“பிரமிடின் அடித்தட்டில் இருந்தவன் நான். இப்போது உச்சியில் இருக்கிறேன்”
21-Nov-2024
By பி.சி. வினோஜ்குமார்
மும்பை
ஆரோக்கியசாமி வேலுமணிக்கு 57 வயது. 3600 கோடி ரூபாய் மதிப்புள்ள தைரோகேர் லிமிடட் நிறுவன தலைவர். மற்றவர்களைப் போல் அல்லாமல் இவர் ஒரு மாறுபட்ட தொழிலதிபர்.
வழக்கமான முறைகளைப் பின்பற்றி அவர் தொழில் செய்வது இல்லை. உதாரணத்துக்கு எல்லோரும் அனுபவம் உள்ள தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க விரும்புவார்கள். ஆனால் இவர் அனுபவமே இல்லாதவர்களைத் தான் வேலைக்கு எடுப்பார். அதை ஒரு கொள்கையாக வைத்துள்ளார்.
|
ஆரோக்கியசாமி வேலுமணி, தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடட் நிறுவனத்தின் தலைவர், கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ( படங்கள்: ஹெச்.கே. ராஜசேகர்) |
“என்னிடம் 1000 பேர் வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் அனைவருக்குமே முதல் வேலை நான் கொடுத்ததுதான். இவர்களில் இரண்டு சதவீதம் பேருக்குத்தான் முன் அனுபவம் உண்டு,” என்கிறார் வேலுமணி. நவி மும்பையில் உள்ள ஆறு மாடிக் கட்டட அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள அவரது அறையில் நமது சந்திப்பு நடந்தது. அவரிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சராசரி வயது 25. சராசரி சம்பளம் ஆண்டுக்கு 2.7 லட்சம். 2015-16-ல் இந்நிறுவனம் 235 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது.
நாட்டில் 1,200 தைரோகேர் மையங்கள் உள்ளன. நோயாளிகள், மருத்துவமனைகளில் இருந்து ரத்த மாதிரிகள் நேரடியாகப் பெறப்பட்டு, அவை விமானம் மூலம் மும்பையில் உள்ள அவர்களின் தானியங்கி ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. “தைராய்டு பரிசோதனை சந்தையில் நாங்கள் பத்து சதவீதம் வைத்துள்ளோம்,” என்கிறார் வேலுமணி. .
வேலுமணி முதல் தலைமுறை தொழிலதிபர். கிராமத்தில் வறுமையில் வளர்ந்தவர். அவர் பள்ளி நேரம் முடிந்ததும் வயல்களில் வேலை செய்யவேண்டும். விடுமுறை நாட்களிலும் வேலை செய்து குடும்பத்துக்கு உதவவேண்டும்.
அவரது பெற்றோருக்கு நிலம் சொந்தமாக இல்லை. லீசுக்கு எடுத்த நிலத்தில் பயிர் செய்வார்கள். அவர்களின் நான்கு குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லை. வேலுமணி மூத்தவர். இரண்டு தம்பிகள். ஒரு தங்கை.
“பத்து துண்டுகள் கொண்ட பிரமிடு ஒன்று இருந்தால் நான் அதில் அடியில் இருக்கும் துண்டாக இருந்தேன். இப்போது நான் உச்சியில் இருக்கும் துண்டின் மீது உள்ளேன். அந்நாட்களில் என்னிடம் பணமே இல்லை. ஆனால் நிறைய நேரம் இருந்தது. இப்போது நிறையப் பணம் இருக்கிறது. ஆனால் நேரம்தான் இல்லை.
“அந்நாட்களில் எனக்கு அதிகம் பசி உண்டு. ஆனால் உணவே இல்லை. இப்போது நிறைய உணவு உள்ளது. ஆனால் பசியே இல்லை,” தத்துவார்த்தமாகப் பேசுகிறார்.
வேலுமணி எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறவர். அவரது வறுமையான இளம்பருவம் அவரது நினைவை விட்டு நீங்கவில்லை.
|
நவி மும்பையில் உள்ள தன் கார்ப்பரேட் அலுவலகத்தில் டாக்டர் வேலுமணி |
“ஒரு கையில் சிலேட், மறுகையில் சாப்பாட்டுத் தட்டு. இவற்றுடன் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்தேன். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு வளர்ந்தவன் நான்.
“பல நாட்கள் வெறும் ட்ரவுசருடன் சட்டை அணியாது பள்ளிக்குச் சென்றுள்ளேன். இருந்த ஒரே சட்டையை அழுக்கானதும் துவைக்கப் போட்டிருப்பேன்.
“பதினோராம் வகுப்பில் குரூப் போட்டோ எடுத்தார்கள். என் வகுப்பில் நான் மட்டும் அதில் இருக்கமாட்டேன். ஏன் தெரியுமா? என்னால் அதற்காக 2 ரூபாய் கொடுக்கமுடியவில்லை,” உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு சொல்கிறார்.
ஆனால் தான் பலருடன் ஒப்பிடுகையில் எவ்வளவோ தேவலாம் என்கிறார். “ஒரு மாதத்துக்கு 60 முறை நான் சாப்பிட்டேன். ஆனால் ஒரு மாதத்துக்கு 30 முறைகூட சாப்பிட முடியாத குழந்தைகள் எவ்வளவோ பேர் உண்டு. என்னை விட அவர்கள் ஏழைகள். இப்படித்தான் நான் வாழ்க்கையைப் பார்த்தேன்,” என்கிறார் வேலுமணி.
அவர் தன் சிரமமான இளமைப்பருவ அனுபவங்களை ‘வறுமையின் வசதிகள்’ என்று சொல்கிறார். நம்முடனான உரையாடலில் அதை பலமுறை குறிப்பிடுகிறார்.
பிரமிடின் அடியில் இருந்து உச்சிக்குச் செல்லும் போராட்டம் 1978-ல் அவர் கோவையில் ஜெமினி கேப்ஸ்யூல்ஸ் என்னும் மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து தொடங்கியது. 150 ரூபாய் மாதச்சம்பளம்.
கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் அவர் வேதியியல் பட்டம் படித்திருந்தார். அப்பகுதியில் அக்காலத்தில் இயங்கி இப்போது மூடப்பட்டுவிட்ட பெரிய நிறுவனமான சௌத் இந்தியா விஸ்கோஸ் என்னும் ரேயான் இழை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லவே வேதியியல் படித்ததாகக் கூறுகிறார்.
“விஸ்கோஸ் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 40 சதவீதம் போனஸ் கிடைத்தது. அது என்னை ஈர்த்தது. எனக்கு அனுபவம் இல்லை என்பதால் அங்கு வேலை கிடைக்கவில்லை. இதே காரணத்துக்காக பல நிறுவனங்கள் என்னை நிராகரித்தன,” நினைவுகூர்கிறார் வேலுமணி.
"இப்போது பார்த்தால் அது நல்லதற்கே என்று தோன்றுகிறது. சாதாரண குமாஸ்தா வேலைகூட யாரும் தரவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்த மாத்திரை நிறுவனமும் நான்கு ஆண்டுகளில் மூடப்பட்டது. அதுவும் என் அதிர்ஷ்டம். இல்லையெனில் அங்கேயே நான் வேலை செய்துகொண்டிருந்திருப்பேன்,” என்று அவர் தெரிவிக்கிறார்.
|
மும்பையில் உள்ள முழுவதும் தானியங்கி வசதிகள் கொண்ட ஆய்வகத்துக்கு தினமும் 50,000 மாதிரிகள் பரிசோதனைக்கு வருகின்றன |
23 வயதில் அவர் மீண்டும் வேலை தேடினார். மும்பையில் உள்ள பாபா அணு ஆய்வு நிலையத்தில் அறிவியல் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்தார். 1982-ல் இந்த வேலையும் கிடைத்தது.
“வறுமையில் வாழும் மனிதனுக்கு 880 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை மிக வசதியானது. என் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது,” என்கிறார் அவர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு சுமதியுடன் திருமணம் ஆனது. சுமதி ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
அணுஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது வேலுமணி முதுகலைப் படிப்பும் படித்தார். தைராய்டு உயிர்வேதியியலில் முனைவர் படிப்பும் முடித்துவிட்டார்.
பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து 15 ஆண்டுகள் கழித்து 1995ல் வாழ்க்கை ஒரு நிலையில் முடங்கிவிட்டதாகவும் சவாலாக எதையாவது செய்யவேண்டும் என்றும் அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.
|
தெற்கு மும்பையில் பைகுலாவில் ஒரு 200 சதுர அடி வாடகை இடத்தில் வேலுமணி தைரோகேர் தொடங்கினார் |
“நான் வேலையை விட்டபோது குடும்பத்தில் எல்லோரும் கலங்கினர். என் மனைவி என் முடிவை ஆதரித்தார். அவரும் வேலையைத் துறந்து என்னுடன் தொழிலில் உதவ வந்தார்.
“இருவரும் சேர்ந்து மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டிருந்தோம். 2000 ரூபாய் செலவழித்துவிட்டு ஒவ்வொரு மாதமும் 8000 ரூபாய் சேமித்து வந்தோம். வேலையை விட்டபோது என் வங்கிக் கணக்கில் 2.90 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணத்தைக் கொண்டு 100 மாதங்கள் என் குடும்பம் வாழமுடியும் என்று அறிந்திருந்தேன்.
“நாங்கள் சிக்கனமாக வாழ்ந்தோம். கஞ்சத்தனமல்ல. அடுத்தவர்கள் பார்க்கிறார்களே என்பதற்காக செலவழிப்பது முட்டாள்தனம். நமக்குத் தேவை இருப்பின் செலவழிக்கவேண்டும். சிக்கனமாக இருந்தால் நாம் தான் ராஜா. யாருக்கும் அடிமை இல்லை,” என்கிறார் வேலுமணி.
இப்படித்தான் அவர் தைரோகேர் நிறுவனத்தை 1995ல் தன் பி எஃப் தொகையான 1 லட்சத்தைக் கொண்டு தொடங்கினார்.
அவர் எளிமையான முறையில் தொடங்கி, மெல்ல விரிவாக்கினார்.
|
டாக்டர் வேலுமணியின் பிள்ளைகள் அம்ருதா, ஆனந்த் இருவரும் நிறுவனத்தில் இயக்குநர்கள் |
“தைராய்டு பரிசோதனைகள் செய்யும் ஆய்வகங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தன. நிறைய ஆர்டர்கள் இல்லை. அப்படி சிரமப்பட்ட ஒரு ஆய்வகத்தில் இருந்து ஓர் எந்திரம் எடுத்துவந்தேன். அங்கு ஒரு மணி நேரம் மட்டுமே அதற்கு வேலை இருந்தது. மற்ற நேரம் சும்மா இருந்தது.
“அந்த ஆய்வகத்திடம் ஐந்து ஆண்டுகள் அவர்களுக்குப் பரிசோதனைகளை இலவசமாக செய்து தருவதாகச் சொன்னேன். அந்த எந்திரத்தில் ஒரு நாளைக்கு 300 மாதிரிகளைப் பரிசோதிக்கலாம்.
“ இலவசமாக 50 மாதிரிகளை அவர்களுக்கு பரிசோதனை செய்து கொடுத்தேன். 250 மாதிரிகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றேன். ஒவ்வொரு எந்திரமாக வாங்கிச் சேர்த்துக்கொண்டே இருந்தேன். விரைவில் 10 எந்திரங்கள் சேர்ந்தன. தினமும் 3000 மாதிரிகளை பரிசோதித்தோம்,” என்கிறார் வேலுமணி.
அவரே நேரடியாகச் சென்று ஆர்டர்கள் பெற்றுவருவார். அவரது அலுவலகத்துக்கு அழைத்து மாதிரிகள் சேகரமான பின் தகவல் தெரிவிப்பார்கள். அவரது மனைவி இத்தகவல்களைப் பெற்று பிசிஓவில் இருந்து அழைக்கும் வேலுமணிக்குத் தெரிவிப்பார்.
“நகரத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மாதிரிகளைப் பெற சென்றுவருவேன். நீண்ட தூரம் செல்ல புறநகர் ரயில். இறங்கி ஆய்வகங்களுக்கு எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே செல்வேன்.
|
தைரோகேரில் வேலுமணியின் சகோதரர் ஏ சுந்தரராஜு தலைமை நிதி அலுவலர் |
“இதுதான் வறுமையின் வசதி. கிராமத்தில் நீண்ட தூரங்களையும் நடந்தே கடப்பேன். எனக்கு அது புதிது அல்ல,” அவர் கூறுகிறார்.
மாதிரிகளின் எண்ணிக்கை உயர்ந்ததும் தொழிலை விரிவு படுத்தி நாடுமுழுக்க கிளைகளை உருவாக்கினார். 1998ல் 15 பேர் வேலை செய்தார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
“குறைந்த லாபத்தில் நாங்கள் இயங்குகிறோம். தைராய்டு பரிசோதனைக்கு 250 ரூபாய்தான் வாங்குகிறோம். எனக்கு 100 ரூபாய். கிளையை நடத்துகிறவருக்கு 150 ரூபாய். வெளியே இப்பரிசோதனைக்கு 500 ரூபாய் ஆகும். பெரிய மருத்துவமனைகளில் 1,500 ரூபாய்க்கும் மேல் வாங்குவார்கள்,” என்கிறார்.
தைராய்டு சோதனை மட்டும் இல்லாமல் பிற சோதனைகளும் தைரோகேர் செய்கிறது. தினந்தோறும் 50,000 மாதிரிகளைப் பெறுகிறார்கள். அதில் 80 சதவீதம் தைராய்டு சோதனை தான்.
தொழிலில் நஷ்டத்தையே சந்திக்காதவர் வேலுமணி. அவர் சென்ற ஆண்டு தன் வாழ்வில் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். அவரது மனைவி மரணமடைந்துவிட்டார்.
|
தன் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு தளத்தில் உள்ள இல்லத்தில் வேலுமணி அமைதியாக தன் குடும்பத்தினருடன் உணவு அருந்துகிறார் |
இந்நிறுவனம் ஹெல்த் ஸ்க்ரீன் என்ற மாத இதழை நடத்துகிறது. அதில் தன் மனைவியைப் பற்றி இவ்வாறு புகழ்ந்து எழுதுகிறார் வேலுமணி: “ நீ அசாத்திய சக்தி கொண்டிருந்தாய். கட்டடத்தில் ஒரு தளம் விட்டு மறு தளத்துக்கு, ஒரு மேசை விட்டு இன்னொரு மேசைக்கு, ஒரு கட்டடம் விட்டு இன்னொரு கட்டடத்துக்கு ஒரு தேனீயைப்போல் பறந்துகொண்டிருந்தாய். தைரோகேரைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கானோருடன் உன் புன்னகையால், கோப்புகளால், மின்னஞ்சல்களால் தொடுகையில் இருந்தாய்.”
வேலுமணிக்கு நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் உள்ளன. பொதுமக்களிடம் 20 சதவீதமும் தனியார் பங்குகளாக 15 சதவீதமும் உள்ளன. அவரது சகோதரர் ஏ. சுந்தரராஜு, பிள்ளைகள் ஆனந்த் 27, அம்ருதா 25, ஆகியோர் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.
அதிகம் படித்தவை
-
மருமகளின் வெற்றி!
தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த சிந்து, இங்கிலாந்தில் எம்பிஏ படித்து திரும்பியவர். திருணத்துக்குப் பின்னர் கணவர் குடும்பத்தின் செக்கு எண்ணெய் வணிக வர்த்தகத்தை 10 லட்சத்திலிருந்து 6 கோடி ஆக்கி உள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
கூச்சத்தை வென்றவர்
டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
சமையல் ராணி
நித்தா மேத்தாவின் கணவர் மருந்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. அந்த சமயத்தில், சமையல் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டிய நித்தா மேத்தா, இன்றைக்கு பல கோடிகள் குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளர் ஆகியிருக்கிறார். சோபியா டேனிஸ்கான் எழுதும் கட்டுரை
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை
-
வெற்றியின் ஜூஸ்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். இணைந்து சொந்தமாக பல தொழில்கள் செய்து, இப்போது மும்பையில் பழச்சாறு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான வெற்றிக்கதையைத் தருகிறார் பி சி வினோஜ்குமார்
-
பெரிதினும் பெரிது கேள்!
சென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை