Milky Mist

Saturday, 13 April 2024

மூன்றரை லட்சம் முதலீடு; 137 கோடி ஆண்டுவருவாய்! ஆடை வடிவமைப்புத் துறையில் அசத்தும் பெண் தொழிலதிபர்!

13-Apr-2024 By சோபியா டேனிஷ்கான்
டெல்லி

Posted 16 Oct 2021

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு, தன் 23வது வயதில் ஐதராபாத்தில் உள்ள டெலாய்ட்  நிறுவனத்தில் பணியாற்றினார் நிதி யாதவ்.  தனது விருப்பமான துறையில் ஈடுபடுவதற்காக வேலையை விட்டு விலகிய அவர், ஃப்ளோரன்சில் உள்ள பாலிமோடா ஃபேஷன் கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் பகுப்பாய்வு மற்றும் விற்பனைக்கான ஓராண்டு படிப்பில் சேர்ந்தார்.

இன்றைக்கு அவர் பெண்களின் அணியும் ஆடைகளை விற்கும் பிராண்ட் ஆன ஏகேஎஸ் கிளாத்திங் என்ற நிறுவனத்தை ரூ.137 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தை கடந்த 2014ஆம் ஆண்டு குருகிராமில் இரண்டு படுக்கை அறை கொண்ட தம் வீட்டில் ரூ.3.5 லட்சம் முதலீட்டில் தொடங்கினார்.


குருகிராமில் இரண்டு படுக்கை அறை கொண்ட  வீட்டில் ரூ.3.5 லட்சம் முதலீட்டில் ஏகேஎஸ் கிளாத்திங் நிறுவனத்தை நிதி யாதவ் தொடங்கினார்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

“ஜாரா பிராண்ட் போல  நவீன ஃபேஷன்  உடைகள் பிராண்ட்டை தொடங்க வேண்டும் என்று நான் ஆர்வமாக இருந்தேன். ஜபோங் நிறுவனத்தில் செயலாக்க மேலாளர் ஆக பணியாற்றும்  என் கணவர், பாரம்பர்ய ஆடைகளில்தான் எதிர்காலத்தில் அதிக தேவை இருக்கிறது என கூறினார்,” என்று ஏகேஎஸின் பயணம் குறித்து நினைவு கூர்ந்தார் நிதி.    தொழிலின் ஆரம்ப காலகட்டத்தில் அவர்களின் இரு படுக்கை அறை கொண்ட தங்கள் வீட்டில் ஒரு படுக்கை அறையை தங்களுடைய வணிகத்துக்கான சரக்குகளை வைக்கும் இடமாக பயன்படுத்தினர்.

“எங்களுடைய முதல் சரக்கு கொள்முதலில் 936 செட் துணிகளை இருப்பு வைத்திருந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது,” என்றார் நிதி. “ஆடைகளை புகைப்படங்கள் எடுத்தோம். அதனை இ-காமர்ஸ் தளங்களில் பதிவேற்றினோம். முதலீட்டு செலவை குறைவாக திட்டமிட்டிருந்தோம்.”

“வீட்டில் இருந்து வணிகத்தைத் தொடங்கியதால், வாடகையை சேமிக்க முடிந்தது. அந்த சமயத்தில் என் மகள் பிறந்து 7 மாதமே ஆகியிருந்த நிலையில் என் மகளையும் கவனித்துக் கொள்ள முடிந்தது.”

அனைத்து வேலைகளையும் நிதி தனியாகவே செய்தார். முதல் ஊழியரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் நியமித்தார்


ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வரை நிதி, எல்லாவற்றையும் தானே செய்தார். அவரே பேக்கேஜிங் செய்தார். பின்னர் வீட்டு வேலையாளுக்கு அதில் பயிற்சி அளித்தார். லைம்ரோடு, ஜபோங் ஆகியவற்றின் வாயிலாகவும், பின்னர் அதே போல மைந்த்ரா வாயிலாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்தார். இந்த நிறுவனங்கள் நிதியின் பிராண்ட் ஆடைகளை அவருடைய வீட்டிற்கு வந்து எடுத்துச் சென்றன.   நிதி, ஜெய்ப்பூரில் இருந்து துணிகளை கொள்முதல் செய்தார். கூடிய விரைவிலேயே, அவருடைய நிறுவனத்தின் துணிகளை ரெடிமேட் ஆக தைத்து தருவற்கு மூன்று தொழிலகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

  “அப்போது ஏற்றுமதி வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இதனால்தான் நாங்கள் குறைந்த அளவிலேயே துணிகளை ஆர்டர் செய்தோம். நாங்கள் 30 நாட்கள் வரை கடன் காலக்கெடு கொடுத்தோம். இது ஒரு கட்டத்தில் 60 மற்றும் 90 நாட்களாக அதிகரித்தது.” அவர்களின் வணிகம் வேகம் பெற்றபோது, வணிகத்துக்கான ஆடைகள் அவர்கள் வீட்டில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. படுக்கை அறையைத் தவிர ஹால் மற்றும் வராண்டாவிலும் சரக்குகளை இருப்பு வைத்தனர். பின்னர் தங்களுடைய ஆடைகளை இருப்பு வைக்க 2015ஆம் ஆண்டு தரைதளத்தில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தனர்.   

2014ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தனிநபர் உரிமை நிறுவனமாக நிதி தொடங்கினார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, யுவதி ஆடைகள் என்ற பெயரில் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினார். ஆரம்பத்தில் இருந்தே, தன்னுடை பிராண்ட்டை நிலை நிறுத்துவதில் நிதி கவனமுடன் இருந்தார். பாரம்பர்ய ஆடைகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபேஷன் துணிகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்தார். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை புதிய ஆடைகளை கொண்டு வந்து அறிமுகம் செய்தனர்.

“2014ஆம் ஆண்டில் ஆன்லைன் விஷயங்களுக்கு மக்கள் ஆதரவு தர யோசித்தனர். ஃபாஸ்ட் ஃபேஷன் பற்றி அவர்கள் கேள்விப்படவே இல்லை. சிறிய அளவில் தயாரித்து, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை புதிய பாணியிலான ஆடைகளை நாங்கள் அறிமுகம் செய்து வந்தோம்,” என்றார் அவர்.

“சிறிய அளவில் நாங்கள் தயாரிக்கும்போது, எப்போதுமே ஒரு பற்றாக்குறை உணர்வு இருக்கும். ஒரு வடிவமைப்பு பிடித்து விட்டால், அதற்காக காத்திருந்து இல்லை என்று ஏமாற்றம் அடைவதை விடவும் வாடிக்கையாளர்கள் உடனே வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.  இதனால், விரைவில் சரக்குகள் தீர்ந்து விடுகின்றன.”

ஒவ்வொரு மாதமும் 300 புதிய வடிவமைப்புகளை குறைந்த எண்ணிக்கையில் அவர்கள் அறிமுகம் செய்கின்றனர்
தாய், குழந்தை ஆடைகள் தொகுப்பு தொடங்கப்பட்டபோது, தம் மகளுடன் சேர்ந்து நிதி மாடலிங் செய்தார்


அவர்களின் தற்போதைய தாய், குழந்தைகளுக்கான கலெக்ஷன், பெருந்தொற்று  ஊரடங்கு காலத்தின்போது தேவைக்கு அதிகமாக உருவாக்கப்பட்டது. “அந்த காலகட்டத்தில் உண்மையில் துணிகள் கிடைக்கவில்லை. பெண்கள் அணியும் உடைகள் என்று வரும்போது பெரும் அளவில் துணிகள் வீணாயின.  அதே துணியைக் கொண்டு குழந்தைகளுக்கான ஆடைகளை உருவாக்கினோம்.”  

நிதியின் வணிகம் சிறிது, சிறிதாக வளர்ந்தது. 2015ஆம் ஆண்டு முதலாவதாக ஒரு ஊழியரை நியமித்தார். அடுத்த ஆண்டு மேலும் மூன்று ஊழியர்களை நியமித்தார். 2018ஆம் ஆண்டில் அவரது கணவரும் நிறுவனத்தில் இணைந்தார். இப்போது ஏகேஎஸ் நிறுவனம் 110 பேர் கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் ஐந்து தையற்கலைஞர்கள், வடிவமைப்பாளர்களைக் கொண்ட குழு, ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நிதியிடம் இருந்து வடிவமைப்பு தொடர்பான குறிப்புகளைப் பெற்று, புதிய வடிவமைப்புகளை உருவாக்குகின்றனர். அதன் பின்னர் அந்த வடிவமைப்புக்கு ஏற்றபடி தையற்கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் மாதிரி ஆடைகளை உருவாக்கி அதனை டெல்லி, ஜெயப்பூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி பெரும் அளவில் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் தரப்படுகின்றன.

  சூரத், அகமதாபாத் மற்றும் ஜெயப்பூரில் இருந்து துணிகளை வாங்குகின்றனர். “டெல்லியில் 50 சதவிகிதமும், ஜெயப்பூரில் 50 சதவிகித ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன,” என்கிறார் நிதி. “பெரிதாக எதையும் செய்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. ஆனால், நாங்கள் சரியானவற்றை செய்கின்றோம் என்பதை சில விஷயங்கள் எங்களுக்கு உணர்த்துகின்றன.’’

மைந்த்ராவின் விரைவு படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏகேஎஸ் இருந்தது என்று நிதி கூறுகிறார்.   இதுவரைக்குமான அவரது தொழில்முனைவு பயணம் குறித்து மகிழ்ச்சியடைவதற்கு நிதிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 

இந்தூரில் கரண் சிங் யாதவ், ராஜ்பாலா யாதவ் என்ற வக்கீல் தம்பதிக்கு பிறந்த நிதி, உடன்பிறந்த சகோதரருடன் வளர்ந்தார். இந்தூர் பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்தார். 2004ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்தார்.

  “பாடுபட்டு கடுமையாக படிக்கின்ற குழந்தையாக நான் இருந்தேன்,” என்றார் அவர்.  “வகுப்பில் முதல் மாணவியாக வரவேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். அந்த மனப்பான்மை என்னுள் புதைந்து விட்டது. நான் என்னுடைய கோடைகால விடுமுறையில் மாலை நேரங்களில் பல்வேறு விதமான ஆடைகளை வரைந்து பார்ப்பதில் விருப்பம் கொண்டிருந்தேன். பின்னாளில் ஃபேஷன் தொழிலில் நான் ஈடுபடுவதற்கான ஒரு முன்னோட்டமாகவே அந்த நாட்கள் இருந்ததாக கருதுகின்றேன்.”

தனது ஓவியம் வரையும் திறன் மற்றும் ஆடைகள் மீதான ஆர்வம் வெறும் பொழுதுபோக்கு என்றுதான் அவர் நினைத்திருந்தார். எனவே, இந்தூரில் உள்ள ஸ்ரீ ஜிஎஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் அறிவியலில் பிடெக்(20054-08) படிக்கச் சென்றார். 
கணவர் சத்பால் யாதவுடன் நிதி


பட்டப்படிப்பு முடித்தவுடன் டெலாய்ட் நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டு பணியாற்றினார். அப்போது அவரது சீனியர்களில் ஒருவர், நிதியின் மனதை அசைக்கும் கேள்வி ஒன்றை கேட்டார். அது அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது.

“அலுவலகத்துக்கு வருவதை சந்தோஷமாக உணர்ந்தது எப்போது?” என்ற கேள்வியை அவர் நிதியிடம் கேட்டார். அப்போது அவர், “ஒருபோதும் இல்லை’’ என்று பதில் சொன்னார். “என்னுடைய விருப்பம்   ஃபேஷன் துறையில்தான் தொடர்ந்து நிலைத்து இருந்தது என்பதை உணர்வதற்கு அதன் பிறகு மூன்று மாதங்கள் ஆனது,” என டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை விவரித்தார் மற்றும் இத்தாலியில் ஃபேஷன் படிப்பில் சேர்ந்ததற்கான சூழல் குறித்தும் கூறினார்.

“முதல் செமஸ்டர் முழுக்க ஜாரா (சர்வதேச ஃபேஷன் பிராண்ட்) குறித்து விரிவாக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். நான் முறையாக ஆடை அணியாமல் இருந்ததால் இத்தாலியில் உள்ள பராடா, ஜாரா கடைகளில் நுழைய முடியாமல் தூக்கி எறியப்பட்டுள்ளேன்,” என்றார் அவர்.

 “இத்தாலியில் நீங்கள் உயர் தரமான அங்காடிகளுக்குள் செல்ல வேண்டும் என்றால் முறையாக ஆடை அணிய வேண்டும், மேக்அப் போட்டிருக்க வேண்டும், நகப்பூச்சு பூசியிருக்க வேண்டும் என்ற  தேவை இருக்கிறது. இதுபோன்ற மரபுகளைப் பின்பற்றாவிட்டால்,வெளியே அனுப்பப்படுவீர்கள். இத்தாலியர்கள் ஃபேஷனில் மிகவும் அக்கறையோடு இருக்கின்றனர்.” ஜியோமெட்ரிக் பிரிண்ட்டுக்கு புகழ்பெற்ற எமிலியோ புச்சி என்ற இத்தாலி ஃபேஷன் பிராண்ட் நிறுவனத்தில் நிதி பயிற்சி பெற்றார். பின்னர் குக்சி என்ற இன்னொரு ஃபேஷன் பிராண்ட்டில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் இந்தியா திரும்புவது என்று முடிவு செய்தார்.

 “நான் குடும்பத்துடன் இருக்க விரும்பியதால், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவதை விடவும் தாய் நாடு திரும்பவே தீர்மானித்தேன்,” என்றார் நிதி. இந்தியா திரும்பிய அவர், மூன்று மாதங்கள் குருகிராமில் உள்ள புகழ்பெற்ற போட்டெகா வெனேடா என்ற ஆடம்பர இத்தாலி பிராண்ட் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றினார். .

 இத்தாலி வேலைவாய்ப்பை மறுத்த நிதி, இந்தியாவில் சொந்த ஊருக்குத் திரும்பினார்

சமூக வலைதளத்தில் அறிமுகமான சத்பால் யாதவ் என்பவரை 2012ஆம் ஆண்டு நிதி திருமணம் செய்து கொண்டார். “நாங்கள் பிபிஎம்மில்(பிளாக் பெர்ரி மெசேஞ்ஜர்) நீண்ட நேரம் பேசிக் கொண்டோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியபோது, நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் நன்றாக பழகியிருந்தோம். எனவே அடுத்த 20 நொடிகளுக்குள் நான் சம்மதம் தெரிவித்தேன்,”என்றார் நிதி.

  அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்த பின்னர், ஒரு தொழில் தொடங்கலாம் என்று அவரை சத்பால் ஊக்குவித்தார். அவர்களுக்கு இரண்டாவதாக 2019ஆம் ஆண்டு சனிதியா என்ற மகன் பிறந்தான்.

“நானும், என்னுடைய அம்மாவும் சின்ன குழந்தையை கவனித்துக் கொள்வோம். மூத்த மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற வேலைகளை சத்பால் கவனித்துக் கொண்டார்,”  என்றார் நிதி.

 “இதே போல அலுவலகத்திலும் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு செய்தோம். அவர் நிதி மற்றும் திட்டமிடலை கவனித்துக் கொள்வார். நான் அழகியல் கலையை கவனித்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வோம். இன்னும் நாங்கள் பிரிக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். ஒருவர் இல்லாமல் மற்றவரால் ஒன்றும் செய்ய முடியாது.”

பெருந்தொற்று காலத்திலும் வளர்ச்சி பெற்ற சில நிறுவனங்களில் ஒன்றாக ஏகேஎஸ் இருக்கிறது. இந்த ஆண்டு நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.165 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • he dreams of creating a rs 1,000 crore turnover company

  ஆயிரம் கோடி கனவு!

  கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

 • Selling popcorn and minting money

  மொறுமொறு வெற்றி!

  சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

 • success through Kitchen

  பணம் சமைக்கும் குக்கர்!

  வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே  சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை

 • costly Mangoes

  மாம்பழ மனிதர்

  மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை

 • The first woman entrepreneur from Nalli family builds family business

  பட்டு சாம்ராஜ்ய இளவரசி!

  நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்

 • Glossy in glass

  கண்ணாடியால் ஜொலிப்பவர்!

  ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம்.  அவர்  12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.