கிறிஸ்துமஸ் இரவில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கிறிஸ், இன்றைக்கு மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் கோடீஸ்வரர்! ஒரு சிலிர்ப்பூட்டும் நம்பிக்கைக் கதை!
24-Jan-2025
By பி சி வினோஜ்குமார்
சென்னை
ஏழையாக இருந்து பணக்காரர் ஆனவர்களின் கதைகளில் மிகவும் ஈர்க்கக் கூடியது கிறிஸ் கார்ட்னரின் கதை. அமெரிக்க மல்டிமில்லியனரான இவர் பங்குவர்த்தக தரகர் மற்றும் சுயமுன்னேற்ற பேச்சாளராக இருக்கிறார். அவர் குழந்தைப் பருவத்தில் மோசமான சூழல்களை சந்தித்தவர். தாயின் இரண்டாவது கணவரின் மூன்று மகள்களுடன் வளர்ந்தார். தாயின் இரண்டாவது கணவர் இவரைக் கொடுமைப்படுத்துவார்.
கிறிஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, வில் ஸ்மித் நடிப்பில் 2006-ம் ஆண்டு ஒரு திரைப்படமும் வெளியானது. அதன் மூலம் அவர் இன்று மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார். இப்போது அவருக்கு 60 மில்லியன் டாலர் சொத்துகள் இருக்கின்றன(தோராயமாக இந்திய மதிப்பில் 64 கோடி ரூபாய்)
|
கார்ட்னர் ரிச்&கம்பெனியின் நிறுவனரான கிறிஸ் கார்ட்னரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு ‘த பர்ஸூட் ஆஃப் ஹேப்பினெஸ்(The Pursuit of Happyness’)’ என்ற பெயரில் 2006-ல் வெளியான திரைப்படத்தில் வில் ஸ்மித் நடித்திருக்கிறார். (புகைப்படம்; விக்கிமீடியா காமன்ஸ்; dbking; Creative Commons Attribution 2.0 Generic licenceகீழ் பிரசுரிக்கப்படுகிறது)
|
அனைத்து கடினமான சூழல்களையும் கடந்து எழும் திறனை பெற்ற கிறிஸ், வாழ்க்கையில் வெற்றி பெற்றார். அவருடைய தாய் பேட்யீ ஜீன் சொன்ன ‘’மகனே, நீ விரும்பினால், ஒரு நாள் உன்னால், மில்லியன் டாலர்களைச் சம்பாதிக்க முடியும்” என்ற வார்த்தைகளை எப்போதுமே அவர் நினைவில் வைத்திருந்தார்.
த பர்ஸுட் ஆஃப் ஹேப்பீனெஸ் (The Pursuit of Happyness’) என்ற தலைப்பிலான புத்தகத்தில் அவர் தம்முடைய வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். க்யூன்சி ட்ரோய்பீ-யுடன் இணைந்து இந்தப் புத்தகத்தை அவர் எழுதி உள்ளார்.
கிறிஸ் கடினமான சூழல் கொண்ட கருப்பினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தார். அங்கே அவர் மரிஜூனாவை புகைக்கவும், பொருட்களைத் திருடவும், பிறருடன் சண்டை போடவுமாக இருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அவர் தனது சொந்த தந்தையான தாமஸ் டர்னரைப் பார்த்ததில்லை. தனக்கு ஒரு குழந்தை பிறந்த பின் ஒரு வழியாக தன் தந்தையைக் கண்டுபிடித்தார். பேரனுக்கு தாத்தாவை அறிமுகப்படுத்தினார். அவர் குழந்தையாக இருக்கும்போது, அவரது தாயின் இரண்டாவது கணவர் ஃபிரட்டீ டிரிப்லெட் நான் உன் தந்தையல்ல என்று சொல்வதுடன் அடிக்கடி அடிப்பார்.
எனவே, கிறிஸ், ஃபிரட்டீ டிரிப்லெட் மீது கோபமாக இருந்தார். அவரை கொல்வதற்கும் திட்டமிட்டார். அதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. அந்த வேலையில் அவரது அம்மா இறங்கிவிட்டார். ஃபிரட்டீ வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, வீட்டை தீ வைத்துக் கொளுத்த முற்பட்டதாக கிறிஸின் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிறிஸ் அனைத்து சமயங்களிலும், பாசிடிவ் ஆக இருப்பார். ஒரு முறை கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அவரது தாயின் இரண்டாவது கணவர், அவரை வீட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டார்.
“துப்பாக்கி முனையில், உடைகள் ஏதும் இல்லாமல் நிர்வாணமாக வீட்டில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். இன்றும் கூட, கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அந்த நாள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது...”
“அவர் செய்யும், எதனையும் நாம் செய்யக் கூடாது என்று நான் மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன். நான் மது குடிக்கப் போவதில்லை. நான் பெண்களை அடிக்கப்போவதில்லை. நான் அறியாமையில் இருக்கப்போவதில்லை என்றெல்லாம் தீர்மானித்தேன்.
“இளம் சிறுவனாக இருக்கும்போது ஒரு உத்தியை என்னுள் வளர்த்துக் கொண்டேன். நான் சத்தம் போட்டு வாசிப்பேன். வானத்தைப் பார்த்து நான் சொல்வேன். என்னை நீ அடித்து கீழே போகச் செய்யலாம். என்னை நீ அடிக்கலாம், என்னுடைய அம்மாவை நீ அடிக்கலாம். ஒரு துப்பாக்கியை வைத்து, எங்களை , உன்னால் வெளியேற்ற முடியும். ஆனால், என்னால் படிக்க முடியும். என்னால் பல இடங்களுக்குச் செல்ல முடியும்,”என்று சேனல் 20\20-யில் ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார்.
கிறிஸ், அவரது தாய் இருவருமே புத்தகங்கள் படிப்பதை விரும்புகின்றவர்கள். ரீடர்’ஸ் டைஜஸ்ட் புத்தகத்துக்கு இருவருமே ரசிகர்கள். அட்டை முதல் அட்டை வரை அந்தப் புத்தகத்தைப் படித்து விடுவார்கள். கிறிஸ் பொது நூலகத்துக்குச் செல்வார். பல மணி நேரம் அங்கிருந்து புத்தகங்களைப் படிப்பார்.
|
கிறிஸ் கார்ட்னர், இப்போது பெரிதும் விரும்பப்படுகிற, சுயமுன்னேற்ற பேச்சாளர்.(புகைப்படம்: விக்கிமீடியா காமன்ஸ்; dbking; Creative Commons Attribution 2.0 Generic licenceகீழ் பிரசுரிக்கப்படுகிறது)
|
கிறிஸ் இளைஞராக இருக்கும்போது பல வேலைகளைச் செய்திருக்கிறார். ஒரு ரெஸ்டாரெண்ட்டில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்திருக்கிறார். ஒரு நர்ஸிங் ஹோமில் முதிய நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவர்கள் கழிவுகளைச் சுத்தம் செய்துள்ளார்.
பள்ளிப்படிப்புக்குப் பின்னர் 18-வது வயதில், உலகத்தைச் சுற்றிப்பார்க்கும் ஆசையில் அமெரிக்க கப்பற்படையில் சேர்ந்தார். எனினும் அவர் இலினியாசில் கிரேட் லேக் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பற்படைக்குச் சொந்தமான மருத்துவமனைப் பள்ளியில் பணி அமர்த்தப்பட்டார். நோயாளிகளுக்கு முதல் உதவி செய்வது குறித்த அடிப்படையான பயிற்சிகளைப் பெற்றார். பின்னர், ஜாக்சன்வேலியில் உள்ள கப்பற்படை மண்டல மருத்துவ மையத்தில் பணியாற்றினார்.
கப்பற்படை பணி முடிந்தபின்னால் அவர் சான்பிரான்சிஸ்கோவில் சோதனை ஆய்வகத்தில் பணியாற்றினார். தொழில்முறையில் ஒரு டாக்டர் பணிக்குத் தகுதி பெற படிக்கலாமா என்றுகூட அவர் யோசித்தார். ஒரு பாதுகாவலராக பகுதி நேரமாக பணியாற்றினார். வார இறுதிகளில் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக பெயிண்ட் அடிக்கும் பணிகளுக்கும் சென்றார்.,
1981-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அவருக்கு கிறிஸ்டோபர் ஜாரெட் மெடினா கார்ட்னர் ஜூனியர் என்ற மகன் பிறந்தான். ஆனால் அப்போதும் பெரும் அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு நனவாகும் அறிகுறியே இல்லை!
மேலும் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக, மருத்துவ கருவிகள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 30,000 டாலர் சம்பளத்தில் ஒரு மருத்துவப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், அந்த நிறுவனத்தின் போட்டிக் கம்பெனியான வேன் வாட்டர்ஸ் அண்ட் ரோஜர்ஸ் நிறுவனத்திலும் பணியில் சேர்ந்தார்.
ஒரு சிவப்பு பெராரி 308-ஐ வைத்திருந்த ஒரு நபரை எதேச்சையாக சந்தித்தபோது, கிறிஸ் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அந்த நபரிடம் கிறிஸ் இரண்டு எளிய கேள்விகள் கேட்டார். “என்ன செய்து கொண்டிருக்கிறாய், அதனை எப்படிச் செய்கிறாய்”என்ற கேள்விகள்தான் அவை. பாப் பிரிட்ஜஸ் என்ற பங்கு சந்தை தரகர்தான் அவர். அந்த பங்கு சந்தை தரகர், மாதம் தோறும் 80,000 டாலர் சம்பாதித்துக் கொண்டிருந்தார் என்பதையும் கிறிஸ் அறிந்தார்.
இதுதான் கிறிஸை உடனடியாக கவர்ந்தது. இந்த வேலைதான் ஒரு கோடீஸ்வரர் ஆக விரும்பும் தம்முடைய இலக்கை எட்ட உதவும் வேலை என்று அவர் தீர்மானித்தார். வால் ஸ்டீர்ட் பகுதியில் இருக்கும் பலர், எம்.பி.ஏ படித்தவர்கள். எனினும், டீன் விட்டர் என்ற நிறுவனத்தில் மாதம் 1000 டாலர் உதவித் தொகை பெறும் ஒரு பயிற்சியாளராகச் சேர்ந்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் அவர் பெரும் பிரச்னைகளைச் சந்தித்தார். ஒற்றை பெற்றோர் என்ற வகையில், வேலை முடிந்ததும் தமது குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை புத்தகத்தில் கிறிஸ் எழுதி இருக்கிறார். வீடின்றி எப்படி இருந்தார், தமது மகனுடன் ஒரு ரயில் நிலையத்தில் இருந்த ஒரு பொதுக் குளியலறையில் படுத்திருந்தது உள்ளிட்ட பல தருணங்கள் பற்றி எழுதி இருக்கிறார்.
டீன் விட்டர் நிறுவனத்தில் இருந்து, பீர் ஸ்டீர்ன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே அவர், 1985ம் ஆண்டு முதன் முதலாக மில்லியன் டாலர் சம்பாதித்தார்.
1987-ல், கார்டனர் ரிச் & கம்பெனி என்ற சொந்த பங்குச் சந்தை தரகு கம்பெனியை நிறுவினார். அவர் பி.பி.சி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய தாயிடம் இருந்தும், ரத்த சம்பந்தம் இல்லாத பிறரிடம் இருந்தும், நான் ஒளியைத் தேர்ந்தெடுத்தேன். அதை இறுகப் பற்றிக் கொண்டேன்.”
அதிகம் படித்தவை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
இரவுக் கடை
கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.
-
வெற்றியின் சுவை
கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்
-
வேகமும் வெற்றியும்
திருச்சி கைலாசபுரத்தில் பிறந்து வளர்ந்த அன்சார், சிறுவயதில் மெக்கானிக் ஷாப்புகளில் பொழுதைப் போக்குவது வழக்கம். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ரூ.10 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
வெற்றி மந்திரம்
ராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
இளம் சாதனையாளர்
பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை