ஒரு தந்தையின் கனவில் பிறந்த புதுமையான ‘தூசியற்ற பெயிண்ட் !’
03-Dec-2024
By தேவன் லாட்
மும்பை
1996 ஆம் ஆண்டில் ஒரு நாள் அதுல் இங்காலே, தானேவில் உள்ள தம்முடைய புதிய வீட்டுக்கு பெயிண்ட் அடித்தார். அப்போது உருவான மாசு காரணமாக, அவரது இரண்டு குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த தூசு இல்லாமல் பெயிண்ட் உருவாக்கக்கூடாதா என்று தோன்ற அதற்கான ஆய்வில் ஈடுபட்டார்.
20 ஆண்டுகளாக ஆராய்ச்சி, பரிசோதனை, கண்டுபிடிப்பு என காலங்கள் கடந்தன. 2014-ம் ஆண்டு, தமது மகள் நியாதியை பங்குதாரராகக் கொண்டு டஸ்ட்லெஸ் பெயிண்டிங் ( Dustless Painting) என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்
|
அதுல் இங்காலே, தொலைக்காட்சி ஒன்றின் முன்னாள் பத்திரிகையாளரான தன் மகள் நியாதி உடன் இணைந்து தூசியற்ற பெயிண்டிங் கண்டுபிடித்திருக்கிறார். (புகைப்படங்கள்: ஆஸார் கான்)
|
2016-17-ம் ஆண்டில், ஆண்டு வருவாய் 30 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதுலின் ஆய்வும், பணியும், அவருக்கு இன்னும் லாபகரமான வருமானத்தைத் தரவில்லை. ஆனால், பணம் ஒருபோதும் அவர் நோக்கமாக இருக்கவில்லை. குழந்தைகளின் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத, ஒரு முறையைக் கண்டறிவதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
அதுல் ஆராய்ந்தார், முயற்சித்தார், தோல்வியடைந்தார். 15 நீண்ட ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தார். பல முறைகள் முயற்சி செய்தார். இறுதியாக, 2013-ம் ஆண்டு, அவருடைய நண்பர் வீட்டில், தொழில் முறையிலான தூசி அற்ற பெயிண்ட் கண்டுபிடிப்பை செய்து காட்ட அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
நாம் அவர்களை பேட்டி எடுக்கப் போனபோது, அதுல்(65), மகள் நியாதி(30) இருவரும், மும்பை செம்பூரில் உள்ள அவர்களின் இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
நியாதி தமது தந்தையின் தூசி அற்ற பெயிண்ட் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, வணிக செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். ”என் தந்தைக்கு பெயிண்டிங் தொழில் பிடித்தமான ஒன்று. அதுதான் என்னை, என்னுடைய பணியில் இருந்து விலக வைத்து அவரோடு இணைய வைத்தது,” என்று நம்மிடம் விவரித்தார். “அவர் ஒருபோதும் தம் முயற்சியை கைவிடவில்லை. இன்றைக்கு வரைக்கும், தூசி அற்ற பெயிண்டிங்கில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அந்தத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து விருப்பத்துடன் இருக்கிறார்.”
அதுலின் நண்பர் தீரஜ் காட்ஜில், அதுலிடம் தமது வீட்டுக்கு தூசி அற்ற பெயிண்ட் தொழில்நுட்பத்தின் படி பெயிண்ட் அடிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்காக அவர், 3 லட்சம் ரூபாய் கொடுத்தார். 21 நாட்கள் பெயிண்ட் அடிக்கும்பணி நடைபெற்றது.
“அவருக்கு என்னுடைய ஆராய்ச்சி பற்றித் தெரியும். எனவே அவருடைய வீட்டில் இதை முயற்சி செய்யும் படி கூறினார்,” எனும் அதுல், “நாங்கள் அவர் வீட்டுக்குப் பெயிண்ட் அடித்தபோது, எந்தப் பொருட்களையும் எடுத்து வெளியில் வைக்கவில்லை. பல மாதங்களாக பயிற்சி கொடுத்த நபர்களை வேலைக்கு அமர்த்தினேன். பெயிண்ட் அடிக்கும் வேலை வெற்றிகரமாக நடைபெற்றது. தீரஜ் மிகவும் மகிழ்ந்தார்.”
அதுலின் பெயிண்ட் குறித்து நண்பர்களுக்கும் தீரஜ் பரிந்துரை செய்தார். இதனால், அதுலுக்கு பணிகள் கிடைக்க ஆரம்பித்தன.
நாக்பூரில், 1962-ல் அதுல் பிறந்தார். வீர்மாதா ஜீஜாபாய் டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட்டில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். எப்போதுமே தமது வகுப்பில் சிறந்த மாணவராக இருந்தார். வகுப்பிலேயே முதலிடம் பிடித்து வந்தார். படிப்பை முடித்த உடன் கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். 2004-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்று ஹனிவெல், கைபர் டிரேடிங்ங், பீட்டா கன்சல்டென்சி போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றினார்.
|
இந்த வணிகத்தில், இதுவரை தந்தை-மகள் இருவரும் 80-85 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
|
“நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் என்னுடைய ஆய்வு எப்போதும் போல் தொடர்ந்து கொண்டே இருந்தது,” என்று விவரிக்கும் அதுல், “இந்த ஆய்வுக்காக அதிக அளவு பணம் முதலீடு செய்திருக்கிறேன்.”
இரண்டு ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் 1998-ல் அதுல் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. எனினும் மன தைரியத்தை இழக்காமல் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். “2004-ம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். ஒரு வழியாக 2011-ம் ஆண்டு, என் முயற்சியில் வெற்றி பெற்றேன். என்னுடைய சொந்த வீட்டுக்கு தூசி அற்ற பெயிண்ட் அடித்தேன்.”
2014-ம் ஆண்டு அதுல், தம் தொழிலைத் தொடங்க, 28 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். தூசியைக் கட்டுப்படுத்தும் ஒரு இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார். அதை உபயோகித்து தூசியற்ற முறையில் பெயிண்ட் அடித்தார்.
ருயா கல்லூரியில் மாஸ் மீடியாவில் இளநிலைப் பட்டம் பெற்ற நியாதி, 2009-ம் ஆண்டில், பங்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகச் சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த பின்னர், சி.என்.பி.சி-யில் சேர்ந்தார். தந்தைக்கு உதவியாக, தூசியற்ற பெயிண்டிங் பணிக்காக 2014-ல் தம் வேலையை ராஜினாமா செய்தார்.
“இந்தத் தொழிலை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்தும், இந்தத் தூசியற்ற பெயிண்டை மக்களை, எப்படி ஏற்றுக் கொள்ளச் செய்வது என்பது குறித்தும் நாங்கள் விரிவாக ஆலோசனை செய்தோம்.”
எனினும், இரண்டு வருடங்களாக எந்த ஒரு தொழில்வாய்ப்பபும் கிடைக்கவில்லை. எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அப்போதுதான், விளம்பரத்துக்கும் சிறிது முதலீடு செய்யவேண்டும் என்பதை நியாதி உணர்ந்தார்.
“ஆரம்ப கால கட்டத்தில் எங்களுக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை. பொது இடங்களிலும், ஆன்லைனிலும் நாங்கள் விளம்பரங்கள் செய்யத் தொடங்கினோம்.” என்ற நியாதி, “ஆனால், இது ஒரு புதிய முறை என்பதால், பாரம்பரிய பாணியை விட அதிக செலவு மிக்கதாக இருந்தது. இது வரையிலும் கூட வேலை கிடைப்பது பிரச்னையாக இருக்கிறது. ஆனால், மிக விரைவிலேயே மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்றார்.
தொழில் தொடங்கும்போது, ஒரு பின்னடைவாவது ஏற்படத்தான் செய்கிறது. ஆர்கிடெக்ட்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களின் மூலம் பணிகளை எடுத்துச் செய்தனர். ஆனால், அவர்களில் சிலர் பணம் கொடுக்கவில்லை என்பதால் இது சரியாக வரவில்லை.
|
பெயிண்ட் அடிக்கும் ஊழியர்களுடன் அதுல் மற்றும் நியாதி
|
“நாங்கள் சந்தையில் முன்னணியில் இருக்கும் பொருட்களை மட்டுமே உபயோகித்து, உயர் தர சேவை வழங்குகிறோம்,” என்று சொல்லும் நியாதி, “ஆனால், மக்கள் பணம் தர தயாராக இல்லை. பெரிய பெயர்களைக் கொண்ட சில ஆர்க்கிடெக்ட்கள் எங்களுக்கு வர வேண்டிய லட்சகணக்கான ரூபாய் பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டனர். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதில் இருந்து பாடம் கற்ற நாங்கள் தொடர்ந்து பயணித்தோம்.”
தூசியற்ற பெயிண்ட் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெரும் போராட்டமாக இருந்தது. இதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் போது, அவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்ததனர். கண்காட்சிகளில் பங்கேற்று விளம்பரம் செய்தனர். ஆனால், பதிலாக எந்தப் பணிகளும் கிடைக்கவில்லை.
பெரும் போராட்டத்துக்குப் பின்னர், 2016-ம் ஆண்டு மும்பையில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒரு வேலை அவர்களுக்குக் கிடைத்தது. 18,000 சதுர அடி இடத்தில் 8 ஊழியர்களுடன் 43 நாட்கள் பெயிண்ட் அடித்தனர்.
“பெயிண்ட் அடிக்கும் போது, தூசியின் காரணமாக குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், தூசியற்ற பெயிண்ட் அடிப்பதற்காக அந்தப் பள்ளியின் அறங்காவலர் எங்களை அணுகினார். குழந்தைகளுக்கான இடம் என்பதால், யோசிக்காமல், நாங்கள் அந்த வேலையை எடுத்துச் செய்தோம்,” எனும் அதுல், “எங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இப்போது அவர்கள் மூலம் இன்னொரு பள்ளியிலும் தூசியற்ற பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது.”
இதுவரை, 37 இடங்களில் தூசியற்ற பெயிண்ட் அடித்திருக்கின்றனர். பெரும்பாலும் வீடுகளுக்குதான் இந்த பெயிண்ட் அடித்திருக்கின்றனர். எனினும், பள்ளிகள் தவிர, காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கும் இந்த பெயிண்ட் அடித்திருக்கின்றனர்.
|
தூசியற்ற பெயிண்ட்டுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அதுல், நியாதி இருவரும் உணர்கின்றனர்.
|
நியாதியும், அதுலும் இந்த நிறுவனத்தை நடத்துவதற்குள் பல நிதி சிக்கல்களைச் சந்தித்தனர். இதுவரை அவர்கள் இருவரும், 80-85 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் ரூபாய் வரை இழப்பைச் சந்தித்தனர்.
எனினும், இந்த பெயிண்ட்டுக்கான எதிர்காலம் குறித்து நியாதி நம்பிக்கையுடன் இருக்கிறார். இப்போது, ஓம் ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் நல்ல முறையில் பணிகளைத் தருகின்றனர்.
“எங்களுடைய பெயிண்ட் புதிதான ஒன்று. எனவே, அதை முன்னெடுக்கும் வேகம் குறைவாக இருக்கிறது. மக்கள் இதனை விரைவிலேயே ஏற்றுக் கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்கிறார் நியாதி. “இந்தியாவில் இது போன்ற பெயிண்ட் அடிக்கும் முறையை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த சந்தையில் நாங்கள்தான் முதலில் நுழைந்தோம். அதைச் சாதகமாகக் கொண்டு எங்கள் நிறுவனத்தைக் கட்டமைப்போம்.”
பணம் இறுதியில் வரவே செய்யும். ஆனால் அதுல், எதை விரும்புகிறாரோ தொடர்ந்து அதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்.
அதிகம் படித்தவை
-
எளிமையான கோடீசுவரர்
திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்
-
நனவான தொழில் கனவு
பள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
கைவினைக்கலை அரசி
பீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
காபி தரும் உற்சாகம்
வடோதராவில் இரண்டு நண்பர்கள் 12 லட்சம் முதலீடு செய்து 2008-ல் காபி ஷாப் தொடங்கினர். இப்போது அவர்களுடைய காபிஷாப் நிறுவனம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளரும் நிறுவனம். 8.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் கவிதா கனன் சந்திரா
-
மாற்றி யோசித்தவர்!
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
குளிர்ச்சியான வெற்றி
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கிராமத்து இளைஞர்கள், தந்தையின் கைபிடித்து ஒரு சிறு நகருக்கு வந்தவர்கள். இவர்கள் ஒரு வெற்றிலை பாக்கு கடையில் இருந்து கோடிகளைக் குவிக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமாக மாறி இருக்கிறார்கள். பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கும் இவர்களின் கதையை குருவிந்தர் சிங் எழுதுகிறார்.