வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது!
30-Oct-2024
By பி.சி. வினோஜ்குமார்
கோயம்புத்தூர்
முப்பது ஆண்டுக்கு முன்னால் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் கோழித்தொழி்லைத் தொடங்கினார் பி.சௌந்தரராஜன். இப்போது 5500 கோடி ரூபாய் தொழில் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய வளர்ச்சிக்குப் பின்னால் சுகுணாவின் நிர்வாக இயக்குநரான சௌந்தரராஜனுக்கு உறங்கக்கூட நேரம் இருக்காது என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் இதற்கு மாறாக தினமும் விரைவாகவே படுக்கைக்குக்குச் சென்று எட்டுமணி நேரம் நிம்மதியாக உறங்குகிறார். இரவு எட்டரை மணிக்குப் படுப்பார். காலையில் ஐந்துமணிக்கு எழுந்துகொள்வார்.
|
1990-ல் சௌந்தரராஜனும் அவரது சகோதரரும் ஒப்பந்த பண்ணை முறையை முதன்முதலாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தனர் |
’’மறுநாள் நன்றாக வேலை செய்யவேண்டுமென்றால் முதல் நாள் உறக்கம் மிக முக்கியம். படுக்கையில் படுத்தால் அரை நிமிட நேரத்துக்குள் தூக்கம் வந்துவிடும்,’’ என்கிறார் 53 வயதாகும் இந்த முதல் தலைமுறைத் தொழிலதிபர். இவர் கோவையிலிருந்து 70 கிமீ தள்ளி உடுமலைப்பேட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.
சௌந்தரராஜனின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். தந்தையின் சொல்படி பதினோராம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு பண்ணைவேலைகளுக்கு வந்துவிட்டவர் இவர். சொந்த உழைப்பில் உயர்ந்த இவர் எதையும் முழுமையாகச் செய்யவேண்டும் என்று விரும்புபவர்.
‘’சுயமாக எதையாவது செய்யச்சொன்னார் என் தந்தை. நான் விவசாயம் செய்ய விரும்பினேன். கல்லூரிக்குப்போய் பட்டம் பெற்றால் வேலை தேடி அலைந்துகொண்டிருப்பேன் என்று அவர் நினைத்தார்,’’ என்கிற சௌந்தரராஜன், முதல் மூன்று ஆண்டுகள் காய்கறி சாகுபடி செய்தார்.
அவருக்கு விவசாயத்தில் 2 லட்சரூபாய் நஷ்டம். கோவையில் ஒரு பர்னிச்சர் கம்பெனியில் ஒன்றரை ஆண்டுகள் சம்பளமில்லாமல் வேலை செய்தார். ஆந்திராவில் விவசாய மோட்டார் கம்பெனி ஒன்றின் விற்பனையைக் கவனிப்பதற்காக ஒரே ஆளாக ஹைதராபாத் சென்றார்.
’’எனக்கு தெலுங்கு, ஆங்கிலம் எதுவும் தெரியாது. ஆனாலும் ஆந்திரா முழுக்க பயணம் செய்து பம்புகள் விற்றேன். விற்பனை, சந்தைப் படுத்தல், கணக்கீடுகளில் எனக்கு நல்ல அனுபவம் கிட்டியது.
‘’ஆனால் அந்த நிறுவனத்தில் வேலை நிறுத்தங்கள் நடந்தன. மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி பண்ணும் அளவுக்கு உற்பத்தி செய்யமுடியவில்லை. எனக்கு ஆர்வம் போய்விட்டது. வேலையை விட்டுவிட்டேன்,’’ என்கிற சௌந்தரராஜன் கிராமத்துக்கே திரும்பினார். தம்பி சுந்தரராஜனுடன் இணைந்து கோழித்தொழிலைத் தொடங்கினார்.
முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சௌந்தரராஜன் கோவையில் அமர்ந்து ஒட்டு மொத்த நிறுவனங்களின் செயல்பாட்டை கவனிக்கிறார். கோழிப்பண்ணைகளுடன் சுகுணா புட்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனமும் இதில் அடக்கம்.
“சுகுணா புட்ஸ் இந்த குழுமத்தின் வருமானத்தில் 98 சதவீதம் பங்களிக்கிறது. இந்தியாவில் 23000 பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதாக உள்ளது,’’ என்கிறார் அவர்.
’’நாங்கள் கிராமப்புற இந்தியாவுக்கு சக்தி ஊட்டுகிறோம். எங்கள் தொலைநோக்குத் திட்டம் பெருமளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்று சொல்வதில் பெருமை அடைகிறோம்,’’ என்று இவர்களின் இணைய தளம் பறை சாற்றுகிறது.
1984ல் இருந்து கோழித்தொழிலில் இருந்துவந்தாலும் 1990ல் தான் சௌந்தரராஜனும் அவரது சகோதரரும் ஒப்பந்தமுறையில் கோழித்தொழில் செய்வதை அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த முறையில் பண்ணையாளர்கள் நிலத்தில் கோழி வளர்க்கத் தேவையான கட்டமைப்பை வைத்திருப்பார்கள். சுகுணா நிறுவனம் குஞ்சுகள், உணவு, மருந்துகளை அளிக்கும்.
எட்டாயிரம் சதுர அடியில் 5000 பறவைகளை வளர்க்க கூடம் அமைக்கவேண்டும். உணவு, நீர் பாத்திரங்கள் எல்லாம் சேர்த்து இதற்கு அந்த காலகட்டத்தில் 1.2 லட்சரூபாய் செலவாகும். இரண்டு ஆண்டில் இந்தப் பணத்தைத்திருப்பி எடுத்துவிடலாம். ஒவ்வொரு 45 வது நாளையொட்டி, பண்ணையாளரிடம் இருந்து கோழியைப்பெற்று, சந்தையில் விற்பார்கள். ஒரு கிலோ கோழிக்கு 50 பைசாவீதம் பண்ணையாளருக்குக் கொடுப்பார்கள் (இப்போது கிலோவுக்கு 5 ரூபாய் வீதம் அளிக்கிறார்கள்).
“2-3 பண்ணையாளர்களை வைத்து உடுமலைப்பேட்டையில் இதைத்தொடங்கினோம். அடுத்த இரண்டு ஆண்டுகள் நாங்கள் கற்றுக்கொண்ட ஆண்டுகள். நல்ல குஞ்சுகளை வளர்ப்பது, பண்ணையாளர்களைக் கையாளுவது, அவர்களின் பொறுப்புகளை வரையறுப்பது போன்றவற்றைக் கற்றுக்கொண்டோம்,’’ என்கிறார் சௌந்தரராஜன்
“இந்த முறை விவசாயிகளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. விவசாயத்தில் கிடைத்த நிலையற்ற வருமானத்துக்கு இது பரவாயில்லை என நினைத்தார்கள்.
“இப்போது 5000 பறவைகளுக்கான முதலீடு சுமார் 6 லட்சரூபாய் வரும். சாதாரணமாக மூன்று ஆண்டுகளில் இதைத்திரும்ப பெற்றுவிட முடியும்,’’ என்கிறார் அவர்.
1997-ல் 40 பண்ணையாளர்கள் இருந்தார்கள். அப்போது வியாபாரம் 7 கோடியைத் தொட்டபோது பிரைவேட் லிமிடட் நிறுவனமாக மாறினார்கள்.
“இது தொடர்ந்து செய்யக்கூடிய தொழில்முறை என்பதை உணர்ந்தோம். அதை மேலும் விரிவுபடுத்தினோம். அப்போது எங்களிடம் 25 பேர் வேலை செய்தனர்,’’ என்கிற சௌந்தரராஜன், நிறுவனத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்தி ஹெச்.ஆர், கணக்குகள், உற்பத்தி, விற்பனை போன்ற பிரிவுகளை உருவாக்கினார்.
தமிழ்நாடு முழுக்க பண்ணையாளர்களிடம் தொடர்புகொண்டு, பத்து மாவட்டங்களில் தங்கள் சிறகுகளை சுகுணா விரித்தது. அவர்களின் கோழி மாநிலம் முழுக்க விற்கப்பட்டு, 2000த்தில் அவர்களின் விற்றுமுதல் 100 கோடி ஆனது.
தமிழ்நாட்டைத்தாண்டி ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கால்பதிக்க அது சரியான தருணமாக இருந்தது. அப்போது ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு சுகுணாவை ஆதரித்தார்.
அதிலிருந்து அவர்களின் வளர்ச்சி வேகமாக இருந்தது. பிற மாநிலங்களிலும் அவர்கள் பரவினார்கள்.
இப்போது சுகுணா 9000 கிராமங்களில் நிலைபெற்றுள்ளது. 18 மாநிலங்களில் 23000 பண்ணையாளர்களுடன் கூட்டணி வைத்துள்ளது. மொத்தமாக 10 கோடி சதுர அடிப் பரப்பளவில் கோழி வளர்க்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு எண்பது லட்சம் கோழிகளை உற்பத்தி செய்கிறார்கள்.
‘’நாடு முழுக்க 250 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் 15-20 தொழிலாளர்கள் உள்ளனர். அணைத்து கிளைகளும் இணையம்மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தொழிலாதார நிர்வாக முறைகளை 2004லேயே நடைமுறைப்படுத்திவிட்டோம்,’’ என்று கூறுகிறார் சௌந்தரராஜன்.
பிறந்து ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை சுகுணா பண்ணையாளர்களுக்கு வழங்குகிறது. உணவு, மருத்துவ உதவி, தொழில்நுட்ப உதவியும் வழங்குகிறது. முழுவதும் வளர்ந்த கறிக்கோழிகளை நாற்பது நாட்களுக்கு பிறகு பெற்றுக்கொள்கிறது.
சராசரியாக ஒவ்வொரு பண்ணையாளரும் 6000 கோழிகளை வைத்திருக்கிறார்கள். உபியில் ஒரு சிலர் 500 கோழிகளும் வைத்துள்ளனர்.
“கோழிகளுக்கு பண்ணையாளர்களின் நேரடி கண்காணிப்பு தேவை. பண்ணையாளர்கள் அல்லாவதவர்கள், தொழில்வாய்ப்பாக இதைச் செய்ய முனைவதை நாங்கள் வரவேற்பது இல்லை,’’ என்கிறார் சௌந்தரராஜன்.
இந்த தொழிலில் இதன்மூலமாக ஒரு சமூகக் கோணமும் உள்ளது. தங்களுடன் தொடர்பில் இருக்கும் பல பண்ணையாளர்களின் வாழ்க்கை உயர்வடைந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
|
புதிய தொழில்துறைகளில் நுழைவது சௌந்தரராஜனின் இப்போதைய திட்டம் |
”அவர்கள் இப்போது நிரந்தர வருமானம் ஒன்றைச் சார்ந்துள்ளனர். நிரந்தரமில்லாத விவசாய வருமானத்தை மட்டும் சார்ந்திருந்த நிலை போய்விட்டது. நல்ல பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பமுடிகிறது. மகள்களுக்கு திருமணம் செய்ய பணம் வைத்திருக்கிறார்கள். இது எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது,’’ என்று அவர் சொல்கிறார்.
கோழிகளின் கழிவு விவசாய உரமாகப் பயன்படுவது இன்னொரு பலன் ஆகும். இதன்மூலம் வேதியல் உரங்களின் பயன்பாட்டுச்செலவு குறைகிறது. வருமானமும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் கோழித்தொழிலில் 18 சதவீதம் சுகுணாவின் கையில் உள்ளது. தங்களின் 250 சுகுணா டெய்லி கடைகள் மூலம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் விற்பனை செய்கிறார்கள். ஆனால், “இந்தியர்களில் 98 சதவிதம் பேர் உயிருள்ள கோழிகளின் இறைச்சியையே விரும்புகிறார்கள்’’ என்று சௌந்தரராஜன் கூறுகிறார்.
பங்களாதேஷில் கோழித்தொழில் துணை நிறுவனம் சுகுணா அமைத்துள்ளது. இருப்பினும் பெரிய அளவில் ஏற்றுமதி சந்தைக்கான திட்டங்கள் இல்லை. தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். ஆண்டுதோறும் 80-100 கோடிகள் வரை ஆண்டு வருமானம் இதில் கிட்டுகிறது.
“இந்த சந்தையில் அமெரிக்கா, பிரேசிலுடன் நாம் போட்டியிட இயலாது. அவர்களே முன்னணியில் உள்ளார்கள். பிரேசிலில் கோழி உற்பத்திச் செலவு குறைவு. ஏனெனில் கோழித்தீவனம், சோளம், சோயா போன்றவற்றின் விலை 20 சதவீதம் குறைவு,’’ என்று அவர் சொல்கிறார்.
புதிய தொழில்களைக் கண்டறிந்து அவற்றில் நுழைவதன் மூலம் குழுமத்தின் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்வது நிர்வாக இயக்குநராக சௌந்தரராஜனின் இப்போதையத் திட்டம். கோழித்தீவனம், தடுப்பூசிகள், முதலீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் கால்பதித்து இருக்கும் இந்நிறுவனம், மடகாஸ்கரில் தங்கம், இரும்புச் சுரங்கத்தொழிலில் இறங்கத் திட்டமிடுகிறது.
“புதிய சந்தைகள், புதிய தொழில்களையும், புதிய வாய்ப்புகளையும் புதிய இடங்களையும் ஆராய்ந்து வருகிறோம்,’’ என்கிற சௌந்தரராஜன் புகழ்பெற்ற நிறுவனங்களின் கல்வி வகுப்புகளில் தொடர்ச்சியாக படித்து தன் அறிவை வளப்படுத்திக்கொள்கிறார்.
கல்லூரிக்குச் செல்லவில்லை என்ற வருத்தம் அவருக்கு இல்லை.
“பட்டம் பெறாத நிலையிலேயே தொழில் தொடங்கியவன் நான், அதுவும் ஒரு விதத்தில் நல்லதே,’’ என்கிறார்.
குடும்பத்துடன் கோவையில் வசிக்கிறார் சௌந்தரராஜன். அவரது மனைவி குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறார். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகன் இரு ஆண்டுகளுக்கு முன் பிகாம் முடித்துவிட்டு தொழிலில் தந்தைக்கு உதவியாக உள்ளார்.
குடும்பத்துடன் கோவை அருகே மேற்கு மலைத்தொடரில் ட்ரெக்கிங் செல்வது அவருக்குப் பிடிக்கும். “ஒவ்வொரு மாதமும் போவோம். குடும்பத்தில் எல்லோருக்கும் இது பிடிக்கும்,’’ என்கிறார். தினமும் நடைப்பயிற்சி, நீச்சலும் உண்டு. மொத்தத்தில் குடும்பப்பாசம் உள்ள, கடுமையான உழைக்கக்கூடிய தொழிலதிபர் சௌந்தரராஜன். தொழில்துறையில் மேலும் மேலும் சுடர்விடும் எல்லா வாய்ப்புகளும் சுகுணா குழுமத்துக்கு இருக்கிறது!
அதிகம் படித்தவை
-
மலையளவாகப் பெருகிய கடுகு!
உபியில் பரேலி என்ற சிறுநகரில் கன்ஷ்யாம் குடும்பம் பரம்பரையாக கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வந்தது. அதை தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி உபியின் எண்ணெய் அரசராக உயர்ந்திருக்கிறார் கன்ஷ்யாம் கண்டேல்வால். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
குப்பையிலிருந்து கோடிகள்
அமெரிக்காவில் தூக்கி எறியப்படும் படுக்கை விரிப்புகளை ஜெய்தீப் சஜ்தே வாங்குவார். இந்தியாவில் உள்ள தொழிற்கூடத்தில் அவற்றை வண்ணமிகு பைகளாக மாற்றுவார். கடந்த ஆண்டு அவர் இத்தொழிலில் பெற்றது 4 கோடி ரூபாய்கள். பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை
-
மொறுமொறு வெற்றி!
சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
தோசைப் ப்ரியர்கள்
பலருக்கு தோசை சாப்பிடப்பிடிக்கும். ஆனால் அதை கல்லில் ஊற்றி சுடுவதற்கு? தமிழரும்தோசைப் பிரியருமான ஈஸ்வர் தமது நண்பர் சுதீப் உடன் சேர்ந்து இதற்காக தோசாமேட்டிக் மிஷினை கண்டுபிடித்தார். இன்றைக்கு நாடு முழுவதும் ஈஸ்வரின் தோசாமேட்டிக் இடம் பிடித்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
நனவான தொழில் கனவு
பள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.