர் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் சேலை மொத்த வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
இளம் சாதனையாளர்
பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
சிறிய கடையில் பெரிய கனவு
அரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை