அன்று தள்ளுவண்டியில் பக்கோடா விற்றவர், இன்று பாட்னாவில் மிகப்பெரிய நகைக்கடை நடத்துகிறார்!
23-Nov-2024
By ஜி.சிங்
பாட்னா
அவர் பெயர் சந்த் பிஹாரி அகர்வால். கையில் நயா பைசாகூட இல்லாமல் தொடங்கியது அவர் வாழ்க்கை. தள்ளுவண்டியில் பக்கோடா விற்பனை, தெருவோரம் சேலை விற்பனை, கடைக்குக் கடை ரத்தின கற்கள் விற்பனை என்று நகர்ந்து இன்று பாட்னாவில் 20 கோடி ரூபாய் புரளும் நகைக்கடை நடத்துகிறார்.
பீஹாரில் தங்க நகை என்றாலே சந்த் பிஹாரியின் அகர்வால் நகைக்கடைதான் நினைவுக்கு வரும். 61 வயதாகும் இவர், நாட்டின் இன்னொரு மூலையில் இருக்கும் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். அங்கே தன் அம்மாவுடன் தெருவோரத்தில் உணவுப் பொருட்கள் விற்றவர். சுமார் 50 ஆண்டுகள் அவர் உறுதியுடன் உழைத்த உழைப்பு அவரை இன்றைய உயரத்துக்குக் கொண்டுவந்துள்ளது!
|
பாட்னாவில் உள்ள அகர்வால் நகைக்கடை அதிபர் சந்த் பிஹாரி அகர்வால் கடும் உழைப்பின் மூலம் 17 கோடி விற்பனை ஆகும் இந்த நகைக்கடை நிறுவனத்தை உருவாக்கி உள்ளார்(படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்) |
ஜெய்ப்பூரில் டிசம்பர் 20, 1956-ல் ஐந்து பிள்ளைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் சந்த் பிஹாரி. அவரது தந்தைக்கு சூதாடும் பழக்கம் உண்டு. “அப்போது அது குற்றமாகக் கருதப்படவில்லை. அவர் நிறைய பணம் சம்பாதித்தார். குதிரை வண்டியில் பயணம் செய்யும் அளவுக்கு செல்வந்தராக ஆனார்.”
ஆனால் அது நீண்டநாள் நீடிக்கவில்லை. அதிர்ஷ்டம் அவரைக் கைவிட்டது. “அவர் வென்றதை எல்லாம் விரைவில் இழந்தார். நான் பிறக்கும்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தோம்.” அவர் சொல்கிறார்.
சந்த் பிஹார் பள்ளிக்கே செல்லவில்லை. குடும்பத்தை அவரது அம்மா நவல் தேவி அகர்வால்தான் கவனித்துக்கொண்டார்..
1966ல் சந்த் பிஹாரிக்கு 10 வயது ஆகியிருந்தது. அப்போது அவரது அம்மா தள்ளுவண்டியில் பக்கோடா கடை போட்டிருந்தார்.. அக்கடையில் சந்த் பிஹாரி தன் அண்ணா ரத்தனுடன் சேர்ந்து உதவிக்குச் செல்வார். இரு தம்பிகள் பள்ளிக்குச் செல்வர். மூத்தவரான அக்கா வீட்டுவேலைகளைப் பார்ப்பார்.
"தினமும் 12-14 மணி நேரம் வேலைபார்த்தால்தான் 100 ரூபாய் சம்பாதிக்கமுடியும். பள்ளிக்குப் போகவேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்தது. நான் கல்வி கற்றிருந்தால் இன்னும் சிறப்பான வெற்றிகளை அடைந்திருக்கமுடியும். ஆனால் சூழல் அதை அனுமதிக்கவில்லை.”
மாதம் 300 ரூபாய் சம்பளத்துக்கு தன் 12 வயதில் ஜெய்ப்பூரில் ஒரு சேலைக்கடையில் விற்பனையாளராகச் சேர்ந்தார் சந்த். “என் அண்ணா அந்த வேலையைப் பெற உதவி செய்தார். அப்போது அது நல்ல சம்பளம். எங்களுடைய ஏழைக்குடும்பத்துக்கு போதுமானது,”
1972ல் அவரது அண்ணன் ரத்தனுக்கு திருமணம் ஆனது. அவரது திருமணப் பரிசாகக் கிடைத்த 5000 ரூபாயில் 18 ரூபாய் விலையில் சேலைகளை ஜெய்ப்பூரில் வாங்கிக்கொண்டு பாட்னாவுக்கு வந்தார். அங்கேதான் அவர் மாமனார் வீடு.
|
ஜெய்ப்பூரில் இருந்து சந்த் பிஹாரி பாட்னாவுக்கு 1973ல் வந்தார். ரயில் நிலையம் அருகே நடைபாதையில் சேலைகள் விற்றார். |
“சேலைகள் அங்கு நன்றாக விற்றன. அவர் உள்ளூர் கடைகளுக்கு அவற்றை சப்ளை செய்தார்,” என்கிறார் சந்த்.
ரத்தனுக்கு உதவியாக ஆள் தேவைப்பட்டது. தம்பி சந்த் பிஹாரியை பாட்னாவுக்கு 1973-ல் அழைத்துக் கொண்டார்.
“ஒரு கடையை வாடகைக்கு எடுக்க எங்களுக்கு வசதி இல்லை. ஆனால் உற்சாகமாக வேலை செய்தோம். பாட்னா ரயில்நிலையம் அருகே நடைபாதையில் கடை போட்டோம். வெயிலிலும் மழையிலும் அங்கே நின்று வாடிக்கையாளர்களிடம் பேசி சேலைகள் விற்பது கடினமாகவே இருந்தது.”
ராஜஸ்தானி சேலைகளை பாட்னாவில் விற்ற ஒரே வணிகர்கள் அவர்கள்தான் என்பது ஒரு உதவிகரமான விஷயம். தினமும் 250- 300 ரூபாய் சம்பாதித்தார்கள். 25 சதவீதம் அவர்கள் லாபம் வைத்து விற்றார்கள்.
“கடைக்குக் கடை சென்று எங்கள் சேலைகளை விற்பனைக்கு வைக்குமாறு கூறி ஒரு விநியோக வலையை உருவாக்கினோம். பிஹாரின் பல்வேறு இடங்களில் இருந்தும் வணிகர்கள் வந்து சேலைகளை வாங்கிச் சென்றார்கள்.” சந்த் விளக்குகிறார்.
அடுத்த ஆண்டே பாட்னாவில் கடாகுவான் என்ற இடத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுக்க முடிந்தது. அவர்களின் மாத விற்பனையும் 80,000-90,000 ரூபாய் என அதிகரித்தது.
|
சந்த் பிஹாரி, 2012-ல் நடந்த இந்திய சாதனையாளர்கள் மாநாட்டில் பாராட்டி விருது வழங்கப்பெற்றார் |
துரதிருஷ்டவசமாக அவர்களின் கடை 1977-ல் கொள்ளையடிக்கப்பட்டது. அவர்கள் உழைப்பில் உருவான தொழில் சிதைக்கப்பட்டது.
“நான்கு லட்ச ரூபாய் அளவுக்கு மதிப்புள்ள பொருட்கள் களவு போயின. என் அண்ணா முந்தைய ஆண்டே சேலை விற்கும் தொழிலில் இருந்து விலகியிருந்தார். என் வாழ்க்கையில் மோசமான காலகட்டம் அது.”
சந்த் பிஹாரி மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
அவரது அண்ணா ரத்தன் மீண்டும் உதவிக்கு வந்தார். அரிய ரத்தினக்கற்களை விற்குமாறு யோசனை கூறினார். கொல்கத்தாவில் ரத்தன் அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருந்தார்.
“எனக்கு அந்த வேலை பற்றி எதுவும் தெரியாது. ஆனாலும் பிஹார் முழுக்க சராசரியாக 5,000 ரூபாய் மதிப்புள்ள கற்களுடன் கடைகடையாகச் சென்றேன்.” அவர் சுமார் 500 கடைகளுடன் தொடர்பு ஏற்படுத்தினார். தான் விற்கும் கற்கள் பற்றிய அறிவையும் வளர்த்துக்கொண்டார்.
“கடவுளின் ஆசியால் அந்த தொழிலில் லாபம் வந்தது. வாழ்க்கை மீண்டும் நிலைபெற்றது,” என்கிறார் சந்த் பிஹாரி.
பத்து ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பின்னர் 10 லட்சரூபாய் முதலீடு அவரால் திரட்ட முடிந்தது. 1988-ல் அதைக்கொண்டு தங்க நகை வர்த்தகத்தில் கால்பதித்தார். அடுத்த 12 ஆண்டுகளில் ரத்தினக் கற்கள், தங்க நகைகள் விற்பனையில் பிஹார், உ.பியில் தரமான வணிகர் என்ற பெயரைப் பெற்றார்.
|
பங்கஜ் (இடது) தந்தையின் தொழிலில் 2002-ல் சேர்ந்தார் |
2002-ல் 19 வயதான அவரது மகன் பங்கஜ் பாட்னா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று தந்தையுடன் இணைந்தார். சந்த் பிஹாரி, அகர்வால் பிரதர்ஸ் என்ற பார்ட்னர்ஷிப் நிறுவனத்தைத் தொடங்கினார். 350 சதுர அடியில் ஒரு நகைக்கடை ஆரம்பித்தார். பாட்னாவில் புத் மார்க்கில் தங்கள் வீடும் இணைந்த ஷோரூமாக அதை அமைத்தார்.
அதே ஆண்டில் ரத்தினக்கற்கள் விற்பதை நிறுத்திவிட்டு தந்தையும் மகனும் ஆபரண விற்பனையில் கவனம் செலுத்த முடிவு செய்தனர். “எங்களிடம் முதலீடாக ஏற்கெனவே எட்டு கோடி ரூபாய் இருந்தது,” என்கிறார் இப்போது 37 வயதாகும் பங்கஜ். அவரது தம்பி பிரகாஷும் மும்பையில் ஒரு நகைக்கடை நடத்துகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 10-12 சதவீதம் தங்கள் தொழில் வளர்ச்சி பெறுவதாக பங்கஜ் கூறுகிறார். அவர்களின் நகைக்கடை கடந்த ஆண்டில் 17 கோடி வர்த்தகம் செய்துள்ளது. தற்போது மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை இரண்டிலும் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களே நகை வடிவமைப்பும் செய்கிறார்கள்.
தகுதியான விருதுகளும் சந்த் பிஹாரிக்குக் கிடைத்துள்ளன. தொழில்துறையில் சிறந்த சாதனையாளர் விருது 2012ல் அவருக்கு வழங்கப்பட்டது. இது டெல்லியில் உள்ள இந்திய சாதனையாளர்கள் அமைப்பால் வழங்கப்பட்டது. அதற்கு ஓராண்டு முன்பு சிங்கப்பூரில் அனைத்திந்திய தொழிலதிபர் கூட்டமைப்பு அவருக்கு மரியாதை செய்திருந்தது.
|
பேரக்குழந்தையுடன் சந்த் பிஹாரி |
தன் வேர்களை சந்த் பிஹாரி மறக்கவில்லை. 100 அறைகளைக் கொண்ட தர்ம விடுதியை ராஜஸ்தானில் கட்டி உள்ளார். ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளும் செய்கிறார்.
இளம் தலைமுறைக்கு அவர் சொல்லும் அறிவுரை: “தொழிலில் நேர்மையாக இருங்கள். உங்கள் கனவுகளில் நம்பிக்கை வையுங்கள். மன உறுதி இருந்தால் எல்லாம் சாத்தியமே.”
பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய வரிகள். இல்லையா?
அதிகம் படித்தவை
-
போராடு, வெற்றிபெறு!
பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே வீட்டின் வசதியின்மை காரணமாக சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதித்துப் படித்தவர் ஹனுமந்த் கெய்க்வாட். இன்று பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் பிவிஜி என்ற நிறுவனத்தை நடத்துகிறார். ஆண்டு வருவாய் 2000 கோடி! தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை
-
குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்
பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
வீட்டுச்சாப்பாடு
சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
என் வழி தனி வழி!
ராணுவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா. ஆனால் அவர் தனியாக லாஜிஸ்டிக் துறையில் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார். இன்றைக்கு அவரது நிறுவனம் 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது. சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை...
-
தேநீர் விற்கும் ஆடிட்டர்
புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை