2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர்! படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே!
08-Oct-2024
By வேதிகா சௌபே
மும்பை
அடிக்கடி அபாயகரமான பெரிய முடிவுகளை எடுப்பதால் பலர் அவரை விசித்திரமான நபர் என்று அழைக்கிறார்கள். பல பெருநிறுவனங்கள் போட்டிக்கு வந்தபோது, இவர் இத்தோடு காலி என்றனர். ஆனால், நானு குப்தா தொடர்ந்து நடைபோட்டார். இந்திய சந்தையில் எது ஒர்க் அவுட் ஆகும் என்ற அவரது உள்ளுணர்வின் மூலம் அந்த நேரத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைத்தார்.
இன்றைக்கு 75 வயதைத் தொடும் அவர், விஜய் சேல்ஸ் (Vijay Sales) எனும் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார். இந்தியா முழுவதும் 76 சங்கிலித் தொடர் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் அவருக்கு இருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் அவரது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3,250 கோடி ரூபாயாக இருந்தது. 2017-18-ம் ஆண்டில் இது 3,700 கோடி ரூபாயைத் தொட உள்ளது.
|
நானு குப்தாவின் முதல் கடை, மாதுங்காவில் தையல் மிஷின் விற்கும் கடையாக இருந்தது. இந்த புகைப்படத்தில் தமது இரு மகன்களான நிலேஷ், ஆஷிஸ் ஆகியோருடன் இருக்கிறார். அவர்களும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
1967-ம் ஆண்டு வெறும் 2,500 ரூபாயுடன் தொழில் பயணத்தை தொடங்கியவர் அவர். அரியானா மாநிலத்தில் கைதால் கிராமத்தில் 1936-ம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் நானு பிறந்தார். தமது 18-வது வயதில், வேலை தேடி கிராமத்தை விட்டுச் சென்றார்.
"1954-ம் ஆண்டில் நான் மும்பைக்கு வந்தேன். வால்கேஸ்வரில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டில் தங்கினேன்," என்று நினைவு கூறுகிறார் நானு. “என் உறவினர் உஷா தையல் மிஷின், மின் விசிறியின் விநியோகஸ்தராக இருந்தார். அவரிடம் நான் சேல்ஸ்மேன் ஆக சில ஆண்டுகள் பணியாற்றினேன்.”
10 ஆண்டுகள் கழித்து, தமது சகோதரர் விஜய் (அவர் 1980ம் ஆண்டு இறந்து விட்டார்) உடன் சேர்ந்து சொந்தமாக, தையல் மிஷின், மின் விசிறிகள் விற்கும் ஒரு கடையை மாதுங்கா பகுதியில் தொடங்கினார். தமது சகோதரர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்ததால் அந்தக் கடைக்கு விஜய் சேல்ஸ் என்று நானு பெயர் வைத்தார். 300 ரூபாய் வாடகையில், 50-60 அடி இடத்தில் மிகச் சிறிய இடத்தில் கடை நடத்தினார். ஆனால், அவரது கனவு மிகப்பெரியதாக இருந்தது.
“மாதுங்காவில் முதல் கடையை நான் தொடங்கியபோது, என்னிடம் 2,500 ரூபாய்தான் இருந்தது. என் மேலும், கடவுள் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. தொடர்ந்து ஒரே எண்ணத்துடன் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,” என்கிறார் நானு.
தையல் மிஷின், மின்விசிறி, டிரான்ஸ்சிஸ்டர்கள் விற்பனையுடன் அவர் கடையைத் தொடங்கினார். 1972-ம் ஆண்டு, மாதுங்கா கடையில், கருப்பு-வெள்ளை டி.வி பெட்டிகள் விற்பனையைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு மாஹிம் பகுதியில் நானு ஒரு கடையை வாங்கினார். 1976-ம் ஆண்டு தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
1982-ம் ஆண்டு வாக்கில், சந்தை பெரும் வளர்ச்சியடைந்தது. அப்போது தான் இந்தியாவில் கலர் டி.வி-க்களின் அறிமுகம் தொடங்கியது. இது நானுவுக்கு முக்கியமான தருணமாக இருந்தது. “எனவே, சந்தையில் புதிதாக வந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு, எங்கள் கடைக்கு அதிக அளவு இடம் தேவைப் பட்டது,” என்று விவரித்தார்.
|
பெரிய கடைகளைத் திறக்க வேண்டும் என்ற நானுவின் ஆர்வம், எப்போதுமே, அந்தத் தொழிலின் நோக்கர்களுக்கு ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தது
|
”இந்தத் தொழிலின் முகமே மாறியது. கலர் டி.வி-க்களின் விற்பனை அதிகரித்தது. கலர் டி.வி-யைப் போல கூடுதலாக ஓனிடா, பி.பி.எல்., வீடியோகான் பிராண்ட்களில் இருந்து வாஷிங் மிஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் சந்தையில் அறிமுகம் ஆயின.”
1986-ம் ஆண்டில், பந்த்ரா பகுதியில் முதல் கிளையை விஜய் சேல்ஸ் தொடங்கியது. 600 ச.அடி இடத்தை வாங்கி அதில் அந்தக் கிளையைத் தொடங்கினர். “அந்த சமயத்தில் சில பிராண்ட்கள் மட்டுமே இருந்தன. எனவே, இது போன்ற பெரிய கடை தேவையில்லை. ஆனால், நமது பொருட்களைக் காட்சிப்படுத்த இதுபோன்ற பெரிய கடை தேவை என்று என் தந்தை முடிவு செய்தார்,” என்கிறார் விஜய் சேல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், நானு குப்தாவின் மூத்த மகனுமாகிய நிலேஷ் குப்தா.
நானுவின் நோக்கமானது, அவர்களுக்கு நன்மை தருவதாகவே இருந்தது. 1994-ம் ஆண்டு இரண்டு பெரிய கடைகளைத் தொடங்கினர். ஒரு கடை சிவாஜி பார்க்கிலும் (700 ச.அடி)., இன்னொரு கடையை ஷியானிலும்(1500 ச.அடி) தொடங்கினர்.
வழக்கமாக இயல்பான சூழலில் தொழில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், 1993-94-ம் ஆண்டில் சாம்சங், எல்.ஜி மற்றும் டேவூ உள்ளிட்ட பிராண்ட்கள் இந்தியாவுக்கு வந்தன. அந்த நிறுவனங்கள் பெரிய குளிர்பதன பெட்டி, பெரிய டி.வி-க்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தன. எனவே, அவர்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு பெரிய இடம் தேவைப்பட்டது.
“மாஹியில் உள்ள எங்களுடைய முதல் கடைக்கு அருகில் இரண்டாவதாக 2500 ச.அடியில் ஒரு கடையை வாங்கினோம். அது இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை கடையின் அளவை அதிகரிக்கும்போதும், எங்களுடைய விற்பனை அதிகரிக்கிறது. இது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது,” என்கிறார் நிலேஷ். நானுவின் உள்ளுணர்வுக்கு மதிப்பளிக்கிறார் அவர்.
மும்பையில் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு காட்சிப் படுத்தும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியது விஜய் சேல்ஸ்தான். இதனால், அவர்கள் தொழில் விரிவடைந்தது. 2006-07-ல் மும்பையில் 8-10 கடைகளை குப்தா திறந்தார்.
|
கடந்த பத்து ஆண்டுகளில் பெரிய வடிவத்துடன் கூடிய விற்பனைக் கடைகள் மும்பையில் அறிமுகமாயின. எனினும், நானு தொடர்ந்து கவலைகள் அற்று அமைதியாக இருந்தார்
|
கோரஜ்கான் பகுதியில் அவர்கள் மிகப்பெரிய கடையை வாங்கினர். இது நான்கு தளங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தளமும் 1,300 ச.அடி-யைக் கொண்டிருக்கிறது.
“கோரஜ்கான் பகுதியில் நான் இந்தக் கடையை வாங்கியபோது, இந்தத் தொழிலில் ஈடுபடுவோர், விஜய் சேல்ஸ் நிறுவனத்தினர் பைத்தியமாகத் திரியப்போகிறார்கள் என்று சொன்னார்கள்,” என்றபடி சிரிக்கிறார் நானு. “பெரிய கடைகளில் அதிகப் பணத்தை செலவிடுவதாக அவர்கள் கவலைப்பட்டனர்.“
மும்பை முழுவதும் பெரிய இடங்களில் விஜய் சேல்ஸ் கடைகளைத் தொடங்கியபோது, இ்ந்த சந்தையே அதிர்ச்சியோடு பார்த்தது. “என்னுடைய தந்தை தொலை நோக்குப் பார்வை கொண்டவர். அளவில் பெரிய கடைகள் எங்களின் தொழிலுக்கு உதவிகரமாக இருந்தன,” என்கிறார் நிலேஷ். ரீடெய்ல் புரட்சி வடிவத்தில் 2007-ம் ஆண்டில் சிக்கல் வந்தது. குரோமா, ரிலையன்ஸ், ஃப்யூச்சர் குழுமம் உள்ளிட்ட பிராண்ட்களின் பெரிய கடைகள் திறக்கப்பட்டன. அந்த சமயத்தில் விஜய் சேல்ஸ் நிறுவனத்துக்கு 14 கடைகள் இருந்தன.
“எங்கள் பிராண்டை விற்பனை செய்யுமாறு கேட்டு எங்களுக்கு அழைப்பு வந்தது. இது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெரிய நிறுவனங்களின் ஷோரூம்களுக்கு முன்பு தாக்குபிடிக்க முடியாமல், விஜய் சேல்ஸ் நிறுவனத்தை விற்று விட்டு, கடையைப் பூட்டி விட்டுச் செல்வார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள்,” என்கிறார் நிலேஷ். “மதிய உணவு, இரவு உணவு நேரங்களில் நானும் கூட அந்த சமயத்தில் பதற்றமாக இருந்தேன். என் தந்தை மற்றும் சகோதரரிடம் இதைத் தவிர வேறு எதையும் நான் பேசவில்லை.”
எனினும், அதற்காக நானு கவலைப்படவில்லை, ”நாம் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று சொன்னேன்,” என்கிறார் நானு. “உங்கள் கடின உழைப்பை வேறு யாரும் எடுத்துச் செல்ல முடியாது. கடினமாக உழைப்பதற்கும், வாடிக்கையாளர்கள் நலனை பேணுவதற்கும் தயாராக இருந்தால், நாம் நன்றாக இருப்போம். அவர்கள் 20 அடி எடுத்து வைத்தால், நாம் அப்போது இரண்டு அடி எடுத்து வைத்தாலும் நல்லதுதான்.”
அந்த நாளில் இருந்து போட்டியாளர்கள் குறித்து நான் நினைப்பதே இல்லை என்கிறார் நிலேஷ். “இந்தத் தொழிலை நான் தொடர விரும்பாவிட்டால், நான் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும், அதற்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக என் தந்தை என்னிடம் சொன்னார்.” என்கிறார் நிலேஷ். “எனவே, நான் அதில் நம்பிக்கை வைத்தேன்.”
|
ஜிம்முக்குத் தேவையான கருவிகளை விற்பனை செய்யும் கடையை நானு குறுகிய காலத்துக்கு நடத்தினார். இந்தப் பொருட்களுக்கு தேவை இல்லாததால் அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டும் விற்பனை செய்கின்றனர்
|
எனினும், அவர்களின் உண்மையான வளர்ச்சி என்பது, 2007-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் தொடங்கியது. புனே, சூரத், டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கும் தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கடைகளை உருவாக்கினர்,
“2007-ம் ஆண்டுக்கு முன்னதாக, டிஜிட்டல் பொருட்களை நாங்கள் விற்கவில்லை. குளிர்பதன பெட்டி, டி.வி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்தோம். சந்தையின் போக்கு மாறத் தொடங்கியது. விஜய் சேல்ஸ் நிறுவனம் மொபைல் போன்கள், லேப்-டாப்-கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. முழு அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.”
அவர்களின் கடைகள் ஏற்கனவே பெரிதாக இருந்தன. எனவே, பொருட்களின் விற்பனை அளவை அதிகரிப்பதில் எந்த விதச் சிரமமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்களின் ஆண்டு வருவாய் 2000-ம் ஆண்டில் 100 கோடி ரூபாயாக இருந்தது. இது 2008-ம் ஆண்டில் 500 கோடி ரூபாயாக உயர்ந்தது.
2000-ம் ஆண்டு மும்பை ஓபரா ஹவுசில், அவர்கள் கடையைத் திறந்தபோது, எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தையில் தெரிந்த ஒரு அடையாளமாக அவர்களின் விஜய் சேல்ஸ் மாறிவிட்டது. இந்தக் கடைதான் அவர்களுக்கு ஒரு லேண்ட்மார்க் ஆக இருந்தது. “இந்த எல்லா ஆண்டுகளிலும் என்னுடைய தந்தை வேலையில் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை,” என்கிறார் நிலேஷ்.
“எப்போதுமே வாடிக்கையாளர்கள் நலனில் அவர் அக்கறை கொண்டவராக இருக்கிறார். இப்போது அவருக்கு 75 வயது ஆகிறது. இப்போதும் கூட தொழிலின் முழுக்கட்டுப்பாட்டையும் கைக்குள் வைத்திருக்கிறார். யாராவது ஒரு வாடிக்கையாளர் இரவு 9 மணிக்குப் பின்னர் வந்து, ‘கடையை மூடப்போறிங்களா’ என்று கேட்டால், என்னுடைய தந்தை உடனடியாக, ‘இல்லை’ என்று சொல்லி, அந்த வாடிக்கையாளரை வரவேற்கும் விதமாகப் பேசுவார்.”
வாடிக்கையாளர்கள் முழுப் பணத்தைக் கொடுத்து பொருட்கள் வாங்க முடியாத சூழலில், வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் முறையை நானு அறிமுகப்படுத்தினார். இந்த நம்பிக்கைதான் அவருக்கு, ஆயிரக்கணக்கான நம்பகமான வாடிக்கையாளர்களைத் தேடிக் கொடுத்தது. சில மாதங்களுக்கு முன்பு, புனேவில் இருந்து வந்த வாடிக்கையாளர் ஒருவர், நானு குப்தாவை பார்க்க வந்திருந்தார். அவர், சிறுவயது முதல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விஜய் சேல்ஸில் இருந்து வாங்கி வருகிறார்.
“இன்னொரு சமயம், பிரபாதேவி கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், தமது தந்தை விஜய் சேல்ஸ் நிறுவனத்தில் இருந்துதான் பொருட்கள் வாங்குவார் என்றும், இப்போது, தம்முடைய பேத்திக்கு பிறந்தநாளன்று பரிசாக அளிப்பதற்கு மொபைல் போன் வாங்க வந்ததாகக் கூறினார்,” என்கிறார் நானு.
|
மும்பைக்கு வெளியே இப்போது, டெல்லி, புனே, அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா பகுதிகளில் விஜய் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன
|
விஜய் சேல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இந்த சம்பவம் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் இதனை விளம்பரக் குழுவிடம் பகிர்ந்து கொள்ள, இதை அடிப்படையாக வைத்து அவர்கள் டி.வி வணிக விளம்பரம் ஒன்று உருவாக்கி உள்ளனர்.
ஆரம்ப காலகட்டங்களில், மாஹிமில் கடை திறந்தபோது, சாண்டாகுரூஸ் பகுதியில் உள்ளவீட்டில் இருந்து, மழை நாளில் கூட நானு நடந்தே கடைக்கு வருவது வழக்கம்.
“வேலை ஒரு வழிபாடு போன்றது என்று நான் நம்புகிறேன். வெறுமனே உட்கார்ந்திருப்பதை நான் விரும்புவதில்லை. வேலைதான் என்னை தொடர்ந்து இயக்குகிறது. செயல்படும் ஊக்கத்தைஅளிக்கிறது,” என்கிறார் நானு. அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
இப்போது விஜய் சேல்ஸ் நிறுவனத்துக்கு, மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா உட்பட நாடு முழுக்க 76 கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 3-4 கடைகளை இந்த நிறுவனம் தொடங்குகிறது. “ஜிம் கருவிகள் விற்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அதற்குப் போதுமான தேவை இல்லாத காரணத்தால், அந்தத் தொழிலை மூடி விட்டோம். அதிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமே விற்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்,” என்கிறார் நிலேஷ்.
நானுவின் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன்கள் நிலேஷ் மற்றும் ஆஷிசுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர்களுடன் நானு வசித்து வருகிறார். சகோதரர்கள் இருவரும் பொறுப்புகளை பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் அனைவரும் சாண்டாகுரூஸ் பகுதியில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர்.
இரண்டு ஊழியர்களுடன் தொடங்கிய விஜய் சேல்ஸ் நிறுவனம் இன்றைக்கு இந்தியா முழுவதும் 1900 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதுதான் ஒரு பெரிய மகிழ்ச்சியான குடும்பம்!
அதிகம் படித்தவை
-
உழைப்பால் உயர்ந்த நாயகன்
பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தேநீர் விற்கும் ஆடிட்டர்
புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை
-
சறுக்கல்களை சாதனைகளாக்கியவர்
வணிகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தபோதிலும், சொந்தமாகத் தொழில் தொடங்கியபோது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தார் குமாரவேல். கவின்கேர் உரிமையாளர் ரங்கநாதனின் சகோதரரான அவர், ஒரு காலகட்டத்தில் சாதனைகளை நோக்கிப் பயணித்தார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
பேனாவில் கொட்டிய கோடிகள்
350 கோடி ரூபாய் பேனா நிறுவனம் ஒன்றின் தலைவர் சுராஜ்மல் ஜலான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கொல்கத்தாவுக்கு வெறுங்கையுடன் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் வந்த இவர், இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனத்தைக் கட்டி ஆளுகிறார். ஜி. சிங் எழுதும் கட்டுரை
-
ஒரு கனவின் வெற்றி!
வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.
-
போராடே என்னும் போராளி!
எதிர்பாராதவிதமாக தொழில் அதிபர் ஆனவர் மிலிந்த் போராடே. இவர் தொடங்கிய தமது துருவா நிறுவனம் கடந்த ஆண்டு 700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. டிப்ளமோ படிப்பில் சேர்ந்தவர், தன் பேராசிரியரின் உந்துதலால் பட்டப்படிப்பு முடித்து, பின்னர் பட்டமேற்படிப்பும் முடித்து இதைச் சாதித்திருக்கிறார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை.