400 சமையல் புத்தகங்கள்; ஆறு கோடி வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனம்: ஒரு குடும்பத்தலைவியின் திருப்புமுனை வெற்றி!
09-Sep-2024
By சோபியா டேனிஸ்கான்
புதுடெல்லி
குடும்பத் தலைவியாக இருந்து, பல்வேறு தொழில்களுக்கான உரிமையாளராக ஆக மட்டுமின்றி, செஃப் ஆகவும், எழுத்தாளராகவும் இருக்கும் நித்தா மேத்தா என்ற பெண்மணியின் 36 ஆண்டுகாலப் பணி உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
1982-ம் ஆண்டு தம் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு சமையல் கலை கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 100 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலித்தார். இன்றைக்கு, அவரது நித்தா மேத்தா பிரைவேட் லிமிடெட் (Nita Mehta Private Limited) நிறுவனத்தின் கீ்ழ் செயல்படும் தொழில் நிறுவனங்களான நித்தா மேத்தா ஃபுட்ஸ், நித்தா மேத்தா ஸ்பைசஸ், சேப் பப்ளிஷர்ஸ் (Sabe Publishers) ஆகியவற்றின் மொத்த ஆண்டு வருவாய் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது.
|
நித்தா மேத்தாவின் கணவர் பார்த்து வந்த மருந்து தொழில் பின்னடைவைச் சந்தித்தது. அதில் இருந்து அவர் மீண்டு வர முடியாத நிலையில் 1982-ம் ஆண்டு நித்தா மேத்தா, சமையல் கலை பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினார். இப்போது அவர் பல தொழில்களை நடத்தி வருகிறார். (புகைப்படங்கள்; நவ்நிதா)
|
“மாற்றம் என்பது அவசியமானது. வெற்றி நம்மைத் தழுவும்தருணங்களில், நாம் ஒரு அடி முன்னே எடுத்து வைக்க வேண்டும்,” என்கிறார் நித்தா. தேவைப்படும் சமயத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்ற அவரது திறன்தான் அவருக்கு வெற்றி தேடித்தந்தது.
நித்தாவின் இப்போதைய நிறுவனமான நித்தா மேத்தா ஃபுட்ஸ், பல்வேறு உணவு வகைகளை ஃபிரஷ் ஆக சமையல் செய்வதற்கான (fresh ready-to-cook) பொருட்களைக் கொண்ட சிறிய பாக்ஸ்-களைத் தயாரிக்கிறது. 2017-ம் ஆண்டு நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழில் ஏற்கனவே, பெரும் வெற்றியைப் பெற்று விட்டது.
டெல்லியில் உள்ள ஓக்லாவில் இருக்கும் தன் சமையல் தொழிற்சாலையில், 5 ஊழியர்களுடனான பரபரப்புக்கு இடையே, அவரது தொழில் முறையை நம்மிடம் விளக்கினார். “ஒரு பாக்கெட் பன்னீர் லாபாப்டார் பாவ்(Paneer Lababdar Bao ) என்பது 4-5 பேர் சாப்பிட முடியும். அதற்கு தேவையான சாஸ், வெட்டப்பட்ட காய்கறிகள், இஞ்சி ஊறுகாய் மற்றும் ப்ரெஷ் பாவ்ஸ் ஆகியவையும் இதில் இருக்கின்றன,” என்று சொல்கிறார். “நீங்கள் காய்கறிகளை சமைத்து, சாஸ் சேர்த்துக் கொடுத்தால், சாப்பாடு தயாராகிவிடும்.”
நித்தா மேத்தா ஃபுட்ஸ் இப்போது டெல்லியில் மட்டும் செயல்படுகிறது. மாதம் தோறும் 300 பாக்கெட்கள் விற்பனை செய்கின்றனர். அவர்களின் முதல் ஆண்டு இலக்கு என்பது ஒரு கோடி ரூபாய் என்பதாக இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள்தான் அவர்களின் வாடிக்கையாளர்கள். வேலைக்கு அவசரம் அவசரமாகப் போகும்போது அல்லது நாள் முழுவதும் ஆபீசில் கழித்து விட்டு வீடு வரும்போது, அவர்களுக்கு காய்களை வெட்டி சமையல் செய்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது.
நித்தா கணவரின் மருந்து தொழில் சரிவைச் சந்தித்த போது, சின்னதாகவாவது ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இந்த திறன்தான், 1982-ம் ஆண்டு நித்தா சமையல் பயிற்சி வகுப்பை ஆரம்பிக்கக் கூடிய தருணத்துக்கு அவரைத் தள்ளுவதற்குக் காரணமாக இருந்தது.
நித்ததாவின் தாய் நல்ல சமையல் கலைஞர். அவரால் ஈர்க்கப்பட்டு, சமையலில் ஆரம்பித்த இந்தப் பயணம் அவரது வாழ்க்கையை மாற்றியது.
|
டெல்லியில் உள்ள தம் நிறுவனத்தின் அலுவலகத்தில், நித்தா ஊழியர்களுடன் இருக்கிறார்.
|
ஐஸ்க்ரீம்ஸ் குறித்து அவர் வகுப்பு எடுத்தார். டெல்லியின் புகழ்பெற்ற நிருலாஸ் ஹோட்டல் அப்போது 21வகையான சுவைகளில் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதை வீடுகளில் அவர்கள் தயாரிக்க விரும்புவார்கள் என்று நித்தாவுக்குத் தெரியும். எனவே, அனைத்து வகையான சுவைகளிலும் சரியான முறையில் அவற்றை மறு உருவாக்கம் செய்ய அறிந்துகொண்டார்.
“என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர். நான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்பதை முன்னதாகவே தெரிந்து கொண்டேன்,” என்கிறார் நித்தா. “எந்த வித முதலீடும் இல்லாமல், ஏற்கனவே என்னிடம் இருந்த பொருட்களைக் கொண்டு, சமையல் கலை வகுப்புகளைத் தொடங்கினேன்.”
சமையல் வகைகள் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி தொடங்கிய உடன், மாணவர்கள் மேலும் அதிக அளவுக்குக் கற்றுக்கொள்ள விரும்பினர். எனவே மீண்டும் அவர் ரெஸ்டாரெண்ட்களுக்குச் சென்று, நல்ல உணவு வகைகள் எது என்பதைத் தெரிந்து கொண்டு அவற்றையெல்லாம் எப்படி செய்வது என்று கற்றுக்கொடுத்தார்.
“சில சமையல் கலை பயிற்சி வகுப்புகளில் நானும் சேர்ந்தேன். ஆனால், உண்மையில் அவை என்னை ஈர்க்கவில்லை. எனவே, அந்த வகுப்புகள் போன்று என்னுடைய வகுப்புகள் போரடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்று சிரிக்கிறார்.
சைனீஸ், முகல், கான்டினென்டல், இந்திய உணவு வகைகளைச் சமைப்பது குறித்து நித்தா பயிற்சி அளித்தார். மூன்று நாட்கள் பயிற்சி அளிப்பதற்கு ஒரு மாணவரிடம் இருந்து நூறு ரூபாய் மட்டும் வசூலித்தார். ஒவ்வொரு பயிற்சி குழுவிலும் 20 பேர்.
“அந்த நாட்களில் இந்தக் குறைந்த அளவு பணம் போதுமானதாக இருந்தது. சமையல் பயிற்சி பெறுவதற்காக, மாணவர்கள் வரிசைகட்டி வந்தனர். ஒரு குழுவிற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு குழு மாணவர்கள் காத்திருக்கும் பகுதியில் இருப்பார்கள். மற்றவர்கள் சமைப்பதை அவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்,” என்று கண்களில் ஒளிமின்ன விவரிக்கிறார்.
அவரது சமையல் கலைப் பயிற்சி வகுப்புகள், சந்தோஷமாகச் சமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. “சமையல் வகைகளை நோட்டில் மாணவர்கள் குறித்து வைத்துக்கொள்வதற்கு பதில், கையேடுகளாக அவர்களுக்குக் கொடுப்பேன்,” என்று விவரிக்கிறார்.
“மாணவர்கள் வகுப்புகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். அவர்களே சமைத்தனர். இதர மாணவர்களுடன் பழகினர். உணவு வகைகளையும் விரும்பிச் சாப்பிட்டனர். இதர சமையல் கலை வகுப்புகளை விட 15 சதவிகிதம் அதிகக் கட்டணம் வசூலித்தாலும் ஒவ்வொரு மாணவரும், தங்களின் சமையல் திறமையின்மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் பயிற்சிகள் தருவதை உறுதி செய்தேன்.”
|
சமையல் புத்தகங்கள் எழுதும் இந்த எழுத்தாளர், தம்முடைய உணவு தயாரிப்பை யூ டியூப் சேனலில் வீடியோவாகவும் பதிவேற்றி உள்ளார்.
|
உணவு வகைகள் நன்றாகப் பரிசோதிக்கப்படுவதால், தோல்வி என்பதற்கே இடம் இல்லை. மாணவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக சமையல் கலை பற்றிய பொதுவான டிப்ஸ்கள், குறிப்புகள் கொடுக்கிறார்.
நித்தாவின் புகழை ஊக்குவிக்கும் வகையில், பதிப்பகங்கள் நடத்தும் சில நண்பர்கள், சொன்னதன் பேரில், வெஜீடேரியன் ஒன்டெரஸ் (Vegetarian Wonders) என்ற முதல் புத்தகத்தை எழுதினார். அவர் அந்தப் புத்தகத்தை எழுதி முடித்த உடன்தான், அதை வெளியிட எந்த ஒரு பதிப்பகத்தினரும் தயாராக இல்லை என்பது தெரிந்தது.
“வங்கியில் இருந்த என்னுடைய வைப்பு நிதியை எடுத்துப் புத்தகத்தை வெளியிடும் படி என் கணவர் ஊக்குவித்தார். அதன் படி நானே அந்தப் புத்தகத்தைப் பதிப்பித்தேன்,” என்று சொல்கிறார்.
அவரது சமையல் வகுப்புகள் பெரும் வெற்றி பெற்றிருந்த சமயத்தில், தாம் எழுதிய புத்தகம் அதிக அளவு விற்கும் என நினைத்திருந்தார். ஆனால், 3000 பிரதிகள் மட்டுமே விற்பனை ஆயின.
“புத்தகங்கள் ஏன் இவ்வளவு குறைவாக விற்பனையாயின என்று ஆழமாக யோசித்தேன். புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு எந்த ஒன்றையும் நான் புதிதாகச் சொல்லவில்லை என்று கண்டுபிடித்தேன்,” என்கிறார் நித்தா “நான் ஒரு பாணியில் புத்தகத்தை எழுதினேன். ஆனால் அந்த புத்தகத்தின் அமைப்பு, வாசகர்களுக்கு அலுப்புத் தட்டி இருக்கிறது.”
பன்னீர் ஆல் தி வே (Paneer All the Way) என்ற அவரது அடுத்த புத்தகத்தை வெளியிட்டார். சிறிய புத்தகமாக கைக்கு அடக்கமான அளவில் அந்தப் புத்தகம் இருந்தது. இந்தியன், சைனீஸ், கான்டினென்டல் ஆகிய உணவு வகைகளை பன்னீர் கலந்து தயாரிப்பது எப்படி என்பது குறித்து அந்தப் புத்தகத்தில் கூறி இருந்தார்.
“நான் எழுதிய இந்தப் புத்தகம் வெளியான உடன் மளமளவென விற்றுத் தீர்ந்தன,” என்கிறார் நித்தா.
ஒரு வாரத்தில் 3000 பிரதிகள் விற்பனை ஆயின. மேலும் அதிமான புத்தகங்களைக் கேட்டு, முன் பதிவுகளும் வந்தன.
வெற்றிகரமான சமையல் புத்தகத்தின் மந்திரத்தை தெரிந்து கொண்ட பிறகு, நித்தா பின்னால் திரும்பிப்பார்க்கவே இல்லை. தொடர்ந்து அவர் 400 சமையல் புத்தகங்களை எழுதினார். ஃப்ளேவர்ஸ் ஆப் இந்தியன் குக்கிங் (Flavors of Indian Cooking) என்ற புத்தகம், 1997-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற உலகச் சமையல் புத்தகக் கண்காட்சி விருதைப் பெற்றது.
|
சமையல் அறையில் நடக்கும் பணிகளை நித்தா மேற்பார்வை செய்கிறார்.
|
ஒரு புத்திசாலி தொழிலதிபர் புதிய துறைக்குத் தேவையான இடம் இருக்கிறது என்பதைச் சரியான நேரத்தில் உணர்ந்து கொள்வார். “எங்கேயோ ஒரு இடத்தில் என்னுடைய புத்தகங்கள் பதிக்கப்படும் போது, நானே சொந்தமாக ஒரு பதிப்பகம் தொடங்குவது நல்ல யோசனையாக இருக்கும் என உணர்ந்தேன். அது நல்ல லாபத்தைத் தரும் என்றும் நினைத்தேன்,” என்று தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நித்தாவுக்கு இப்போது 66 வயது ஆகிறது.
1994-ம் ஆண்டு ஸ்னாப் பப்ளிஷர்ஸ் (Snab Publishers) என்ற பதிப்பகத்தை அவர் தொடங்கினார். இணையவெளி வருகையின் காரணமாக, ஒரு கட்டத்தில் சமையல் புத்தகங்களின் மீதான மதிப்பு குறையலாம் என்று கருதினார். எனவே, பன்முக தன்மையுடன் கூடிய புத்தகங்களைப் பதிப்பித்தார். பிற எழுத்தாளர்கள் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகங்கள், தொன்மவியல், நாட்டுப்புற கதைகள் மற்றும் வரலாறு தொடர்பான புத்தகங்களையும் வெளியிட்டார்.
4 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஸ்னாப் பதிப்பகத்தின் இப்போதைய ஆண்டு வருவாய் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. பதிப்பகத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய 8 பேர் பணியாற்றுகின்றனர்.
2016-ம் ஆண்டு நித்தா, நித்தா மேதா ஸ்பைசஸ் என்ற பெயரில் மசாலா வகைகள் தயாரிப்பைத் தொடங்கினார். உணவு தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிவுரைப்படியும், சொந்த அனுபவத்தின் படியும் மசாலா வகைகளைத் தயாரிக்கிறார். “நான் ஒருபோதும் ரெடிமேட் மசாலா வகைகளை உபயோகிப்பதில்லை. எப்போதுமே சொந்தமாக பொருட்களை அரைத்து, அவற்றைக் கலந்து மசாலா தயாரிப்பேன்,” என்கிறார். “ஆனால், எல்லாநேரமும், அனைவராலும் இந்தக் கடினமான பணியைச் செய்து கொண்டிருக்க முடியாது. என்னுடைய மசாலா வகைகள், நான் வீட்டில் உபயோகிக்கும் அதே பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறன. ஒவ்வொரு உணவு வகையின் ருசியின் சாரத்தையும் அந்த மசாலா கொண்டு வந்து விடும்.”
முக்கியமான 20 ஊழியர்களைக் கொண்ட குழு, ஒரு ஆண்டு முழுவதும் எடுத்துக் கொண்டு பேக்கேஜிங், வடிவமைப்பு ஆகியவற்றை முடிவு செய்து தொழிற்சாலையை உருவாக்கினர். 9 ஊழியர்கள் பல்வேறு தயாரிப்பு நிலைகளை மேற்பார்வை செய்கின்றனர். மசாலாப் பொருட்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடைகளைச் சென்று அடைவதை அவர்கள் உறுதி செய்கின்றனர். சந்தையில், கடந்த ஒரு ஆண்டாக, முதல் ஆண்டில் மட்டும் அவர்கள் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டு வருவாயை ஈட்டி உள்ளனர்.
“ஆரோக்கியமாக சாப்பிட விரும்புபவர்களுக்கு இது சுகாதாரம் சார்ந்த ஒரு வரம் என்பது தெரியும்,” என்கிறார் நித்தா. இப்போதைய சந்தையின் நிலைக்கு ஏற்ப செயல்பட்ட புத்திசாலித் தனத்தை மீண்டும் அவர் வெளிப்படுத்துகிறார்.
|
நித்தா மேத்தா ஸ்பைசஸ் என்ற மசாலா வகைகளின் விற்பனையை 2016-ம் ஆண்டு தொடங்கினார்.
|
பல்வேறு நிறுவனங்களின் வேலைகளுக்கு இடையே, டெல்லி வசந்த் விஹாரில் அவருடைய சமையல் கலை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அங்கே அவர் மிகச் சிறந்த சமையல் பயிற்சி அகாடமியை 2000ம் ஆண்டு தொடங்கினார். இப்போதும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் அங்கு பயிற்சி பெறுவதற்காக வருகின்றனர். நித்தா மேத்தா பிராண்டின் சந்தைப்படுத்துதல் மற்றும் சரக்கு போக்குவரத்துப் பிரிவை ஒரு தூண்போல இருந்து அவரது மகன் அனுராக் மேத்தா கவனித்துக் கொள்கிறார்.
அவரின் அனைத்து தொழில்களும் நித்தா மேத்தா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரின் கீழ் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தின் 30 சதவிகிதப் பங்குகளை அவரது கணவரும், 20 சதவிகிதப் பங்குகளையும் அவரது மகனும் வைத்திருக்கின்றனர். மீதம் உள்ள 50 சதவிகிதப் பங்குகளை நித்தா மேத்தா வைத்துள்ளார்.
“இப்போது நான், யூ டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி இருக்கிறேன். அதில், அனைத்து உணவு வகைகளையும் எப்படி தயாரிப்பது என்பதை எளிதாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்,” என்கிறார் நித்தா. 60-க்கும்அதிகமான வயதைக் கடந்தும்கூட காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அவரது திறன் வியக்க வைக்கிறது.
அதிகம் படித்தவை
-
சுவையான வெற்றி
மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை
-
ஒரு ஜூஸ் குடிக்கலாமா?
வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை
-
தாத்தா சொல்லை தட்டாதே
ஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
ஒரு கனவின் வெற்றி!
வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.
-
ஒரு மசால்தோசையின் வெற்றி!
கேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
வளர்ச்சியின் சக்கரங்கள்!
ஒரே ஒரு அம்பாசடர் டாக்ஸியோடு தொடங்கப்பட்டதுதான் பர்வீன் ட்ராவல்ஸ். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உழைத்தார் அதன் உரிமையாளர் அப்சல். இன்று 400 கோடிக்கும் மேல் மதிப்புள்ளதாக வளர்ந்திருக்கும் அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்