துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்; அவரது வாழ்க்கைப் பயணம்
10-Nov-2024
By நக்கீரன் கோபால்
சென்னை
நக்கீரன் வாரம் இருமுறை இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், 1990ம் ஆண்டில்தான் தேசிய அளவில் பேசப்பட்டார். இரு மாநில போலீஸாருக்கும் தண்ணி காட்டிவிட்டு, தமிழக, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள அடர்ந்த காட்டில் தலைமறைவாக இருந்த சந்தனகடத்தல் வீரப்பனை சந்தித்து நக்கீரன் கோபால் பல பேட்டிகள் எடுத்து வெளியிட்டார். துணிச்சலான பத்திரிகையாளர் என்று அறியப்படும் அவர், தமது வாழ்க்கையில் பல்வேறு போராட்டப் புயல்களைச் சந்தித்துள்ளார். 1988ம் ஆண்டில் முதன் முதலாக நக்கீரன் இதழை தொடங்கியது முதல் வாழ்க்கையில் தாம் சந்தித்த சவால்களைப் பற்றி நம்மிடம் கூறினார்.
“நான் பத்திரிகை துறையில் நுழைவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற பெரிய நோக்கம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை. இந்த துறையில் நுழைவதற்கு என்னிடம் இருந்த ஒரே ஆயுதம், என்னிடம் இருந்த ஓவியத்திறமைதான்
1980ம் ஆண்டில் தராசு வார இதழில் நான் ஒரு லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்தபோது, ஒரு வாரஇதழை எப்படி நடத்துவது, அச்சடிப்பதற்கான பேப்பர்களை எங்கு வாங்குவது என்பது முதல், இதழ்களை எப்படி விநியோகிப்பது என்பது வரை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.
|
நக்கீரன் இதழின் விற்பனை முதல் ஆண்டில் 1.3 லட்சம்பிரதிகளைத் தொட்டது. |
முன்பு என்னோடு வேலை செய்த சிலர் ஒரு இதழ் தொடங்கலாம் என்று யோசனை சொன்ன போது அவர்களுடைய ஆலோசனையை கேட்கும் நிலையில் நான் இல்லை. ஒரு இதழை தொடங்கி வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும். அதற்காக பெரும் முதலீடு தேவைப்படும்.
அப்போது இரண்டு பெரும் பத்திரிகைகளான ஜூனியர் விகடன், தராசு ஆகியவை தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த இதழ்கள் 3.5 லட்சம் பிரதிகள் விற்றன.
நக்கீரன் என்ற டைட்டிலை வைத்திருந்த திரு.கே.சுப்பு அவர்களிடம் இருந்து அந்த டைட்டிலை வாங்கும் வரையிலும் நான் குழப்பத்தில்தான் இருந்தேன். டைட்டிலுக்காக அவர் ஒரு பெரும் தொகையாக, அதாவது 50 ஆயிரம் ரூபாய் கேட்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நக்கீரன் என்ற அந்த டைட்டிலை அவர், எங்களிடம் எந்தவித பணமும் வாங்கிக்கொள்ளாமல் இலவசமாகக் கொடுத்தார்.
என் நண்பர்களின் வலியுறுத்தலின் பேரில், அச்சடிப்பதற்கான பேப்பர் முதல், அச்சடித்தல், பைண்டிங் செய்தல், டைப் அடிப்பது என ஒரு இதழுக்கான முழுமையான பணிகளுக்கான நபர்களை நான் சந்தித்துப் பேசினேன். தராசு இதழில் பணியாற்றியபோது என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையைக் கொண்டு, அப்போது, அவர்கள் எல்லோருமே ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் வரை கடனில் பணிகளைச் செய்து தருவதாகச் சொன்னார்கள். எனவே, ஆரம்ப கட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் பெரிய சுமை குறைந்தது.
ஆரம்பத்தில் நாங்கள் 10க்கு 10 அடி அறையில் இயங்கினோம். அந்த அறையில் ஒரு போன் கூட இல்லை. பக்கத்தில் இருந்த ஒரு டீ கடையில், இருந்த போனை பயன்படுத்திக் கொண்டோம். எங்களுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த டீக்கடைக்காரருக்குக் கொடுத்தோம். அந்த டீ கடையில் ஒரு நபரை இருக்க வைத்து, எங்களுக்கு வரும் அழைப்புகளுக்கான தகவல்களைப் பெற்றோம். ஒவ்வொரு மணி நேரமும் அந்த நபர், எங்களுக்கு வரும் தகவல்களை சொல்லுவார். என்னுடைய ஆரம்ப கட்ட முதலீடு என்பது அப்போது வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான்.
துணிச்சலான பத்திரிகையியலை, நாங்கள் எங்களுடைய பிராண்ட் ஆக கட்டமைத்தோம். முதல் இதழை தொடங்குவதில் இருந்த போராட்டங்கள் பெரும் பாடத்தைக் கற்றுக்கொடுத்த நிலையிலும் துணிச்சலாக டெலிவரி செய்தோம். முதல் இதழ் பணிகளுக்கான வேலைகள் ஒவ்வொன்றையும் கடனில்தான் செய்தோம். முதல் இதழை அச்சுக்கு அனுப்புவதற்கு முதல் நாள், என்னை தொடர்பு கொண்ட பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர், என்னுடைய முன்னாள் உரிமையாளர் பெரும் அளவிலான பிரிண்ட் ஆர்டரை அவருக்குக் கொடுத்திருப்பதாகவும், என்னுடைய இதழின் பிரிண்ட் செய்யும் அதே நேரத்தில் அதையும் பிரிண்ட் செய்து கொடுக்கும் படி கேட்டதாகவும் கூறினார்.
என்னுடைய ஈகோவை குழிதோண்டி புதைத்து விட்டு, என்னுடைய முன்னாள் உரிமையாளர் வீட்டுக்கு அந்த இரவு நேரத்தில் சென்றேன். முதல் இதழை எந்த வித பிரச்னையும் இல்லாமல் அச்சடிக்க அனுமதிக்கும்படி கேட்டேன். என்னை அப்போது சந்திக்க மறுத்தது மட்டும் அன்றி, நான் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டபோது என்னிடம் கடும் கோபத்துடன் பேசினார். இது போன்ற பிரச்னைகளை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன். எனவே, அதில் இருந்தெல்லாம் நான் படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.
1988ல் முதல் இதழை மங்களகரமாக தொடங்குவதற்காக பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தேன். தவிர, அந்த முதல் இதழைத் தொடங்குவதற்காக போஸ்டர் அச்சடிக்க ஆர்டர் கொடுப்பதற்காக சிவகாசி சென்றேன். பூஜை செய்வதற்காக முதலில் 500 பிரதிகள் கிடைப்பதற்கு கூட(18 ஆயிரம் பிரதிகள் அச்சடிப்பதாகத் திட்டமிட்டிருந்தோம்) மிகவும் சிரமப்பட்டோம்.
இதழைத் தொடங்கிய பின்னர், திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லை. எல்லா பிரச்னைகளில் இருந்தும் வெளியே வந்தோம். முதல் ஆண்டில் 1.3 லட்சம் பிரதிகள் விற்பனையைத் தொட்டோம்.
இதழின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, களத்தில் புலனாய்வு செய்வதில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தோம். அரசியல்வாதிகள்-போலீஸ் அதிகாரிகளின் சட்டவிரோதத் தொடர்புகளை அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தோம். இது குறித்து எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், அதில் கவனம் செலுத்தினோம். ஆனால், ஊடக வட்டாரத்தில், மிகவும் சிறிய அளவில்தான் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. அந்த காலகட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை நாங்கள் வெளியிட்டோம். இந்த இருவரின் கட்டுரைகளையும், இதழ் தொடங்கிய ஒரு ஆண்டு கழித்து 1989-ம் ஆண்டில் இருந்து வெளியிட்டோம்.
தேர்ச்சி பெற்ற லே அவுட் ஆர்ட்டிஸ்ட் என்ற வகையில் வீரப்பன் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. 1989ம் ஆண்டில் சீனிவாசன் என்ற மாவட்ட வனத்துறை அதிகாரியை வீரப்பன் கொன்றபோது, போலீஸில் இருந்து எங்களுக்கு ஒரு புகைப்படம் கொடுத்தார்கள்.
வீரப்பன் ஒவ்வொரு முறையும் குற்றத்தில் ஈடுபடும்போதும், அதே புகைப்படத்தையே போலீஸார் திரும்ப, திரும்ப எங்களுக்குக் கொடுத்தனர். ஒரு லே அவுட் ஆர்ட்டிஸ்ட் ஆக, ஏதாவது ஒரு புதிய புகைப்படம் கிடைக்காதா என்று எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால், போலீஸாரிடம் இருந்ததோ ஒரே ஒரு புகைப்படம்தான். அதில் வீரப்பன் சஃபாரி சூட்டில் இருந்தார். உண்மையில் அவர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ள அவரை தேடத் தொடங்கினோம்.
உண்மையில் வீரப்பன் எப்படி இருப்பார், எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்பதையும் போலீசுக்கும், இந்த உலகத்துக்கும் முதன் முதலாக நாங்கள்தான் வெளிக் கொணர்ந்தோம்.
ஆட்டோ சங்கர் வழக்கு, என்ற இன்னொரு வழக்கும் எங்களுக்கு அந்த சமயத்தில் பெரும் புகழைக் கொடுத்தது. அப்போது ஆட்டோ சங்கர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவருடைய வார்த்தைகளில் இருந்து, அவருடைய வாழ்க்கைக் கதையை எங்கள் இதழில் பிரசுரித்தோம்.
நக்கீரனில் வெளியான ஆட்டோ சங்கர் தொடர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர்களுடன் அவருக்கு இருந்த தொடர்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. (பின்னர், பல்வேறு குற்றசாட்டுகளின் கீழ் ஆட்டோ சங்கர் தண்டிக்கப்பட்டார். தூக்கில் போடப்பட்டார்.)
இது போன்ற கட்டுரைகள் எங்களுக்கு பல எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்தது. எனினும், இது எல்லாவற்றிலும் இருந்து கற்றுக் கொண்டு தீர்க்கமாக நடைபோட்டம்.
ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழகத்தின் அரசியல் சூழல் பற்றி எழுதுவது பிரச்னைக்கு உரியதாக இருந்தது. நாங்கள் அ.தி.மு.க பற்றி எழுதியதற்காக 2012-ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி, அ.தி.மு.க-வினரால் எங்கள் அலுவலகம் தாக்கப்பட்டது. போலீஸார் இந்த தாக்குதலை நிறுத்த எந்த நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, அவர்களுக்கு உதவி செய்தனர். அலுவலகத்துக்கான குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பல்வேறு காவல் நிலையங்களில் எங்கள் மீது 245 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. 2001-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் எங்கள் மீதான சட்டவழக்குகளுக்காக 4 கோடி ரூபாய் செலவழித்தோம். இது போன்ற புலனாய்வு பத்திரிகை நடத்தும்போது, பெரும் அளவு பணம் வைத்திருக்க வேண்டும். எதிர்பாரதவிதமாக எங்களுக்கு போதுமான பணம் இருந்தது.
இதே பத்திரிகை தொழிலில் பிறர் எந்தவித சர்ச்சையிலும் ஈடுபடாமல் இருப்பது போல, பாதுகாப்பாக இருக்கும்படி, பலர் பல்வேறு சமயங்களில் எனக்கு அறிவுரை சொல்லி இருக்கின்றனர். ஆனால், அதனை நான் மறுத்திருக்கிறேன்.
நெடுஞ்சாலைத்துறையில் ப்யூனாக பணியாற்றும் தந்தையின் மகனாக என் வாழ்க்கை தொடங்கியது. நான் மாநில அரசின் பெரியார் விருது பெற்றபோது, இத்தனை ஆண்டுகள் நக்கீரனை வெளியிட்டதற்கான மகிழ்ச்சி எனக்கு இதில் கிடைத்தது.
பெரியார் பெயரில் நான் விருது பெற்றது மட்டும் என்னை மகிழ்விக்கவில்லை. அந்த நாளில் என் தந்தையின் மகிழ்ச்சியைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.
உயர் அதிகாரிகள் காரில் ஏறும் முன்பு, அவர்களின் ஃபைல்களை சுமந்து வருவதும், அவர்களுக்காக காரின் கதவுகளை திறந்து விடுவதும் என் தந்தையின் பணியாக இருந்தது. நான் விருது பெற்ற அந்த நாளில், என் தந்தையை அழைத்து வர ஒரு கார் அனுப்பினேன். அதில் அவர் விழாவுக்கு வந்தார். ஒரு மாற்றமாக, அவருக்காக இன்னொருவர் கார் கதவைத் திறந்து விட்டார்.
இந்த அனுபவத்தை என் தந்தை மறக்கவே இல்லை. குடும்பத்தில் இருக்கும் பிறரிடம், ‘இதுவே எனக்கு போதுமானது’ என்று இதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
நான் பயணித்த பாதையை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். பல்வேறு தருணங்களில் இந்த அனுபவத்தைத்தான் நான் பெற்றிருக்கிறேன். இதுதான் என்னை நக்கீரனுடன் இணைத்திருக்கிறது.
நக்கீரன் தொடங்குவதற்கு முன்பு பெரிதாக என்னிடம் எந்த ஒரு லட்சியமும் இல்லை. இந்த பெயர் நிலைத்திருப்பதற்காக இப்போது நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.”
ராதிகா கிரியிடம் சொன்னதில் இருந்து...
அதிகம் படித்தவை
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
வெற்றியாளரின் பயணம்
தன் பதினாறு வயதில் கையில் 25 ரூபாயுடன் கே.ஆர். ராஜா கோவைக்கு வந்து சேர்ந்தார். சாலையோரத்தில் படுத்து உறங்கினார். இன்று அவருக்கு மூன்று பிரியாணிக்கடைகளும் 10 கோடிரூபாய் மதிப்பிலான தங்கும் விடுதியும் உள்ளன. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தோல்விகளில் துவளாத வெற்றியாளர்
தந்தையின் உணவகத்தில் உதவியாளராக இருந்த சரத்குமார் சாகு, இன்றைக்கு 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதனால் அவர் துவண்டு விடவில்லை. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
தேநீர் விற்கும் ஆடிட்டர்
புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை
-
தாத்தா சொல்லை தட்டாதே
ஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.