ஒரு சிறிய ஒப்பந்தக்காரர் இரண்டாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் தலைவர் ஆனார்! அசத்தலான வெற்றிக்கதை!
11-Sep-2024
By தேவன் லாட்
மும்பை
சின்னவயதில் மாம்பழம் விற்றார். பதின்வயதுகளில் வீடுகளுக்குப் வண்ணம் பூசும் வேலை பார்த்தார். கல்லூரிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டார். இன்று அந்த மனிதர் பலதுறை சேவைகளை வழங்கும் ஒரு அகில இந்திய நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
அவர் ஹனுமந்த் கெய்க்வாட்(45). 1997 –ல் 12,000 ரூபாய் ஒப்பந்தத்துடன் தொடங்கினார். இன்று அவரது பாரத் விகாஸ் குழுமம்(பிவிஜி) மாதத்துக்கு ஒரு கோடி வரை செல்லும் ஒப்பந்தங்களைப் பெற்று நடைபெறுகிறது.
|
ஹனுமந்த் கெய்க்வாட் பிவிஜி இந்தியா லிமிடட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், புனேவில் உள்ள தன் அலுவலகத்தில் (படம்: அனிருத்தா ராஜண்டேகர்)
|
பிவிஜியின் ஆண்டு வருவாய் 2000 கோடி. இந்தியாவில் 12 மாநிலங்களில் 22 கிளைகள் அவர்களுக்கு இருக்கின்றன. சுமார் 500 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 70,000 பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள்.
மும்பையில் ஒரு விடுதியில் இவரை நான் சந்தித்தேன். நட்புடனும் இயல்பாகவும் பழகினார். என்னை 25 ஆண்டுகளாக பணிபுரியும் அவரது ஓட்டுநர் ஜகனாத் என்கிற நபருக்கும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் ஹனுமந்தை சகோதரராகவே கருதுகிறார்.
ஹனுமந்த் தன் மூத்த, இளம் ஊழியர்களிடம் புத்துணர்ச்சியுடன் பழகுகிறார். அவருடைய வெற்றிப்பயணத்தில் இது முக்கியமான அம்சம்.
மகாராஷ்டிராவில் உள்ள ரஹிமத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹனுமந்த் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர். அவரது அப்பா ஒரு கீழ்நிலை நீதிமன்ற குமாஸ்தா. அவர் தன் மகனை நவீன் மராத்தி பள்ளியில் படிக்கவைத்தார். நான்காவது படிக்கும்போது மகாராஷ்டிரா அரசு மாதத்துக்கு 15 ரூ அவருக்கு ஊக்கத்தொகை கொடுத்தது.
“ஆறாம் வகுப்பு வரும்வரை என் வீட்டில் மின்சாரம் இல்லை. எண்ணெய் விளக்கில்தான் படிப்போம்,” என்கிறார் அவர்.
பின்னர் அவரது குடும்பம் புனேவில் உள்ள புகேவாடிக்கு இடம்பெயர்ந்தது. அங்கே சின்ன அறையில் அவரது குடும்பம் வசித்தது. மாடர்ன் உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். அங்குதான் ஏழை பணக்காரர் வித்தியாசத்தை முதலில் உணர்ந்தார்.
“என் குடும்பநிலை சரியாக இல்லை. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நான் சிறுவேலைகள் செய்துகொண்டிருந்தேன்,” ஹனுமந்த் நினைவுகூர்கிறார்.
|
பிவிஜியை தொடங்குமுன் ஹனுமந்த் டாடா மோட்டார்ஸில் வேலை பார்த்தார். பிவிஜியின் முதல் வாடிக்கையாளரும் டாடா மோட்டார்ஸ்தான்
|
“என் அம்மா நகைகளை விற்றார். நான் டஜன் 3 ரூ என மாம்பழம் விற்றேன். அதை விற்பனை செய்து காசு வாங்கியபோது பெற்ற சந்தோஷம் நினைவில் நிற்கிறது.”
9ஆம் வகுப்பில் படிக்கையில் வீர சிவாஜி நினைவு விழாவில் அவர் இந்த வரிகளைக் கேட்டார்: “எல்லா திசைகளும் தோல்வியின் இருளால் மூடப்பட்டிருக்கும்போது போராடி முன்னேறு.” இன்றும் போராடி முன்னேறு என்ற சொற்கள் அவருக்குள் இருக்கின்றன.
"அன்று கேட்ட சொற்கள் என்னைத் தூண்டின. என் வாழ்க்கையை மாற்றின. விவேகானந்தர், வீர சிவாஜி ஆகியோரால் நான் கவரப்பட்டேன். இன்று என் நிறுவனமான பிவிஜி இந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.”
பள்ளியிறுதியில் ஹனுமந்த் 88% மதிப்பெண் பெற்றார். அவரது அம்மா முனிசிபாலிடி பள்ளியில் ஆசிரியை ஆனார். அவரது அப்பா இன்னும் குணமடையாமல் இருந்தார்.
|
ஹனுமந்த் தன் வலதுகரமும் இணை நிர்வாக இயக்குநருமான உமேஷ் மானே உடன்
|
ஹனுமந்த் அடுத்ததாக அரசு பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ சேர்ந்தார். “இரண்டாம் ஆண்டு படிக்கையில் என் அப்பா இறந்துபோனார். டிப்ளமோ முடிந்ததும் பிலிப்ஸ் நிறுவனத்தில் பயிற்சிக்குச் சேர்ந்தேன். விரைவில் பிடிக்காமல் விலகிவிட்டேன்.”
அவர் மேலே படிக்க விரும்பினார். அம்மா 15,000 ரூ கடன்வாங்கினார். அதைக்கொண்டு விஷ்வகர்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிடெக் சேர்ந்தார்.
“சின்னச் சின்னவேலைகள் செய்து என் கல்லூரிப் படிப்புக்கு சம்பாதித்துக்கொண்டேன்,” என்கிறார் அவர்.
வீடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வண்ணம் பூசும் வேலையையும் எடுத்துச் செய்தார். ஐந்துபேரை வேலைக்கு எடுத்து பத்து நாள் வேலைபார்த்தால் 5000 ரூபாய் கையில் நின்றது. “மாதத்துக்கு இரண்டு ஆர்டர் கிடைக்கும். அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.”
|
ஹனுமந்த் தன் ஊழியர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க விரும்புகிறார்
|
சமூகத்துக்கு எதாவது செய்ய ஹனுமந்த் விரும்பினார். 1993-ல் அவர் பாரத் விகாஸ் பிரதிஷ்தான் என்ற லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிக்கு நிதி திரட்டுவது நோக்கம்.
படிப்பின் இறுதி ஆண்டில் தேசிய விளையாட்டுப்போட்டிகள் பலேவாடி அரங்கில் நடப்பதாகக் கேள்விப்பட்டார். அங்கு நடைபாதையை சரிசெய்யும் 3 லட்ச ரூபாய் ஒப்பந்தத்தை அவர் பெற்றார்.
அப்போதுதான் அவர் சொந்த வீடு கட்டியிருந்தார். எனவே சிமிண்ட், கட்டடபொருட்கள் தருபவர்களை அவர் அறிவார். எனவே ஐந்துபேரை தினக்கூலிக்கு அமர்த்தி ஏழு நாட்களுக்குள் வேலையை முடித்தார். அந்த வேலையில் 1.5 லட்சரூபாய் கிடைத்தது.
“இருப்பினும் லட்டூர் பூகம்பத்தால் விளையாட்டுப்போட்டிகள் தள்ளிப்போடப்பட்டன. மழையில் நாங்கள் அமைத்த பாதைகள் சீர்குலைந்தன,” நினைவுகூர்கிறார் ஹனுமந்த். அதனால் அவருக்கு பணம் அளிக்கப்படவில்லை. ஆனாலும் அவரது தொழிலாளர்கள் சம்பளமின்றி பணிபுரிய முன்வந்தனர். திரும்பவும் அதே பணியைச் செய்துமுடித்தார். லாபமாக 1 லட்சரூபாய் மிஞ்சியது.
“வேலையாட்களை நான் நல்லவிதத்தில் நடத்தினேன். அவர்கள் என்னிடம் வேலை செய்ய விரும்பினர்,” தன் அணுகுமுறையை அவர் விளக்குகிறார். அது இன்றும் தொடர்கிறது.
பிடெக் முடித்ததும் ஹனுமந்த் டெல்கோ நிறுவனத்தில் ( இப்போது டாடா மோட்டார்ஸ்) வேலைக்குச் சேர்ந்தார். பல ஆண்டுகளாகத் தண்டமாகக் கிடந்த பழைய பொருட்களைப் பயன்படுத்த ஒரு வழி கண்டதன் மூலம் நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் சேமித்துக்கொடுத்தார்.
|
தங்கள் பாதுகாப்பான சூழலை விட்டுவெளியே வந்து போராடுகிறவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார் ஹனுமந்த்
|
“என் உயரதிகாரி மகிழ்ச்சி அடைந்து என்ன பரிசு வேண்டும் என்றார். என் கிராமவாசிகள் பலர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு துப்புரவுப் பணியில் வேலை கொடுங்கள் என்றேன்.”
ஆனால் அந்நிறுவனம் ஏதாவது அறக்கட்டளை அல்லது நிறுவனம் மூலமே வேலைக்கு ஆட்கள் எடுக்கும். ஹனுமந்த் தங்கள் பாரத் விகாஸ் பிரதிஷ்தான் பற்றிச் சொன்னார். ஒப்புக்கொண்டார்கள்.
பாரத் விகாஸ் ட்ரஸ்ட் மூலமாக டாடா மோட்டார்ஸில் எட்டுபேர் வேலை பெற்றனர். மாதம் 12,000 ரூபாய் கிடைத்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவருக்கு தோட்டவேலை, மின்சாரம், எந்திரத் துறைகளிலும் வேலைகள் செய்யும் ஒப்பந்தத்தையும் அளித்தது.
“ஒவ்வொன்றாக எல்லாம் கிடைத்தது. எல்லா பிரிவு வேலைகளும் எங்களுக்கே கிடைத்தன,” நினைவு கூர்கிறார் ஹனுமந்த். பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இவர்களுக்குப் பணி ஒப்பந்தங்களை அளித்தன.
1997-ல் அவர் பிவிஜி இந்தியா நிறுவனத்தைத் தொடங்கினார். முதல் ஆண்டில் 8 லட்சரூபாய் வருவாய் கிடைத்தது. இரண்டாம் ஆண்டில் 56 லட்சமாக அது உயர்ந்தது.
1999-ல் ஹனுமந்த் திருமணம் செய்துகொண்டார். டெல்கோவை விட்டும் விலகினார். பிவிஜிக்கு பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். பிவிஜி சிறப்பாக பணி செய்தது.
2003ல் பிவிஜியின் வருவாய் 4 கோடியைத் தொட்டது. பாராளுமன்றம், பிரதமர் இல்லம், குடியரசுத்தலைவர் மாளிகை ஆகியவற்றை எந்திரம் மூலம் துப்புரவு செய்யும் பணியும் கிடைத்தது. “முக்கியமான இடங்களில் பணி செய்வதில் பெருமை அடைந்தோம்,” என்கிறார் அவர்.
|
70,000 தொழிலாளர்கள் ஹனுமந்திடம் உண்டு
|
பஜாஜ், மஹிந்திரா, அசோக் லேலண்ட், ஹுண்டாய், போக்ஸ்வாகன், பியட், போன்ற நிறுவனங்களுடன், ஓஎன் ஜிசி , ஐடிசி, ஹிந்துஸ்தான் லீவர், இந்திய ரயில்வே ஆகிய நிறுவனங்களும் உண்டு.
ஹனுமந்த் தன் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளார். “என் கிராமத்தையும் சுற்றுப்புறத்தையும் சேர்ந்த பலருக்கு மறுவாழ்வு அளித்துள்ளேன். தொழிலாளர் நலத்தைப் பேணுகிறோம். நான் பயணம் செய்யும்போது என் அறையிலேயே என் ஓட்டுநரும் தங்குவார். இரட்டை படுக்கைகள் கேட்கும்போது காதுக்கு பஞ்சும் கேட்பேன். ஏனெனில் அவர் குறட்டை விடுவார்,” என சிரிக்கிறார் ஹனுமந்த்.
ஹனுமந்த் தன் மனைவி, இருமகள்களுடன் புனேயில் வசிக்கிறார். தங்கள் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வந்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று அவர் நம்புகிறார். “ உங்கள் வீட்டைவிட்டு ஊரைவிட்டு வெளியேறி வாய்ப்புகளைத் தேடவேண்டும். உங்கள் சூழலை யாரும் மாற்றமுடியாது. நீங்கள் நினைத்தால் மட்டுமே அது மாறும்.”
அதிகம் படித்தவை
-
சிறகு விரித்தவர்!
அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்
-
ஒரு மசால்தோசையின் வெற்றி!
கேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
மாவில் கொட்டும் கோடிகள்
தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
பந்தன் என்னும் பந்தம்
மிகவும் எளிய பின்னணி கொண்ட சந்திர சேகர் கோஷ், கிராமப்புற மகளிரின் நிலை கண்டு மனம் நொந்தார். அவர்களுக்கு உதவ அவர் தொடங்கிய பந்தன் என்ற சிறுகடன் நிறுவனம் ஏராளமான பெண்களின் வாழ்க்கையை மாற்றியதுடன் இன்று வங்கியாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை
-
வெற்றிப் படிக்கட்டுகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை
-
பட்டு சாம்ராஜ்ய இளவரசி!
நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்