தாய் கொடுத்ததோ நூறு ரூபாய்! தனயன் குவித்திருப்பதோ 200 கோடி! ஓர் அபார வெற்றிக்கதை!
09-May-2025
By குருவிந்தர் சிங்
புதுடெல்லி
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 700 கி.மீ தொலைவில் கூச்பெஹார் மாவட்டத்தில் உள்ளது ஒரு குக்கிராமம். இங்கிருந்து 1988-ம் ஆண்டு 19 வயது இளைஞரான மலாய் தேப்நாத் டெல்லிக்கு ரயிலேறினார்.
"எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. நான் டெல்லிக்குச் செல்வதற்காக என் தாய் எனக்கு 100 ரூபாய் கொடுத்தார். அந்தப் பணத்தை வைத்து டெல்லி மெயிலுக்கு டிக்கெட் எடுத்தேன். அப்போது டெல்லிக்கு 70 ரூபாய்தான்," என்கிறார் தேப்நாத். இப்போது இவர் டெல்லியில் உள்ள தேப்நாத் கேட்டரர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்து தன் கடும் உழைப்பில் 200 கோடி ரூபாய் வரை செல்வம் சேர்த்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் பல சொத்துகளை வைத்திருக்கிறார்
![]() |
வெறும் 100 ரூபாய் பணத்துடன் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தமது கிராமத்தில் இருந்து மலாய் தேப்நாத் கிளம்பி வந்தார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
கேட்டரிங் தொழில் செய்வது தவிர, ஆறு ரயில்களில் அவர் உணவகங்களையும் நடத்தி வருகிறார். கடந்த நிதி ஆண்டில் அவரது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 6 கோடி ரூபாயாக இருந்தது. குடிசையில் இருந்து கோபுரத்துக்கு உயர்ந்த தேப்நாத் கதையில் அவரது ஆர்வம், உறுதிப்பாடு, வியர்வை ஆகியவையே அடித்தளமாக அமைந்தவை. மேற்கு வங்க மாநிலம் கூச்பிஹார் மாவட்டத்தில் உள்ள பெஸ்தாரஜ்ஹார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேப்நாத். அங்கே அவரது தாத்தா நிறைய நிலத்தை சொந்தமாக வைத்திருந்தார். "என்னுடைய தாத்தா கிழக்கு வங்கம் (இப்போது வங்கதேசம்) பகுதியில் இருந்து மேற்கு வங்கத்துக்கு 1935-ம் ஆண்டு வந்தார். கிராமத்திலேயே அவர் பெரும் பணக்காரராக இருந்தார்," என்கிறார் தேப்நாத். அவரது குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு தறியும் இருந்தது. அந்த கிராமத்தில் தேப்நாத் குடும்பத்துக்கு நல்ல சமூக அந்தஸ்து இருந்தது. "என்னுடைய தாத்தா தமது நிலங்களை தானமாகக் கொடுத்தார்.. கிராமத்தில் உள்ள ஏழை சிறுவர்கள் படிப்பதற்காக ஒரு பள்ளிக்கூடமும் கட்டினார். அந்த பள்ளிக்கட்டடம் இன்னும் அதே கிராமத்தில் அவரது பெருந்தன்மைக்கு சாட்சியாக இருந்து வருகிறது," என்றார். மேற்கு வங்கத்தில் 1970-ம் ஆண்டு இடது சாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அரசியல் மோதல்கள் ஆங்காங்கே நிகழ்ந்தன. அப்போது அவரது குடும்பத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையும் எரிக்கப்பட்டது. இதனால், தேப்நாத் வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டம் மிகவும் சோகமாக கழிந்தது. "தொழிற்சாலை எரிக்கப்பட்டதால், முதலீடு எல்லாம் போய்விட்டது. எனவே, நாங்கள் திடீரென மிகவும் ஏழைகளாகிவிட்டோம். அப்போது எனக்கு 6 வயதுதான். எனது குடும்பம் மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட்டது. ஆனால், ஒருபோதும் பழைய மகிமையை நாங்கள் பெறமுடியவில்லை. 1980-களின் தொடக்கத்தில் நிலைமை மேலும் மோசமானது."
1986-ம் ஆண்டு தேப்நாத்தின் தந்தை, வேலை தேடி டெல்லிக்குச் சென்றார். அப்போது தேப்நாத் , அவரது மூத்த சகோதரி, இரண்டு இளம் சகோதரர்கள் ஆகிய எல்லோருமே படித்துக் கொண்டிருந்தனர். "என் தந்தை கிரைண்டர் மிஷின் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு ஆண்டு கழித்து சொந்தமாக ஒரு தொழிலகத்தைத் தொடங்கினார். எனினும் அப்போது அவரால் வீட்டுக்குப் பணம் அனுப்ப முடியவில்லை. அவருக்கு லாபம் ஏதும் கிடைக்க ஆரம்பிக்கவில்லை," என்றார் தேப்நாத்.
![]() |
தேப்நாத் ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் டெல்லியில் பணியாற்றினார். அங்கு அவர் வணிகத்தின் யுக்திகளைக் கற்றுக் கொண்டார் |
தேப்நாத் அவரது கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய டீக் கடையை கவனித்துக்கொண்டார். "பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு, அந்த கடையில் என்னுடைய நேரத்தைச் செலவழிப்பேன். அதே போல பள்ளிக்குச் சென்று வந்த பின்னரும் கடைக்குச் செல்வேன். நான் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மூன்று ஆண்டுகளுக்கு அதைப் பார்த்துக்கொண்டேன். அதன்பின்னர் நான் என்னுடைய படிப்பில் இருந்து விலகி டெல்லிக்குச் சென்றேன். அப்போது என் தாய் கொடுத்த 100 ரூபாயுடன்தான் டெல்லிக்குச் சென்றேன்," என தேப்நாத் கூறினார். அவரது ஆரம்பகாலகட்ட வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டார்.
டெல்லிக்கு வந்தபிறகு, இரண்டு மாதங்கள் தந்தையின் தொழிற்சாலையில் அவர் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து விலகி விட்டார். "தொழிற்சாலையானது கடுமையான காற்று மாசுபாடு இருந்த பகுதியில் இருந்தது. அந்த சூழல் எனக்கு விருப்பமானதாக இல்லை. வேறு வேலை தேடுவது என்று முடிவு செய்தேன். இது குறித்து என்னுடைய தந்தையிடம் சொன்னேன். அவர் என்னை போக அனுமதித்தார்."
விரைவிலேயே ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் தேப்நாத் , சூப்பர்வைஸராக வேலைக்குச் சேர்ந்தார். "என்னுடைய சம்பளம் 500 ரூபாயாக இருந்தது. அங்கே அலுவலகத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட பழக்கம் இல்லாத வேலைகளையும் செய்தேன். கடினமாக உழைத்தேன். , என்னுடைய சகோதரர்களின் கல்விக்காக நான் எனது முழு சம்பளத்தையும் என் குடும்பத்துக்கு அனுப்பி வைத்தேன். ஒவ்வொரு நாள் இரவும் நான் கூடுதலாகப் பணியாற்றியதால் தலா 30 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை நான் என் சொந்த செலவுகளுக்கான வைத்துக் கொண்டேன்." அடுத்த 10 ஆண்டுகள் அதே கேட்டரிங் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார்.
" 1998-ஆம் ஆண்டு என்னுடைய சம்பளம் ரூ.5000 என அதிகரித்தது. இதற்கிடையே1994-97 வரை ஐடிடிசி(இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகம்) மூலம் ஹோட்டல் நிர்வாகப் படிப்பு முடித்தேன்," என்கிறார். 1997-ம் ஆண்டு அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் ரூ.8000 சம்பளத்தில் சூப்பர்வைஸராக பணிக்குச் சேர்ந்தார். "எங்கள் நிறுவனம் பல பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது. அது எனக்கு கற்றுக் கொள்வதற்கான பெரும் அனுபவமாக இருந்தது.இரண்டு ஆண்டுகள் கழித்து என்னுடைய வேலையில் இருந்து விலகினேன். நானே சொந்தமாக கேட்டரிங் தொழிலை ஆரம்பித்தேன்," என்றார் அவர்.
2001-ம் ஆண்டு தேப்நாத் கேட்டரர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது ராணுவ மூத்த உயர் அதிகாரியான கர்னல் பக்சி என்பவரை தற்செயலாகச் சந்தித்தார். அவர், ராணுவ மெஸ்ஸுக்கு கேட்டரிங் செய்யும் குழுவில் சேரும்படி தேப்நாத்தை அறிவுறுத்தினார். "எனது நிறுவனத்தை நான் அமைத்தேன். ராணுவ மெஸ்குழுவில் 2 லட்சம் ரூபாய் கட்டணத்தில் சேர்ந்தேன். விரைவிலேயே ராணுவ அதிகாரிகள் நடத்தக்கூடிய விருந்துகளின் ஒருங்கிணைப்புக்கு எனக்கு ஆர்டர்கள் கிடைத்தன," என்றார் அவர்.
![]() |
பல சொத்துகளுக்கு இடையே, வடக்கு வங்கம் பகுதியில் 50 ஏக்கருக்கும் மேலான அளவுக்கு தேயிலை தோட்டமும் தேப்நாத்துக்கு சொந்தமாக இருக்கிறது |
பிறகு மளமளவென வளர்ச்சி! இப்போது அவர் டெல்லி, புனே, ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் குவாலியர் ஆகிய 35-க்கும் மேற்பட்ட ராணுவ மெஸ்களுக்கான அதிகார பூர்வ கேட்டரிங் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். 200 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை கட்டமைத்திருப்பதாக கூறும் அவர், வடக்கு வங்கத்தில் 50 ஏக்கருக்கும் மேலாக தேயிலைத்தோட்டத்தையும் சொந்தமாக கொண்டிருக்கிறார். அவரது மனைவி குடும்பத்தலைவியாக இருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் ஆஸ்திரேலியாவிலும், இன்னொருவர் புனேவிலும் படிக்கின்றார். பெரும் வெற்றியை அடைந்தபோதிலும் இன்னும் கூட அவர் மிகவும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். "என்னுடைய தேவைகள்மிகவும் குறைவு என்பதால், நான் இன்னும் மிகவும் சிறிய வீட்டில்தான் வசிக்கின்றேன். உயர்ந்த எண்ணங்களையும், எளிய வாழ்க்கையையே நான் நம்புகின்றேன்." என்கிறார்.
அதிகம் படித்தவை
-
தோல்விகளில் துவளாத வெற்றியாளர்
தந்தையின் உணவகத்தில் உதவியாளராக இருந்த சரத்குமார் சாகு, இன்றைக்கு 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதனால் அவர் துவண்டு விடவில்லை. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
மாற்றி யோசித்தவர்!
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை
-
கண்டெய்னரில் கண்ட வெற்றி!
இரண்டு முறை தொழில் தொடங்கி தோல்வியடைந்தார் இக்பால் தங்கல். இருப்பினும் முயற்சியில் தளராமல் மூன்றாவது முறையாக கண்டெய்னர் வீடுகள், அலுவலகங்கள் கட்டமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
ஏற்றம் தந்த பசுமை
ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.