44 கோடி ஆண்டுவருவாய் தரும் பால்பண்ணை! அமெரிக்காவில் இன்டெல் வேலையை விட்டு இந்தியா திரும்பியவரின் வெற்றிக்கதை!
21-Nov-2024
By சோபியா டேனிஷ்கான்
ஹைதராபாத்
ஐஐடியில் பட்டம்; அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் மற்றும் முனைவர் பட்டம். இவ்வளவு படிப்புக்குப் பின்னர் அமெரிக்காவிலேயே இன்டெல் நிறுவனத்தில் 6 ஆண்டுகள் வேலை பார்த்த கிஷோர் இந்துக்குரி தனது 32வது வயதில் இந்தியாவுக்குத் திரும்பினார். ஐதராபாத் சர்வதேச விமானநிலையத்துக்கு அருகில் உள்ள ஷம்ஷாபாத்தில் பண்ணையை ஒப்பந்த த்துக்கு எடுத்து அதில் 20 பசுக்களுடன் கூடிய ஒரு பால் பண்ணையை உருவாக்கினார்.
இன்றைக்கு அவரது தொழில் சித் பண்ணை எனும் பால்
வணிக பிராண்ட் ஆக உருவாகி இருக்கிறது. ஐதராபாத்தை சுற்றி உள்ள வாடிக்கையாளர்களுக்கு 20,000 லிட்டர் பால் விற்பனையின் வாயிலாக ஆண்டுக்கு
ரூ.44 கோடி வருவாய் ஈட்டுகிறார்.
கிஷோர் இந்துக்குரி சித் பண்ணையை
வெறும் 20 பசுக்களுடன் 8 ஊழியர்களுடன்
தொடங்கினார்(புகைப்படங்கள்: சிறப்பு
ஏற்பாடு)
|
“ஆரம்ப கட்டத்தில் பாலை மொத்த விற்பனை சந்தையில் லிட்டருக்கு ரூ.15 என்ற விலையில் கொடுத்தோம். அதனால் இழப்பைச் சந்தித்தோம். அப்போது உற்பத்தி செலவு மட்டும் லிட்டருக்கு ரூ.30 ஆக இருந்தது,” என்றார் கிஷோர்(42). ஒரு பால் பண்ணை தொழில்முனைவோராக ஆரம்பகால கட்டங்களை நினைவு கூர்கிறார். “எனவே, நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பால் விற்பனை செய்வது என்று அப்போது முடிவு செய்தேன். அது பெரும் பணியாக இருந்தது. வீட்டு வசதி சங்கங்கள், சமுதாய மையங்களுக்கு சென்று மக்களுடன் தொடர்புகளை உருவாக்கினோம். “ “ செயற்கை நறுமணமூட்டும்பொருட்களோ, நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்களோ, ஹார்மோன்களோ அல்லது தண்ணீரோ கலக்கப்படாத பால் என்றும், அதன் பயன்கள் குறித்தும் என் மனைவி ஹிமா வடிவமைத்த துண்டு பிரசுரங்களை நாங்கள் மக்களிடம் விநியோகம் செய்தோம்.” ஆரம்பகாலகட்டத்தில், அவர்கள் துருப்பிடிக்காத ஸ்டீல் பாட்டில்களில் பாலை எடுத்துச்சென்று விநியோகிக்கும் இடத்தில் வாடிக்கையாளர்களின் பாத்திரத்தில் ஊற்றிக்கொடுத்தனர். இந்த நடைமுறை மிகவும் செலவுபிடிப்பதாக இருந்தது. இதனால், அவர்கள் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பேக்கேஜ் செய்து பால் விற்பனையில் ஈடுபட்டனர். கிஷோர் தனது பணியை அனுபவித்து ஈடுபாட்டுடன் செய்கிறார். அவருடைய வணிகம் வருடம் தோறும் வளர்ச்சி பெற்று வருகிறது. வெறும் 8 பேருடன் தொடங்கிய அவருடைய பால் பண்ணையில் இன்று 110 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பசு மற்றும் எருமை பால் தவிர, நெய், தயிர் மற்றும் பன்னீரும் விற்பனை செய்கின்றனர்.
ஐதராபாத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில்
உள்ள ஷாபாத் பண்ணையில் கிஷோர்
|
இன்டெல் நிறுவனத்தின் ஊழியரான கிஷோர் வேலையை விட்டு நிற்க வேண்டும் என்று நினைத்தபோது ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார். தமது சொந்த ஊருக்கு திரும்பி வந்ததன் பலன் கடந்த பத்து ஆண்டுகள் அவருக்கு நிறைவானதாகவே இருந்தது. ஐதராபாத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கிஷோர். அவரது தந்தை நரசிம்ம ராஜூ மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றியவர். ஓய்வு பெறும் வரை 25 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். அவரது தாய் லட்சுமி குடும்பத் தலைவியாக இருக்கிறார். அவருடைய இளைய சகோதரர் ஒரு மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார். பத்தாம் வகுப்பு வரை நந்தலாலா வித்யாலயா உயர் நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் 1996ஆம் ஆண்டு லிட்டில் பிளவர் ஜூனியர் கல்லூரியில் 12ஆம் வகுப்பு முடித்தார். 96 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். “நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்ததால், என்னுடைய பெற்றோருக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி மட்டும்தான் ஓரே வழியாக இருந்தது. குறிப்பாக அவர்கள் என்னுடைய கல்வியில் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர்,” என்றார் கிஷோர். காரக்பூர் ஐஐடியில் இருந்து பிஎஸ்சி வேதியியல் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து பாலிமர் அறிவியல் மற்றும் பொறியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். “ஐஐடியில் ஆண்டு கல்வி கட்டணம் ரூ.800 ஆக இருந்தது. மாசசூசெட்சுக்கு முழு கல்வி உதவித்தகுதியுடன் சென்றேன். என் தந்தை எனக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்ததுடன், எதுவும் தேவையென்றால் செலவு செய்வதற்காக 500 அமெரிக்க டாலர்களும் கொடுத்தார்,” என்று தனது இளம் வயது அனுபவங்களை கிஷோர் பகிர்ந்து கொண்டார். முனைவர் பட்டம் பெற்றவுடன், அரிசோனா மாநிலத்தின் சான்ட்லரில் இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான மூத்த பொறியாளராக பணியாற்றினார். 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2011ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள 1500 விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்கிறார். ஷபாத்தில் உள்ள அவரது பண்ணையில் 100 மாடுகள் உள்ளன |
இன்டெல் நிறுவனத்தில் மூத்த செயலாக்கப் பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். அவர் கடைசியாக மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் பெற்றார். “என்னுடைய பணி நிமித்தமாக நான் ஜப்பான், தென்கொரியா, மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்தேன்,” என்றார். “அமெரிக்க வாழ்க்கையானது மிகவும் வசதியாக இருந்தது. இன்டெல் அலுவலகம் அருகே சான்ட்லரில் ஒரு வீடு விலைக்கு வாங்கினேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் எதையோ இழந்தது போலவே இருந்தது. உற்சாகப்படுத்தும் பெரிய வேலையில் ஈடுபட வேண்டும் எனத் தோன்றியது.” “நான் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று தீர்மானித்தபோது, என் அலுவலக தலைமை பொறுப்பில் இருந்தவர், நான் உண்மையில் என்ன செய்ய விரும்புகின்றேன் என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், என்னுடைய தீர்மானத்தால் என் மனைவி மகிழ்ச்சியடைந்தார்.” ஐதராபாத் திரும்பியவுடன், கிஷோர் மேலோட்டமாக சில பணிகளில் ஈடுபட்டார்.”காய்கறி செடிகள் வளர்த்தேன். மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத்தில் தேர்ச்சி (TOEFEL)பெறுவதற்கான பயிற்சி மற்றும் பட்டதாரி பதிவு தேர்வு(GRE) ஆகிய பயிற்சிகளை அளித்தேன். எவ்வளவு விஷயங்களில் முடியுமோ அவ்வளவு விஷயங்களில் ஈடுபட்டேன். எது எனக்கு சரிப்பட்டு வரும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை,” என்றார். விமானநிலையம் அருகே ஷம்ஷாபாத்தில் 24 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தபோது, பால்பண்ணை உருவானது. “நான் 20 மாடுகளுடன் 2013ஆம் ஆண்டு தொடங்கினேன். நன்றாகப்போகத் தொடங்கியது. எனவே நான் மற்ற அனைத்துப் பணிகளில் இருந்தும் விலகினேன். பால் பண்ணையிலேயே முழு கவனத்தைச் செலுத்தினேன்,” என்றார் கிஷோர். இரண்டு ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை இந்த தொழிலில் அவர் முதலீடு செய்திருக்கிறார். “குடும்பத்தினரிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் பணம் திரட்டியதுடன், என் சொந்த சேமிப்பில் இருந்தும் முதலீடு செய்தேன்.” ஆரம்பகாலகட்டங்களில் தனிநபர் நிறுவனமாக பால்பண்ணையை நடத்தி வந்தார். பின்னர் சித் பாஃர்ம் பிரைவேட் லிமிடெட் என்று 2016ஆம் ஆண்டு பெயரை மாற்றினார். ஐதராபாத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள ஷாபாத்தில் 4 ஏக்கர் பண்ணையை 2018ஆம் ஆண்டு கிஷோர் வாங்கினார். “திறந்தவெளி நிலங்களுக்கு மத்தியில் பண்ணை அமைந்திருந்தது. எங்களுக்கு நவீன பதப்படுத்தும் வசதிகள் மற்றும் மாதிரி பண்ணை(100 மாடுகள்) கிராமத்துப் பின்னணியில் நெல் வயல்வெளிகள், சில மாந்தோப்புகள் மற்றுத் திறந்தவெளி நிலங்களுக்கு மத்தியில் இருக்கின்றன,” என்றார் அவர். பண்ணையின் சார்பாக 1500 விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து தினமும் 20,000 லிட்டர் பால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சித் பண்ணையின் பால் பொருட்கள் கடுமையான தர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன |
“எங்களிடம் இரண்டு முதல் முதல் மூன்று மாடுகள் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் முதல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் வரை உள்ளனர். அவர்கள் எங்களுக்கு விநியோகிக்கும் பாலின் தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப 10 நாட்களுக்கு ஒருமுறை சில ஆயிரங்கள் முதல் ஒரு லட்சம் வரை பெறுகின்றனர்,” என்றார் அவர். விவசாயிகள் பெரும்பாலும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஷபாத், ஷாத்நகர், கேசம்பேட்டை, மஹபூப்நகர், வனபர்த்தி பகுதியை சேர்ந்தவர்களாகவும், ஆந்திராவில் கர்நூல் பகுதியை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். கர்நூல்தான் பண்ணையில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள தூரமான இடமாக இருக்கிறது. போக்குவரத்து பங்குதாரர்கள் உதவியுடன் குளிர்பதன வாகனங்களில் பால் சேகரிக்கப்பட்டு பண்ணைக்கு கொண்டு வரப்படுகிறது. நிறுவனத்தின் மொபைல் செயலி வழியாக 12,000 வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது தவிர பிக் பாஸ்கெட், சூப்பர் டெய்லி ஆகிய இ-வணிக இணையதளங்கள் வாயிலாகவும் பால் விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டில் இருந்து சித் பண்ணை பால் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது. பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.76 எனவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.90 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சித் பண்ணை என்று பெயரை கிஷோர் தேர்வு செய்தது ஒரு சுவாரஸ்யமான விஷயமாகும். அவருடைய 11 வயது மகன் சித்தார்த் பெயரில் இருந்து சித் என்ற பெயரை வணிகப் பெயராக தேர்வு செய்தார். “இதை எனது மகனுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வாக்குறுதியாகவே கொடுத்தேன். நாங்களே இந்த பாலை அருந்துவதால், சிறந்த முறையில் சேவை செய்வோம்.”
அதிகம் படித்தவை
-
குறைந்த விலையில் நிறைந்த லாபம்!
ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.
-
ஒரு ஜூஸ் குடிக்கலாமா?
வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை
-
ஒரு முகமையின் வெற்றிக்கதை
வழக்கறிஞரின் மகனாக இருந்த சைலேந்த்ரா, தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற கனவுடன் 50 ஆயிரம்ரூபாய் முதலீட்டில் டெக்ஸ்டைல் ஷோரூம் தொடங்கினார். இன்றைக்கு ரேமண்ட் பிராண்டின் முகவராக ஆண்டுக்கு 22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
ஆயிரம் கோடி கனவு!
கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
மெத்தைமேல் வெற்றி!
கொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!
புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை